வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அன்னையின் அன்பு!! (கவிதை)
(பதிற்றந்தாதி)

அன்பிற் சிறந்த அமுதமென்றும் ஆனந்த
இன்பிற் பிறந்த இசையென்றும் – என்னுள்ளம்
தன்னில் கரைந்து தவழ்ந்தாடத் தாயேநீ
என்னில் மலர்ந்த இறை!

இறையாக நின்றெனைக் காத்தே இரையை
நிறைவாக ஊட்ட நெகிழ்ந்தேன்! – மறையாம்
குறளின் வழியில் வளர்த்தாய்! குளிர்ந்தேன்!
உறவினைக் கண்டே உணர்ந்து!

உணர்ந்தும் எழுதிட உள்வரும் வார்த்தை
கொணர்ந்த இனிமைகள் கோடி! – வணங்கும்
மனிததெய்வம் அன்னையென மாமனிதர் சொல்லோ
புனிதமென்றே போற்றும் புகழ்ந்து!

புகழ்ந்திட ஏதெனக்கு வார்த்தை? பொலிர்ந்து
திகழ்ந்திடும் சூரியனைப் போற்றா(து) – இகழ்ந்தால்
நிகழும் செயலெல்லாம் நின்றிடுமா? தாயை
அகத்திலே வைப்போம் அறிந்து!

அறிந்தேநாம் செய்த தவற்றையும் அன்னை
அறியாமல் செய்ததாய்க் கொள்வாள்! – அறிவிற்கோ
அன்பின் அளவு தெரியாது! ஆண்டவனும்
தன்னுள் வணங்குவான் தாழ்ந்து!

தாழ்கின்ற தன்னடக்கம் தன்னை உணர்ந்துயர்வாய்
வாழ்கின்ற வாழ்வின் வழிகாட்டி! – சூழ்நிலையால்
தன்னைச் சுமர்ந்தவளைத் தாங்க மறந்தாலும்
தன்னுள்ளே தாங்குவாள் தாய்!

தாய்பாடும் தாலாட்டுப் பிள்ளையைத் தூங்கவைக்கும்
வாய்பாடும் பாட்டில்லை! வாழ்க்கையில் – சேய்வாழத்
தான்பட்ட துன்பமெல்லாம் தான்மறைத்து பாடுவாள்
தேன்சொட்டும் செந்தமிழைச் சேர்த்து!

சேர்த்தெழுதும் சீர்களால் பாபிறக்கும்! அன்னையன்பைக்
கோர்த்தெழுதக் கொஞ்சுதமிழ் வான்பறக்கும்! – பார்க்கின்ற
ஊர்போற்றும்! அன்னையே உன்னை அறிந்தெழுதப்
பார்போற்றி வாழ்த்தும் படர்ந்து!

படர்கின்ற பூங்கொடி பற்றின்றிப் போனால்
இடர்கின்ற துன்பம் இழைக்கும்! – திடமாய்
நடக்கின்ற தாயைநாம் பற்றி நடந்தால்
இடர்வருமோ வாழ்வில் இசைந்து!

இசையின் இனிமை! இயலின் பெருமை!
தசையும் தருகின்ற தன்மை! – திசையெங்கும்
போற்றிடும் தெய்வம்போல் நின்றுதவும் தன்மையின்
ஆற்றலே அன்னையின் அன்பு!!

அருணா செல்வம்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

“வரலாற்று சுவடுகள்“ –அவர்களுக்கு நன்றி!
வணக்கம் தோழர்களே தோழியரே.

     நான் வலையில் பதிவுகளைப் பதிய தொடங்கிய பொழுது என் நட்புக்கள் (இவர்கள் இங்கேயே பிரான்சில் பிறந்து வளர்ந்தவர்கள்)
 “நீயெல்லாம் பதிவு போட்டு யார் படிக்கப் போகிறார்கள்?என்று கேலிசெய்து சிரித்தார்கள்.
    அதிலும் நான் மரபுக் கவிதைகளைத் தான் அதிகம் பதிவிட போகிறேன் என்றதும் ரொம்பவும் அலட்சியமாகச் சிரித்தார்கள். உன் வலைக்கு யாரும் வந்து பார்க்க மாட்டார்கள். பாலோவர்ஸ் ஆகவும் மாட்டார்கள் என்றும் சேலன்ஜ் செய்தார்கள்.
    நான், “நம் தமிழர்கள் பிறமொழியை விரும்பிக் கற்றாலும் நம் மொழியை மறக்கவோ இகழவோ மாட்டார்கள். அதற்கு மாறாக தாய் மொழிமேல் அதிகம் பற்றுள்ளவர்கள்“ என்று அடித்துக் கூறினேன்.
    “அப்படியென்றால் நீ இந்த வருடத்திற்குள் பத்தாயிரம் பார்வையாளர்களாவது அல்லது ஐம்பது தொடர்பவர்களாவது வரவழித்துக் காட்டு ஒத்துக்கொள்கிறோம்“ என்றார்கள். 
    நானும் “சரிஎன்று சொல்லிவிட்டு அதை அன்றே மறந்தும் விட்டேன்.
    ஆனால் நம் நண்பர் “வரலாற்று சுவடுகள்அவர்கள் இதைக் கவனித்து வாழ்த்தும் தெரிவித்தப் பிறகு தான் கவனித்தேன். ஐம்பது பாலோவர்ஸ்...!!! அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  பார்வையாளர்களும் பத்தாயிரத்தைத் தாண்டி விட்டிருந்தது.
இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. நம் தமிழ் மொழிக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து மகிழ்கிறேன்.

அன்புடன்
அருணாசெல்வம்.

(குறிப்பு.  நேற்று அந்த நண்பர்களைப் பிடித்து செய்தியைச் சொல்லி ட்ரீட் கொடுக்கவும் வைத்துவிட்டேன்.. ஒரு ஹம்பர்கருடன் ஃபிரித்.  நன்றிங்க “வரலாற்று சுவடுகள்“)(இது உங்களுக்கும் கொண்டு வந்தேன். சாப்பிடுங்கள். நன்றி)


செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

பெண்ணின் ஏக்கம்!! (கவிதை)
கட்டி கரும்பே என்றாயே
    கடித்தே கன்னம் சிவந்ததுவே!
கொட்டிக் கிழங்கே என்றாயே
    கொடுத்த இதழை விட்டாயா?
எட்டிப் போக நினைத்தாலும்
    எட்டிப் பிடித்து விட்டாயே!
தட்டிப் போக எண்ணவில்லை
    தவியாய் தவித்தேன் உன்னிடத்தில்!

ஆசை வார்த்தை பேசியென்னை
    அணைத்த உடம்பு துவண்டுவிட
மீசை முள்ளாய்க் குத்திவிட
    முகமும் எல்லாம் சிவந்ததுவே!
ஓசை எழுந்த கால்கொலுசை
    உதறித் தள்ளி விட்டாயே!
காசைப் போட்டு வாங்கினேனே
    கடனை உடனே தந்துவிடு!

தீயாய் உடம்பு கொதித்தாலும்
    திட்டம் போட்டே நெருங்கிடுவாய்!
நோயால் மேனி வலித்தாலும்
    நோக்கம் தீர அணைத்திடுவாய்!
சேயாய் இன்றும் இருக்கின்றேன்
    செத்த நேரம் ஓய்வெடுக்க
தாயின் வீடு போகின்றேன்!
    தனிமை எனக்கு வேண்டுமடா!!

அருணா செல்வம்
இப்பொழுது கவிமனத்தில் “போகப் போகத் தெரியும்“ –
தொடர் பாகம் -22 தட்டுங்கள்.