ஞாயிறு, 31 டிசம்பர், 2023

வருக வருக புத்தாண்டே ! (2024)

 


.
வருக வருக புத்தாண்டே !
   வளங்கள் அனைத்தும் வழங்குதற்கே !
தருக தருக புத்தண்டே
   தரணி யெங்கும் தழைப்பினையே !
உருகி யுருகி மகிழ்கின்ற
    உயர்ந்த காதல் உளதிடத்தில்
பெருகிப் பெருகி வரவேண்டும்
   பிணைந்த உறவில் செல்வமெல்லாம் !
.
போன தேல்லாம் போகட்டும் !
    புலமை உயர்வு பெறுதற்கும்
வான மளவு நன்மைகளும்
    வசந்தம் பொங்கும் செல்வங்களும்
கானம் பாடும் உயிரினங்கள்
    கணிவு கொண்ட மனத்திடையே
ஆன தெல்லாம் கிடைக்கின்ற
    ஆண்டாய் வருக புத்தாண்டே !
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2024

சனி, 23 டிசம்பர், 2023

கிருஸ்துமஸ் வாழ்த்து !

 


சுழலும் உலகம் சுகம்பெருக
    சொரியுங் கருணை விழியுடனும்
அழகாய் உடலும் உயிருடனும்
    அமைதி கொண்ட முகமுடனும்
மழலை மொழியும் இதழுடனும்
     மனத்தைக் கவரும் ஒளியுடனும்
குழந்தை ஏசு பிறந்துள்ளார்
     குவியும் இனிமை இனியெங்கும்!
 
துன்பம் யாவும் விலகிவிடும்!
   துணிவு தொடர்ந்து துணையாகும்!
இன்பம் பொங்கி வழிந்தோடும்!
    இதயம் நிரம்பி மகிழ்ந்தாடும்!
பொன்னும் பொருளும் புகழோடு
    பொதிந்தே நம்மின் பின்தொடர
அன்னை போலே வந்துள்ளார்!
    அகில மெங்கும் இன்புறவே!
.
பாவலர் அருணா செல்வம்
24.12.2023

செவ்வாய், 28 நவம்பர், 2023

கம்போடியாவில் “உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு 2023“

 


    கடந்த 22.11.2023 அன்று கம்போடிய கலை மற்றும் பண்பாட்டுத் துறையும் ஆங்கோர் தமிழ்ச் சங்கமும் இணைந்து சியாம் ரிப் என்ற நகரத்தில் “உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு“ நடத்தினார்கள். அதற்கு நானும்  பங்கேற்பளாராகச் சென்றிருந்தேன்.

    விழா அவர்கள் சொன்னது போல் சரியாக ஏழு முப்பதுக்குத் துவங்கியது. விழா அரங்க வாசலில் இருந்து கம்போடிய நாட்டு முறைப்படி நடன வாத்திய இசையுடன் பெண்களும் ஆண்களும் நடனமாடியபடி அரங்கிற்கு அழைத்துச் சென்றார்கள். அழகான அரங்கம். பெரிய பேனருடன் மேடை இருந்தது.

    நம் நாட்டு முறைப்படி விளக்கேற்றி விட்டுக் கம்போடிய தேசிய கீதம் பாடினார்கள். அதன் பிறகு நம் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.  இதன் பிறகு அந்நாட்டு வழக்கமான வரவேற்பு நடனம் நடத்தப்பட்டது. அழகிய பெண்கள் அவர்களின் பாரம்பரிய உடையணிந்து பூக்களைத் தூவி நடனம் ஆடியது மிகவும் அழகாக இருந்தது, அவர்களுக்குப் பக்க வாத்தியமும் பாடலும் மேடையிலேயே நேரடியாகப் பாடப்பட்டது மேலும் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு இலங்கையில் இருந்து வந்த டாக்டர் அபிராமி அவர்களின் பரத நாட்டியம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து கம்போடிய கலை மற்றும் பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் ஆங்கிலத்தில் சிறப்புரை ஆற்றினார். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த கவிஞர் ரவிச்சந்திரன் அவர்கள் அரங்கிற்கு தலைவராக அமர்ந்து ஒவ்வொரு கவிஞர்களாக மேடைக்கு அழைக்க,

    கவிஞர் மனுநீதி சோழன் ஆஸ்திரேலியா, கவிஞர் நந்திவர்மன் ஆஸ்திரேலியா, கவிஞர் வாசுகி ஆஸ்திரேலியா, பாவலர் அருணா செல்வம் பிரான்ஸ், பாவலர்மணி கவிப்பாவை பிரான்ஸ், பாவலர் பத்ரீசியா பிரான்ஸ், கவிஞர் மனோன்மணி தமிழ்நாடு, கவிஞர் ராணி சிவபிரகாசம் தமிழ்நாடு, கவிஞர் தாட்சாயணி இலங்கை ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள். கடைசியாக கவிஞர் ரவிச்சந்திரன் அவர்கள் தங்களின் கவிதையுடன் கவிநிகழ்வை முடித்தார்.

     மதிய உணவுக்குப் பின் சரியாக இரண்டு முப்பது மணிக்கு நிகழ்வு துவங்கியது. துவக்க நிகழ்வாக கம்போடிய நாட்டுக் கவிஞர் தாமரை அவர்கள் எழுதிய பாடலைத் திரையிட்டார்கள். அதனுடன் விழாவிற்கு வருகை தந்த நடிகர் விஜய் விஷ்வா அவர்கள் நடித்த தமிழிசைப் பாடல்கள் இரண்டும் ஒளிபரப்பப் பட்டது. தமிழின் சிறப்பை எடுத்துரைத்த பாடல்கள் காதுக்கும் மனத்திற்கும் மகிழ்வளித்தது.

    இறுதியாக பாடல் வாசித்த எட்டுக் கவிஞர்கள் அனைவருக்கும் அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு விருது அளித்துச் சிறப்பித்தார்கள். பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட பதிமூன்று பேருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கினார்கள். பின்பு வந்திருந்தவர்களுடன் கலந்து பேசுவதுடன் நான்கு மணியளவில் விழா முடிந்தது. இரண்டு நாள் விழா இந்த ஒரு நாளுடன் முடிந்தது.

    தமிழ் தெரிந்த முப்பதுக்கும் குறைவானவர்களே விழாவில் கலந்து கொண்டார்கள். பார்வையாளர்களாக ஏறக்குறைய நாற்பது கல்லுரி மாணவ மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்றாலும் அமைதியாக அவர்களின் கையில் இருந்த செல்போனில் மூழ்கி இருந்தார்கள்.

    விழாவின் ஏற்பாட்டாளர் திரு சீனுவாச ராவ் அவர்களிடம் “வெறும் இருபது பேர்களை வைத்து “உலகத்தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நடத்துவது சரியா ?“ என்ற எங்களின் ஆதங்கத்தைக் கேட்ட போது அவர், “ஐந்து பேர் மட்டும் வந்தாலும் நாங்கள் மாநாடு நடத்துவோம்“ என்று பெருமிதமாகக் கூறினார்.

   இப்படி இருப்பினும் கடைசியா, திரு சீனிவாசராவ், திரு ஞானசேகரன், திருமதி தாமரை சீனிவாசராவ் ஆகிய மூன்று தமிழர்களே உள்ள கம்போடிய நாட்டில் தமிழுக்காகத் துணிந்து இப்படிப்பட்ட விழாவைச் செய்வது ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும் உண்மையில் வரவேற்கத்தக்கது.

வாழ்க தமிழ் !
.
அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
28.11.2023

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஒளிருங் கணபதி பெருமானே! (குறில் அகவல் பிரிந்திசை வண்ணம் - 61)


 

 

.
தனனந் தனனன தனனந் தனனன
தனனந் தனனன தனதானா  (ஒரு கலைக்கு)
 
.
உலகின் முதலென உணரும் வகையினி
    னொளிருங் கணபதி பெருமானே!
  உதவும் வகையொடு கதறும் மனதினி
    லொளிரும் நலமதை யருள்வாயே!
 
பலரின் கருமொழி நிறையும் மனமது
    பதியும் பொதியொடு சுமையாமே !
  படியுங் கழிவினை மறையும் வழியது
    பரமன் தொடர்கிற இடந்தானே!
 
நிலவும் பழவினை நினைவும் விலகிட
    நெடிதுன் விழிதனி லறிந்தாலே
  நியமந் தருகிற வழியுந் தொடரிட
    நிறையும் வரமது வரும்தாமே !
 
மலருங் கனிகளு மிணையுஞ் சுவையொடு
    மணமும் நிறைகிற நெகிழ்வோடே
  வளருங் கவியொடு பணியுந் தலையொடு
    மனதும் வழிபட மகிழ்வாயே!
.

தோழ தோழியர் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி
வாழ்த்துகள்.

.
என்றும் அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
18.09.2023



செவ்வாய், 20 ஜூன், 2023

மெலி அகவல் ஏந்திசை வண்ணம் !



 
எண்ணமென்ற கண் !
.
தன்ன தந்த தன்ன தந்த
தன்ன தந்த தந்தானா! (ஒரு கலைக்கு)
.
அன்னை யென்று முன்னை யொன்றி
   அன்மை யன்றி நின்றேனே!
அன்ன மென்ற வெண்மை கண்டு
    மண்ண லென்ற றிந்தேனே !
 
இன்ன லென்று யின்மை யென்று
    மெண்ணி நின்ற யர்ந்தேனே!
எண்ண மென்ற கண்ணி ருந்து
    மிங்ங னம்ப யந்தேனே !
 
மன்ன னுன்றன் மின்னி டும்பொன்
    மண்ணி னின்ற செவ்வேலால்
வன்மை யின்ப யம்மி ரண்டு
    வன்ந கர்ந்து டன்வாழ்வேன் !
 
என்ன வென்று கண்ணி லென்று
   மெண்ணி யுன்ப தங்காண்பேன் !
எண்ண மென்ற உன்னு யர்ந்த
   இம்மை யின்ப முண்பேனோ !
.
பாவலர் அருணா செல்வம்
20.06.2023

 
அன்மை - தீமை
அண்ணல் - கடவுள்

நெஞ்சினில் நிறைந்தவள்! பெண் குழந்தைக்கான பாடல்!

வெள்ளி, 16 ஜூன், 2023

வலி ஒழுகல் ஏந்திசை வண்ணம் !

 


 தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன தனதானா  (ஒரு கலைக்கு)
 
விதி கொடுத்திடும் அடி!
.
விதிகொ டுத்திடு மடிவ லிக்கிற
      வினைந டத்திடு மியல்தானே!
 விலைய ளிக்கிற செயல்மு டிக்கிற
     விசைய முக்கிட வருவாயே!
 
நிதிஎ தற்கென உயர்ம னத்தினை
     நிறைப டுத்தியு மருள்வாயே!
 நினைவ தைக்கிற பசிய டக்கிய
    நிலைய ளித்திடு பெருமானே !
 
சதிய டிக்கிற வினைய கற்றிடு
     சபைய மர்த்திட உயர்வேனே!
  சவலை யுற்றது கவலை பட்டது
     சரவ ணப்புக ழிகழ்வாலே!
 
மதிய ளிக்கிற புதிய கற்பனை
     மனத ளிக்கிற நிழல்தானே!
  மனம யக்கிய துயர்வி ளக்கிய
     மனைய றத்தினை உணர்வேனோ!
.
பாவலர் அருணா செல்வம்
16.06.2023

செவ்வாய், 13 ஜூன், 2023

நெடில் அகவல் ஏந்திசை வண்ணம்

 

 

பாடி யாடி ஓய்ந்தும் மகிழ்வேனே!
.
தான தான தாந்த தான தான தாந்த
தான தான தாந்த தனதானா!    (ஒரு கலைக்கு)
.
தேவி வாயி லூர்ந்து தேவ கீதஞ் சேர்ந்த
    தேனி லூறுந் தீஞ்சு வையின்பாகோ!
  தேகம் வாட நேர்ந்த தீமை யான வீம்பு
    தேயும் போதும் நீந்தும் மதிபோலோ!
 
ஆவி யோடு சேர்ந்த ஆசை மோக மேந்தி
    ஆடி யாடி நீந்தும் மனமேனோ?
  ஆவ லாக லேங்கி ஆகம் நாடி ஓய்ந்த
    ஆய மேது தேர்ந்து மறிவேனோ!
 
பாவி யாக வீழ்ந்தும் வேதை யாக வாழ்ந்தும்
    பாசந் தேடி வேண்டி யழுதாலே
  பாலை மாறும் தேர்ந்த பாலுந் தேனும் மீந்தும்
    பால மாகும் பாங்கை யருள்வாயே!
 
பாவி லோதும் பாங்கு வாழும் போது சேர்ந்தும்
    பாச மோடு நீண்டு மருள்வாயே !
  பாதை மாலை யேந்தும் பூவின் வாசந் தீண்டும்

    பாடி யாடி ஓய்ந்தும் மகிழ்வேனே!
.
பாவலர் அருணா செல்வம்
13.06.2023
 
ஆகம் – உடல்,
ஆயம் - இன்பம்
வேதை - துன்பம் 

வெள்ளி, 2 ஜூன், 2023

குறில் அகவல் ஏந்திசை வண்ணம்.

 

 
.
நம்புகின்ற வழியேது ?
.
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தனதான (ஒரு கலைக்கு)
.
அன்பு மென்ப தின்பந் தந்த
    அங்க மென்று முயர்வாகும்!
  அன்று மின்றுங் கொஞ்சும் மென்கை
    அந்தம் மிஞ்சு மமிர்தாகும்!
 
இன்ப மொன்றை என்று முந்த
    எங்கு முன்ற னுருவாகும்!
  இன்றி யெங்கும் துன்ப மொன்ற
    எந்தை எங்கென் றுனைநாடும் !
 
நன்றை யன்றி வஞ்ச நெஞ்சு
    நண்ப னன்பை அறியாது !
 நம்ப வஞ்சும் நெஞ்சை விஞ்சி
    நம்பு கின்ற வழியேது 
 
துன்ப மென்று கொண்ட தென்றும்
    தொங்கு மிந்த வுயிராகும்!
  சொந்த மென்ற இந்த பந்தம்
    சுந்தர் கந்த னுருவாகும் !
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2023

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

குரு வணக்கம்!

 


கல்யாண போகத்தைக், கற்றோரின் நல்லுறவைச்,
சொல்ஞான சீர்மை சுகத்துடன் – பொல்லாத்
தடுப்புகளைப் போக்கித், தழைத்தோங்கும் வாழ்வைக்
கொடுத்திடுவார் சென்ம குரு!
.
பாவலர் அருணா செல்வம்
21.04.2023

செவ்வாய், 7 மார்ச், 2023

சந்த விருத்தம் - 4

 


சந்த விருத்தம் - 4
(6 + 6 + 6 + 4)
.
ஒளியேவிழி அருளேபொழி ! உறவேதொட ராகும் !
கிளியேயென அமுதேபொழி கிலியேவெளி யோடும் !
அளியேகவி அகமேயென அதுவேதமி ழாகும் !
உளியோடிய சிலையோயென உலகேயதி லாடும் !
.
சந்தக் கலிவிருத்தம் - 5
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மலையென வளர்வது மனமெனு மிடமே!
அலையென மறைவது(ம்) அழிகிற வகையே!
விலையென உயர்வது விதியெனு மரசே!
கலையென நிறைவது கடவுளி னுருவே!
.
சந்த விருத்தம் - 6
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மெல்லிய பூவில் மெல்லிசை பாடும் !
சொல்லிய சீரில் சொக்கிட ஆடும் !
துல்லிய தேனின் தொன்மையி லாழும் !
வல்லமை யேகும் வண்டின மாகும் !
.
(துல்லியம் – சுத்தம்)
.
சந்தக் கலிவிருத்தம் - 7
(4+4+4+4)
.
அன்புடை நெஞ்சினு ளாறிய நோயோ
வன்வடு கொண்டது வானென நீண்டே!
இன்பென எண்ணிய ஏறிய நாளோ
முன்மன மொன்றிய மூவிசை வேரே!
.
சந்தக் கலிவிருத்தம் - 8
(4+6+4+6)
.
பொருளினை விளங்காது புணைகிற அடியாலே
கருவினை யறியாமல் கனமழை இருளாகும்!
திருமக னருளாலே தினமொரு கவியெழுதித்
தருகிற தெளிவாலே தணிகிற மனமாகும்!
.
பாவலர் அருணா செல்வம்
07.03.2023

புதன், 1 பிப்ரவரி, 2023

இமைக்குள்ளே நீ!

 


உமையாளை இடம்வைத்த ஈசன் உள்ளம்
   உயர்வுணர்த்தும் பெண்ணினத்தின் மேன்மை சொல்லும் !
எமைக்காக்கும் கடவுளைப்போல் காதல் கொண்டே
   என்னவளை என்கண்ணில் வைத்தேன் நன்றே!
சுமையென்றே வாழ்வினையே நினைத்தேன்! அன்பு
   சுந்தரியுன் காதலினால் வசந்தம் கண்டேன்!
இமைக்குள்ளே நீயிருந்து நடத்து கின்றாய்
   இனியாவும் நலமாகும் என்றன் வாழ்வில்!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2013

திங்கள், 30 ஜனவரி, 2023

தழுவாத கைகள்!

 


பெற்றோர்கள் கண்தழுவும் பிள்ளை மீதே!
       பெண்டீர்கள் மனம்தழுவும் கணவன் மீதே!
கற்றவர்கள் உளம்தழுவும் கல்வி மீதே!
       காதலனோ நிதம்தழுவான் நினைவி னாலே!
பற்றெல்லாம் விட்டவர்கள் நோக்கம் எல்லாம்
       பரந்தாமன் கால்தழுவ வேண்டும் என்றே!
சுற்றமற்றுச் சுயநலமாய் வாழ்வோர்க் குண்டே
      சுமையாக நீண்டதழு வாத கைகள்!
.
பாவலர்  அருணா செல்வம்
31.01.2023

வெள்ளி, 13 ஜனவரி, 2023

போகி பண்டிகை வாழ்த்து ! (2023)

 


எத்தனையோ துரோகங்கள்
       எடுத்தெறியா(து) உள்ளிருக்கும்!
எத்தனையோ கோபங்கள்
      எந்நாளும் உழன்றிருக்கும்!
அத்தனையும் போகியன்றே
      அழுக்கென்றே எரித்திடுங்கள்!
புத்தாண்டு நாளன்று
     புதிதாகப் பிறந்திடுங்கள்!
.
தோழ தோழியர் அனைவருக்கும்
இனிய போகி திருநாள் வாழ்த்துகள்!
.
அன்புடன்
அருணா செல்வம்
14.01.2023

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தங்கமொழி! (சந்தக் கலிவிருத்தம்)

 


.
தந்ததன தந்ததன தந்ததன தந்தா
.
விந்தையென எண்ணுகிற விண்ணுலகு மேலாய்
வந்தொளிர நின்றொளிர வந்ததெது கூறு!
சந்தமிகு தன்மையொடு சன்னமிசை யான
சிந்தையொடு வண்ணமிகு செந்தமிழை நாடு!
 
அன்னையொடு வந்தவழி அன்புமிக மேவும்!
புன்னகையில் இன்பமொளிர் பொங்குவது பாடும்!
தன்னிறைவு கொண்டநிலை தன்னிசையி லாடும்!
அன்னமென உண்டுணர ஐயநிலை யோடும்!
 
பஞ்சநிலை என்பதிலை பண்ணொலியு மஞ்ச
விஞ்சிவரும் இன்பநிலை வெண்டளையி லொன்ற
கொஞ்சுகிற இன்பமது கொண்டமொழி யென்று
தஞ்சமிட நம்புகிற தங்கமொழி யன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
04.01.2023