உதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 நவம்பர், 2018

எது சேவை?


எது சேவை?

வாழும் உலகம் எந்நாளும்
    வசந்தம் மட்டும் தருவதில்லை!
சூழும் இன்பத் துன்பங்கள்
    சொல்லி விட்டு வருவதில்லை!
தாழும் நிலையும் நிலைசரிந்து
    வீழும் நிலையும் வருவதெல்லாம்
ஊழின் வேலை என்றெண்ணி
    ஒடிந்தும் ஓய்ந்தும் வாழுகின்றோம்!

பிறந்து வளர்ந்த வாழ்வினிலே
    பிறருக் குதவி செய்துவந்தும்
அறத்தின் உயர்வை அறிந்துநன்றாய்
    அகத்தில் அன்பை விதைத்திருந்தால்
இறந்த பின்பும் வாழ்ந்திடுவோம்
    இறையின் நிலையை அடைந்திடுவோம்!
சிறந்த பிறப்பின் நிலையறிந்து
    செய்யும் செயலே உயர்வன்றோ!

கண்கள் போன்று பெற்றவரைக்
    காக்கும் செயலே சேவையாகும்!
மண்ணில் உழைக்கும் வர்க்கத்தை
    மதித்துப் போற்றல் சேவையாகும்!
உண்ணும் உணவைப் பசித்தவர்க்கும்
    உவந்தே அளித்தல் சேவையாகும்!
கண்முன் இருக்கும் எளியோரைக்
    கனிவாய்க் காத்தல் சேவையாகும்!

மெய்யை வளர்க்க நேர்மையெனும்
    மெய்யாய் இருத்தல் சேவையாகும்!
பொய்மை கண்டால் உடனதனைப்
    போக்கும் செயலும் சேவையாகும்!
உய்யும் உலகில் அடுத்தவர்க்கும்
    உதவி புரிதல் சேவையாகும்!
செய்யும் செயலைச் சரியாகச்
    செய்தால் அதுவே சேவையாகும்!

நாவை அடக்கல் உடலுக்கு
    நாமே செய்யும் சேவையாகும்!
பூவைப் போன்ற உள்ளமுடன்
    புரியும் நன்மை சேவையாகும்!
சேவை செய்தல் என்பதெல்லாம்
    சிலரே செய்வார் என்பதில்லை!
தேவை எதையும் எண்ணாமல்
    செய்யும் அனைத்தும் சேவையன்றோ!
.
அன்புடன்
பாவலர் அருணா செல்வம்

வியாழன், 26 செப்டம்பர், 2013

யாராவது உதவி செய்யுங்களேன்... ப்ளீஸ்!!






நட்புறவுகளுக்கு வணக்கம்.
    நான் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் இருந்ததால் உங்களுடன் அதிக தொடர்பில் இல்லாமல் இருந்தேன். இப்பொழுது இங்கு வந்ததிலிருந்து உடல் நிலை சரியில்லை. இப்பொழுது சற்று பரவாயில்லை.
   என்ன இவரின் சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் சொல்கிறார்களே என்று நினைக்க வேண்டாம். ஆனால் நீங்கள் வேண்டாம் என்றாலும் நான் சொல்லி தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். காரணம்...
    என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களில் மிக முக்கியமானது மின் வலையில் பதிவுகளை ஏற்றுவதும் மற்றவர்களின் பதிவுகளைப் படித்துக் கருத்திடும் நேரமும் ஆகும். ஆனால் இப்பொழுது அதிலும் பிரட்சனை வந்துவிட்டது.
   என்னவென்றால்...
   என் வலையைத் திறந்தாலே பதிவிற்கு மேல் நிறைய விளம்பரங்கள் வந்து அனைத்தையும் மறைத்து விடுகிறது. எழுத்துக்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை. மற்றவர்களின் வலைக்குள் போய் படித்தாலும் இப்படியான பிரட்சனைகள் வருகிறது. (இதனால் என் மனக்கவலைகளை இங்கே சொல்லி மாளாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்)
   நான் பலவகையில், (எனக்குத் தெரிந்த) அந்த விளம்பரங்கள் வராமல் தடுக்கப் பார்த்தாலும்.... அது சரிபடாமல் திரும்பவும் வந்து என்னை அலைகழிக்கிறது.
   ஆகவே நட்புறவுகளே.... யாருக்காவது இதனைச் சரி செய்யும் உத்தித் தெரிந்தால் அவசியம் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

                     நன்றி!

அன்புடனும் நட்புடனும்
அருணா செல்வம்.