கடிகாரம் பார்க்காமல்
எழுந்து விட்டுக்
கண்ணுறங்கும் சேவலையும் சென்று பார்ப்பாள்!
விடிகாலைச் சூரியனைத்
தேடித் தேடி
விழியிரண்டும் மூடாமல் காத்தி ருப்பாள்!
படிவாசல்
நீர்தெளித்துக் கோலம் போட்டுப்
பலகாரம் சிலசமைத்துப், பள்ளி செல்லப்
பிடிவாதம்
பிடிக்கின்ற என்னி டத்தில்
பிரியாத காதலுடன் வந்து நிற்பாள்!
விழித்திருந்தும்
உறங்குதல்போல் நடிக்கும் என்னை
வீம்பின்றி “எழுவென்று“ தட்டி விட்டுச்
செழித்திருக்கும்
வயல்ஓரம் உழவன் நின்று
செறுக்காக தனையுணர்ந்து மகிழ்தல் போலே
மொழிமறந்து
விழிமலர்ந்து பார்த்து நிற்பாள்!
முறுவளிக்கக் குழிவிழுமென் கன்னம் கண்டு
வழித்தெடுத்துக்
காண்ணாறு சுற்றி விட்டு
வாஞ்சையுடன் முத்தமிட்டுத் தொட்ட ணைப்பாள்!
கண்மூடி மெல்லமெல்லத்
திறந்து பார்ப்பேன்!
கடமைதனைச் செய்வதுபோல் நகர்ந்து செல்வாள்!
மண்ணுர்டே
புதைந்திருக்கும் வைரம் போல
மறைத்திருக்கும் புன்னகையைக் காண நானோ
பண்ணோடப் பாசமுடன் “அம்மா“ என்பேன்!
பட்டென்று பார்க்கின்ற அவளின் பார்வை,
விண்மூடக்
கிழித்தெழுவும் கதிரோன் போலே
விழிமின்னும் பேரெழிலை அதனுள் காண்பேன்!
அருணா செல்வம்
07.10.2013
