சனி, 31 டிசம்பர், 2022

புத்தாண்டு வாழ்த்து ! 2023

 

.

அன்பைக் கொட்டும் அன்னையைப்போல்
        அறிவைக் காட்டும் தந்தையைப்போல்
இன்பங் கூட்டும் நட்பைப்போல்
       எழுமை ஊட்டும் கல்வியைப்போல்
நன்மை பயக்கும் செல்வம்போல்
       நல்ல துணையின் உறவைப்போல்
இன்று பிறக்கும் புத்தாண்டு
      இணைந்து வளமாய் வரவேண்டும்!
 
வருக வருக புத்தாண்டே !
       வாழ்வும் வளமும் கொடுத்தருள்க !
தருக தருக புகழ்யாவும்
      தமிழைப் போன்று உயர்ந்தோங்க !
உருகி யாடும் மனம்யாவும்
      உயர்ந்து நிறைந்து மகிழ்வோங்க !
அருமை ஆண்டாய் இருந்திடவே
       ஆசை கொண்டு அழைக்கின்றோம் !
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2023

 
தோழ தோழியர் அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

வியாழன், 29 டிசம்பர், 2022

இனிமை கொடுக்க நீவேண்டும்!

 

.   

கருத்தில் கல்வி ஒளியிருந்தும்
       கண்ணில் குருடாய் நடந்துவந்தோம்!
மருட்டும் வழியில் மாவிடர்கள்
      மறைந்தும் தெரிந்தும் கடந்துவிட்டோம்!
இருட்டைக் கிழித்த ஒளிவிளக்காய்
       இனிமை கொடுக்க நீவேண்டும்!
உருண்ட உலகோர் மகிழ்வுறவே
      உயர்த்தும் ஆண்டாய் வரவேண்டும்!
.
பாவலர் அருணா செல்வம்
30.12.2022

செவ்வாய், 13 டிசம்பர், 2022

மகிழ்ந்தே பயில்வோம்!

 (சந்த கலிவிருத்தம்)
.
உணவே மருந்தாய்! உழவே தொழிலாய்! 
உணர்வே கலையாய்! உடலே மலராய்!
குணமே உயர்வாய்! குவிந்தே தலைமேல்
பணமே இருந்தால் பயமே வருமே!

மலையாய் விரைந்தே மலிவாய் பொருளால்,
அலையாய் விழுமே அறியா தெதுமே!
நிலையாய் அமர்ந்தே நெடிதாய் வரைவே
கலையாய் எழுமே கவியாய் வருமே!

மனமே அதைநாம் மதியா திருந்தால்
கனமாய் அதுவே கடிதா கிடுமே!
கனவே எனநாம் கனிந்தே இருந்தால்
தினமே வருமே திறனோ டிடுமே!
 .
முதிரா வயதோ முளையாப் பயிராம்!
கதிராய் வளர்ந்தால் கடிதோ இலையாம்!
விதியால் நடந்தால் வியந்தே அறிவோம்!
மதியால் புரிந்தால் மகிழ்ந்தே பயில்வோம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.12.2022

செவ்வாய், 6 டிசம்பர், 2022

அண்ணாமலையாரே!

 
(பிரிந்திசை வண்ணம்)

.
தன்னாதன தனதன
தன்னாதன தனதன
தன்னாதன தனதன தனதான (அரையடிக்கு)
 
அண்ணாமலை யுறைகிற
    பொன்மேனியி லொளியிடு
    மன்பாய்நல மருளிடு மனலோனே!
அஞ்ஞானமொ டலைகிற
    சந்தானிகை மனமுட
    னன்றாடஉ மதுமலை நினைந்தேனே!
 
பெண்ணாகிய வடிவுற
    பண்பாகிய குணநிலை
    பெம்மானென மழலையு மடைந்தேனே!
பின்னாளினி லுளமுனை
    நெஞ்சோடெனை அடைகிற
    பிண்டீதக மணநிலை எதனாலே!
 
விண்மோதும லையழகு
   செந்தீபமொ ளியழகு
   விண்ணோரும தனழகி லுழல்வாரே!
விஞ்ஞானவி வரமொடு
   பஞ்சானனு ருமறைய
   மெய்ஞ்ஞானமு ருவடிவி லருள்வாயே!
 
பண்பாடுட னசைபொரு
    ளொன்றோடிட இசையொடு
    பண்பாடிட வருமெனை மனதாலே
பஞ்சீகர அருளொடுஉ
    டம்போடுயிர் நலமொடு
    பண்ணோதிட அருளிடு பெருமானே!
.
பாவலர் அருணா செல்வம்
06.12.2022

 
சந்தானிகை - பாலேடு
சந்தாபம் - துன்பம்
பிண்டீதகம் - மருக்கொழுந்து
பஞ்சானன் - சிவன்
பஞ்சீகரம் - ஐம்பூதங்களும்