சனி, 31 மே, 2014

ஆசை அலையை அடக்கிவிட்டால்....
துளைகள் கொண்ட வலைகொண்டு
    தூங்காக் கடல்மேல் சென்றிடுவார்!
களைப்புக் காணா மனத்துடனே
    காத்தி ருந்து வலைவிரிப்பார்!
வளைக்கை அணிந்த பெண்ணவளின்
    வளைக்கும் கண்போல் மீன்கிடைக்கத்
திளைக்கும் நெஞ்சில் தீமையின்றித்
    திரும்பி வருவார் மீனவர்தாம்!

நிலையே இல்லா உலகத்தில்
    நிலையாய் என்றும் நிற்பதற்கே
மலைபோல் உயர்ந்த கருவமைய
    மனத்தை வலையாய் விரித்திடுவார்!
இலையே ஏதும் இவ்வுலகில்
    எல்லாம் நம்மின் எண்ணமென்றும்
அலைபோல் கவிதை சுரந்துவர
    அமிர்தாய்த் தருவார் கவிஞர்தாம்!

சிலைபோல் இருக்கும் பெண்களைத்தம்
    செழிக்கும் வாழ்வில் சிறைவைக்கக்
கலைகள் கலந்த மொழிபேசிக்
    காதல் வலையை விரித்திடுவார்!
விலையே அற்ற பெண்ணன்பு
    விரும்பும் வகையில் கிடைத்துவிட்டால்
தலையில் சற்றுக் கனமேறத்
    தாவிக் குதிப்பார் காளையர்தாம்!

கொலையே செய்து இருந்தாலும்
    குலைந்து போகாச் சட்டத்தை
வலைத்து வெற்றி பெறுவதற்கே
    வார்த்தை வலையை விரித்திடுவார்!
குலைக்கும் நாய்போல் குரலுயர்த்திக்
    கொஞ்சம் கூட இரக்கமின்றி
விலையாய்ப் பணத்தை வாங்கித்தம்
    வயிற்றை வளர்ப்பார் வழக்கறிஞர்!

வலையாய் எதையும் விரித்தாலும்
    வகையாய் அதிலே மாட்டாமல்
நிலையாய் நிற்கும் நெஞ்சமெது?
    நினைக்க நெருடும் ஒவ்வொன்றும்!
அலைபோல் தொடரும் அடுக்கடுக்காய்
    ஆசை அலையை அடக்கிவிட்டால்
வலையை விரித்தும் சிக்காமல்
    வாழும் வழியோ கிடைக்குமன்றோ!!அருணா செல்வம்.

வியாழன், 29 மே, 2014

பெண்களின் பார்வையில் கோச்சடையான்....!!!நட்புறவுகளுக்கு வணக்கம்.
   நான் எப்படியாவது கோச்சடையான் திரைப்படத்தைத் திரையரங்கில் தான் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் அதை நேற்று நிறைவேற்றிக் கொண்டேன். ஆனால்.....

   நான், என் தோழியர் இருவர் மட்டும் படம் பார்க்கப் போவதாக முன்பே பேசி நேரம் குறித்துவிட்டோம். ஆனால்..... கடைசி நேரத்தில் எங்கள் மூவரின் கணவர்மார்களும் கூடவே வருவோம் என்று அடம்பிடித்ததால்....(?!) வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்ல நேர்ந்தது. இதனால் என்ன குறை என்கிறீர்களா....? பின்னே இருக்காதா...?
    ரஜினியின் தீவிர ரசிகையான என் ஒரு தோழி(1).... ரஜினியைத் திரையில் காட்டியதும் கைதட்டி விசில் அடிக்கப் போவதாக ஏற்கனவே சொல்லி இருந்தாள். இவர்கள் உடன் வந்ததால் மரியாதை நிமிர்த்தமாக அந்த ஆசை நிறைவேராமல் போய்விட்டதே...!!!

    நாங்கள் மூன்று பெண்கள் படம் பார்த்ததைப் “பெண்களின் பார்வையில் கோச்சடையான்“ என்ற தலைப்பிட்டது ஏன் என்றால் இரண்டு பெண்கள் சேர்ந்தாலே அதைக் கூட்டம் என்று கூறலாம் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லி இருக்கிறார். இங்கே மூவர்! தவிர பெண்கள் இரண்டு பேர் எதையாவது பேசினாலே... அதைக் கேட்கும் மற்ற பெண்களின் பேச்சும் அதுவாகவே தான் இருக்கும். அதனால் தான் இந்த தலைப்பு.
    சரி விசயத்திற்கு வருகிறேன். திரையரங்கிற்குள் போனதுமே.... “என்ன.... ஒரு டிக்கெட் 13.95 யுரோவா....? நம்ம ஊருக்கு ஆயிரம் ரூபாயிக்கு மேலேயே ஆகிறதே.... இவ்வளவு பணம் கொடுத்து பார்க்கத்தான் வேண்டுமா....? இன்டர்நெட்டிலேயே வீட்டில் பார்த்துவிடலாம்“ என்றாள் ஒரு தோழி(2) (தோழிகள் இருவரும் தன் பெயரை வெளியடுவதை விரும்பவில்லை)
   இருந்தாலும் 3டி கண்ணாடி அணிந்து ஒரு வழியாக படம் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.
   வெளியில் வந்ததும் எங்களின் கணவர்கள் எங்களை ஒரு பூங்காவில் விட்டுவிட்டு கால்பந்தாட்ட மைதானத்திற்குச் சென்று விட்டார்கள்.
   அப்பொழுது எங்களுக்குள் பேசியது. உங்களுக்கும்....

அருணா- “படம் எப்படி இருந்தது...?“
தோழி 1 – “சூப்பர். ஆயிரம் என்ன இரண்டாயிரம் கூட கொடுக்கலாம். என்னதான் அனிமேஷன் படம் என்றாலும் நம் நாட்டிற்கே உரிய கதையமைப்புக்கு கே.எஸ் ரவிக்குமாரைப் பாராட்டலாம். அதைவிட புதிய தொழில் நுட்பத்தைத் தமிழ் படத்தில் அறிமுகப் படுத்திய சௌந்தர்யாவிற்கு ஒரு சலுட் பண்ணலாம்“ என்றாள்.
தோழி 2 – “என்னமோ தெரியலையடி. ரஜினி மற்றும் மற்றவர்களையும் ஏதோ குட்டை க்குட்டையாகக் காட்டியது போல் இருந்தது. அதிலும் கோச்சடையான் உருவத்தில் இடுப்பிலிருந்து மேல் பாதியை அருமையாக வடிவமைத்துக் கீழ் பாதியைக் குட்டையாகவும் கோணல் காலாகவும் இல்லாமல் வடிவமைத்து இருக்கலாம்.“
அருணா – “ஏய் இப்படியெல்லாம் சொல்லாதே. ரஜினி ரசிகர்கள் உன்னைச் சும்மாவிட மாட்டார்கள்.“
தோழி 2 “அதற்கெல்லாம் நான் கவலை படலை. நான் உண்மையைத் தான் எப்பொழுதும் பேசுவேன். அந்தக் கதாநாயகி உருவத்தில் ஏன் கண்களுக்கு அவ்வளவு மை? அந்த தீபிகா படுகோணுடைய அழகு அதனால் கொஞ்சம் குறைவாகவே தான் தெரிந்தது. ஒரு முறை தான் உருவத்தை வடிவமைக்கிறார்கள். அதை அழகாக செய்திருக்கலாம்.“
அருணா – “நீ இதையெல்லாத்தையும் கூட பாப்பியா...?!“
தோழி 1 – “அவளை விடுடி. நான் சொல்லுறதைக் கேள். ஒளிப்பதிவு ராஜிவ் மேனன். என்னமா அற்புதமாக இருந்தது. நாம எதிர்பார்க்காத இதுவரையில் பார்த்திராத பிரமான்டமான அரண்மனை அமைப்புகள். அதில் வடிவமைத்துள்ள சிலைகள் அற்புதம். பாடல் காட்சிகளில் அந்த மலையமைப்புகள்.... பள்ளத்தாக்குகள்.... சோலை.... அடடா... நாம் வாழ்நாளிலே உண்மையில் இந்த மாதிரியெல்லாம் பார்க்கவே முடியாது. கண்கொள்ளா காட்சிகள்“
தோழி 2 – “ஆமா.... எல்லாம் அனிமேஷன் தானே. ஏதோ எல்லாம் கிட்டகிட்ட தெரியும் என்று பார்த்தால்... தொடக்கத்தில் சூப்பர் ஸ்டார் எழுத்து மட்டும் தான் கிட்ட தெரிந்தது. மற்றதெல்லாம் சாதாரணமாகத் தான் இருந்தது. வாள் வீசும் பொழுது, சண்டையிடும் பொழுதெல்லாம் இந்த 3டியைக் கொஞ்சம் பயன்படுத்தி இருந்தால் கொஞ்சம் திகிலுடன் படம் பார்த்தது போல் இருந்திருக்கும்.“
தோழி 1 – “அப்படி இருந்தால் சின்ன பிள்ளைகள் பயப்படும் என்று தான் அப்படி எடுக்கவில்லை. சும்மா இரு. எதையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்காதே. சரி. படத்தோட பாடல் எப்படின்னு சொல்லு.“
தோழி 2 – “எட்டு பாட்டு. கேட்க கேட்கத் தான் மனசுல பதியும்ன்னு நினைக்கிறேன். கோச்சடையானக பாடும் பாடலில் உள்ள கருத்துக்கள் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கிறது. ஒரு சமயம் வைரமுத்து வரிகளோ.... ஆனால் நான் இசையமைப்பைக் குறையே சொல்ல மாட்டேன்ப்பா. ஏ.ஆர்.ரகுமான் சும்மா வெளுத்துக் கட்டியிருக்கிறார்.“
அருணா – “படத்துல வர்ற நாகேஷ் கேரட்டரைப் பற்றி எதுவுமே சொல்லலையே.“
தோழி 2 – “புது உத்தி தான். பாராட்டலாம். ஆனால்.... இப்பொழுது வாழும் பழங்கால நடிகருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம்.“
தோழி 1 – “நீ எதையாவது குறை சொல்லிக்கிட்டே இரு. உண்மைய்யைச் சொல்லுடி. இந்த படத்தில் நீ நிறைவாக எதையும் நினைக்கலை...?“
தோழி-2 - ஏன் இல்லை. நாம் கொடுத்த பணம், ரசினி கோச்சடையானாக ஒரு ருத்திர தாண்டவம் ஆடுகிறாரே.... அது ஒன்றுக்கே செரித்துவிடும். நான் மிகவும் இரசித்த காட்சி அது. சரி அருணா. கோச்சடையானுக்கு எவ்வளவு மார்க கொடுக்கலாம்.
அருணா – மார்க்கா...?
புது தொழில் நுட்பத்திற்கு
ரஜினி + சௌந்தர்யா      – 20
இசை                    - 10
கதை வசனம்            - 10
ஒளிப்பதிவு               - 10
சண்டை பதிவு           - 10
மற்றவை                - 5

மொத்தம் நாற்றுக்கு 65 மார்க் கொடுக்கலாம்பா. என்னடி நான் சொன்ன அளவு சரியா...?
தோழி -2 சரியான அளவு தான்.
தோழி -1- ஓரளவிற்கு சரிதான். என்று முடித்தாள்.

அருணா செல்வம்

29.05.2014

செவ்வாய், 27 மே, 2014

நித்திரை போனதடி!!நித்திரை போனதடி! நெஞ்சு நினைவிலே
சித்திரைச் சூரிய வெக்கையடி! கன்னத்தில்
முத்திரை வேண்டுமடி! மூடியதை என்றுமே
பத்திரமாய் வைத்திருப்பேன் பார்!

நித்திரை போனதடி! நெஞ்சு நினைவிலே
சித்திரைப் பெண்ணுன் சிரிப்படி! - பாத்திறம்
பாடிடும் பாவையுன்னைப் பார்த்திடும் போதெல்லாம்
பாடிடுவேன் நானும்ஓர் பாட்டு!

நித்திரை போனதடி! நெஞ்சு குழியிலே
சித்திரைச் சூரிய வெக்கையடி! – சித்திரமே
செவ்வானம் சிந்தும் மழையாக உள்ளதடி
செவ்விதழ் சிந்தும் சிரிப்பு!

நித்திரை போனதடி! நெஞ்சம் உருகுதடி!
சித்திரை காயுதடி சிந்தையிலே! – கத்தரி
முற்றிக் கிடக்குதடி! முத்தமிழே நீயின்றி
வற்றி வறண்டதடி வாழ்வு!

அருணா செல்வம்

04.04.2010

ஞாயிறு, 25 மே, 2014

கண்மூடிக் கனவு கண்டேன்!!

   
கண்மூடிக் கனவு கண்டேன் அதில்
காதலன் உன்வரவு கண்டேன்!

விண்ணாடும் நினைவுகளை அதில்
விளைகின்ற நிறைவு கொண்டேன்!

தன்னந் தனிமையில் நானிருந்தேன்
தவித்திடும் ஏக்கமாய்ப் பார்த்திருந்தான்!
கன்னம் சிவந்திட நான்குனிந்தேன்
களித்திடும் ஆசையில் நெருங்கிவந்தான்!  (கண்மூடி)

மாலையில் விரிந்திட்ட ரோஜாப்பூ
மயக்கத்தைத் தந்ததே தேன்கலந்து!
சோலையில் சிரித்திட்ட ஊதாப்பூ
சுயத்தினை மறந்ததே எனைப்பார்த்து!    (கண்மூடி)

தழுவிடும் தென்றலின் தொடுசுகங்கள்
தயக்கமாய் நகருமா குலம்பார்த்து!
நழுவிடும் போதினில் படும்கரங்கள்
நயத்தினைப் பகரவா நிலம்பார்த்து!      (கண்மூடி)
  
அருணா செல்வம்

26.05.2014

வெள்ளி, 23 மே, 2014

காமக்கிழத்தன் அவர்களுக்கு...

காமக்கிழத்தன் அவர்களுக்கு வணக்கம்.
    யாதெனில் உங்களின் வலையில் வந்து கருத்திடும் இடத்திற்கு வர முடியவில்லை என்பதாலும், மின் அஞ்சல் முகவரியும் இல்லாததாலும் இந்தக் கடிதத்தை  வலையில் பதிக்கிறேன்.
    தவறெனில் மன்னிக்கவும்.
    ஐயா... உங்களின் நல்ல நல்ல பதிவுகளைப் படிக்கும் ஆர்வத்தில் உங்களின் வலையைத் திறந்தால் அது துள்ளிக் கொண்டே இருக்கிறது. இதுவரையில் நான் உங்களின் பதிவு ஒன்றையும் படித்ததில்லை.
   இதற்கு முன் “பசி பரமசிவமாக“ நீங்கள் தான் எழுதினீர்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுதும் இப்படித் தான் வலை துள்ளியது. ஏன் அப்படி?
   ஐயா, என்னைப் போன்று உங்களின் படைப்புகளைப் படிக்க விரும்பும் மற்றவர்களுக்கும் சேர்த்து இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன். உங்களின் வலையின் துள்ளலை நிறுத்தி நாங்களும் படிக்க உதவுமாறு வேண்டுகிறேன்.
   இதையே ஆரூரார் அவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
அருணா செல்வம்.

24.05.2014

புதன், 21 மே, 2014

உள்ளுக்குள் மறைத்தேன்!!

        எடுப்பு

உள்ளுக்குள் மறைத்தேனடி தோழி
உணர்ந்திட அதுதேனடி!

        தொடுப்பு

சொல்லுக்குள் மறைத்தேனடி அதைச்
சொல்லிடச் சுவைத்தேனடி!

         முடிப்பு

கரும்புக்குள் இருந்திடும் கற்கண்டு
கண்களில் தெரியுமோ சொல்இன்று!
உருவத்தில் இருந்திடும் உயிர்கண்டு
ஒலித்திட முடியுமோ சொல்நின்று!       (உள்ளுக்குள்)

மலருக்குள் வீசிடும் வாசமதை
மதியுடன் பிடித்துடன் காட்டிவிடு!
கலந்திட்ட நதிகளின் நன்னீரைக்
கடலினில் பிரித்துடன் காட்டிவிடு!        (உள்ளுக்குள்)

வண்ணத்தில் ஆடிடும் ஆசைகளை
வார்த்தையில் வடித்திட ஏதெல்லை!
எண்ணத்தில் இருந்திடும் அவன்செயலை
எழுதிட நினைப்பதோ வீண்வேலை!      (உள்ளுக்குள்)


அருணா செல்வம்
21.05.2014

திங்கள், 19 மே, 2014

அழகானப் பெண்ணை ஏன் “குட்டி“ என்கிறார்கள்?

நட்புறவுகளுக்கு வணக்கம்.

   போன வாரத்தில் ஒரு நாள் நான் வலையில் ஏதாவது பதிக்கலாம் என்று எழுத அமர்ந்தேன். எதுவும் தோன்றவில்லை. ஏதாவது தலைப்பு இருந்தால் கவிதையாய் எழுதிவிடலாம் என்று தோன்றியது.
   உடனே, “ஏதாவது தலைப்பு கொடுங்கள். அந்தத் தலைப்பில் கவிதை எழுதி விடுகிறேன். ஆனால் மிகவும் பெரிய தலைப்பாக கொடுக்காதீர்கள். நேரமில்லை. அதனால் குட்டியாக ஏதாவது தலைப்பு கொடுங்கள்“ என்று எழுதி கவிஞர் கி. பாரதிதாசனுக்கு மெயில் அனுப்பினேன்.
   அவர் உடனே, “குட்டி“ என்றே தலைப்பிட்டு கவிதை எழுதுங்கள்“ என்று பதில் அனுப்பினார்.
   நானும் “குட்டி“ என்று தலைப்பிட்டு கவிதை எழுதி பதித்துவிட்டேன்.
   மறுநாள் “சில பெண்களைக் “குட்டி“ என்கிறார்களே... அதைக்குறித்து உங்கள் கவிதையில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்“ என்று மெயில் அனுப்பினார்.
   நான், “அந்தக் காரணம் பெண்ணை இழிவாகச் சொல்வது போல் இருக்கிறது என்பதால் எழுதவில்லை“ என்று பதில் எழுதி அனுப்பிவிட்டு, சனி ஞாயிறு இரண்டு நாட்களும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டேன்.

   அதன் பிறகு இன்று காலையில் ஒரு தோழி தொலைபேசியில் அழைத்தாள். பொதுவாகப் பேசிவிட்டு “குட்டி“யைப்பற்றி பேச்செடுத்தாள்.
   அவள் சொன்னதின் சுறுக்கம் என்னவென்றால்.... அவளும் வேறு சில தோழ தோழியரும் என் “குட்டி“ பாட்டைப் படித்தார்களாம். அப்பொழுது பேச்சுவாக்கில் “குட்டி“ என்று சில பெண்களைச் சொல்வதன் காரணத்தைப் பற்றி அலசி இருக்கிறார்கள். அதாவது “குட்டி“ என்ற தலைப்பில் குட்டி பட்டிமன்றமே நடந்திருக்கிறது.
   அவர்கள் சொன்ன காரணங்கள...
-          பெண்கள் தங்களை எப்பொழுதும் சின்ன பிள்ளையாகவே நினைத்துக் கொண்டு இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்ததாம்.
-          மற்ற மிருக குட்டிகளைப் போல மனித குழந்தைகளும் அழகாக இருந்ததால் தான் இந்தப் பெயர் வந்ததாம்.
-          பெரிய பெண்ணாக இருந்தாலும் வயதைக் குறைவாகக் காட்ட நினைத்துச் சின்ன பெண்போல அலங்காரம் செய்து கொள்வதால் தான் இந்தப் பெயர் வந்ததாம்
-          பூனை நாயைகளின் குட்டிகள் எங்கும் தனியாகச் செல்லாமல் தன் தாயின் அருகிலேயே இருப்பது போல தன் துணையின் அருகில் எப்பொழுதுமே இருக்க நினைப்பதால் தான் இந்தப் பெயர் வந்ததாம்....

இப்படி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே சென்றாள். நானும் கடைசியில், “முடிவு என்னவென்று முடித்தீர்கள்?“ என்று கேட்டேன்.
    “அது தான் சரியாகத் தெரியவில்லை. நீதான் முடிவை சொல்லனும். உனக்காக இரண்டு நாட்களாக காத்துக்கொண்டு இருக்கிறோம்“ என்றாள்.
   அப்படியென்றால் சில பெண்களைக் “குட்டி“ என்று சொல்வதற்கானப் பொருளை யாரும் சரியாக அறிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்து போனது.
   அதனால் அவளிடம் சொன்ன பதிலை இங்கே உங்களுக்கும் பதிக்கிறேன். இங்கே வலையில் பதில் தெரிந்தவர்கள் இருக்கலாம். அப்படி இருப்பவர்கள் நான் சொல்லும் பதில் சரியில்லை என்று நினைத்தால் தயவுசெய்து தாங்கள் கண்டுபிடித்த பதிலை எங்களும் தெரிவிக்கலாம்.

சில பெண்களை ஏன் “குட்டி“ என்று சொல்கிறார்கள் என்றால்.....

    பொதுவாக குட்டிகள் அனைத்துமே மிகவும் அழகாக தான் இருக்கும். “கழுதை கூடக் குட்டியில் அழகுதான்“ என்றொரு வழக்கு இருக்கிறது.
   அப்படி இருக்க....
   சாத்தான்களும் பிசாசுகளும் மனிதர்களை மயக்கும் சக்தி வாய்ந்தவைகள். ஆனால் கோரமானவைகள். ஆனால் அதனுடையக் குட்டிகளும் மற்ற குட்டிகளைப் போல் அழகாக தானே இருக்கும்...?
    (பல) ஆண்கள் பெண்களின் அழகில் மயங்குவார்கள்.
    ஆண்களை மயக்கும் சக்தி பெண்களிடம் இருக்கிறது...!!!
    ஆண்களை மயக்கும் சக்தி வாய்ந்த பெண்கள் அழகானவர்கள். அந்த அழகானப் பெண்களுக்குக் கோரமான சாத்தான் பிசாசு என்ற பெயரை நேரிடையாக வைக்காமல் அதனின் குட்டிகள் எல்லா குட்டிகளைப் போல அழகாக இருக்கும் என்ற கற்பனையில் குட்டிச் சாத்தான், குட்டி பிசாசு என்று சொன்னார்கள்.
   இப்படிச் சொல்லும் பொழுது சாத்தான் பிசாச என்னும் சொற்கள் சற்று பயங்கரமாக இருப்பதால் அழகானப் பெண்களுக்குப் பொருந்தாது என்றெண்ணி அவைகளைத் தவிர்த்து வெறும் “குட்டி“ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.

   அதனால் ஆண்களை மயக்கம் (சில) பெண்களைக் “குட்டி“ என்று செல்லமாகச் சொல்லும் வழக்கு வந்தது.

அருணா செல்வம்
19.05.2014