புத்தாண்டு வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 டிசம்பர், 2021

புத்தாண்டு வாழ்த்து! 2022

 



வருக வருக புத்தாண்டே
    வசந்தம் வீசி வாழ்ந்திடவே!
தருக தருக நல்வினைகள்
    தழைக்கும் உலகு மகிழ்ந்திடவே!
பெருக பெருக வளம்யாவும்
    பெருமைச் சிறுமை அகன்றிடவே!
உருகி யுருகி அழைக்கின்றோம்
    ஒளிரும் ஆண்டாய் நிறைந்திடவே!
 
புத்தம் புதிய ஆண்டினிலே
    புவியும் நன்றாய் குணம்பெறட்டும்!
நித்தம் போன வேதனைகள்
    நெஞ்சை விட்டே ஓடட்டும்!
சித்தம் எல்லாம் மகிழ்ந்திருக்க
    செய்யும் ஆண்டாய் இருக்கட்டும்!
சுத்தும் பூமி கேட்கட்டும்
    சொல்லின் ஆழம் உணரட்டும்!
   
இல்ல மெல்லாம் ஒளிரட்டும்
    இணையோர் சேர்ந்து இருக்கட்டும்!
வல்ல நோயும் அழியட்டும்
    வளங்கள் யாவும் சேரட்டும்!
சொல்லில் இனிமை கூடட்டும்!
    சுவையாய்த் தமிழும் வளரட்டும்!
நல்ல தெல்லாம் நடக்குமென
    நானும் பாடி வாழ்த்துகின்றேன்!
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2022   

செவ்வாய், 31 டிசம்பர், 2019

புத்தாண்டு வாழ்த்து!



.
இன்பம் ஒன்றே இருந்திடவும்,
    இனிய நலங்கள் கொடுத்திடவும்,
பொன்னும் பொருளும் கிடைத்திடவும்,
   பொலிவும் புகழும் அடைந்திடவும்,
மின்னும் கலையில் மிளிர்ந்திடவும்,
   மேன்மைத் தொழிலைத் தொடர்ந்திடவும்,
நன்றே பிறக்கும் புத்தாண்டில்
   நாளும் கிடைக்க வாழ்த்துகின்றேன்!
.
அன்புடன்
பாவலர் அருணா செல்வம் B.Lit, M.A, Litt (USA) 
1.1.2020

திங்கள், 30 டிசம்பர், 2019

புத்தாண்டே வருக!




ஓடி யோடி வருகின்றாய்!
  ஒருநாள் கூட நிற்பதில்லை!
ஆடி யாடி அலைந்தாலும்
    அந்த நாட்கள் திரும்பவில்லை!
நாடி நாடி வந்தாலும்
    நாளும் நகர்ந்தே செல்கின்றாய்!
கோடிக் கோடிப் போனாலும்
    குறையே இன்றி வளர்கின்றாய்!

அன்று நடந்த சுவடெல்லாம்
    அழியா தென்றும் இருப்பதற்கும் 
சென்ற துன்ப வடுக்கூட
    செழிக்கும் உயர்வில் மறைவதற்கும் 
இன்றும் நாளை வருவதெல்லாம்
    இனிமை ஒன்றே நிலைப்பதற்கும்
தொன்மைத் தொடரும் புத்தாண்டே
    துடிப்பாய் வந்து பிறந்திடுவாய்!

ஊக்கம் கொண்டே உழைப்பவர்க்கே
    ஒளிரும் ஆண்டாய் வந்திடுவாய்!
நோக்கம் உயர்வைக் கொண்டோர்க்கு
    நொடியில் அருளைத் தந்திடுவாய்!
தேக்கம் எதிலும் இல்லாமல்
    தெளிந்த வழியைக் காட்டிடுவாய்!
ஆக்கும் செயல்கள் புகழடைய
    அகிலம் போற்ற வருவாயே!
.
பாவலர் அருணா செல்வம்
30.12.2019

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து !


-
புத்தம் புதிய ஆண்டினிலே
    புதுமை பலவும் கண்டோங்கிச்
சித்தம் தெளிந்த நிலையேந்திச்
    சிறந்த வழியில் வாழ்வேந்திக்
கொத்து மலரின் தேனேந்திக்
    குளிர்ந்த நிலவின் அழகேந்தி
நித்தம் மகிழ்வாய் வாழ்ந்திடவே
    நிறைந்த நெஞ்சாய் வாழ்த்துகிறேன்!
-
பாவலர் அருணா செல்வம் 
01.01.2018