புதன், 28 ஆகஸ்ட், 2013

பாப்பா பாட்டு!!

 

சிட்டுக் குருவி
   சிறகை விரித்துச்
      சீராய் வந்துவிடு!
பட்டுப் பாப்பா
   பல்லைக் காட்ட
     பாக்கள் பாடிவிடு!
கட்டும் பாட்டில்
   கன்னல் தமிழைக்
     கருத்தாய்ச் சேர்த்துவிடு!       
சொட்டுத் தேனாய்ச்
   சொற்கள் இனிக்கச்
      சொக்க வைத்துவிடு!

வட்ட நிலவின்
   வண்ணக் கதையை
      வகையாய்ச் சொல்லிவிடு!
பட்டுப் புழுவின்
   பண்பு வாழ்வைப்
      பாட்டில் கலந்துவிடு1
எட்டுத் திக்கும்
   ஏற்கும் தமிழை
      என்றும் நீகலந்தால்
மெட்டு போட்டே
   மேலும் பாப்பா
      மேன்மை கவிபடைப்பாள்! 

அருணா செல்வம்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

வள்ளலார் காட்டும் வழி!

மேடான நிலத்தின்மேல் வீழும் நீரோ
   மேல்தெளித்துக் கீழ்விழுந்தே ஓடும் என்றும்!
நாடாத மனத்துடனே நாலும் கற்க
   நன்மையினை அறிவதற்கே கேள்வி தோன்றும்!
கேடான மனமுடைய கீழோர் கூட
   கேட்டறிந்து வள்ளலாரைக் கற்று வந்தால்
டாக இவ்வுலகில் ஏது முண்டோ?
   என்றுநன்றே பலக்கேள்வி கேட்டு நிற்பார்!

கோடான கோடியினைச் சோதி யாக்கிக்
   கொடுப்பதுவும் அழிப்பதுவும் அதுவே என்றார்!
வீடான பெரும்பேறு என்ப தெல்லாம்
   வெறும்வயிற்றுக் குணவிட்டால் கிடைக்கும் என்றார்!
தேடாமல் கிடைக்கின்ற செல்வ மென்றால்
   தெரிந்துதவும் போதுவரும் இன்பம் என்றார்!
சூடான வார்த்தைகளால் நெறியைக் கூட்டிச்
   சொற்றொடரில் மனுதர்ம உரையில் தந்தார்!

வாடாத பசும்பயிரைக் கண்டு விட்டால்
   வறுமையதன் நிலையாமை ஓடும் என்றார்!
கூடாத மனங்களையும் அன்பில் கூட்டிக்
   கொல்லாமை நன்னெறியை நாடச் செய்தார்!   
ஓடாத சாதியெனும் பேயைக் கூட
   ஓட்டிவிட்டார் சன்மார்க்க நெறியை ஊட்டி!
சாடாத பெண்ணடிமைத் தனத்தைச் சாடி
   சரிசெய்யத் துணிந்தவர்தாம் வள்ள லாரே!

ஆடாத மனம்கூட அசைந்தே ஆடும்
   அவர்த்தமிழின் அர்த்தமதை ஆழ்ந்து கற்றால்!
பாடாத மயில்கூட பாடி யாடும்!
   பைந்தமிழின் சுவையதனை அறிந்து கொண்டால்!
காடாக இருண்டிருந்த உள்ளம் மின்னும்
   கவியவரின் கற்பனையைக் புரிந்து கொண்டால்!
மூடாத இறையருளைப் பெற்ற தாலே
   முடிவின்றி வாழ்பவர்தாம் வள்ள லாரே!

அருணா செல்வம்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

நான் ஏன் உயிர் வாழ்கிறேன்? (நகைச்சுவை) 
    
   இலக்கித்தைப் பொறுத்தவரை யாராவது தவறு செய்து விட்டால் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவிற்குப் பயங்கரக் கோபம் வந்துவிடும்.
    “இலக்கியத்தில் தவறே இல்லை. தவறு செய்யக் கூடாதது இலக்கியம்“ என்பார்.
    பெர்னார்ட் ஷா காலத்தில் ஓர் இளம் கவிஞர் இருந்தார். அவர் பெர்னார்ட் ஷாவின் தீவிர விசிறி. ஆங்கில இலக்கியத்தில் பெர்னார்ட் ஷாவைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
    ஒரு சமயம், அந்த இளம் கவிஞர், “நான் ஏன் உயிர் வாழ்கிறேன்“ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார்.
    அதை பெர்னார்ட் ஷாவின் விமர்சனத்திற்கு அனுப்பி வைத்தார்.
    கவிதையைப் படித்த பெர்னார்ட் ஷாவிற்கு ஒரே எரிச்சல் வந்தது. அந்தக் கவிதை சுத்த பேத்தலாக இருந்தது. கரு சரியில்லை... நடை சரியில்லை.... கையெழுத்துச் சரியில்லை.... என்று எத்தனையோ கோளாறுகள் அந்தக் கவிதையில் இருந்தன.
    கவிதையின் தலைப்பை மறுபடி படித்தார் பெர்னார்ட் ஷா.
    அவர் உடனே அந்த இளம் கவிஞருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
    “இளைஞனே! உன் கவிதையை எடுத்துக் கொண்டு நீயே நேரில் வராமல் நல்ல வேலையாகத் தபாலில் அனுப்பி வைத்தாய். அதனால் தான் நீ இன்னும் உயிர் வாழ்கிறார்“ என்று எழுதி அனுப்பி வைத்தார்.

-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கவிஞர் வாலியின் எதிராளியின் பலம்! (நகைச்சுவை)
    தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலியை ஒரு நண்பர் சந்தித்தார்.
    “ஏன் இந்தப் பெயரை வைத்துக் கொண்டீர்கள்?“ என்று கேட்டார்.
    அதற்கு வாலி, ராமாயணத்தில் வரும் வாலி தன் எதிராளியின் பலத்தில் பாதியைப் பெற்றுள்ளது போல நான் சந்திக்கும் அறிஞர்களின் திறமையில் பாதி எனக்கு வரட்டுமே என்று நினைத்து இந்த புனை பெயரை சூட்டிக் கொண்டேன்“ என்றார்.
    “அப்படி ஒன்றும் உங்களுக்கு அறிவு வந்துவிட்டதாகத் தெரியவில்லையே...!“ என்று நக்கலாக சொன்னார் நண்பர்.
    அதற்கு வாலி, “என்ன செய்வது! நான் இன்னும் ஒரு அறிஞனையும் சந்திக்கவில்லையே!“ என்றார் வாலி சிரித்தபடி.
    நண்பரும் வாலியின் நகைச்சுவையை ரசித்தார்!!

-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.