செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஊருக்கு உழைப்பவன்!

 


.
காடுமேடு கழனியெல்லாம் சுத்தம் செய்து
    …….காய்க்கின்ற வயலாக மாற்றி வைத்தான்!
தேடுகின்ற பணத்தையெல்லாம் நிலத்தில் கொட்டி
    …….தேர்ந்தெடுத்த விதைநட்டுத் தழைக்கச் செய்தான்!
மாடுகட்டிப் போரடிக்க முடியா தென்றே
    …….லையாளும் யானைகட்டிப் போர டித்தான்!
வீடுவாசல் சேர்த்துநன்றாய் விருந்து வைத்து
    …….விளையாடிச் செழித்திருந்தான் உழவன் அன்று!
.
வேருக்கு நீரோட்டம் பார்க்கும் நல்ல
    …….விவசாயி கையைநம்பி வாழ்ந்தி ருந்தோம்!
ஊருக்கே உழைக்கின்ற வயிறு காய
    …….உணவுக்கே பஞ்சமென்றால் என்ன செய்வான்?
நேருக்கு நேர்நின்றே ஒன்றாய் கூடி
    …….நீதிகேட்டு நிற்கின்றான்! தரகர் என்றே
பேருக்குக் கொடுக்காமல் உழைத்த கூலி
     ….. பெறுவதற்கே இணைந்திடுவோம் நாமும் சேர்ந்தே!
.
பாவலர் அருணா செல்வம்
09.12.2020

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கற்பின் கனலாய் மாதவி!

 (கலிவிருத்தம்)
.
இழிவெனும் குலத்தொழிலில்
…….இயைந்துடனே நடக்கவில்லை!
பழிவரும் என்றாலும்
…….பாதகத்தைச் செய்யவில்லை!
அழிவுடனே நின்றாலும்
…….அத்தொழிலை நாடாத
விழிமொழியும் மாதவியின்
…….விதிதனையே நாமறிவோம்!
.
இக்காலம் போலில்லை!
…….இன்றிருந்த நிலையில்லை!
அக்கால வேளையிலே
…….ஆண்களுக்குப் பலபேராம்!
சிக்கான கோவலனின்
…….சிங்கார தேவதையாய்
மிக்காக வந்தவளே
……மென்னிடையாள் மாதவியே!
.
ஒருவனுக்கே ஒருத்தியென்ற
…….உயர்வான பண்பாட்டைத்
திருவெனவே மதித்திருந்தாள்
…….தியாகமுடன் வாழ்ந்திருந்தாள்!
பெருவாழ்வு வாழ்வதற்கு
…….பெருமழகு இருந்திருந்தும்
கருமனத்தைக் கொள்ளாத
…….கற்புடனே வாழ்ந்திருந்தாள்!
.
கற்புக்குக் கனலென்று
…….கண்ணகியும் சீதையையும்
பொற்புடனே புகழ்கின்ற
…….புண்ணியரின் கருவெல்லாம்
நற்பண்பில் உயர்ந்திருக்கும்
…….நலத்தினிலே கண்டதனால்
நற்குணத்தாள் மாதவியும்
…....கற்பினிலே கனலாவாள்!
.
பாவலர் அருணா செல்வம்
06.12.2020

வியாழன், 3 டிசம்பர், 2020

நதிக்கரை நாணல்கள்!


.

ஆற்றின் ஓரம் இதுவென்றே
…..அழகாய்க் காட்டும் அனைவருக்கும்!
காற்றின் இசைக்குத் தலையசைத்தும்
…..கவிதை பாட நமையழைக்கும்!
நாற்றுப் போன்ற செழுமைதான்
…..நாவிற் கினிமை அளிக்காது!
ஈற்றில் நீரோ வற்றிவிட
…..இருந்த சுவடோ தெரியாது!
.
ஓடும் நீரின் அழுக்கெல்லாம்
…..ஓரம் ஒதுக்கி அதையனுப்பும்!
ஆடும் புயலின் காற்றினிலும்
……அசைந்து கொடுத்து நமைமயக்கும்!
நாடும் உயிருக் கிடமளித்து
…..நன்மை செய்தே வாழ்ந்திருக்கும்!
வாடும் காதல் வற்றிவிட
…..வருந்தி தானும் வளமிழக்கும்!
.
நாணல் சேர்ந்த புதர்தனிலே
…..நலமாய் வாழும் பலவுயிர்கள்!
கூனல் கொண்டே இருந்தாலும்
…..குறைவாய் இல்லை குணத்தினிலே!
ஊனம் கொண்ட மனமிருந்தால்
…..உலகில் வாழ்ந்தும் பயனில்லை!
கானல் நீரோ அங்கில்லை
…..காட்சி உண்மை நல்கிடுமே!
.
உதவ வேண்டும் எனநினைத்தால்
…..உடனே ஓடிச் செய்திடலாம்!
பதவி பலவும் இல்லாமல்
…..பண்பாய் எதையும் கொடுத்திடலாம்!
முதலில் செய்யும் உதவிக்கே
…..முழுமை யான பலமிருக்கும்!
எதையும் எதிரே பார்க்காமல்
…..இந்த நாணல் உயர்கிறதே!
.
பாவலர் அருணா செல்வம்
04.12.2020

பேரண்டப் பெருவெளி !

 


..

கார்போன்ற வானத்தைக் கண்ணால் பார்த்தால்
……கவியொன்றை இயற்றிடவே எண்ணம் தோன்றும்!
நீரில்லை! நிலமில்லை! நீலம் மட்டும்
……நிசமென்று நம்பவைத்து மறைக்கும் கண்ணை!
வேரின்றி விளைகின்ற கனிகள் போன்றே
……வெள்ளிநிலா விண்மீன்கள் நன்றாய் மின்னும்!
சீர்கொண்டு எழுதிவிட வந்தால் இங்கே
……பேரண்டப் பெருவெளியும் அடங்கும் மையில்!
 
விண்வெளியில் இருக்கின்ற கோள்கள் எல்லாம்
……விழிதிறந்து பார்த்தாலும் தெரியா(து) உண்மை!
மண்ணிலேயே நின்றுகொண்டு கணிதம் காலம்
……மகத்தான தீர்வுகளும் முன்னோர் அன்றே 
கண்கொண்டு பாராமல் சொல்லிச் சென்றார்!
……கலிகாலம் கொண்டுவந்த கணிணி மாற்றம்
விண்களமாய் ஏவிவிட்ட செயலால் தானே
……விளைகின்ற நிகழ்வுகளை இன்று கண்டோம்!
 
பலகாலம் முன்னாலே படைத்த தோற்றம்
……பழமையாக மாறாமல் புதுமை போன்றே
உலவுகின்ற பெருவெளியின் உண்மை என்ன?
……உலகிருக்கும் மாந்தர்களின் மனத்தின் உள்ளே
கலந்திருந்து ஒளிந்திருக்கும் எண்ணம் கண்டு
……காட்சியாக்கிக் கூறிவிட முடியும் என்றால்
அளவில்லாப் பேரண்ட வெளியில் உள்ள
……அத்தனையும் சொல்லிவிட முடியும் அன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
03.12.2020