திருவடியைத் தேடிநின்றேன்! தீமை யில்லாத்
தெய்வமாகத் தெரிந்ததென்றன் தாயின்
அன்பு!
கருவறைக்குள் இருந்தபோதும் கருணை நெஞ்சம்!
கலிகாலம் காணுலகில் பிறந்த போதும்
ஒருவேலை தவறாமல் உண்ணத் தந்தும்
ஓயாமல் கண்விழித்தும் காத்த
தெய்வம்!
திருவருளால் கிடைத்திட்ட தாயை என்றும்
தெய்வத்தின் திருவடியாய் வணங்க
வேண்டும்!!
கூட்டினிலே வாழ்ந்துவந்த குருவி போலக்
குடல்நடுங்கி அடிமையாக வாழ்ந்தோம்
அன்று!
ஏட்டினிலே பெயர்பேசும் அளவில் நன்றே
திசையெட்டும் பார்த்திடவே
உயர்ந்தோம் இன்று!
நாட்டினிலே நமக்காக உரிமை வேண்டி
நல்லவல்ல சுதந்திரத்தை வாங்கித்
தந்த
தீட்டிவைத்த வைரமான தியாக நெஞ்சைத்
தெய்வத்தின் திருவடியாய் வணங்க
வேண்டும்!!
ஏழையாக இருந்தாலும் தவறே இல்லை!
ஏமாற்றும் கயவர்கள் சொல்லைக்
கேட்டு
கோழையாக வாழ்ந்துவந்த பெண்கள் இன்று
கோதாவில் இறங்கவுமே தயங்க வில்லை!
வாழையடி வாழையாக வாழ்ந்த அவளை
வளமான பகுத்தறிவு வழியைக் காட்டித்
தாழாமல் தலைநிமிர வைத்த அந்தத்
தலைவரையும் திருவடியாய் வணங்க
வேண்டும்!!
உருமாறி வளர்ந்தாலும் உலகைக் காண
ஓயாமல் கற்கின்றோம் உவகை கொண்டு!
குருவளித்த போதனையால் உருகும் நெஞ்சம்!
குழப்பத்தால் வருங்கோபம் குலைந்து
போகத்
திருக்குறளின் இருவடியைப் படித்தால் போதும்!
தெளிவான மனமமைந்து உயரும்
வாழ்க்கை!
திருக்குறளின் அடிகளையே உலகில் என்றும்
தெய்வத்தின் திருவடியாய் வணங்க
வேண்டும்!!
அருணா செல்வம்.
2010-ல் எந்தெந்த திருவடியை வணங்க வேண்டும் என்ற கேள்விக்கு நானெழுதிய பதில்.



