திங்கள், 29 செப்டம்பர், 2014

மிகப் பழங்கால வீர விளையாட்டு அரங்கம்!! (இத்தாலி - 7)

அன்று

இன்று

நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இத்தாலின் முக்கிய அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு மறுநாள் 7.08.2014 அன்று காலை ரோம் நகரின் முக்கிய இடமான கொலிசோவிற்குச் சென்றோம்.

அன்று

இன்று

    இவ்விடத்திற்குள் செல்ல ஒருவருக்கு 12 யுரோ கட்டணம்.

உள்ளே போகும் வழி.

    கொலிசோ என்பது கி.பி 79 ம் ஆண்டு கட்டப்பட்ட வீர விளையாட்டு அரங்கம் ஆகும். 

முதல் மாடியில் இருந்து...

   நாம் பழங்கால சினிமா படங்களில் பார்த்திருப்போம். கடைசியாக தொலைக்காட்சியில் வெளியான மகாபாரத கதையில் கூட பார்த்திருக்கிறோம். ஆனால் நம் நாட்டில் உண்மையில் இந்த வீர விளையாட்டுகள் நடந்த இடங்களின் தடம் கூட இல்லை.


    ஆனால் இத்தாலியின் முக்கிய இடமான ரோம் நகரத்தின் நடுவிலேயே இந்தப் பழங்கால விளையாட்டு அரங்கத்தை அழிக்காமல் பாதுகாத்து வருகிறார்கள். இவ்விடம் ரோம் நகரத்தின் முக்கிய காட்சி தளமாக விளங்குகிறது.

இப்போது பார்வைக்காக ஒழுங்கு படுத்தப்பட்ட மைதானம்.

   இவ்விடம், பழைய மன்னர்கள் மனிதர்கள் மனிதர்களுடனும், மனிதர்கள் மிருகத்துடனும், மிருகங்கள் மிருகத்துடனும் சண்டையிட செய்து வேடிக்கைப் பார்க்கும் இடமாக இருந்திருக்கிறது.


   இவ்விடம் கி.பி 79ம் ஆண்டில் கட்டப்பட்டது. என்றாலும் இதை எப்போது கட்டத் துவங்கினார்கள் என்பதும், எந்த மன்னரால் கட்டப்பட்டது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கி.பி.80ம் ஆண்டில் தொடக்க விழா நடந்தது.


   விழா துவங்கி 100 நாட்களில் 5000 மிருகங்களுக்கு மேல் கொல்லப்பட்டதாம். மனிதர்கள் எவ்வளவு பேர் என்பது கணக்குத் தெரியவில்லை.

சுரங்கம்

    இந்த வீரவிளையாட்டால் அதிக அளவு மனிதர்களும் மிருகங்களும் கொல்லப்பட்டதால் கி.பி 438 ம் ஆண்டு இப்படி விளையாடுவதை நிறுத்தி விட்டார்கள்.


   இதன் உயரம் 48.50 மீட்டர். நடு அகலம் 54 க்கு 86 மீட்டர். இதனுள் ஒரே நேரத்தில் 40,000 முதல் 73,000 ஆயிரம் பேர் சென்று வரலாம்.
   ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 3000 பேர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் மறுநாள் காத்திருந்து தான் வரவேண்டும். நாங்கள் சென்ற போது அவ்வளவு சனம் இல்லை.


   தவிர இந்த கொலிசோவை ரோம் நகரத்தை அக்காலத்தில் ஆண்ட மன்னர்கள் வழி வழியாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஆனால் பழங்கால எந்த மன்னரும் இதைத் தன் உரிமையாகக் கொள்ளவில்லை. அதனால் எந்த மன்னரின் பெயரும் அங்கு எழுதப்படவில்லை.


   இவ்விடத்தைப் பார்க்கும் போது பழங்கால இத்தாலியர்கள், தாங்கள் உயிர் வாழ்வதை விட வீரமாக வாழ்வதில் அக்கரைக் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பது நன்கு விளங்குகிறது.


   இவ்விடத்தை நாங்கள் காலை ஒன்பது முதல் பகல் பனிரெண்டு வரை பார்த்துவிட்டு மதிய உணவை முடித்துக்கொண்டு ரோம் நகரில் இன்னொரு முக்கிய இடமான, கி.மு 400 ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட மிக மிகப் பழங்கால இடத்தைப் பார்த்தோம்.
   அதைப்பற்றி அடுத்தப் பதிவில் படங்களுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்

அருணா செல்வம்.
30.09.2014

சனி, 27 செப்டம்பர், 2014

கை வைத்தியம்!!


1. வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி ஆகியவற்றை அரிந்து உப்பு மிளகு எலுமிச்சை சாறு சேர்த்து வாரம் மூன்று முறை உண்டுவர ஊளைச்சதை குறையும்.

2. பப்பாளிப் பழத்தை தினசரி சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

3. தினமும் உணவில் புர்ண்டு சேர்த்துக் வந்தால் உடம்பிலுள்ள கொலஸ்டிரால் குறைந்து உடல் கெட்டிபடும்.

4. தினமும் ஒரு கொத்து திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் அறவே நீங்கி விடும். அதனால் சளித் தொல்லையும் சரியாகும்.

5. உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்தால் குடலில் உள்ள புச்சிகள் செத்துவிடும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடும்.

6. வறட்டு இருமல், தொண்டைப்புண் ஆகியவை இருந்தால் வெந்நீரில் தேன் கலந்து பருகுங்கள். உடனே பலனளிக்கும்.

7. பசும்பாலில் மஞ்சள் பொடியும் மிளகுத்தாளும் போட்டுக் கொதிக்க விட்டு சூடாகக் குடித்தால் இருமல் சரியாகும். புண்ணான தொண்டைக்கு இதமாக இருக்கும்.

8. பனங்கற்கண்டைப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் இருமல் குறையும்.

9. வல்லாரைக்கீரை மூளையிலுள்ள செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகமாக்குகிறது. ஆனால் அளவோடு உண்ணவும். அதிகமானால் தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படும்.

10. பித்த வெடிப்புகளைச் சரி செய்ய பாதங்களை வெந்நீரில் அமிழ்த்தி நன்றாகத் தேய்த்துக் கழுவிய பின், காய வைத்து மஞ்சள்துர்ள் கலந்த ஆமணக்கு எண்ணெயைத் தடவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு தேய்த்துக் கழுவவும். ஒரே வாரத்தில் பாதம் பட்டு போல் ஆகிவிடும்.

படித்ததைப் பகிர்ந்தேன்.

அருணா செல்வம்.

புதன், 24 செப்டம்பர், 2014

மனித உறவுகள் மேம்பட 20 வழிகள்!!



1.நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருக்காதீர்கள்.

3. எந்த விஷயங்களையும் பிரட்சனைகளையும் நாசூக்காக கையாளுங்கள்.

4. விட்டுக் கொடுங்கள்.

5. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.

7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள்.

10. அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

11. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

12. கேள்விப்படுகிற எல்லா செய்திகளையும் நம்பி விடாதீர்கள்.

13. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.

14. உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

15. மற்றவர் கருத்துக்களைச் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

17. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

18. பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

19. சொந்தங்களையும், நண்பர்களையும் அவ்வப் போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

20. பிரட்சனை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.

படித்ததைப் பகிர்ந்தேன்

அருணா செல்வம்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

கவிஞர் வாலியின் நகைச்சுவை!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கவிஞர் வாலி அவர்களின் இந்த நகைச்சுவையை நீங்கள் ஏற்கனவே கேட்டு ரசித்திருக்கலாம். ஆனால் நான் நேற்று தான் கேட்டேன். இதை ஏற்கனவே கேட்காதவர்கள் அவரின் சாமார்த்திய பேச்சின் நகைச்சுவையைப் படித்து மகிழுங்கள்.

   ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தில் பாடல் எழுதுவதற்காக கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
   அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுத்து இருக்கிறார்.
   உடனே ரஜினி அவர்கள் கவிஞர் வாலியிடம் “இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்“ என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார். அங்கே கவியரசர் வைரமுத்து அவர்கள் ரஜினியைப் பார்க்க வந்து வாசலில் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
   ரஜினிக்குக் கொஞ்சம் சங்கடம். வைரமுத்து அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். என்ன செய்வது என்று தெரியாமல் “நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்“ என்று ரஜினி வைரமுத்துவிடம் சொல்லி விட்டு திரும்பவும் வாலி இருந்த அறைக்குள் வந்தார்.
   வந்தவர் கவிஞர் வாலியிடம் “ஐயா.... இன்று சிங்கமும் புலியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள போகிறார்கள்“ என்று சொன்னார்.
   அதைக்கேட்ட வாலி உடனே, “யாரு.... வைரமுத்து வந்திருக்கிறாரா?“ என்று கேட்டார்.
  ரஜினியும் “ஆமாம் ஐயா“ என்று பதில் சொன்னார்.
   உடனே கவிஞர் வாலி கேட்டார்...., “ஆமாம்.... எங்களில் யார் சிங்கம்? யார் புலி?“ என்று.
   ரஜினிக்கு மிகவும் தர்மச்சங்கடமாகி விட்டது. “ஐயா... அது வந்துங்க... நீங்க ரெண்டு பேருமே.....“ என்று இழுத்து இருக்கிறார் ரஜினி.
   அவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கவிஞர் வாலி, “இதில் என்ன தயக்கம்? இங்கே நான் தான் சிங்கம்.“ என்று மிகச்சாதாரணமாக சொன்னார்.
   ரஜினி, அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அசடாகச் சிரித்தார். அவரைப் பார்த்த கவிஞர் வாலி, “என்ன ரஜினி...  என்னை நானே சிங்கம்ன்னு சொன்னது ஏன் என்று தெரியவில்லையா?“ என்று கேட்டார்.
   ரஜினி “இல்லை“ என்று தலையாட்டி இருக்கிறார்.
   உடனே கவிஞர் வாலி, “இங்கே எனக்குத் தானய்யா தாடி இருக்கிறது“ என்றார் தன் தாடியைத் தடவி விட்டுக்கொண்டே...
   அவர் சொன்னதின் பொருளைப் புரிந்து கொண்ட ரஜினி வியந்து ரசித்துச் சிரித்தார். அங்கு வந்த வைரமுத்து அவர்களிடமும் இதைச் சொல்ல அவரும் சேர்ந்து சிரித்தார்.

கேட்டதில் ரசித்தது.
அருணா செல்வம்.

22.09.2014

சனி, 20 செப்டம்பர், 2014

“தொதோல்“ செய்து பாருங்கள்!! (சமையல்)



 நட்புறவுகளுக்கு வணக்கம்.
     போன ஒரு பதிவில் நெய் சொட்டச் சொட்ட இருக்கும் “தொதோல்“ என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று எழுதி இருந்தேன்.
   அதைப் படித்த ஸ்ரீராம் ஐயா, பாலசுப்ரமணியன் ஐயா, நாகராஜ் ஐயா, மூவரும் “தொதோல் என்றால் என்ன? அதை ஒரு பதிவாகப் போடுங்கள்“ என்று எழுதி இருந்தார்கள்.
    அவர்கள் கேட்டதற்காகவே இந்தப் பதிவு.
   முதலில் இந்த “தொதோல்“ எனக்கு எப்படி அறிமுகமாகியது என்பதைச் சொல்லி விடுகிறேன்.
    “தொதோல்“ என்ற இந்த இனிப்பு பலகாரம் முதலில் ஆங்கிலோ இந்தியர்கள் தான் நமக்கு அறிமுகப் படுத்தினார்கள். பாண்டிச்சேரியில் கிருஸ்துவர்கள்தான் இதை அதிகமாகச் செய்வார்கள்.
   கிருஸ்தவர்கள், கிருஸ்மஸ்க்காகச் செய்த மலையைப் பிரிப்பதற்கு முதல் நாள் சிறுவர்களை அழைத்து அவர்களுக்குப் பலகாரங்கள் கொடுப்பது வழக்கம். அப்படி ஒரு முறை பக்கத்து வீட்டு மலையைப் பிரிக்கும் போது என்னையும் அழைத்துப் பலகாரங்கள் கொடுத்தார்கள். எனக்கு அப்போது எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். அவர்கள் ஒரு தட்டில் சிறு துண்டு கிருஸ்மஸ் கேக், கொஞ்சம் முறுக்கு, இந்த “தொதோல்“ கொஞ்சம் வைத்துத் தந்தார்கள். நான் முறுக்கையும், கேக்கையும் சாப்பிட்டு விட்டேன். இந்த தொதோல் மிகவும் கறுப்பாக, பார்ப்பதற்கும் அவ்வளவு ஈர்ப்பும் இல்லாத்தாக இருந்ததால் அதைச் சாப்பிடாமல் வைத்து விட்டேன்.
   இதைப் பார்த்த அந்த வீட்டு அம்மா, “சாப்பிட்டுப் பாரு அருணா. பிடிக்கவில்லை என்றால் வைத்துவிடு“ என்றார்கள்.
   நான் அவர்கள் சொல்கிறார்களே என்று வேண்டா வெறுப்பாக்கத் தான் சாப்பிட்டேன். சாப்பிட்ட பிறகு இன்னும் கொஞ்சம் கொடுக்கமாட்டார்களா....? என்று மனம் ஏங்கி போனது. அவ்வளவு சுவையாக இருந்தது.
   மறுநாள் நான் என் அம்மாவிடம் வந்து “பக்கத்து வீட்டு அம்மா கறுப்பாக ஒன்று செய்து கொடுத்தார்கள். ரொம்ப நன்றாக இருந்தது. அதை நீங்களும் செய்து தாருங்கள்“ என்று கேட்டேன். என் அம்மாவும் அவர்களிடம் விசாரித்துச் செய்து கொடுத்தார்கள். ஆனால் அந்தப் பழைய சுவை இதில் இல்லை. இருந்தாலும் எனக்காகச் செய்த அம்மாவின் மனம் நோகக் கூடாது என்று சாப்பிட்டு விட்டேன்.
   அதன் பிறகு திருமணமாகி இங்கு வந்த பிறகு என் தங்கையின் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவளின் மாமியார் இந்தத் தொதோலைச் சுவையாகச் செய்திருந்தார்கள். அவர்களிடம் செய்முறை விளக்கம் கேட்டுக் கற்றுக் கொண்டேன்.
   இதில் முக்கிய விசயம் என்னவென்றால் தொதோல் அரிசி தான். நம்மூரில் கிடைக்கும் அரிசி சற்று மொத்தமாக இருக்கிறது. இங்கே சீனா கடைகளில் மிகவும் மெல்லிய கருப்பு அரிசி கிடைக்கிறது. இந்த அரிசியில் செய்யும் போது சுவை மேலும் கூடுதலாக இருக்கிறது.

இதோ செய்முறை விளக்கம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்


கருப்பு அரிசி – இரண்டு டம்ளர்.


சர்க்கரை – நான்கு டம்ளர்


தேங்காய் பால் – ஒரு டம்ளர்.


உடைத்த முந்திரி – அரை டம்ளர்.


நெய் – இரண்டு டம்ளர்.


ஏலக்காய் – எட்டு


உப்பு கொஞ்சம்

செய்முறை


    
  அரிசியைச் சுத்தம் செய்து கழுவி எட்டு மணி நேரம் ஊற விட வேண்டும்.


    ஊறிய அரசியை மிக்ஸியில் போட்டு மை போல அரைக்க வேண்டும்.


   அரைத்த அரிசியுடன் உடைத்த முந்திரியைச் (இதனுடன் பாதாம் பயிரையும் சேர்க்கலாம். என்னிடம் கைவசம் இல்லை) சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற வேண்டும். மைய அரைக்கக் கூடாது.


   அதனுடன் ஏலக்காயையும் சேர்த்து ஒரு சுற்று.


   இந்த மாவுக்கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 


சார்க்கரை,


தேங்காய் பால்,


உப்பு,


சேர்த்து நன்கு கலக்கி வைக்க வேண்டும்.


ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.


   கொதிக்க ஆரம்பித்ததும் இந்த மாவு கலவையை ஊற்றி அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 


மாவு வெந்து வரும் பக்குவத்தில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிண்ட வேண்டும்.


   இது தான் மிகவும் கஷ்டம். கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். துவக்கத்தில் நெய் முழுவதையும் மாவு இழுத்துக் கொள்ளும்.


கடைசியாக நெய் மாவிலிருந்து பிரிந்து வரும். இந்தத் தருவாயில் இறக்கி ஆற விட்டு உண்ணலாம்.

தொதோல்

   இந்த தொதோலை ஒரு மாதம் கூட வைத்திருந்து சாப்பிடலாம். ஆனால் அதன் சுவை நம்மை வா வா என்று அழைத்துக் கொண்டே இருப்பதால் ஒரு மாதமெல்லாம் வைத்திருக்க முடியாது.

    இதன் செய்முறை வெண்ணைப்பிட்டு போலவும், மைசூர் பாகு போலவும், அல்வா போலவும் இருந்தாலும் இதன் சுவை இம்மூன்றையும் விஞ்சி விடும்.

செய்து சாப்பிட்டுப் பாருங்கள் நண்பர்களே.

   முக்கியமாக ஒரு விசயம். இதைச் செய்யச் சொல்லிக் கேட்டதால் இன்று அதிக நாள் கழித்து இதைச் செய்துச் சாப்பிடும் வாய்ப்பினை அளித்த அந்த மூன்று பேருக்கும் நன்றி.

அன்புடன்
அருணா செல்வம்.

21.09.2014

வியாழன், 18 செப்டம்பர், 2014

ரோமாபுரி சிற்பங்கள் சில.... (இத்தாலி -6)


  
இது போல் பல கூடங்கள் உள்ளன.

நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இத்தாலியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ள சிலைகளின் சில படங்களை மட்டும் வெளியிட்டுள்ளேன். கண்டுகளியுங்கள்.

















அருணா செல்வம்

18.09.2014