வெள்ளி, 31 மே, 2013

தெரிந்தால் சொல்லுங்கள்!! (நசைச்சுவை)

நட்புறவுகளுக்கு வணக்கம்.
   போனவாரம் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, அதனுடைய முடிவையும் உங்களிடமே கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று இந்தப் பதிவைக் கொடுக்கிறேன்.
   நாங்கள் நான்கு தோழிகள். எப்பொழுதாவது விடுமுறையில் ஒன்றாக யாராவது ஒரு வீட்டில் சந்தித்துக் கொள்வது வழக்கம். போன வாரத்தில் அப்படித்தான் ஒருநாள் சந்தித்துக் கொண்டோம். பொதுவாக ஆண்களைத் தனியாக அனுப்பிவிட்டு பெண்கள் மட்டும் ஒரே அறையில் இருந்து கொண்டு அரட்டை அடிப்போம். அந்த அரட்டை விடிய விடிய நடக்கும். அதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியான பொழுதுகள்!!
    அப்படித்தான் போன இரண்டு வாரங்களுக்கு முன் சந்தித்துப் பேசிய போது..... இன்று எதைப் பற்றி பேசலாம் என்று யோசித்ததும்... நான் சொன்னேன்.... “இன்று ஆன்மீகத்தைப் பற்றி பேசலாம்“ என்று.
    அனைவருக்கும் அதிர்ச்சி! “என்னது... ஆன்மீகமா...? என்ன ஆச்சி உனக்கு?“ என்றார்கள் ஆச்சர்யமாக!
    உண்மையில் நான் எந்த அளவிற்கு ஆன்மீகப் பற்று உள்ளவள் என்று அனைவருக்கும் தெரியும். என்னைப் பொறுத்தவரையில் நான் ஆன்மீகவதியும் இல்லை. அதே சமயம் நாத்தீகவாதியும் இல்லை. ஏதோ ஒரு சக்தி மட்டும் நம்மைவிட மேலானதாக இருக்கிறது. அதற்காக அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவள்.
   இப்படிப்பட்ட நான் ஆன்மீகத்தைப் பற்றி பேசலாம் என்றதும் அவர்களுக்கு அதிர்ச்சி. நானும் என் நிலையை எடுத்துச் சொன்னேன். “இன்னும் இரண்டு வாரத்தில் ஒரு நிகழ்ச்சியில் “ஆன்மீகம்“ என்ற தலைப்புக் கொடுத்துப் பேச சொல்லி இருக்கிறார்கள். எனக்கு ஆன்மீகத்தைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது. யாருக்காவது தெரிந்தால் விளக்கமாக சொல்லுங்கள்“ என்றேன்.
    உடனே ஒரு தோழி, “அருணா... நான் ஒரு ஆன்மீகக் கதை சொல்கிறேன். நீபோய் மேடையில் சொல்லிவிட்டு கூட கொஞ்சம் உனக்குத் தெரிந்ததைப் பேசிவிட்டு வந்துவிடு“ என்றாள்.
    நானும் உடனே மகிழ்ந்து “சொல்லுப்பா....“ என்று ஆவலாக கேட்க அமர்ந்தேன். மற்ற தோழிகளும் ஆர்வமானார்கள். இவள் தொடங்கினாள். “ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இவர்களைப் பார்க்க உறவினர் ஒருவர் வந்தார். அவர் ஒரே ஒரு பழம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் பார்த்துவிட்டுச் சென்றார்“ என்று நிறுத்தினாள்.
   எனக்கு உடனே புரிந்து விட்டதால்... “போதும்பா உன் ஆன்மீகக் கதை. இதுக்கு மேல ஏதாவது சொன்னால் உனக்கு உதைதான் விழும்“ என்றேன் ஏமாற்றமாய்.
   உடனே மற்ற தோழிகள், “உனக்குக் கதை தெரியும் என்றால் நீ பேசாமல் இரு அருணா. நாங்கள் கேட்கிறோம்“ என்றார்கள் என்னை அதட்டி. நானும் பேசாமல் சிரித்துக்கொண்டு இருந்துவிட்டேன்.
    இவள் தொடர்ந்தாள். “அப்போ... அந்த வீட்டு அம்மா சொன்னாள்.. பழம் மிகவும் பழுத்து விட்டது. சரியாக வெட்ட முடியாது. அதை யாருக்காவது ஒருத்தருக்குக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னாள். அப்பா யோசித்தார். மகன்களை அழைத்து யாருக்கு இந்தப் பழம் வேண்டும் என்றார். இருவருமே தனக்குத் தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். உடனே அப்பா ஒரு பந்தயம் வைத்தார்.
   யார் இந்த ஊரை முதலில் சுத்தம் செய்துவிட்டு வருகிறார்களோ அவருக்குத் தான் இந்தப் பழம் என்றார். உடனே இளைய மகன் சுத்தப்படுத்தவதற்கான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளிபோய் சுத்தப்படுத்தி விட்டு வந்தான். வந்து பார்த்தால்.... அப்பா பெரிய மகனுக்குப் பழத்தைக் கொடுத்து விட்டது தெரிந்தது. அதனால் அதிகமாக கோபம் வந்திடுச்சி. உடனே தன் அப்பாவிடம் போய் ஏன் இப்படி செய்தீர்கள்?“ என்று கேட்டான்.
    அதற்கு அப்பா “பெரியவன், ஊரைச் சுத்தமாக வைக்க வேண்டும் என்றால் முதலில் நம் வீட்டைச் சுத்தமாக வைக்க வேண்டும்... என்று சொல்லிவிட்டு நம் வீட்டைச் சுத்தப்படுத்தி விட்டு பழத்தைப் பெற்றுக்கொண்டான். ஊரைச் சுத்தப்படுத்த வேண்டுமென்றால் முதலில் நம் இருக்கும் வீட்டைச் சுத்தமாக வைத்தாலே ஊரு தாமாக சுத்தமாகும் என்ற அவனது கருத்து எனக்குப் பிடித்தது. அதனால் அவன் தான் போட்டியில் வென்றவன்“ என்றார்.
    உடனே சின்ன மகன் கொபத்துடன் வீட்டை விட்டு வெளியில் போய்விட்டான்“ என்று சொல்லி நிறுத்தினாள். மற்ற இருவரும் மிகவும் உன்னிப்பாக கதையைக் கவனித்துக்கொண்டு இருந்ததைக் கண்டு எனக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. நான் சிரித்ததுக் கண்டு அவர்களுக்குக் கோபம் வேறு வந்துவிட்டது. “ஏன் அருணா சிரிக்கிற...? கதை நல்லா தானே இருக்கிறது. நல்ல கருத்தாகவும் தானே இருக்கிறது.... நீ மீதியைச் சொல்லுமா....“ என்றார்கள் அவளைப் பார்த்து. அவளுக்கும் அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளும் என்னுடன் சேர்ந்து சிரித்தாள்.
   நாங்கள் இருவரும் சிரித்ததைக் கண்டு ஒரு தோழிக்கு மெல்ல சந்தேகம் வந்து.... “இந்தக் கதை திருவிளையாடல் படத்துல வர்ற கதை மாதிரி கொஞ்சம் இருக்குது....“ என்றாள் சந்தேகமாக.
   “அப்பாடா இப்பவாவது புரிஞ்சிதே....“ என்று நான் சொன்னதும் தான் அந்த இருவரும் புரிந்து கொண்டார்கள். அதற்கு கதை சொன்னவள் “இவங்க சீரியஸா கேக்குறதைப் பார்த்தா எங்கே ஔவையார் பாட்டை எல்லாம் பாடவேண்டி வருமோன்னு பயந்திட்டேன் அருணா. அது வரைக்கும் தப்பிச்சிட்டேன்“ என்று சிரித்தாள். நாங்கள் இருவரும் சிரிப்பதைப் பார்த்து ஏமார்ந்தவர்களும் தன் ஏமாற்றத்தை நினைத்து எங்களுடன் சிரித்தார்கள்.

   நட்புறவுகளே.... உங்களுக்கு இந்த நிகழ்ச்சி சிரிப்பை வரவழித்ததா என்று தெரியவில்லை. ஆனால் நான் இன்றும் இந்த நிகழ்வை நினைத்துச் சிரிக்கின்றேன்.
    இப்படியே சிரித்துக்கொண்டு நான் கேட்க வேண்டிய கேள்வியை மறந்திடாமல் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஆன்மீகம் என்றால் என்ன?

தெரிந்தவர்கள் விளக்கினால் அதையே அந்த நிகழ்ச்சியில் பேசிவிட்டு பெயர் வாங்கி விடுவேன். உதவுங்கள் ப்ளீஸ்.

நட்புடன்
அருணா செல்வம்.
31.05.2013

செவ்வாய், 28 மே, 2013

பாதை எங்கும் மலர்ச்சோலை!!


அன்னை கையில் தவழ்ந்திருக்க
   ஆசை எதுவும் மனத்திலில்லை!
முன்னை தெய்வம் இதுவென்று
   மூத்தோர் சொல்லி புகுத்தவில்லை!
பொன்னைப் பொருளைத் தந்தாலும்
   போற்றி வைத்துச் சேர்க்கவில்லை!
பண்பு பொங்கும் தாய்பிடியில்
   பாதை எங்கும் மலர்ச்சோலை!

அடித்த அரட்டை தாங்காமல்
   அன்னை கோபம் கொண்டாலும்
வெடித்தச் சிரிப்பை அடக்காமல்
   வெண்மை உள்ளம் கொண்டிருந்தும்
நடிப்பே என்ப(து) அறியாமல்
   நட்பை உயர்வாய் பேசிக்கொண்டும்
படித்த இளமை காலத்தில்
   பாதை எங்கும் மலர்சோலை!

உருவ அமைப்பில் இளமைபொங்க
   உருத்தும் கண்ணால் மனம்பொங்க
கரு..மை விழியைக் காந்தமென்று
   கவிதை பாடும் காளையரை
அருகே கண்டும் அலட்சியமாய்
   அழகு கொடுத்தப் போதையுடன்
பருவ வயதில் நடந்துசென்ற
   பாதை எங்கும் மலர்சோலை!
  
அந்த நாளில் அமைந்தெல்லாம்
   அதுவே தானாய் முளைத்ததுவே!
இந்த நாளில் நினைப்பதெல்லாம்
   இயற்கை மாற்று செயலதுவே!
சொந்த ஊரின் சுடுமண்ணும்
   சொர்க்க பூமி எனஎண்ணும்!
வந்த இடத்தில் வளமிருந்தும்
   வளர்ந்த நினைவே மனம்திண்ணும்!

சின்ன வயது நிகழ்வெல்லாம்
   சித்தம் நினைத்துப் பார்த்தவுடன்
இன்பம் பொங்கும் அந்நாளே
   இனிக்க வருமா எனஏங்கும்!
இன்றும் குழந்தை யாகிவிட
   எண்ணும் நெஞ்சம்! வராதெனினும்
அன்று நடந்த பாதையெல்லாம்
   அழகாய் மலர்ந்த சோலைகளே!

(25.05.2013 அன்று பிரான்சில் நடந்த திருக்குறளரங்க முற்றோதல் விழாவில் நான் எழுதி வாசித்தக் கவிதை)

அருணா செல்வம்.