நட்புறவுகளுக்கு வணக்கம்.
தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ
வாழ்க்கையில் நடக்கும் வழுக்கல்களைச் சொல்லி தத்துவமாக ஏதோ எழுதி
இருப்பார்களோ..... என்று எண்ணி நீங்கள் படிக்க வந்து இருந்தால்..... அவர்கள்
படித்துவிட்டு ஏமாறாமல் இப்போதே அடுத்த வலைக்குத் தாவி விடுங்கள்.
ஏன் என்றால்...... நான் சொல்ல
வருவது வாழ்க்கையில் ஏற்படும்.... “ஜான் ஏறினால் முழம் வழுக்குகிறது.....“ “எதை
செய்தாலும் சறுக்குகிறதே.....“ என்ற மாதிரியான வழுக்கையைச் சொல்லவில்லை.
நான் சொல்ல வருவது நீங்கள்
நினைப்பது போல் அந்த வழுக்கையைத் தாங்க.
அப்பாடா. புரிந்து கொண்டீர்கள்!!
போன வாரம் என் உறவினர் பெண்ணைப்
பார்க்க மாப்பிள்ளை வருகிறார் என்று என்னையும் அழைத்து இருந்தார்கள். பெண்
பார்ப்பது மட்டுமல்லாமல் கைத்தாம்பூலமும் மாற்றிக் கொள்வதாக இருந்தார்கள்.
அங்கே சென்ற நான்,
மணப்பெண்ணிடம்.... “என்னடி உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா“ என்று கேட்டேன்.
“அம்மா அப்பாவுக்குப்
பிடிச்சிருக்காம். நான் போனில் பேசினேன். நன்றாகத் தான் பேசினார்.“ என்றாள்.
சரி அவளுக்கும் பிடித்திருக்கிறது
என்றதும் நானும் மற்றவர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காகக் காத்திருந்தேன்.
அவர்களும் வந்தார்கள். மாப்பிள்ளையை அறிமுகப் படுத்திய போது எனக்கு அதிர்ச்சி. முன்
மண்டையில் பாதி அளவிற்கு முடியைக் காணோம். நான் திரும்பி மணமகளைப் பார்த்தேன்.
அவள் அங்கே இல்லை. அவள் அம்மாவைப் பார்த்தேன். அவர் முகத்திலும் அதிர்ச்சி. எனக்கு
ஒரே குழப்பம். பேசாமல் எழுந்து பெண் இருக்கும் அறைக்கு வந்தேன். என் பின்னாலேயே
அவள் அம்மா.
மணமகள் உடுத்திய உடையை கோபமாகக்
கலைந்து கொண்டு இருந்தாள். எனக்கு இதுவும் ஓர் அதிர்ச்ச்சி!
“என்னடி... கைத்தாம்பலம்
மாற்றுவார்கள். அதற்குள் டிரெஸ் மாத்துறியே...“ என்றேன்.
அவள் கோபமாக என்னை
முறைத்துவிட்டு..... “எனக்கு இதில் விருப்பம் இல்லை. அவர்களைப் போகச் சொல்லங்கள்“
என்றாள்.
நான் திரும்பி அவள் அம்மாவைப்
பார்த்தேன். அவர்கள், “கொஞ்ச நேரம் பொறும்மா. அவர்கள் போனதும் எதுவாக இருந்தாலும்
பேசலாம்“ என்றார்கள்.
“அம்மா.... இதுக்கு மேல எப்படி பொறுமையா
இருப்பது....? எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை. நான் தனியா இருக்கனும்.
நீங்க போங்க“ என்று சொல்லிவிட்டு என்னையும் சேர்த்து வெளியில் தள்ளி கதவைச்
சாத்தினாள்.
நான் அவளின் அம்மாவிடம்..... “என்ன
இது? ஏற்கனவே பேசி முடிவானது தானே....?“ என்றேன்.
“ஆமாம் அருணா. நல்ல படிப்பு. நிறைய
சம்பளம். போனில் தான் நிறைய முறை பேசினோம். படம் கூட அனுப்பி இருந்தார்கள். ஆனால் அதில்
மாப்பிள்ளை இப்படி இருக்கவில்லை. இப்போ என்ன செய்யிறது அருணா....?“ என்றார்
பாவமாக.
அவள் அப்பா, மகளை அழைத்து வரச்
சொல்லி சத்தமாகக் கூப்பிட்டார். அந்த அம்மா.... “இவளை எப்படியாவது சமாதானம் சொல்லி
கூப்பிட்டு வா“ என்று என்னிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டார்கள்.
எனக்கோ என்ன செய்வது என்று
தெரியவில்லை. நான் தான் என்று சொன்னதும் கதவைத் திறந்தாள். மணமகளைப் பார்க்க
எனக்குப் பாவமாக இருந்தாலும்..... அவளிடம்.... “உன் கவலை எனக்கு புரிகிறது. இதே
மாதிரி கல்யாணம் பண்ணியப் பிறகு ஒருசில வருடத்தில் இப்படி ஆகி இருந்தால்..... அதை
நாம ஒத்துக்கொள்கிறோம் இல்லையா.... அது மாதிரி நினைச்சிக்கோயேன்“ என்றேன்.
“இல்லை ஆண்டி. கல்யாணம் ஆனப்பிறகு இப்படியானால்
அந்த நாட்களிலேயே நாமும் பழகிடலாம். ஆனால் தொடக்கத்திலேயே இப்படி என்றால்....
வேண்டாம் ஆண்டி. இந்தக் கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்று நீங்கள் போய்
அப்பாவிடம் சொல்லி விடுங்கள்“ என்றாள்.
அதற்குள் அப்பாவே அந்த அறைக்கு
வந்தார். வந்தவர் தன் மகளிடம்.... “ஆண்களுக்கு வழுக்கை ஒரு பெரிய விசயமே
இல்லைம்மா. நல்ல படிப்பு. உயரமா நல்லா அழகாவும் இருக்கிறார். பேசியதை வைத்துப்
பார்க்கும் போதும் நல்ல குணமாகத் தான் தெரிகிறது. பிடிவாதம் பிடிக்காதே. எழுந்து
வா“ என்றார்.
அவள், “வேண்டாம் அப்பா. என்னைக்
கட்டாயப்படுத்தாதிங்க....“ என்று அழுகையின் ஊடே சொல்லவும்.... பேசாமல்
போய்விட்டார். என்ன சொல்லி சமாளித்தார் என்று தெரியாது. ஆனால் காரியம் நின்று போனது.
அன்றிலிருந்து நான் அந்தப் பெண்ணை
நினைத்ததை விட அந்த மாப்பிள்ளையைத் தான் அதிகம் நினைத்துக் கவலைப்பட்டேன்.
இருபத்தொன்பது வயது தான். நல்ல நிறம். உயரம். படிப்பு, நல்ல குடும்பம் என்று எல்லாமே
நன்றாக இருக்க.... ஏன் இப்படியானது.....?
வழுக்கை பரம்பரையாக வருவது தான் என்றாலும்....
இவ்வளவு இளமையிலேயா வரும்? இவர் மட்டும் இல்லை. இப்போது நிறைய ஆண்கள் நடுத்தர
வயதைத் தொடாதவர்களுக்கும் வழுக்கை விழுந்து விடுகிறது.
இது எதனால்.....? தெரிந்தவர்கள்
சொல்லுங்கள்.
அன்புடன்
அருணா செல்வம்
(டிஷ்கி – சிறு வயதில்... எனக்குத் தெரிந்த ஒரு அக்காவைக் காதலித்த ஒருவன்
ஏமாற்றி விட்டான். சில காலம் கழிந்த பிறகு அவனைப் பார்க்க நேர்ந்ததாம். அவனுக்கு
அப்போது லேசான வழுக்கை விழுந்திருந்ததாம். அந்த அக்கா கோபத்தில், “என்னை
ஏமாத்தினதால தான் அவனுக்கு வழுக்கை விழுந்தது. இதே மாதிரி பெண்களை ஏமாத்து
கிறவங்களுக்கு எல்லாம் வழுக்கை விழனும்ன்னு சாபமாகச் சொன்னாள். ஒரு சமயம் அந்தச்
சாபம் தான் பலித்துவிட்டதோ.....!!!!! )