பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 செப்டம்பர், 2014

கை வைத்தியம்!!


1. வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி ஆகியவற்றை அரிந்து உப்பு மிளகு எலுமிச்சை சாறு சேர்த்து வாரம் மூன்று முறை உண்டுவர ஊளைச்சதை குறையும்.

2. பப்பாளிப் பழத்தை தினசரி சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

3. தினமும் உணவில் புர்ண்டு சேர்த்துக் வந்தால் உடம்பிலுள்ள கொலஸ்டிரால் குறைந்து உடல் கெட்டிபடும்.

4. தினமும் ஒரு கொத்து திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் அறவே நீங்கி விடும். அதனால் சளித் தொல்லையும் சரியாகும்.

5. உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்தால் குடலில் உள்ள புச்சிகள் செத்துவிடும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடும்.

6. வறட்டு இருமல், தொண்டைப்புண் ஆகியவை இருந்தால் வெந்நீரில் தேன் கலந்து பருகுங்கள். உடனே பலனளிக்கும்.

7. பசும்பாலில் மஞ்சள் பொடியும் மிளகுத்தாளும் போட்டுக் கொதிக்க விட்டு சூடாகக் குடித்தால் இருமல் சரியாகும். புண்ணான தொண்டைக்கு இதமாக இருக்கும்.

8. பனங்கற்கண்டைப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் இருமல் குறையும்.

9. வல்லாரைக்கீரை மூளையிலுள்ள செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகமாக்குகிறது. ஆனால் அளவோடு உண்ணவும். அதிகமானால் தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படும்.

10. பித்த வெடிப்புகளைச் சரி செய்ய பாதங்களை வெந்நீரில் அமிழ்த்தி நன்றாகத் தேய்த்துக் கழுவிய பின், காய வைத்து மஞ்சள்துர்ள் கலந்த ஆமணக்கு எண்ணெயைத் தடவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு தேய்த்துக் கழுவவும். ஒரே வாரத்தில் பாதம் பட்டு போல் ஆகிவிடும்.

படித்ததைப் பகிர்ந்தேன்.

அருணா செல்வம்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

எல்லோரும் ஓடி வந்து பாருங்கள்!!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
   நான் சொல்லப்போகிற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியையோ ஆச்சரித்தையோ கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. இது மிகப்பெரிய அதிர்ச்சி. ஆச்சர்யம்....
   என்னவென்று யோசிக்கிறீர்களா.....? சொல்கிறேன். சொல்கிறேன்.
   கடந்த 31.10.2010 அன்று நடந்த கம்பன் விழாவில்

சீர்மணக்கும் செந்தமிழின் யாப்பைக் கற்று,
    பார்மணக்கும் பாட்டெழுதிச் சங்கம் சான்ற
பேர்மணக்கும் பெரும்புகழைப் பெற்று! மின்னும்
    தேர்மணக்கும் திருமகளின் அருளை ஏற்று!
தார்மணக்கும் சொல்லாற்றல்! ஒளிரும் பண்பாம்
    வேர்மணக்கும் எழுத்தாற்றல்! குளிரும் இன்பக்
கார்மணக்கும் கவியாற்றல் கமழ்ந்து வாழும்
    கவிதைப்பெண் உயர்அருணா செல்வம் வாழ்க!

என்று வாழ்த்தி, “கவிதைப்பெண்“ என்ற விருதை கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் எனக்கு வழங்கினார்.

  அதற்கு முன் 2006 ம் ஆண்டு “சிறந்த பேச்சாளர்“ என்ற விருதையும் கம்பன் கழகம் வழங்கியது. (அதற்கு முன்பே வீட்டில் “வாயாடி“ என்ற பட்டம் சான்றிதழ் இல்லாமலேயே இருப்பது அவர்களுக்குத் தெரியாது)
  பிறகு வலைப்பு திறந்த புதியதில் நண்பர் செய்தாலி அவர்கள் ஒரு விருதை வழங்கினார்.
   இப்பொழுது மீண்டும் ஒரு விருது!!
   தோழி அம்பாளடியாள் அவர்கள் அன்புடன் எனக்கு இந்த விருதை வழங்கியுள்ளார். இதைப் பார்க்கத் தான் உங்கள் அனைவரையும் ஓடி வரச் சொன்னேன். உங்களுக்கு இது ஆச்சர்யமான விசயம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய ஆச்சர்யம். காரணம்..... நான் முதன்முதலில் ஒரு பெண்ணிடம் இருந்து விருது பெற்றிருக்கிறேன் என்பது தான்...


மிக்க நன்றி தோழி!!

   தவிர, விருது பெற்ற அனைவருக்கும் இதன் நிபந்தனைகள் தெரியும். அதனால் நான் விளக்கவில்லை. நான் மிகவும் தாமதமாக வந்ததால் நான் விருது கொடுக்க நினைத்த அனைவரும் இரண்டு மூன்று முறை அதே விருதை வாங்கி விட்டிருக்கிறார்கள். அதனால் நான் யாருக்கு விருதைக் கொடுப்பது என்று அறியாமல் என் விருதை மட்டும் என் வலையில் வைத்துவிட்டேன்.

   அடுத்து என்னைப்பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டுமாம்.
   உண்மையில் என்னைப்பற்றி எனக்கே தெரியவில்லை. நான் யார்? எங்கிருந்து வந்தேன்?...... என்றெல்லாம் (யோசித்து யோசித்து யோசித்துக்கொண்டே இருந்தாலும்..... அதையெல்லாம்) சொல்லி உங்களைக் கடுப்பேத்த மாட்டேன்.
   இதெல்லாம் இல்லாமல், என் பெயர் அருணா. என் கணவர் பெயர் என்செல்வம். எனக்குத் தமிழ்...... என்று எழுதினால்.... இதெல்லாமும் உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
   அதனால் வித்தியாசமாக எனக்குப் பிடித்த உணவுவகைகளை எழுதிவிடுகிறேன்.

1.நிறைய முந்திரி போட்ட பாயாசம்.
2. ஐஸ் கிரிம் ( ஜிகிர்தண்டா ஐஸ்கிரிமை நம் பதிவர் சந்திப்பில் கொடுக்க இருக்கிறார்களாம்.... ம்ம்ம்.... எனக்குத் தான் அதைச் சாப்பிட கொடுப்பனை இல்லை.)
3. இஸ்லாமிய சகோதரிகள் செய்யும் மட்டன் பிரியாணி.
4. என் அம்மா எனக்காகச் செய்து தரும் மட்டன் சாப்ஸ்.
5. வஞ்சர மீன் வறுவல்.
6. நெய் சொட்டச் சொட்ட இருக்கும் சிகப்பரிசி “தொதோல்“
7. முறுவல் தோசை அதற்கு தேங்காய் சட்னி......
   இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..... படிப்பவர்களுக்குக் கோபம் வரும் என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் இதையெல்லாம் ஏன் இங்கே சொன்னேன் என்று சிலருக்குத் தோன்றும் இல்லையா..... அது ஒன்றுமில்லைங்க.... என்றாவது ஒருநாள் நான் இந்தியா வந்து உங்களில் யாரையாவது சந்தித்தால் இதில் ஒன்றைச் செய்துத் தருவீர்கள் என்ற நட்பாசை தாங்க.

அன்புடன்
அருணா செல்வம்
17.09.2014

    

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

சீன நாட்டுப் பழமொழிகள்!!




1. மேலே இடிவிழுந்த பிறகு, இடி விழும் பலனைப் பஞ்சாங்கத்தில் பார்க்க வேண்டியதில்லை.

2. எப்போதும் கண்களைத் திறந்து கொண்டே இரு. வாயை அல்ல.

3. அழகில்லா மனைவியும், அறிவில்லா வேலைக்காரியும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்.

4. ஒருவன் பதவியில் இல்லாத போது கண்டிக்கிற அந்தக் குற்றங்களைப் பதவியில் அமர்ந்தவுடன் அவனே செய்கிறான்.

5. ஒருவனை நண்பனாகக் கொள்வதில் நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் நட்புக் கொண்ட பின் அதில் உறுதியாகவும் நிலையாகவும் இருக்க வேண்டும்.

6. சாட்டையை இழந்து விட்டால் அதில் தங்கப்பிடி இருந்தது என்பான் மனிதன்.

7. ஒரு குடும்பத்தைப் பாழாக்குவது திறமையற்ற பிள்ளைகள் அல்ல. கெட்டிக்கார பிள்ளைகளே! ( இது சரியா??? )

8. அமைதியாக எழுபவன் லாபத்துடன் தூங்குவான்.

9. தாகம் ஏற்படுவதற்கு முன்பாகவே கிணற்றைத் தோண்ட வேண்டும்.

10. மனிதர்கள் அன்பாக உள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாக இருக்கும்.

11. மிக முக்கியமான விஷயங்களுள் முதன்மையானது, நம்முடைய மன சாட்சியை நாம் ஏமாற்றாமல் இருப்பது தான்.

12. மற்றவர்களின் வடு நமக்கு பாடமாக அமைய வேண்டும்.

13. உன்னுடைய விரோதிக்கு நீ அடிக்கடி கோபத்தை மூட்டினால் அவனை விட அது உன்னையே அதிகம் அழிக்கும்.

14. புன்சிரிப்பு செய்யவே இயலாதவன், புதிய கடையைத் திறக்க தகுதியற்றவன்.

15. உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாள் சாப்பாடும் விருந்து தான்.

அருணா செல்வம்

படித்ததில் பிடித்தது.                   

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

“பைசா“ நகரத்துச் சாய் கோபுரம்!! ( இத்தாலி - 2)

பைசா சாய் கோபுரம்

   எட்டு உலக அதிசயங்களில் “பைசா“ நகரத்துச் சாய்ந்த கோபுரமும் ஒன்று என்று நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்பதை நான் அங்கே சென்ற பிறகு தான் அறிந்து காண்டேன்.

    பைசா நகரத்துக் கோபுரம் மற்றும் அதன் அருகிலேயே உள்ள “கொம்போ டை மிராக்கொலி“ (COMPO DEI MIRACOLI) என்ற கோவில், அதற்கும் முன் பகுதியில் “பப்திஸ்த்ர் தி பீஸ்“ (BAPTISTERE DE PISE) என்ற கோபுரமும் ஒன்று சேர்த்து வடிவமைக்கப் பட்டே கட்டப்பட்டது.

    மூன்று இடங்கள்

   இந்த மூன்று இடங்களுமே வெறும் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டுள்ளது. இளம் பச்சை கலந்த மார்பல் கல். இதனால் இரவில் கூட விளக்கு வெளிச்சம் இல்லை என்றாலும் வெண்மையாகப் பிரகாசிக்கிறது.

   இதில் கோவிலைத் தவிர மீதி இரண்டு இடங்களும் வெறும் அழகுக்காக மட்டுமே கட்டப்பட்டது என்றாலும் அந்த காலத்தில் கலிலேயோ தன் ஆராய்ச்சிகளை இந்த கோபுர உச்சிகளில் இருந்து தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

   பைசா நகரத்துக் கோபுரம் 1174-ல் பனானோ பிசானோ என்பவரால் கட்டத் துவங்கப்பட்டு 1350 ல் தொமாஸோ பிசானோ என்பவரால் முடிக்கப் பட்டது.  இதன் உயரம் 58.36 மீட்டர். உட்புற சுற்றளவு 4.38 மீட்டர். வெளிப்புறம் 5.22 மீட்டர். இதன் எடை 14.453 டன்.

கீழ் பாகம்
   
   இந்த கோபுரம் ஏழு அடுக்குகள் கொண்டுள்ளதாக உள்ளது. அந்த ஏழு அடுக்குகளும் ஏழு இசைக் குறிப்புகளைக் காட்டுவதாற்காகச் செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறதாம். (Assunta, Crocefisso, San Ranieri, Pasquareccia, Dal Pozzo, Terza, Vespruccio இவை ஏழும் இசைக்குறிப்புகள்) கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல 293 படிகட்டுகள் உள்ளன.

ஏழு அடுக்கு
   
   இந்த மூன்று கோபுரங்களில் பைசா கோபுரம் மட்டும் வருடத்திற்கு 1.2 மில்லி மீட்டர் சாய்கிறது. இதுவரையில் 2.36 மீட்டர் சாய்ந்து விட்டது. இதற்கான காரணத்தைச் சரிவர அறியவில்லை என்றாலும் மண் அரிப்பாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
   1993 ம் ஆண்டு அதிக அளவு சாய்வு ஏற்பட்டதால் 11 ஆண்டுகள் கடுமையாக உழைத்துக் கோபுரத்தை 38 செண்டிமீட்டர் அளவு நேராக்கினார்களாம்.
   பைசா கோபுரம் மட்டும் வருடா வருடம் 1.2 மில்லி மீட்டர் சாய்ந்துக் கொண்டே வருவதால் தான் இதை உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தார்களாம்.

   பைசா கோபுரத்திற்குள் செல்ல நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு 18 யுரோ. இந்த டிக்கெட்டில் பைசா கோபுரத்தையும் “மிராக்கொலி“ கோவிலையும் மட்டும் பார்க்கலாம். “பத்திஸ்த்தர்“ கோபுரத்திற்கும் அதன் இடப்புறம் இருக்கும் “கம்போசன்டோ மொனிமெண்ட்டால் (COMPOSANTO MONUMENTALE )என்ற இடத்திற்கும் தனியாக 10 யுரோ. அதிக பார்வையாளர்கள் இருப்பதால் இதில் ஏதாவது ஒன்றை தான் வாங்க வேண்டும்.
   எங்களுக்குப் பைசா கோபுரத்திற்குள் செல்ல டிக்கட் கிடைத்தது பெரு மகிழ்ச்சி.
   முன்பு சில வருடங்களாக கோபுரத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லையாம். கடந்த மூன்று வருடங்களாகத் தான் அனுமதிக்கிறார்களாம். கோபுரத்திற்குள் செல்ல ஒரு முறைக்கு வெறும் இருபது பேர்களையே அனுமதிக்கிறார்கள். இந்த இருபது பேர்களும் சுற்றிப் பார்த்து விட்டு இறங்கியதும் அடுத்த இருபது பேர்களை அனுப்புகிறார்கள்.
   முக்கியமாக கையில் கேமராவைத் தவிர மற்ற எந்தப் பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. கைப்பைகளை வைக்க பாதுகாப்பான இடங்கள் உள்ளன.

உள் பாகம்

   மிகவும் நீண்ட வரிசையில் நின்று நானும் உள் நுழைந்தேன். அதன் உள் வட்டமான ஓர் இடம். அங்கிருந்து மேல் நோக்கிப் பார்த்தால்.... ஒன்றுமே பெரியதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு மூடிய கிணற்றுக்குள் நின்று கொண்டு இருப்பது போல் தான் இருந்தது.
   அங்கிருந்த பாது காவலர் “படிகட்டுகளில் பார்த்து ஏறுங்கள். வழுக்கும். முடிந்தவரையில் சீக்கிரமாக இறங்கிவிடுங்கள்“ என்று முதலில் இத்தாலி மொழியிலும் பின்பு ஆங்கிலத்திலும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

   உட்புற படிகள்

   மற்றவர்கள் இறங்கி முடித்ததும் நாங்கள் ஏறினோம். 293 படிகட்டுகள். சாதாரண படிகட்டிலேயே இரண்டு மாடி ஏறுவதற்கு எனக்கு மூச்சு வாங்கும். இதுவோ மேலே ஏற ஏற மிக மிக சாய்வாகச் செல்கிறது. அது மட்டுமல்லாமல் எத்தனை கோடி பேர் ஏறினார்களோ.... சில இடங்களில் மார்பல் படிகட்டுகளின் உள்பாகங்கள் தேய்ந்து மிகவும் வழுவழுப்பாக இருந்தது. சற்று ஏமார்ந்தால் நம்மை ஏமாற்றி விடும்.

மேலிருந்து எடுத்தப் படம்.

    எப்படியாவது உலக அதிசயத்தை பார்த்து விட வேண்டும் என்று விடா முயற்சியுடன் ஏறினேன். மேலே முழுவதும் ஏறியப்பிறகு தான் அந்த கோபுரம் எவ்வளவு சாய்வாக உள்ளது என்பதை நன்கு உணர முடிந்தது. மேலிருந்து பார்த்த போது மற்ற இரண்டு இடங்களும் அழகாகத் தெரிந்தது.

  
   என் பலநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட திருப்தியுடன் கீழிறங்கினேன்.

   மற்ற இரண்டு இடங்களுடன் கொம்போசன்டோ மொனிமென்டல் இடத்தையும் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

நட்புடன்

அருணா செல்வம்.

புதன், 30 ஜூலை, 2014

சாதிகள் உள்ளதடி பாப்பா....



    “சாதி, சாதி என்கிறார்களே... அது எதை வைத்துப் பிரித்திருக்கிறார்கள் மாமா...?“ என்று கேட்ட காமினியை யோசனையுடன் பார்த்தார் மாமா.
    “சாதி என்பது அவரவர் செய்யும் தொழிலை வைத்துப் பிரித்தார்கள் அம்மா“ என்றார் மாமா.
    “அப்படியா....? அப்போ நிறைய சாதி இருக்குமே“
    “ஆமாம்மா. இப்போ அப்படித்தான் ஆகிவிட்டது“
    “எதனால் இப்படி ஆனாது?“ கேள்வி வாயிலிருந்து உதித்தாலும் அவளின் கண்களில் அதை அறியும் ஆவல் இருந்ததைக் கவனித்தார் மாமா.
   “காமினி.... விளக்கமாகச் சொல்கிறேன் கேள். பழைய காலத்தில் ஒவ்வொருவர் செய்யும் தொழிலை வைத்து அதை ஆறு சாதியாகப் பிரித்தார்கள். ஆனால் அதைக்கூட காளமேகப் புலவர் தொழிலை வைத்துப் பார்க்காமல் அதனுள் கடவுளை வைத்துப் பாடி இருக்கிறார்“
   “அப்படியா....? சாதியைப் பற்றி காளமேகப் புலவர் பாடினாரா....? என்னவென்று பாடினார் சொல்லுங்கள் மாமா.....“ கெஞ்சளாகக் கேட்டாள் காமினி.
   “ம். சொல்கிறேன் கேளம்மா“ என்று காளமேகத்தைப் பாடினார் மாமா.
  
கம்மாள னங்கிக் கணக்கனென வேதுதித்தார்
செம்மான் சதுரரைத் திருவரசை – அம்மாகேள்
வாணியனும் பொன்னேரி வாழும்வெள் ளாழனுமே
சேணியனு மன்றே தெரிந்து.

அம்மா கேள் – அம்மையே கேட்பாயாக
வாணியனும்– வாணியைக் கொண்டோனான பிரம்மனும்
பொன்னேரிவாழும் வெள் ஆழனும்  - திருமகளாகிய அழகியைத் தன் மார்பிலே வீற்றிருக்கப் பெற்றோனாகிய பாற்கடலிலே பள்ளிகொள்கின்ற திருமாலும்
சேணியனும் – இந்திரனும்
அன்றே தெரிந்து – அந்நாளிலே (சாதியை அறிந்து கொண்டு) உண்மையை அறிந்து கொண்டு
செம்மான் சதுரரை – சிவந்த மாலையினைக் கொண்ட சதுரரான பெருமானை
திரு அரசை – நடராசப் பெருமானை
கம்மாளன் – கபாலத்தை ஏந்தியவன் என்றும்
அங்கிக் கண் நக்கன் எனவே துதித்தார் -   நெருப்புக் கண்ணாலே சிரித்துப் புரமெரித்தவன் என்றும் வாழ்த்தினார். என்றார்.

   “மாமா.... எனக்குப் புரியும் படி விளக்கமாகச் சொல்லுங்கள்“ என்றாள் காமினி. மாமா தொடர்ந்தார்....

அதாவது
தொழிலைக் குறித்து வந்த சாதிகளான வணியன் (வியாபாரம் செய்வோன்), வெள்ளாழன் (உழவன்), சேணியன் (நெய்வோன்), சதுரன் (அறிஞன்), கணக்கன் (சோதிடன்), வேதியன் (வேதம் கற்றவன்) என்ற ஆறு சதிகளும் மனிதரின் பெயரால் வராமல் கடவுள்களின் பெயரில் பாடி சரி செய்து இருக்கிறார் காளமேகம்.
    “அப்போ.... இந்த ஆறு சாதிகள் இல்லாமல் வந்திருக்கும் மற்ற சாதிகள் எல்லாம் எப்படி வந்தது...?“ ஆச்சர்யமாகக் கேட்டாள் காமினி.
    “மற்ற சாதிகள் எல்லாம் ஒவ்வோர் சாதியிடம் இருந்து வந்த கிளைகள் தான் காமினி. ஆமாம்.... உனக்கு ஏன் இன்று சாதியைப் பற்றிய எண்ணம் வந்தது...?“
    “இன்று பள்ளியில் ஒரு பையன் நீ என்ன சாதி?என்று கேட்டான். நான் பெண்சாதிஎன்றேன். அதற்கு அவன், “ஆமா.... நான் ஆண் சாதின்னா நீ எனக்குப் பெண்ஜாதி தான் என்றான் கொஞ்சம் நக்கலாக. அது தான் உங்களிடம் விளக்கம் கேட்டேன் மாமா“ என்றாள்.
    “நல்ல குறும்புக்கார பையன் தான். அவனிடம் இப்படி சொல்லு. உலகில் ஆண்,பெண் என்று இரண்டு சாதிகள் தான். ஆனால் ஆண்தான் பலசாதிகளில் பிரிந்து கிடக்கிறான். பெண்களுக்குப் பெண்கள் என்ற ஒரே சாதி தான் என்று சொல்லம்மா.....“ என்று சொல்லியபடிச் சிரித்துக் கொண்டே சென்றார்.

அருணா செல்வம்

30.07.2014