சாக்கடை நீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாக்கடை நீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாக்கடை நீராய்ப் போனதடி!

கொட்டோ  கொட்டுனு
கொட்டுதடி  வானம்! - மனம்
தொட்டோ  விட்டுடுன்னு
முட்டுதடி  பாவம்!

சின்னச்  சின்னத்  துளியெல்லாம்
சேர்ந்து  தேங்கி  போனதடி!
சின்ன  எறும்பாய்ச் சேர்த்ததெல்லாம்
சேர்ந்தே பாழாய்ப் போனதடி!

கடனோ உடனே வாங்கிநாங்கள்
கஷ்டப்  பட்டு  வைத்தததைத்
தடமே  எதுவும்  காட்டாமல்
இஷ்டம் போல  போனதடி!

பயிர்கள்  செழிக்க  மழைவேண்ட
பன்னீர்ப்  போலத்  தெளிக்காமல்
உயிர்கள்  அலற  வைத்துவிட்டு
உதவா வண்ணம்  போகுதடி!

அளவாய்க்  கிடைத்தால்  அமிர்தம்தான்!
அளவோ  மிஞ்ச  விஷமாகி
வளமாய்  இருந்த  மக்களையும்
வாழ்வைச்  சிதைத்து  விட்டதடி!

தாகம்  எடுத்தால்  உதவுவதே
தண்ணீர்  கொண்ட  பயனாகும்!
சாகும்  தருவில்  உதவாத
சாக்கடை  நீராய்ப்  போனதடி!!


கவிஞர்  அருணா  செல்வம்
05.11.2015