நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 மார்ச், 2015

படித்ததில் சிரித்தது. 2




1.இப்படி ஒரு நட்பு....!

அது ஒரு மனநல மருத்துவமனை.... அங்கே அழகன் என்ற பெயருடைய ஒருவர் சிகிட்சைப் பெற்று வந்தார்.
   ஒருநாள் புத்திரன் என்ற சக மனநோயாளி கிணற்றில் குதித்து விட்டதால், தன் உயிரைத் துச்சமென நினைத்துக் கிணற்றில் குதித்து அந்த நோயாளியைக் காப்பாற்றி விட்டார் அழகன்.
   அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவி விட்டது. அதைக் கேள்விப்பட்ட மருத்துவர் அழகனை அழைத்து, “உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்“ என்றார்.
   உடனே அழகன், “சொல்லுங்க டாக்டர்“ என்றான்.
   “நீ உனது நண்பனைக் காப்பாற்றியதால் நீ சுகமடைந்து விட்டாய் என்று நினைக்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம். இது நல்ல செய்தி“ என்றார்.
  பிறகு, “துக்கமான செய்தி நீ கிணற்றில் குதித்துக் காப்பாற்றிய உன் நண்பன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டான்“ என்று டாக்டர் சொல்லி முடித்ததும் அழகன் ஆர்வமுடன் சொன்னான்,
  “டாக்டர்.... அவன் சாகவில்லை. கிணற்றில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றைக்கட்டி மரத்தில் தொங்கவிட்டு இருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகி விடுவான்“ என்றான்.
  டாக்டர் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.
 -------------------------------------------------------------------------------------------------------------

2. இப்படி ஒரு நட்பு....!!!

இரவு ஒரு 12 மணி இருக்கும்...
   என் சொக கதைய கேளு தாய்குலமே..... ஆமா தாய்குலமே.... (அட ரிங் டோனு தாங்க...., ஊருல இருந்து நம்ம ஃபிரெண்டு தான்....)
   ஹலோ... சொல்றா மாப்ள... எப்படி இருக்க?“
   “நல்லா இருக்கேன்டா...“
   “அப்புறம்... என்னடா இந்த நேரத்துல?“
   “அது ஒன்னும் இல்ல மாமா. இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி. அதான் மப்பும் மந்தாரமுமா இருக்கேன்.“
   “ரைட்டு. என்ஜாய் பண்ணு. அப்புறம் சொல்லு. என்ன விசயம்?“
   “இரு ஒரு தம்மைப் பத்த வச்சிக்கிறேன்..... இம்.... நம்ம கவுருமெண்ட்க்கு அறிவே இல்லை மாமா....“
   “அதான் தெரியுமே... என்ன விசயம் சொல்லு?“
   “இன்னைக்கு மதுரைக்குப் போயிட்டு வந்தேன். வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தாங்க“
  “சரி. அதுக்கு என்ன?“
  “என்னத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்டப்பட்டு வளைச்சி போடணும்? அப்புறம் எதுக்கு போர்டு வைக்கணும்?“
   (அடப்பாவி.... நைட்டு 12 மணிக்குப் போன் பண்ணி கேட்க வேண்டிய டவுட்டடா இது? அவ்வ்வ்வ்வ்வ்வ்..... இன்னைக்கு இவன் போதைக்கு நாம தான் ஊறுகாய் போல....)
  “டேய் மாப்ள... உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சின்னு நெனைக்கிறேன். போயி தூங்கு...“
   “அது இல்ல மாமா..... இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தாங்க....“
  “சரி...“
  “அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே.... அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்?“
  “டேய் மாப்பள.... ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படு கேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன். என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாம மரியாதையா ஃபோன வச்சிட்டு படு“
   “ஹி ஹி ஹி.... தங்கச்சிக்கிட்ட திட்டு வாங்கினியா.... சரி சரி... படு... குட் நைட்........“

   கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் போன் அடித்தது.... அவனே தான்.... டென்சனா போனை ஆன் செய்து....
   “என்னடா மாப்பள?“
  “சாரி மாமா கோவிச்சிக்காத.... தம்மடிக்கனும். தீப்பெட்ய காணோம்... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா?“
   “டேய்..... நீ கோயமுத்தூர்ல இருக்க. நான் இங்க சிவகாசியில இருக்கேன்டா.....“
  “இல்ல மாமா.... கடைசியா நாம ரெண்டுபேரு தான் பேசிகிட்டு இருந்தோம்.... அதான் நீ எங்கையாவது பாத்தியான்னு கேட்டேன்.....“
  “டேய்ய்ய்ய்ய்ய்....“

படித்ததில் சிரித்தது.

அருணா செல்வம்.

வியாழன், 29 ஜனவரி, 2015

படித்ததில் சிரித்தது!


அழகு மனைவி!!



  ஒரு நடு இரவில் தன் மனைவியின் கை போனில் “பீப்“ சத்தம் கேட்டது.
  கணவர் எழுந்து, அந்தக் கைபோனைப் பார்த்து விட்டு, தன் மனைவியிடம் கோபமாக “யார் இது? இந்த நேரத்தில் உன்னை பியுட்டிஃபுல் (beautiful) என்று சொல்லுறது?“ என்று கத்தினார்.
  மனைவி, “அட.... யாருடா அது.... நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே... அது யாருன்னு பார்ப்போம்...“ என்று ரொம்ப சந்தோஷமா எழுந்து வந்து தன் கைபோனைப் பார்த்தாள். உடனே கோபத்துடன் அவரைவிட சத்தமாகக் கத்தினாள்..
   “அட லூசு புருஷா..... மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டு பாரு.... இது பியுட்டிஃபுல் (beautiful) இல்லை... பேட்டரிஃபுல் (battery full) என்று.

 ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அவரவர் கவலை அவரவர்க்கு!!



   டாக்டர், கணவனின் உடம்பைச் சோதித்துவிட்டு “இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். அதற்குள் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் எல்லாவற்றையும் நிறைவேத்திக் கொள்ளுங்கள்....“ என்று சொல்லி அனுப்பினார்.
    மாலை 5 மணி.... கண்ணீர் மல்க விஷயத்தை தன் மனைவியிடம் சொன்னான் கணவன். அவள் துடித்து அழுதாள்.
   கணவன், “எனக்கு உன் கையால் வெங்காய தோசையும் கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா. இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கி இருக்கிறது“ என்றான். செய்து கொடுத்தாள்.
   மாலை 7 மணி, “ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா. இன்னும் 5 மணி நேரம் தான் இருக்கு...!!“ என்றான். செய்து கொடுத்தாள்.
   இரவு மணி 10... “நல்ல பசும்பாலில் கொஞ்சமா சக்கரைப் போட்டு உன் கையால குடும்மா..... இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....! என்றான். மனைவி அதனையும் செய்தாள்.

   இரவு 12 மணி. தூங்கும் மனைவியை எழுப்பினான் கணவன். அவள்.... “பேசாமல் படுங்க.... காலையில எழுந்தவுடன் எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. சொந்தக்காரங்களுக்குச் சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்டுல புக் பண்ணனும்.... உங்களுக்கு காலையில எழுந்திருக்கிற வேலை கூட இல்ல....“ என்றாள் கோபமாக.

கணவன்.....?????!!!!!!!!


படித்ததில் சிரித்தது.

திங்கள், 24 நவம்பர், 2014

காக்கா பிரியாணி!!



இது கோழி பிரியாணி

நட்புறவுகளுக்கு வணக்கம்.
     உங்கள் அனைவருக்கும் “காக்கா பிரியாணி“ செய்முறை விளக்கத்தைப் பதிவின் கடைசியில் விளக்குகிறேன். அதற்கு முன்பு எனக்கு “காக்கா பிரியாணி“ எப்படி அறிமுகமானது என்பதை விளக்கி விடுகிறேன்.
    ஒரு முறை நாங்கள் இந்தியா சென்றிருந்த போது என் கணவரின் உறவினர், எங்களை அவர் வீட்டுக்குச் சாப்பிட அழைத்து இருந்தார்கள். அது கிராமம் என்பதால் இரண்டு சின்ன குழந்தைகளை வைத்துக் கொண்டு எனக்குச் சரிப்பட்டு வராது என்று என் கணவரிடம் “நான் வரவில்லை“ என்றேன்.
    அவர், “விருந்துக்கு அழைத்த அந்த அம்மாவின் கணவர் எங்களின் கல்யாண நேரத்தில் தவறிவிட்டதால் வரவில்லை“ என்றும் “அவர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். போய் வருவது தான் முறை“ என்றும் என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். போகும் போது வெயில் அதிகமாக இருந்ததால், வழியில் நிறுத்தி இளநீர் வாங்கித் தர சொன்னேன்.
   என்னவர், “இப்போ இளநீரைச் சாப்பிட்டால் அங்கே போய் ஒழுங்காகச் சாப்பிட மாட்டே. அவர்கள் ஆசையாக சமைச்சிருப்பாங்க. கோழி கொத்துற மாதிரி சாப்பிடாமல் ஒழுங்கா சாப்பிடு. அப்போது தான் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்“ என்றார். நானும் பேசாமல் இருந்துவிட்டேன்.

    அந்த உறவினர் வீட்டில் அந்தம்மா, அவரின் மகன் மருமகள் நான்கு வயது பேரன் என்று இருந்தார்கள்.
   சம்பிரதாய பேச்சு முடிந்ததும் சாப்பாடு போட்டார்கள். கறி பிரியாணி, கறி வறுவல்..... என்று வாசனை கமகமவென்று இருந்தது. இந்த வாசனை மேலும் பசியைத் தூண்டியது. பிரியாணியை எடுத்துச் சுவைத்தேன். ருசி அபாரமாக இருந்தது. சிறு சிறு துண்டுகளாய் வெட்டிய கறி அழுத்தமாக இருந்தாலும் சுவையாகவே இருந்தது.
    இப்படி நான் ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது அந்த அம்மாவின் பேரன் ஓடி வந்து அந்த அம்மாவிடம், “ஆயா..... நம்ம அப்பு..... காக்கா பிரியாணியைச் சாப்பிட்டுட்டான்“ என்று சொன்னான்.
   அவன் சொன்னதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியுடன் வாயில் வைக்கப் போன கறியை இலையில் வைத்துவிட்டேன். அதே சமயம் அந்த அம்மா தன் பேரனிடம்..... “அவன் அப்படியெல்லாம் சாப்பிட மாட்டானே....“ என்றார்
   “இன்னைக்கி பிரியாணி செம டேஸ்ட்டா இருந்துச்சா.... அது தான் அப்பு சாப்பிட்டான்னு நினைக்கிறேன். நீ வந்து பாரேன்“ என்று தன் பாட்டியை அழைத்தான்.
   அதற்கு அந்த அம்மா.... “ அப்பு தானே சாப்பிட்டான். சரி விடு. நாம சாப்பிட்டா தான் தப்பு. நீ போய் விளையாடு“ என்று அனுப்பி விட்டார்.
   நான் நிமிர்ந்து என் கணவரைப் பார்த்தேன். அவர் இராமனுக்குக் குகன் கொடுத்த விருந்து போல் பிரியாணியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் என் இலையில் இருந்த கறியைப் பார்த்தேன். முதலில் பசுமையாக கண்ணுக்குத் தெரிந்த கறி இப்போது சுறுங்கி போய்... வற்றிப் போய் இருந்தது போன்று தெரிந்தது.
   சாப்பிட மனம் ஒப்பவில்லை.
   சாப்பாட்டை அப்படியே நகர்த்திவிட்டு வெள்ளை சாதம் ரசம் கேட்டேன். என் கணவர் நான் சாப்பாட்டை வீணாக்குகிறேனே என்று ஒரு முறை முறைத்தார். நான் ஏன் அவரை நிமிர்ந்து பார்க்கிறேன்....
   
    திரும்பி போகும் போது வண்டியை ஓட்டிக்கொண்டே என் கணவர், “பிரியாணி நல்லாத்தானே இருந்துச்சி. நீ ஏன் சாப்பிடல. அவங்க எவ்வளவு ஆசையா நமக்காகச் செய்தாங்க.“ என்றார்.
    நான், “பிரியாணி நல்லா தாங்க இருந்துச்சி. ஆனா அந்த கறி காக்கா கறின்னு சொன்னதும் எனக்குச் சாப்பிட பிடிக்கலைங்க“ என்றேன்.
    அவர், “என்னது...?“ என்ற படி ஒரு சடென்பிரேக் போட்டுத் திரும்பி என்னைப் பார்த்தார். “என்ன சொன்ன? காக்கா கறியா...?“ என்றார் திரும்பவும் அதிர்ச்சி மாறாமல்.
    “ஆமாங்க. அந்த குட்டிப் பையன் சொன்னானே....“ என்றேன்.
    “எது..... காக்கா பிரியாணியை அப்பு சாப்பிட்டுடுச்சின்னு சொன்னானே... அதுவா...?“ என்றார்.
   நான், சற்று அருவருப்புடன் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினேன். அவர், “அட ச்சீ..... இதுக்காகவா சாப்பிடலை.....?“ என்றார் நெற்றியில் தட்டிக்கொண்டு.
    “எனக்கு காக்கா கறி சாப்பிட்டு பழக்கமில்லைங்க“ என்றேன்.
    “ஐயோ... அருணா... எனக்கு மட்டும் காக்கா கறி சாப்பிட்டு பழக்கமா....?“ என்றார்.
    நான் புரியாமல் அவரைப் பார்த்தேன். நல்லா தானே சாப்பிட்டீங்க... என்று மனத்தில் ஓடியதை வெளியில் சொல்லவில்லை.
   அவர் சற்று பொறுத்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அட அசடு..... அந்த அம்மா எப்போ சாப்பாடு செய்தாலும் அவங்க கணவர் நினைப்பா காக்காவுக்குச் சாப்பாடு வச்சிட்டு தான் சாப்பிடுவாங்க. அப்படி இன்னைக்குக் காக்காவுக்கு வச்ச பிரியாணியை அவங்க வீட்டு நாய் அப்பு சாப்பிட்டுடுச்சி. அதை தான் அந்த சின்ன பையன் சொன்னான்.... நீ இப்படி லூசு மாதிரி புரிஞ்சிக்கிட்டியே.....“ என்றார் சிரிப்பு மாறாமல்.
   “காக்காவுக்கு வச்ச பிரியாணியைத் தான் அந்த சின்ன பையன் “காக்கா பிரியாணி“ என்றானா...“ என்றேன் மீண்டும் தெளிவு ஏற்பட...
    என்னவர்.... “பின்னே... உன்னோட சொந்தக்காரங்க சாப்பிடுறதையா என் சொந்தக்காரங்க போடுவாங்க.....?“ என்று அவர் சொல்ல... நான் முறைத்தாலும்..... இந்த மாதிரி நாம அசடா இருக்கிறோமே..... எப்போ தான் எல்லாம் புரிஞ்ச தெரிஞ்ச பெரிய மனுசியாவது.... என்று எண்ணியபடி பைக்கில் ஏறி அமர்ந்தேன்.

நட்புறவுகளே......
    பதிவின் தொடக்கத்தில் சொன்னது போல் “காக்கா பிரியாணி“ செய்முறையை விளக்குகிறேன்.
    அனைவருமே இதைச் செய்யலாம். மிகவும் ஈஸியான வேலை தான்.
அதாவதுங்க.....
     வெஜிடெபுள்ஸ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி..... என்று எந்த வகை பிரியாணி செய்தாலும்... அதிலிருந்து ஒரு பிடியளவு எடுத்துக் காக்காவுக்கு வைத்தால்...... அது தான் “காக்கா பிரியாணி“

செய்துப்பாருங்கள். 

அன்புடன்
அருணா செல்வம்.

24.11.2014

வெள்ளி, 31 அக்டோபர், 2014

இம்சை தத்துவங்கள்!! – 2



1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.

2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....

3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...

4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.

5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?

6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.

7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....

8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....

9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....

10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....

11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...

12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.

13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.

14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.

15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.....


இந்தப் பதிவு ஒரு ஜாலிக்காக.....

கடைசியா எனக்கு ஒரு சந்தேகம்ங்க..... பதில் சொல்லுங்க....ப்ளீஸ் 

    அதாவது ரொம்ப நாளா கண்ணி வெடி கண்ணி வெடின்னு சொல்லுறாங்களே.... இன்னுமா அதுக்குக் கல்யாணம் ஆகலை.......???!!!

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கணவன் மனைவி ஜோக்ஸ்!!



1.
கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“

2.
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“
கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“

3.
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“

4.
கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே....!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“

5.
கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“
மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“

6.
மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“
கணவன் – “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“

7.
மனைவி – “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“
கணவன் – “நிஜமாவா சொல்லற?“
மனைவி – “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“

8.
கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“
மனைவி – “சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“

9.
கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“
கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.....

10.
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“
கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“

11.
கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“

12.
ஒரு குட்டிக்கதை

புறாவின் வாய் ஜாலம்!

    சாலமன் மிகப்பெரிய அறிவாளி.
    அவருக்குப் பறவைகள் மற்றும் மிருகங்கள் பேசும் மொழியும் புரியும்.
    ஒருமுறை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தார்.
    இரு புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண் புறா, பெண் புறாவிடம் கோபமாக, “என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின் அரண்மனையையே இடித்து நிர்மூலமாக்கி விடுவேன்“ என்று கூறியது.
    இதனைக் கேட்ட சாலமன் மன்னர், அந்த ஆண் புறாவைத் தன் அருகில் அழைத்தார். அருகில் வந்த புறாவிடம்,
   “என்ன புறாவே.... இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன் என்றாயே.... எப்படி உன்னால் முடியும்?“ என்று கேட்டார்.
    அதற்கு அந்த ஆண்புறா, “மன்னரே.... என்னால் எப்படி முடியும்? ஏதோ என் மனைவியைத் திருப்தி செய்ய கூறினேன். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்“ என்று கூறிவிட்டு தன் மனைவியிடம் சென்றது.
   “மன்னர் கூப்பிட்டாரே.... எதற்குக் கூப்பிட்டார்?“ என்று பெண்புறா கேட்டது.
   “நான் அரண்மனையைத் தகர்த்து விடுவேன் என்று உன்னிடம் சொன்னதை மன்னர் கேட்டு பயந்து விட்டார். எனவே தான் என்னைக் கூப்பிட்டு அப்படியெல்லாம் செய்தவிடாதே... என்று என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்“ என்றதாம் ஆண்புறா.

புறாவுக்குக் கூட மனைவி என்றால் என்ன்ன்னா இளக்காரம்.... ம்ம்ம்.


03.10.2014

திங்கள், 22 செப்டம்பர், 2014

கவிஞர் வாலியின் நகைச்சுவை!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கவிஞர் வாலி அவர்களின் இந்த நகைச்சுவையை நீங்கள் ஏற்கனவே கேட்டு ரசித்திருக்கலாம். ஆனால் நான் நேற்று தான் கேட்டேன். இதை ஏற்கனவே கேட்காதவர்கள் அவரின் சாமார்த்திய பேச்சின் நகைச்சுவையைப் படித்து மகிழுங்கள்.

   ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தில் பாடல் எழுதுவதற்காக கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
   அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுத்து இருக்கிறார்.
   உடனே ரஜினி அவர்கள் கவிஞர் வாலியிடம் “இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்“ என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார். அங்கே கவியரசர் வைரமுத்து அவர்கள் ரஜினியைப் பார்க்க வந்து வாசலில் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
   ரஜினிக்குக் கொஞ்சம் சங்கடம். வைரமுத்து அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். என்ன செய்வது என்று தெரியாமல் “நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்“ என்று ரஜினி வைரமுத்துவிடம் சொல்லி விட்டு திரும்பவும் வாலி இருந்த அறைக்குள் வந்தார்.
   வந்தவர் கவிஞர் வாலியிடம் “ஐயா.... இன்று சிங்கமும் புலியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள போகிறார்கள்“ என்று சொன்னார்.
   அதைக்கேட்ட வாலி உடனே, “யாரு.... வைரமுத்து வந்திருக்கிறாரா?“ என்று கேட்டார்.
  ரஜினியும் “ஆமாம் ஐயா“ என்று பதில் சொன்னார்.
   உடனே கவிஞர் வாலி கேட்டார்...., “ஆமாம்.... எங்களில் யார் சிங்கம்? யார் புலி?“ என்று.
   ரஜினிக்கு மிகவும் தர்மச்சங்கடமாகி விட்டது. “ஐயா... அது வந்துங்க... நீங்க ரெண்டு பேருமே.....“ என்று இழுத்து இருக்கிறார் ரஜினி.
   அவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கவிஞர் வாலி, “இதில் என்ன தயக்கம்? இங்கே நான் தான் சிங்கம்.“ என்று மிகச்சாதாரணமாக சொன்னார்.
   ரஜினி, அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அசடாகச் சிரித்தார். அவரைப் பார்த்த கவிஞர் வாலி, “என்ன ரஜினி...  என்னை நானே சிங்கம்ன்னு சொன்னது ஏன் என்று தெரியவில்லையா?“ என்று கேட்டார்.
   ரஜினி “இல்லை“ என்று தலையாட்டி இருக்கிறார்.
   உடனே கவிஞர் வாலி, “இங்கே எனக்குத் தானய்யா தாடி இருக்கிறது“ என்றார் தன் தாடியைத் தடவி விட்டுக்கொண்டே...
   அவர் சொன்னதின் பொருளைப் புரிந்து கொண்ட ரஜினி வியந்து ரசித்துச் சிரித்தார். அங்கு வந்த வைரமுத்து அவர்களிடமும் இதைச் சொல்ல அவரும் சேர்ந்து சிரித்தார்.

கேட்டதில் ரசித்தது.
அருணா செல்வம்.

22.09.2014

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

கொஞ்சம் சிரித்துவிட்டுப் போங்கள்!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இன்று கொஞ்சம் “கடி“ ஜோக்ஸ் பதிந்துள்ளேன். சும்மா வந்து சிரித்துவிட்டு போங்க.

1.
இவர்- “நாங்கள் ஏழு பேர் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால் ஒருத்தர் கூட நனையவில்லை“
மற்றவர் – “அதெப்படி?“
இவர் – “அப்போது தான் மழையே பெய்யவில்லையே....“

2
ஆசிரியர் – “ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வச்சிருக்கே?“
மாணவன் – “அது வாயில்லாப் பிராணி சார்“

3
ஆசிரியர் – “வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?“
மாணவன் – “முட்டையிலிருந்து தான் சார்“

4
ஒருவன் – “படகுல ஏறி பார்க்கலாமா?“
மற்றவன் – “அது முடியாது. ஏரியில தான் படகைப் பார்க்க முடியும்“

5.
ஆசிரியர் – “உலகில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கிறது?“
மாணவன் – “எல்லா பெட்ரோல் பாங்க்குகளிலும் சார்“

6.
ஆசிரியர் – “படிச்சி முடிச்சதற்கு அப்புறம் என்ன பண்ணலாம்ன்னு இருக்க?“
மாணவன் – “புக்கை மூடி வைக்கலாம் என்று இருக்கிறேன் சார்“

7.
ஆசிரியர் – “சுரேஷ்... நீ மட்டும் ஏன் ஹோம் வொர்க் பண்ணலை?“
சுரேஷ் – “நான் ஹாஸ்டல்ல தங்கி இருக்கிறேன் சார்“

8.
ஆசிரியர் – “நீ மூன்றாம் மாடியில் இருக்கும் போது தீ பிடித்துக்கொள்வதாக நினைத்துக்கொள். எப்படி அங்கிருந்து தப்பிப்பாய்?“
மாணவன் – “ரொம்ப ஈஸி சார். கற்பனைப் பண்ணுவதை நிறுத்திக்கொள்வேன்“

9.
ஆசிரியர் – “உங்க பையன் இங்கிலிஸில் படு வீக்கா இருக்கிறான் சார்“
பையனின் தந்தை – “தமிழிலே எப்படி இருக்கிறான்னு சொல்லுங்க சார்“
ஆசிரியர் – “தங்களின் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கிறான் ஐயா“
பையனின் தந்தை - ???!!!

10.
ஒருவன் – நீண்ட நாள் உயிரோட வாழ என்ன வழி?“
மற்றவன் – “வேறென்ன... சாகாமல் இருப்பது தான்“

11.ஒருவர் – “காபி டம்ளரை வாய்கிட்ட வெச்சிக்கிட்டு அவர் என்ன பேசிக்கிட்டு இருக்கிறார்?“
மற்றவர் – “ஆவியோட பேசுறாராம்“

12.
ஒருவர் – “காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?“
மற்றவர் – “அவங்க “மெய்“ மறந்து காதலிக்கிறவங்களாச்சே!“

13.
ஒருவர் – “நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று நினைத்தேன்“
மற்றவர் – “செய்வது தானே...“
முதலாமவர் – “கை எச்சலாகி விடுமே....“

14.
நோயாளி – “டாக்டர்.... எனக்கு மூனு மாதமா கடுமையான இருமல்..“
டாக்டர் – “அப்படியா? இத்தனை நாளா சும்மாவா இருந்தீங்க?“
நொயாளி – “இல்லை டாக்டர். இருமிகிட்டே தான் இருந்தேன்“

15.
அவர் – “நேத்து உங்க காருக்கு எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு?“
இவர் – “அதோ... அங்க ஒரு மரம் தெரியுதில்லையா?“
அவர் – “ஆமாம். தெரியுது.“
இவர் – “அது நேற்று எனக்குத் தெரியவில்லை“

கேட்டதில் சிரித்தது

அருணா செல்வம்

புதன், 27 ஆகஸ்ட், 2014

நாற்பது வயது அறிவுரைகள்!!



     ஒரு முறை என் தோழியின் கணவருக்கு நாற்பதாவது வயது பிறந்த நாளைக் கொண்டாட எங்களையும் அழைத்து இருந்தார்கள். அவர்கள் பிரென்சு தம்பதியர். எங்களுடன் இன்னும் இரண்டு பிரென்சு குடும்பம் மட்டுமே அழைத்திருந்தார்கள்.
    விழாவில் கேக் வெட்டி விருந்து எல்லாம் முடிந்தவுடன் சற்று நேரம் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். அப்பொழுது ஒரு தோழி நாற்பது வயதான ஆணின் மனைவி ஜோஸ்ஸிடம் “ஜோஸ்... அவருக்கு நாற்பது வயதாகி விட்டது. இனி நீதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்“ என்றாள்.
   அதற்கு ஜோஸ், “அவருக்குத் தான் வயதாகிறது. அவர் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனக்கு எதற்கு கவலை?“ என்றாள்.
   அதற்கு இந்தத் தோழி.... “ஆண்களுக்கு நாற்பது வயதானால் நமக்குத் தான் எல்லா கஷ்டமும். நான் படும் கஷ்டத்தைச் சொல்கிறேன் கேள். நான் அனுபவப்பட்டவள்“ என்று புதிருடன் சொல்ல துவங்கினாள்.
   அவள் சொல்வதைக் கேட்க நாங்களும் ஆர்வமானோம். அவள் சொல்ல துவங்கினாள்...

   “இந்த வயதிலிருந்து தான் ஆண்களுக்கு மனம் மாறுகிறது. எதைச் செய்யக் கூடாது என்று நாம் சொல்கிறோமோ அதைத் தான் செய்வார்கள். காரணம்... ஒரே மாதிரியான வாழ்வைச் சற்று மாற்றிப் பார்க்க விரும்பும் வயது இதுதான்.
   எப்போதும் அவர்களுக்குப் பிடித்தது இப்போது சலிப்பை வரவழிக்கும்.
   புதியதை விரும்புவார்கள்.
   நாம் ஒரு சின்ன கோபம் கொண்டாலும் அவர்கள் அதைப் பெரிது படுத்தி சண்டையிடுவார்கள்.
   இப்போது லேசாக தொப்பை விழும். அதை மறைக்க எக்ஸர்சைஸ் என்று வெளியில் போக ஆரம்பிப்பார்கள். அதுவே வழக்கமாகவும் ஆகி விடும் என்று சொல்வதை விட இதையே காரணமாக்கி வெளியில் செல்வார்கள்.
   நரையை மறைக்க டை போட்டு முதலில் இருந்ததைவிட இளமையாக காட்சி தருவார்கள். அதாவது மனைவியைவிட இளமையாக இருக்கும்படி அழகைப் பாதுகாப்பார்கள்.
   வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் மேல் எப்போதும் எறிந்துவிழுவார்கள்.
   வீட்டில் தான்தான் ராஜா. மற்றவர் எல்லாம் அடிமை என்ற நினைப்புடனே பேசுவார்கள்.
   எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.
   வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே எதையோ பறிகொடுத்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருப்பார்கள்.
   நாட்டில் தனக்கு மட்டுமே எல்லா கஷ்டமும் வந்து விட்டது போல் வேதாந்தம் பேசுவார்கள்.
   அதிக சிக்கனம் பார்ப்பார்கள்.
   சில நேரங்களில் தேவைக்கும் அதிக “பந்தா“ காட்டுவார்கள். இதையெல்லாம் புரிஞ்சி நீதான் அனுசரித்துப் போகனும்“ என்றாள்.
   நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் “அப்படியா?“ என்பது போல் பார்த்துக் கொண்டோம்.
   “ஆமாம் ஜோஸ். அவள் சொல்றது உண்மைதான். என் கணவருக்கு அடுத்த வருடம் தான் நாற்பது வயது. ஆனால் அதற்குள் இதையெல்லாத்தையும் தொடங்கி விட்டார்“ என்றாள் இன்னொரு தோழி.
   “ஐயோ இதெல்லாம் நாற்பது வயதில் தானா..... இவர் தொடக்கத்திலிருந்தே இப்படித் தானே இருக்கிறார்...“ என்று சத்தமாகச் சொன்னாள் ஜோஸ்.

    “சியர்ஸ்.....“
    எங்களுக்குப் பின்னால் இருந்து கண்ணாடி டம்ளர்கள் இடிக்கும் ஓசை. திரும்பிப் பார்த்தோம். நாங்கள் பேசியது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாலும் அது எதுவும் தங்களுக்காகப் பேசியது இல்லை என்பது போல எதையும் லட்சியம் பண்ணாமல் ஆண்கள் தங்கள் பார்ட்டியை மீண்டும் தொடங்கினார்கள்.
   என்னத்தைச் சொல்லுறது?

அருணா செல்வம்
26.08.2014

    

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

பிரிந்தாலும் பொருள் வரும்!!


   “மாமா.... இந்த ஜோக்கைக் கேளுங்களேன்....“ என்று சிரித்தபடி வந்தாள் காமினி.
   “என்ன ஜோக் அது? சொல்லேன் நானும் சிரிக்கிறேன்“ என்றார் மாமா.
    “நான் வேலை செய்யிற பள்ளியில் டீச்சர்ஸ் ரூம்இருக்கும் இல்லையா....? அந்த அறையின் கதவைச் சுத்தம் செய்து பெயிண்ட் அடித்தார்கள். அதன் பிறகு அந்த பெயிண்டரிடம், அந்த கதவின் மேலே “ஆசிரியர்கள் சாப்பிடும் இடம்“ என்று தமிழில் எழுத சொல்லி இருக்கிறார் பிரின்ஸ்பால். அந்த பெயிண்டரும் அது போலவே எழுதி தன் வேலையை முடித்து விட்டு சென்று விட்டார். இன்னைக்குக் காலையில நாங்க போய் பார்த்தால்.....“ அதற்கு மேல் பேச முடியாமல் சிரித்தாள் காமினி.
    “ஏன் என்ன ஆச்சு....? எழுத்து ஏதாவது அலைந்து விட்டதா....?“ என்று கேட்டார் மாமா.
   “ஐயோ.... அப்படி ஏதாவது அலைந்து இருந்தாலும் இவ்வளவு சிரிப்பு வந்திருக்காது. ஆனால் அந்த பெயிண்டர் செய்த செயலை நினைத்தால் தான் சிரிப்பாக வருகிறது“ என்றாள் சிரிப்பு மாறாமல் காமினி.
   “அப்படி என்னதான்மா செய்தார் அந்த பெயிண்டர்...?“ ஆர்வமுடன் கேட்டார் மாமா.
   “அதுவா மாமா.... “ஆசிரியர்கள் சாப்பிடும் இடம்“ என்பதை ஒன்றின் கீழ் ஒன்றாக  ஆசிரியர் கள் சாப்பிடும் இடம் என்று பிரித்து எழுதி விட்டு போய்விட்டார். அதைப் பார்த்ததிலிருந்து எங்களுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பிறகு திரும்பவும் பெயிண்டரை வரவழித்து சரியாக எழுதினார்கள்“ என்றாள் காமினி.
   மாமாவும் சிரிப்பை உதிர்த்தார். பின்பு சொன்னார்.... “அந்த காலத்தில் படிக்காதவர்களைக் கொண்டு தான் கல்வெட்டுகள் எழுதினார்கள். அதனால் தான் சரியான எழுத்து நடை அதில் இருக்காதாம். அது போல தான் இதுவும்.... ஆனால், ஒரு சொல்லைப் பிரித்து எழுதினால் எப்படி பொருள் மாறுகிறது என்பதை காளமேகப் புலவர் எப்படி கவிதையில் கையாண்டு இருக்கிறார் தெரியுமா காமினி?“ என்று கேட்டார் மாமா.
   “அட. காளமேகப் புலவரின் கவிதையிலும் இந்த வகை இருக்கிறதா...? அதைச் சொல்லுங்க மாமா“ என்றாள் ஆர்வமாய் காமினி.
   “சொல்கிறேன் கேள். ஒரு முறை காலமேகத்திடம் “குடத்திலே கங்கை அடங்கும்“ என்று ஈற்றடி வருமாறு ஒரு வெண்பா எழுதுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அவரும் எழுதினார்“ என்றார் மாமா.
   “என்னது.... குடத்திலே கங்கை அடங்குமா....? எப்படி அடங்க முடியும்? குடமோ மிகவும் சிறிய பாத்திரம். வேண்டுமானால் கங்கையிலிருந்து எடுத்த தண்ணீர் அதில் அடங்கலாம் என்று பாடலாம்“ என்றாள் காமினி.
   “அதுதான் இல்லை. குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி கொடுத்திருக்கிறார்கள். அதாவது கங்கையே அந்தக் குடத்தினுள் அடங்கும் என்று பொருள் வருமாறு தான் பாட வேண்டும்“ என்றார் மாமா.
   “அது எப்படி மாமா முடியும்? சரி. காளமேகப் புலவர் எப்படி பாடினார்....?“ கண்களை விரித்துக் கேட்டாள் காமினி.
   “ம்.... சொல்கிறேன் கேள்....

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை யடங்கும்

பொருளைச் சொல்கிறேன் கேள்.

விண்ணுக்கு அடங்காமல் – வானத்திடத்தே அடங்காமல்
வெற்புக்கு அடங்காமல் – இமயமலையிடத்தே அடங்காமல்
மண்ணுக்கு அடங்காமல் – புமியான மண்ணுக்கும் அடங்காமல் வந்தாலும் – பெருகி வந்த போதிலும்
பெண்ணை – உமாதேவியை
இடத்திலே வைத்த இறைவர் – தன் இடபாகத்திலே வைத்துக் கொண்டவரான சிவபெருமான்
சடாம குடத்திலே கங்கை அடங்கும் – சிவபெருமானின் சடா மகுடத்திலே கங்கை அடங்கும்.

இது தானம்மா பொருள். புரிந்ததா....?“ என்று கேட்டார் மாமா.
   “நல்ல புரிந்தது மாமா. சடா மகுடம் என்பதைச் சடாம குடம் என்று பிரித்து எழுதி அசத்தி இருக்கிறார். என்ன அருமையான சிந்தனை. அதிலும் நான் சொன்ன பொருள் பிரிவிற்கும் காளமேகத்தின் பொருள் பிரிவிற்கும் எவ்வளவு வித்தியாசம். காளமேகத்தைக் கேட்க கேட்க சுவையாக இருக்கிறது. மாமா“ என்று வியந்தபடி நகர்ந்தாள் காமினி.

அருணா செல்வம்

19.08.2014.