திங்கள், 14 ஜனவரி, 2019

பொங்கல் வாழ்த்து!
இன்பம் பொங்கிடும்
   இனிமை சேர்த்திடும்
      இயற்கைத் திருநாளாம்!
நன்மை செய்திடும்
   நலங்கள் விளைத்திடும்
      நம்மோர் மகிழ்நாளாம்!
துன்பம் விலகிடும்
   துயரம் போக்கிடும்
      துணிவாய்த் திகழ்நாளாம்!
பொன்னாய்ப் பொங்கிடும்
   புதுமை புரிந்திடும்
      பொங்கல் திருநாளே!   

புதிய ஆண்டினுள்
   பழமைக் கழிவினைப்
      போக்கி வளம்பெறவே
முதிரா விடியலில்
   மூண்ட தீயினுள்
      முந்தி அதைப்போட்டோம்!
பொதியாய் நிறைந்தநம்
   புண்மைச் செயலையும்
      புரிந்தே எரித்திட்டால்
மதியின் ஒளியென
   மனமும் நிறைந்திடும்
      மகிழ்வைக் கண்டிடலாம் ! 

துள்ளி எழுப்பிடும்
   தூவும் பனிமழை
      தொடங்கும் சிறுகாலை!
புள்ளி வைத்துடன்
   பொலியும் நிறமுடன்
      புணையும் பூக்கோலம்!
கொள்ளை அழகதில்
   குலவும் உயிர்க்கெனக்
      கொஞ்சம் அதனுடனே
வெள்ளை அரிசிமா
   விரும்பிக் கலந்திட
      வேண்டும் வாழ்வதற்கே

விண்ணின் அமுதமாய்
   விளைந்த அரிசியை
      விரும்பிப் பொங்கலிட்டு
மண்ணில் விளைந்தநல்
   மஞ்சள் வாழையும்
      மலரும், செங்கரும்பும்
கண்ணாம் உழவனின்
   கனத்த உழைப்பினைக்
      கண்டு நன்றியுடன்
பெண்ணும் ஆணுமாய்ப்
   பெருமை பொங்கிடப்
      பிணைந்தே அதைஉண்போம்!  

தொழிலை விரும்பிநல்
   தொண்டாய்த் தொடர்கிற
      தூய உழவரையும்
மொழியும் தமிழினை
   முறையாய் உரைத்திடும்
      முதுமைக் கவிகளையும்
வழியில் நன்மையை
   வகுத்தே கொடுத்திடும்
      வாய்மை அறிஞரையும்
விழிபோல் எண்ணியே
   விந்தை உலகினில்
      விரைந்தே வணங்கிடுவோம்!  

வானில் நலங்களை
   வழங்கும் ஒளியையும்
      வளஞ்செய் மழையினையும்
மேனி உருப்பெறும்
   மேன்மைப் பலம்தரும்
      மேகம் காற்றினையும்
தீனித் தினம்தரும்
   தேர்ந்த நிலத்தையும்
      தெளிந்த நீரினையும்
தேனின் இனிமையாய்த்
   தெய்வப் பதமெனச்
      சேர்ந்து வாழ்த்திடுவோம்!  


உழைப்பின் உயர்வென
   உணர்த்தும் சொல்லினை
      உடையது மாடுஅன்றோ!
தழைக்கும் வயலினைத்
   தாங்கும் ஏருடன்
      தகவாய் உழுவுமன்றோ!
குழந்தை பசியினைக்
   கொடுக்கும் பாலினால்
      கோவே போக்குமன்றோ?
அழைத்தே இவைகளை
   அன்பாய் வணங்குதல்
      ஆன்றோர் வழியன்றோ!  

பொன்னும் புதுஉடை
   பூவும் அணிந்திடப்
      பூத்த மனத்துடனே
அன்பில் மூழ்கிடும்
   அறிஞர் முதியவர்
      அவரைத் தேடிநின்று
இன்பம் பொங்கிட
   இனிமை விளைந்திட
      இன்சொல் பேசிவந்தால்
என்றும் மகிழ்வுடன்
   எண்ணம் மிளிர்ந்திட
      ஏற்றம் பொங்கிடுமே!  

காணும் பொங்கலோ
   காளை அடக்குதல்
      கலைகள் உயர்வதற்கும்,
நாணும் பெண்களை
   நலமாய் மணஞ்செய
      நல்லோர் நடத்திவைத்தார்!
ஆணும் பெண்ணுமாய்
   அமைந்த வாழ்விலே
      ஆன்றோர் வகுத்துவைத்த
பேணும் நன்மையைப்
   பேசும் உலகெலாம்
      பெருமை தரும்செயலே!   


எங்கும் இன்பமே
   இளமை நிறைத்திடும்
      இனிமை தரும்நாளாம்!
பொங்கும் புன்னகை
   புதுமை விளைந்திடப்
      பொலியும் இந்நாளில்
திங்கள் ஒளியெனத்
   திகழும் மதியுடன்
      திண்மை பெற்றிடவும்
அங்கம் அழகுடன்
   ஆயுள் நீண்டிட
      அருணா வாழ்த்துகின்றேன்
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2019

கருத்துகள் இல்லை: