உவமை அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உவமை அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூன், 2019

கூடா உவமை!



உவமை அணி!
ஒரு பொருளுக்கு ஒப்பாகாத அல்லது கூடாத ஒன்றை அப்பொருளுக்கு உவமையாகக் கூறுவது கூடா உவமை“ எனப்படும்.

உ.ம்
மலர்ச்சொரியும் சூடும், வளர்தழலின் இன்பும்,
உலர்நிலத்தில் வாழும் உழவும், – நலமாய்
நடந்ததுபோல் உள்ளது நாதாநீ யின்றிக்
கடந்துவிட்ட காலப் பொழுது!

பொருள்அன்பனே! நீ என்னுடன் இல்லாமல், கடந்து போன காலங்கள், மலரில் உள்ள சூடும், வளர்ந்து எரியும் நெருப்பின் இன்பமும், ஈரமின்றி உலர்ந்து காய்ந்து போன நிலத்தில் செய்யும் பயிர்த்தொழிலும் நலமுடன் நடந்தது போல் உள்ளது. இது தலைவனிடத்தில் தலைவி சொல்லிய கூற்று.
    மலரானது சூட்டினைத் தராது, செந்தழலானது இன்பத்தைத் தராது, காய்ந்த நிலத்தில் பயிர் விளையாது. ஆனால் இவையெல்லாம் நடந்தது போல் உள்ளது என்று கூறியதால் இது கூடா உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.06.2019

வியாழன், 10 ஜனவரி, 2019

மாலை உவமை! - 24




   பாடலில் ஒரு பொருளுக்குப் பல உவமைகள் தொன்ற, அவை ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வந்து கடைசியில் பொருளைச் சொல்லி முடிப்பதாக வருவதுமாலை உவமைஆகும்.

உ. ம்
செம்பொன் நிலம்போல் செழுமையதில் நீர்வளத்தை
நம்பும் பசுங்கொடிபோல் நன்கது - கொம்பினைப்
பற்றாகப் பிடித்துப் பயன்தருதல் போன்றதே
கற்றோர் இடமிருக்கும் கல்வி!

பொருள்செம்மையான பொன் நிறைந்த நிலம்போல, செழிப்பான அதனுள் அமைந்த நீர்வளத்தை நம்பிடும் கொடி போல, அக்கொடியானது நன்கு படர்ந்து வளர அருகிலிருக்கும் கொம்பினைப் பற்றாகப் பிடித்துப் பயன் தருதல் போல நன்மைதரும் கற்றவர் இடத்தில் இருக்கும் கல்வி.
     செம்பொன்போல் செழுமையும், நீர்வளத்தை நம்பும் பசுமையான கொடி போலும், அது அதன் அருகில் இருக்கும் கொம்பினைப் பற்றாகப் பிடிப்பது போல் என்று பாடலில் உவமையாது எங்கும் முற்றுப் பெறாமல் வந்து கடைசியில் கற்றோர் இடமிருக்கும் கல்வி என்று முடிந்துள்ளதால் இது மாலை உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019

இதன்பிறகு, உவமை பிற அணிகளுடக் கூடி வரும் எட்டு உவமை அணிகளும், மேலும் வேறுபாடாக வரும் மூன்று அணிகளும் உள்ளன.

பொது நீங்கு உவமை! - 23





   ஒரு பொருளுக்கு உவமையைக் கூறிப், பின்பு அதனை மறுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பொருளையே தனக்குத் தானே உவமையாகக் கூறுவதுபொது நீங்கு உவமைஎனப்படும்.
(உண்மை உவமை என்பது உவமையைக் கூறிப் பின்பு மறுத்து அது பொருள்தான் எனக்கூறுவது. ஆனால் இது, பொருளைக் கூறி பின்பு மறுத்து அந்தப் பொருளையே தனக்குத் தானே உவமையாகக் கூறுவது)

உ. ம்
உடலுக்குத் தேக்கும் உறுதிக்கு அதனின்
திடமும் குறைதான்! தெளிந்துதொடர்உயர்
ஏறும் உனக்குவமை நீயே நிறையென்று
கூறுவேன் உள்ளம் குளிர்ந்து!

பொருள்தேக்கு மரத்தைப் போன்ற உடலும், அதன் திடமான தன்மையைப் போன்ற உறுதியும் என்று உன்னைக் கூறுவது குறைதான். உன் தெளிந்த அறிவால் தொடர்ந்து உயர்வுகளைத் தொட்டிடும் உனக்கு உவமை நீயே என்று நிறையோடு உள்ளம் குளிர்ந்து கூறிடுவேன்.
    உடலுக்கு மரத்தையும், உறுதிக்கு அதன் திடத்தையும் உவமைக் கூறிப் பின்பு அது குறைதான் என்றும், ஒரு மரத்தினால் தெளிவான உயர்வுகளைப் பெற முடியாது என்ற காரணத்தினால் அதைவிட உனக்கு நீயே உவமை என்று கூறியதால் இது பொது நீங்கு உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019

கூடா உவமை! - 22





   ஒரு பொருளுக்கு ஒப்பாகாத அல்லது கூடாத ஒன்றை அப்பொருளுக்கு உவமையாகக் கூறுவது கூடா உவமைஆகும்.

உ. ம் 
மலர்தரும் சூடும், வளர்தழலின் இன்பும்,
உலர்நிலத்தில் வாழும் உழவும்நலமாய்
நடந்ததுபோல் உள்ளது நாதாநீ யின்றிக்
கடந்துவிட்ட காலப் பொழுது!

பொருள்அன்பனே! நீ என்னுடன் இல்லாமல் இருந்த கடந்து போன காலங்கள், மலர் தரும் சூடும், வளர்ந்து எரியும் நெருப்பின் இன்பமும், ஈரமின்றி உலர்ந்து காய்ந்து போன நிலத்தில் செய்யும் பயிர்த்தொழிலும் நலமுடன் நடந்தது போல் உள்ளது. இது தலைவனிடத்தில் தலைவி சொல்லிய கூற்று.
     மலரானது சூட்டினைத் தராது, செந்தழலானது இன்பத்தைத் தராது, காய்ந்த நிலத்தில் பயிர் விளையாது. ஆனால் இவையெல்லாம் நடந்தது போல் உள்ளது என்று கூறியதால் இது கூடா உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019

ஒருவயிற்போலி உவமை! - 21




    பாடலில் ஒரு தொடர் மொழியைக் கூறிப் பாடலைச் சொல்லும் போது, அதில் வரும் பல உவமைகளுக்கு உவம உருபு விரிந்து வராமல் தொகையாகவே இருந்து, ஒரே ஓர் உவமையை மட்டும் உவம உருபு வருமாறு விரித்துக் கூறுவதுஒருவயிற் போலி உவமை“ எனப்படும். ஒருவயிற்ஓரிடத்தில் மட்டும்.

. ம்
மங்கையிதழ் பூக்கள்! குழலூதும் வண்டுகள்!
தங்கஇழை திங்களொளி தொங்கிடும்! – சங்கமித்த
மாலைமலர் வாசம் மனமயக்கும்! இவ்வெழில்
சோலைபோல் என்னகத்தைச் சொல்!

பொருள்மங்கையின் இதழைப் போன்ற பூக்கள், குழலின் இசையைப்போன்ற ரீங்காரமிடும் வண்டுகள், மரங்களில் தங்க இழையைப் போலத் தொங்கிடும் சூரியனின் ஒளி, பல மலர்களை ஒன்று கூட்டிக் கட்டியது போல் வாசம் மனத்தை மயக்கிடும். இவ்வளவு எழில் பொருந்திய  சோலையைப் போல என்தன் உள்ளம் அழகாய் இருக்கிறதென்று சொல்.
    பாடலில். மங்கை இதழைப்போல, குழலோசையைப் போலத் தங்க இசையைப் போல, மலர்களைப் போல, என்று எவ்விடத்திலும் விரியாமல் இந்த எழிலான சோலையைப் போல என்று ஒரே ஓர் இடத்தில் மட்டும் உவம உருபாகிய போல என்பது விரிந்து வந்துள்ளதால் இது ஒருவயிற்போலி உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019

புதன், 9 ஜனவரி, 2019

பலவயிற் போலி உவமை! - 20





   பாடலில் ஒரு தொடர்மொழியில் உள்ள பல உவமைகள் வந்தாலும், ஒவ்வொரு உவமைதோறும் உவமைச் சொல்லானது தோன்றுமாறு பாடுவதுபலவயிற் போலி உவமைஆகும்.
(பலவயிற் - பல இடத்திலும் போல, ஒப்ப, ஒத்த…. போன்ற உவமைச் சொற்கள் வருவது)

உ. ம் 
வேல்போல்கூர் பார்வையும், வீணைபோல் மெல்லுடலும்
சேல்போல் செழித்தவிரு கண்களும்! – நூல்போல்
இடையும் அகமுடையாள் எள்பூப்போல் மூக்கும்
விடையறியேன் இன்நிகர்க்கு வேறு!

பொருள்வேலைப்போன்ற கூர்மையான பார்வையும், வீணையைப் போல மெல்லிய உடலும், மீனைப்போன்ற செழுமையான இரு கண்களும், நூலைப் போன்ற சிறுத்த இடையும், என் அகத்துள் உள்ளவளின் எள்ளின் பூவைப்போன்ற சின்ன மூக்கும் இவைகளுக்கு நிகராக இவ்வுலகில் வேறு இருந்தால் அதை நான் அறிந்திருக்கவில்லை என்பதாம்.
    பாடல் முழுவதும் வேலைப்போல, வீணைப்போல, மீனைப்போல, நூலைப்போல, எள்பூவைப்போல என்று உவமையின் உருபு விரிந்து வந்துள்ளதால் இது பலவயிற்போலி உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019

அபூத உவமை! (இல்பொருள் உவமை) - 19





    பாடலில் முன்பு இல்லாதவைகளை அல்லது எல்லாம் சேர்ந்த ஒன்றைப்  பொருளுக்கு உவமையாக உரைப்பதுஅபூத உவமைஎனப்படும்.
(விகார உவமையில் ஒரு பொருளில் இருந்து ஒன்றை மட்டும் எடுத்து உவமிப்பது. இது ஒரு பொருள் அன்றி அதுபோலப் பல பொருள்களையும் சேர்த்து உவமிப்பது)

உ. ம்
நீ…..காட்டும் அன்பு, நிறையுலக நல்லோரின்
நாகாட்டும் இன்பத்தை நல்குதடி! – வாகாட்டு!
தேன்மொழி உன்னைப்போல் தென்னாட்டில் யாருண்டு?
ஈன்றவள்போல் சொல்வாய் இருந்து!

பொருள்நீ என்னிடம் காட்டுகின்ற அன்பானது நிறைவான உலகத்தில் உள்ள நல்லவர்களின் நாவால் சொல்லும் நன்மையைப் போல் இன்பத்தை நல்கிறதடி. தேனைப்போன்ற மொழியை உடைய உன்னைப் போன்றவர் தென்னகத்தில் யார் இருக்கிறார்கள் ? நீயே வந்து எனக்குக் காட்டிவிடு. என்னை ஈன்ற என் அன்னையைப் போல் இருந்து பதிலைச் சொல். உன்னைப்போல உலகில் அன்பு செய்ய யாரும் இல்லை என்பதாம்.
    உலகத்தில் உள்ள ஒருத்தரை மட்டும் அவளின் அன்புக்கு ஈடாக சொல்லாமல் உலகத்தில் உள்ள நல்ல மாந்தர்கள் அனைவரின் வாய் சொல்லையும் சேர்த்துச் சொல்வதால் இது அபுத உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019

மோக உவமை! - 18




    பாடலில் ஒரு பொருளின் மேலுள்ள ஆசையால் (வேட்கையால்…) அப்பொருளையும் உவமையையும் மாற்றி மாற்றி மயக்கம் தோன்ற உவமிப்பதுமோக உவமைஆகும். (மோகம்மயக்கம்)

உ. ம்
நடன மயிலல்ல நங்கைதான்! தோகை
உடையமயில் தான்!நங்கை உண்டோ! – தடங்கண்டே
ஆடிடும் தாரகையே ஆசைமன மோகத்தால்
தேடினேன் கண்கள் திறந்து!

பொருள்நடனமாடிக் கொண்டிருப்பது மயில் கிடையாது. அது மங்கை தான். தோகை உடைய மயில்தான். மங்கை அல்ல. அழகிய நடனத்தைச் சரியாக ஆடுகின்ற நட்சத்திரம் போன்று மின்னும் பெண்ணே. என்மனம் கொண்ட ஆசை மயக்கத்தால் என் கண்களைத் திறந்து மயிலோ மாதோ என்று தேடுகின்றேன்.
   பாடலில் பொருள் நங்கை. உவமை மயில். நடனமாடுவது நங்கையா மயிலா என்று அறிய முடியாமல் மோகமுடன் சொல்வதால் இது மோக உவமைஆகியது. மங்கைக்கு மயிலை உவமையாக கூறியதால் உவமையுமாகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019

விகார உவமை! - 17




    
   பாடலில் ஒரு பொருளின் உவமையை விகாரப்படுத்தி உவமிப்பதுவிகார உவமைஆகும். விகாரம் என்பது ஓர் உவமையை நேரிடையாகக் கூறாமல் அதில் மறைந்துள்ள ஒன்றை மட்டும் எடுத்துக் கூறுவது ஆகும்.

உ. ம்
கயலின் வடிவெடுத்துக் கண்கள் வரைந்தும்!
வயலின் வளமுடல் வார்த்தும்! – அயனவன்
பொன்னில் நிறமெடுத்துப் பூசி மகிழ்ந்தானோ
என்சொல்வேன் உன்னழகை இன்று!

பொருள்நான்முகன், மீனின் வடிவத்தை எடுத்து உன்றன் கண்களை வரைந்து, வயலில் உள்ள செழுமையான வளத்தை எடுத்து உன் உடலை வார்த்து, பொன்னில் உள்ள நிறத்தை எடுத்து உன் மேனியில் பூசி நிறங்கொடுத்து அதைக்கண்டு அவனே மகிழ்ந்தானோ. இன்று உன் அழகை என்னவென்று சொல்வேன்.
    மீனின் மேலுள்ள வடிவத்தையும், வயலில் உள்ள செழுமையையும், பொன்னில் உள்ள நிறத்தையும் மட்டுமே எடுத்து உவமித்து இருப்பதால் இது விகார உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019

பல பொருள் உவமை! - 16




    பாடலில் ஒரு பொருளுக்குப் பல உவமைகளைக் காட்டிப் பாடுதல்பல பொருள் உவமைஆகும்.

. ம்
முத்தும் பளிங்கும் முதிர்ந்த அரும்புகளும்
கொத்தான விண்மீனின் கூட்டமும்மொத்தமாய்ச்
சேர்ந்தமர்ந்து விட்டதுபோல் சின்னவளின் செவ்வாயுள்
சீர்பற்கள் மின்னும் சிரிப்பு!

பொருள்சின்னப்பெண்னவள் செவ்வாய் திறந்து சிரிக்கும் போது மின்னும் பற்களானது முத்துக்களும், பளிங்குக் கற்களும், மொட்டவிழா முதிர்ந்த மலர் அரும்புகளும், வானத்தில் உள்ள விண்மீன் கூட்டமும் மொத்தமாய் வந்து அங்கே அமர்ந்தது போல் உள்ளது.
     பாடலில் வந்திருக்கும் பொருள் பற்கள். அப்பற்களுக்கு முத்து, பளிங்கு, அரும்பு, விண்மீன் என பபொருட்களையும் உவமையாகக் கூறப்பட்டு வந்துள்ளதால் இதுபால பொருள் உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019

செவ்வாய், 8 ஜனவரி, 2019

இயம்புதல் வேட்கை உவமை! - 15





    பாடலில் ஒரு பொருளை, வேறு சில உவமைகளைச் சொல்லி இந்த இந்த காரணங்களால் ஒப்பாகக் கூற என் மனது விரும்புகிறது என்று சொல்வதுஇயம்புதல் வேட்கை அணிஆகும்.
வேட்கைவிரும்புதல், ஆசைப்படுதல்

உ. ம்
பொன்னிதழ் பூக்கள்போல் பூத்து விரிந்தலும்
இன்தேன்போல் உண்ண இனித்தலும்! – மென்உணர்வும்
வண்ணமலர் இப்பெண்ணின் வாயிதழ் என்றியம்ப
எண்ணிமனம் வேட்கிறதே இன்று!

பொருள்பொன்னான இதழ்கள் உள்ள பூக்கள் பூப்பது போல உதடுகள் விரிவதாலும், பூக்களில் சுரக்கும் இனிய தேனைப்போல் உதடுகள் இனிப்பதாலும், மலர்களில் உள்ள மென்மையைப் போலவும் இவளின் உதடுகள் இருப்பதால், இவளின் உதடுகளை மலர் என்றே எடுத்துச் சொல்ல எண்ணி என்மனமானது விருப்பப்படுகிறது இன்று.
    இப்பாடலில் எடுத்துக் கூறப்பட்ட பொருள் பெண்ணின் உதடு. உவமை மலர். மலர்தலும், இனித்தலும், மென் உணர்விலும் இரண்டும் ஒத்துள்ளது. அதனால் மலரும், இவளின் உதடுகளும் ஒன்று தான் என்று எடுத்துச் சொல்ல மனம் விரும்புகிறது என்றதால் இது இயம்புதல் உவமைஎன்றாகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.01.2019

விபரீத உவமை! - 14




பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பிஃதவம மாகும்             (தொல்பொருள்உவம – 9)

     பாடல்களில் பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் உவமைகளைப் பொருளாகவும், பொருட்களை உவமையாகவும் மாற்றி உரைப்பதுவிபரீத உவமைஆகும்.

உ. ம்
கருங்கூந்தல் போலிருக்கும் கார்மேகம்! சின்னக்
கருவிழி போல்வண்டு காணும்! – புருவம்போல்
வண்ண வளைவுடன் வானவில்! ஈடில்லா
மண்ணில் இயற்கையின் மாண்பு!

பொருள்கருமையான கூந்தலைப் போலிருக்கும் கார்மேகம் கலைந்தோடும். சிறிய கருமையான விழிபோன்று வண்டு காணப்படும். புருவம் போல் வளைந்த வண்ண வானவில் இருக்கும். இப்படி இருப்பது ஈடில்லா இவ்வுலகத்தில் இயற்கை கொடுத்த அழகு.
    தொன்றுதொட்டு (மேற்றொட்டு) பெண்களின் கூந்தலுக்குக் கார்மேகத்தையும், கருவிழிக்கு கருவண்டையும், புருவத்திற்கு வானவில்லையும் உவமையாகக் கூறி வருதல் வழக்கம்.
    இப்பாடலில் அந்த இயல்புகளை மாற்றி, கார்மேகத்திற்கு உவமையாக கூந்தலையும், வண்டுக்கு உவமையாக கண்களையும், வானவில்லுக்கு உவமையாக புருவத்தையும் கூறியுள்ளதால் இது விபரீத உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.01.2019

இன்சொல் உவமை! - 13




     பாடலில் ஒரு பொருளுக்குக் கூறிய உவமையை மேலும் மிகுதியாக உவமித்துவிட்டு, இந்த மிகுதியைக் கொண்டிருந்தாலும் இந்த உவமை அந்த பொருளுக்கு ஒப்பியிருப்பதால் உயர்ந்தது என்று சொல்வதுஇன்சொல் உவமைஆகும்.

உ. ம்
குன்றெனத் தோளிரண்டும் கொண்டவனே! குன்றின்மேல்
என்றும் பசுமை படர்ந்திருக்கும்! – என்னவனே!
உன்உயர்ந்த தோளுக்கே ஒப்பாக வந்ததன்றிக்
குன்றுக்கு உயர்வுண்டோ கூறு!

பொருள்குன்று போன்ற இரண்டு தோள்களைக் கொண்டவனே ! குன்றின் மேல் பசுமை என்றென்றும் படர்ந்திருக்கும். என்னவனேசொல்வாயாக. குன்று பசுமைகளைக் கொண்டிருந்தாலும் உன்உயர்ந்த தோள்களுக்கு ஒப்பாக வந்தது அன்றி அதற்கு வேறு என்ன உயர்வு இருக்கும்.
     இப்பாடலில் கூறப்பட்ட பொருள் தோள்கள். உவமப்பொருள் குன்று. தோள்கள் குன்றை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் குன்றுகளோ என்றென்னும் பசுமைகளான மரம் செடி கொடி போன்றவைகளைத் தாங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால் தோள்களை விட குன்றுகள் உயர்ந்திருக்கிறது. இருந்தாலும் குன்றுகள் தோள்களுக்கு உவமையானது இல்லாமல் வேறு உயர்வு அதற்கு இல்லை என்றதால் இது இன்சொல் உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.01.2019

திங்கள், 7 ஜனவரி, 2019

தெரிதருதேற்ற உவமை! (தேற்ற உவமை) - 12




    பாடலில் தான் ஐயுற்றதை உண்மை தெரிந்து, தெளிந்து துணிந்து உரைப்பதுதெரிதருதேற்ற உவமைஆகும். உண்மையுவமை என்பது ஐயமின்றி சொல்வது. ஆனால் இது ஐய உணர்வு காரணமாக சொல்வது.

உ. ம்
கார்மேகம் என்றால் கலைந்து பொழிந்துவிடும்!
தேர்நடை என்றானால் சென்றுவிடும்! – சீர்சுமந்த
பெண்ணின் நடையழகும் பின்தொங்கும் கூந்தலும்
உண்மையென்று நெஞ்சே உணர்!

பொருள்கார்மேகம் என்றால் கலைந்து மழையைப் பொழிந்து விடும். தேரின் நடை என்றால் இந்நேரம் அங்கிருந்துச் சென்றிருக்கும். அப்படிச் செய்யாத இந்தப் பெண்ணின் நடையழகும் கார்கூந்தலும் உண்மைதான் என்று ஐயமின்றே நெஞ்சே உணர்வாயாக.
    கூந்தலைக்கண்டு இது கார்மேகமோ என்றும் நடையைக்கண்டு தேர் அசைவோ என்று முன்னர் ஐயுற்றுப் பின்னர், அது கார்மேகமாக இருந்தால் கலைந்து மழையாக பொழிந்திருக்கும். தேர்ச் செல்லும் அசைவாக இருந்தால் இந்நேரம் இவ்விடத்தை விட்டு நகர்ந்திருக்கும். அப்படி இல்லாததால் இது அவளின் கூந்தல் தான் அவளின் நடைதான், என்று முன்பு ஐயுற்று பின்பு தெளிந்து கூறியதால் இது தெரிதருதேற்ற உவமை ஆகியது.
.
பாவலர அருணா செல்வம்
07.01.2019

ஐய உவமை! - 11




பாடலில் உவமையையும் பொருளையும் கண்டு, அது தான் இதுவோ…. அல்லது இது தான் அதுவோ என்று புரியாமல் ஐயுறுவதுஐய உவமைஎனப்படும்.

உ. ம்
பூவிடத்தில் மொய்க்கும் புதுவித பொன்வண்டோ!
தாவியெனைத் தாக்கும்கண் தான்இதுவோ! – ஆவிக்குள்
சென்று அலைகழிக்க, செய்கை அறியாது
நின்று தவிக்கின்றேன் நீண்டு!

பொருள்பூவிடத்தில் தேனுக்காக மொய்க்கும் புது விதமான பொன்வண்டு தானோ, பார்வையால் என்னைத் தாக்கிவிடும் கண் தானோ ? என்று என் உயிருக்குள் நுழைந்து அலைகழிக்க, செய்யும் செயலறியாது நீண்ட நேரமாக தவிக்கின்றேன்.
வண்டாகிய உவமையையும், கண்ணாகிய பொருளையும் உறுதியாகத் தெரியாமல் இதுவோ இல்லை அதுவோ என ஐயமுடன் உரைத்ததால் இது ஐய உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
07.01.2019

அநியம உவமை! - 10




பாடலில் வரையறையின்றி ஒன்றிற்கு ஒன்றை உவமைக் கூறியப்பின், அந்த உவமைக்கு வேறொன்று இருந்தால் அதுவும் இதற்கு ஒக்கும் என்று கூறுவதுஅநியம உவமைஆகும். (அநியமம் -  வரையறையின்றி உரைப்பது)

உ. ம்
அத்தைமகள் பல்காட்ட ஆசைமனம் துள்ளிவிழும்
சித்தத்தில் சிக்கும் சிரிப்பொலி! – முத்தே
அவள்பற்கள்! அன்றி அதுபோல உள்ள(து)
எவையுமே ஒக்கும் இதற்கு!

பொருள்அத்தைமகள் பற்களைக் காட்டிச் சிரிக்கும் ஒலியால் ஆசை மனமானது துள்ளிக் குதிக்கும். அவளின் பற்கள் முத்துதான். அது இல்லையென்றாலும் முத்தை ஒத்திருக்கும் எவையுமே அவளின் பற்களுக்கு ஒக்கும் என்றதால் இது அநியம உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
07.01.2019

புதன், 2 ஜனவரி, 2019

நியம உவமை! - 9




பாடலில் ஒரு வரையறைப் படுத்தி இந்தப் பொருளுக்கு இந்தப் பொருள் தான் ஒப்பானது என்று தேற்றேகாரம் கொடுத்துத் துணிந்து சொல்வது நியம உவமைஎனப்படும். (தேற்றேகாரம் என்பதுஇதுவேஎன்பதில் உள்ள ஏகார அழுத்தமாகும்)

உ. ம்
அன்னை உதிர அமுதமே வான்மழை!
இன்னொன்றை ஒப்பிட இல்லையே! – நன்னிலத்தின்
பொன்னே மணிநெல்! புகழ்ந்திட வேறெது?
என்றே உரைப்பேன் எடுத்து!

பொருள்அன்னை மழலைக்குத் தரும் உதிரம் போன்ற பாலைப் போன்றதே வான் மழை. அதற்கு ஒப்பாக வேறு எதுவும் இல்லை. நன்னிலத்தில் விளைகின்ற மணியைப் போன்ற நெல்லானது மின்னும் பொன்னுக்கு ஒப்பானது. இதைவிட மழைக்கும் பொன்னிற்கும் ஒப்பிட்டுப் புகழ்ந்திட வேறு எது ? என்று உரைப்பேன்.
பாடலில் அன்னையின் பாலே மழை என்றும், நெற்பயிரே பொன்னென்றும் துணிந்து உரைத்ததினால் இது நியம உவமை ஆகியது.
அமுதமே, பொன்னே என்று தேற்றேகாரம் கொடுத்து வந்துள்ளது.
.
பாவலர் அருணா செல்வம்
02.01.2019

சனி, 29 டிசம்பர், 2018

நிந்தை உவமை! - 8




     பாடலில் ஓர் உவமையைப் பழித்துப் பின்பு அதையே உவமிப்பதுநிந்தை உவமைஆகும்

உ. ம்
பருவமங்கை போல் பசுமையிடும்! பின்னர்
உருவமெழில் கோர உதிரும்! – பெருமரம்
காலத்தின் மாற்றம்போல் காட்சிகளே மாறிடும்
ஞாலம் நடத்தும் நிகழ்வு!

பொருள்பெரிய மரமானது பருவகாலம் வந்ததும் மங்கையைப் போல் பூத்துக் காய் கனி தரும், குளிர்காலம் வந்ததும் இலைகள் உதிர்ந்து தன் பசுமை நிலையின் எழில் அழிந்து நிற்கும். இது காலமாற்றத்தால் உலகத்தில் நடக்கும் நிகழ்வு.
     பாடலில் தொடக்கத்தில் பெரிய மரத்தைப் பருவ மங்கை போல் பசுமையாக இருக்கும் என்று உவமை கூறி, பின்பு அதன் எழிலை அச்சம் தரும் கோரமாய் உதிரும் என்று உவமையை நிந்தித்து வந்துள்ளது. ஆனால் அது அதன் தவறல்ல உலக நிகழ்வு என்று உவமித்ததால் இது ²நிந்தை உவமை² ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2018

புதன், 26 டிசம்பர், 2018

உண்மை உவமை! - 5




    பாடலில் முதலில் உவமையைக் கூறிவிட்டு, பின்பு அதை மறுத்து உண்மைப் பொருளினையே கூறி முடிப்பதுஉண்மை உவமை அணிஎனப்படும்.

கார்மேகம் அன்று கருங்குழலே! செம்மையெனும்
நேர்வழி அன்றவள் நீள்வகிடு! – சேர்த்திருக்கும்
முத்தன்று பல்வரிசை! முத்தமிடும் என்னவளோ
சொத்தில் உயர்வென்று சொல்லு!

பொருள்மழைதரும் கார்மேகம் இல்லை. கருங்கூந்தல் தான். வாழ்வைச் செம்மையாக்க நடக்கும் நேர்வழிப்பாதை இல்லை, அது அவளின் வகிடு, கோர்வையாக கோர்த்திருக்கும் முத்து மாலை அல்ல, அது அவளின் பல்வரிசை. என்னை முத்தமிடும் என்னவளின் சொத்தானது மற்றதற்கு ஓப்பாகாதுஎன்று முதலில் உவமையைக் கூறி பின்பு அதை மறுத்து உண்மை பொருளையே கூறியதால் இதுஉண்மை உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.12.2018

சனி, 22 டிசம்பர், 2018

சமுச்சய உவமை! - 4




    பாடலில், ஒரு பொருளை இன்னொரு பொருளோடு ஒப்புமை கூறும் போது, அந்தப் பொருள் இதனோடு மட்டுமின்றி மற்றொன்றாலும் ஒக்கும் என்று சொல்வதுசமுச்சய உவமை அணிஆகும். சுறுக்கமாக, இதனை ஒப்பது இதனோடு இன்றி இதனாலும் ஒக்கும் என்பதாம்.
    இவ்வணி இரண்டு மூன்று ஒப்புதலைக் கூட்டிச் சொல்ல வரும். அதாவது ஒரு பொருளோடு ஒருபொருள் உவமிக்கப்படும் போது, இந்த காரணம் மட்டும் இன்றி இன்னும் இரண்டு மூன்று காரணங்களாலும் உவமை படுவதைக் கூட்டிச் சொல்வது ஆகும்.

வளைவுக்கே ஒப்பாக வந்ததன்றி, மேனி
இளைத்தலும், மென்பூ இதழும்! – கிளைவள
காய்கனியும், வாழ்வின் கருசூழ் இடமொக்கும்
நோய்த்தல் கொடியிடை நோக்கு!

பொருள் பெண்ணின் இடையானது வளைவதனால் மட்டும் கொடியிடை என்று ஒப்பாக சொல்வதன்றி, மேனி இளைத்தலை ஒப்பதும், மென்மையான மலரிதழை ஒப்பதும், வளமான கிளைகளில் உள்ள காய்கனிகளை ஒப்பதும், மகரந்தம் சூழும் இடத்தை ஒப்பதாலும் பெண்ணின் கொடியிடை ஒக்கும் என்பதனால் இந்த உவமைசமுச்சயம் உவமைஆகியது.
(நோய்த்தல்மெலிதல்)
.
பாவலர் அருணா செல்வம்
22.12.2018