வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாக்கடை நீராய்ப் போனதடி!

கொட்டோ  கொட்டுனு
கொட்டுதடி  வானம்! - மனம்
தொட்டோ  விட்டுடுன்னு
முட்டுதடி  பாவம்!

சின்னச்  சின்னத்  துளியெல்லாம்
சேர்ந்து  தேங்கி  போனதடி!
சின்ன  எறும்பாய்ச் சேர்த்ததெல்லாம்
சேர்ந்தே பாழாய்ப் போனதடி!

கடனோ உடனே வாங்கிநாங்கள்
கஷ்டப்  பட்டு  வைத்தததைத்
தடமே  எதுவும்  காட்டாமல்
இஷ்டம் போல  போனதடி!

பயிர்கள்  செழிக்க  மழைவேண்ட
பன்னீர்ப்  போலத்  தெளிக்காமல்
உயிர்கள்  அலற  வைத்துவிட்டு
உதவா வண்ணம்  போகுதடி!

அளவாய்க்  கிடைத்தால்  அமிர்தம்தான்!
அளவோ  மிஞ்ச  விஷமாகி
வளமாய்  இருந்த  மக்களையும்
வாழ்வைச்  சிதைத்து  விட்டதடி!

தாகம்  எடுத்தால்  உதவுவதே
தண்ணீர்  கொண்ட  பயனாகும்!
சாகும்  தருவில்  உதவாத
சாக்கடை  நீராய்ப்  போனதடி!!


கவிஞர்  அருணா  செல்வம்
05.11.2015 

செவ்வாய், 1 டிசம்பர், 2015

மணமகள் மறுவீடு அழைப்பு பாடல்!


 


புத்தம்  புதிய  புதுமலரே!
புதுத்தாலி   அணிந்த  மணமகளே!
நித்தம் இன்பம்  பெருகிடவே
நெஞ்சம்  நிறைந்து  வாழ்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே!  - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                            (புத்தம் புதிய )

அம்மி  மிதித்த  அருந்ததியே
அன்பால் மலர்ந்த  நறும்பூவே!
கம்பர்  பாடிய  நாயகியே
காதல்  நிறைந்து  வாழ்ந்திடவே 
வலது  காலை  வைத்து  வருகவே! - நல் 
வாழ்வு  மலர  வாழ்கவே!                          (புத்தம் புதிய )

தேடி  உன்னை  மணந்தவனே
தெய்வம்  தந்த  துணையவனே!
கூடி  இன்பம்  களித்திடவே
குலமும்  தழைத்துப் பெருகிடவே
வலது காலை  வைத்து வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                        (புத்தம் புதிய )

பிறந்த  வீடு  மகிழ்ந்தடவே
புகுந்த  வீடு  மதித்திடவே
சிறந்த  பெருமை  காத்திடவே 
செல்வம்  எல்லாம்  சேர்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர வாழ்கவே!                         (புத்தம்  புதிய ) 

அத்தை  மாமன்  மனம்நிறைய
அன்பு  கணவன்  அகம்மகிழ
அங்கே  வாழ்ந்த லட்சுமியும்
ஆசை பொங்கி  உனைஅழைக்க
வலது  காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!!                             (புத்தம் புதிய) 


கவிஞர்  அருணா செல்வம்
19.10.2015