வியாழன், 30 ஏப்ரல், 2020
கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு!
(இசைப்பாடல்)
.
(எடுப்பு)
கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு - எனைக்
கண்டதும் முகமூடிப் போவதேன் விட்டு!
.
(தொடுப்பு)
பொன்னான பொழுதினில் தொடர்ந்திட்டப்
பொலிவான காலங்கள் நினைவில்லையோ!
அன்றாடிய இனிமையை எடுத்தோத
அழகான தமிழிலே சொல்லில்லையோ!
.
எண்ணத்தில் உருவான இனிமையை
எழுதிய அடியெல்லாம் கவியில்லையோ!
அன்பாக அதைக்கூட்டிப் பாடிட
அருளான நெஞ்சிலே இடமில்லையோ!
.
துள்ளாமல் வளர்ந்திட்ட காதலால்
துணிவாகக் கரம்பிடித்த உறவில்லையோ!
தள்ளாத வயதாகி விட்டதனால்
தளர்வாயில் சொல்லுரைக்கப் பல்லில்லையோ!
.
என்னென்றும் ஏதென்றும் அறியாமல்
இளமையினைப் பேசுதல் சரியில்லையோ!
உன்னுயிர் இங்கிருப்பதை உள்ளாடும்
உணர்வெலாம் உன்மனதைக் கொல்லலையோ!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2020
புதன், 29 ஏப்ரல், 2020
மனமிகும் ஈருடல் அருந்தேனோ!
(வண்ணம் – 10)
.
தனந்த தானந் தனதன தானன தனதானா
தனந்த தானந் தனதன தானன தனதானா!
.
குறைந்த காதல் தனிமையி லேயழ விணைந்தோனே
குளிர்ந்து நாடும் வழியொடு கூடிட விருந்தானே!
மறைந்து பாடுங் குரலினி லாசையி னழகோசை
மலர்ந்த மாதின் செவிதனி லேவிழ விழைந்தானே!
நிறைந்த பூவும் நிறமிகு சேலையொ டிருந்தாளோ
நெகிழ்ந்த காலும் வளையிடு கையொடு விரைந்தாளே!
சிறந்த லூடல் விழியொடு மோதிட மறையாதோ
செறிந்து வாழும் மனமிகு மீருட லருந்தேனோ!
.
பாவலர் அருணா செல்வம்
29.04.2020
விழைதல் – உள்ளோசை, ஆசைப்படுதல், விரும்புதல்
செறிதல் – கலத்தல், இணைதல்,
செவ்வாய், 28 ஏப்ரல், 2020
திங்கள், 27 ஏப்ரல், 2020
இசையூட்டி யென்றும் பணிவேனே!
(வண்ணம்)
.
தனதாத்த தன்ன தனதாத்த தன்ன
தனதாத்த தன்ன தனதானா (அரையடிக்கு)
.
மயலேற்கும் வண்ண உயிரோட்ட மின்ன
மனமேற்க விஞ்சும் தமிழ்போலே!
மறையூட்டி நல்ல வழிகாட்டி வல்ல
மதியூட்டும் கந்த பெருமானே!
.
அயல்நாட்டில் வந்து தமதாக்க வெண்ணி
அனலூட்ட நின்ற கொரொனாவோ!
அடைகாத்து நெஞ்சுள் சளியேத்தி மிஞ்சி
அழிவூட்டும் நுண்கி ருமிதானே!
.
கயலூட்டும் கண்கள் பயமூட்டும் வண்ணம்
கனலூட்டி யுண்ணும் பிணியாலே!
கடைநீக்கங் கொண்டு பணவீக்கங் கண்டு
கழிவேற்ற மின்றி யழிந்தோமே!
.
இயைபாக்கி யெங்க ளுயிர்காத்து மந்த
இடரோட்டி யின்ப மருள்வாயே!
இதையேற்று மின்னல் கவிதீட்டி வண்ண
விசையூட்டி யென்றும் பணிவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
27.04.2020
ஞாயிறு, 26 ஏப்ரல், 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)