புதன், 9 ஜனவரி, 2019

பலவயிற் போலி உவமை! - 20





   பாடலில் ஒரு தொடர்மொழியில் உள்ள பல உவமைகள் வந்தாலும், ஒவ்வொரு உவமைதோறும் உவமைச் சொல்லானது தோன்றுமாறு பாடுவதுபலவயிற் போலி உவமைஆகும்.
(பலவயிற் - பல இடத்திலும் போல, ஒப்ப, ஒத்த…. போன்ற உவமைச் சொற்கள் வருவது)

உ. ம் 
வேல்போல்கூர் பார்வையும், வீணைபோல் மெல்லுடலும்
சேல்போல் செழித்தவிரு கண்களும்! – நூல்போல்
இடையும் அகமுடையாள் எள்பூப்போல் மூக்கும்
விடையறியேன் இன்நிகர்க்கு வேறு!

பொருள்வேலைப்போன்ற கூர்மையான பார்வையும், வீணையைப் போல மெல்லிய உடலும், மீனைப்போன்ற செழுமையான இரு கண்களும், நூலைப் போன்ற சிறுத்த இடையும், என் அகத்துள் உள்ளவளின் எள்ளின் பூவைப்போன்ற சின்ன மூக்கும் இவைகளுக்கு நிகராக இவ்வுலகில் வேறு இருந்தால் அதை நான் அறிந்திருக்கவில்லை என்பதாம்.
    பாடல் முழுவதும் வேலைப்போல, வீணைப்போல, மீனைப்போல, நூலைப்போல, எள்பூவைப்போல என்று உவமையின் உருபு விரிந்து வந்துள்ளதால் இது பலவயிற்போலி உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019

கருத்துகள் இல்லை: