திங்கள், 30 ஜனவரி, 2023

தழுவாத கைகள்!

 


பெற்றோர்கள் கண்தழுவும் பிள்ளை மீதே!
       பெண்டீர்கள் மனம்தழுவும் கணவன் மீதே!
கற்றவர்கள் உளம்தழுவும் கல்வி மீதே!
       காதலனோ நிதம்தழுவான் நினைவி னாலே!
பற்றெல்லாம் விட்டவர்கள் நோக்கம் எல்லாம்
       பரந்தாமன் கால்தழுவ வேண்டும் என்றே!
சுற்றமற்றுச் சுயநலமாய் வாழ்வோர்க் குண்டே
      சுமையாக நீண்டதழு வாத கைகள்!
.
பாவலர்  அருணா செல்வம்
31.01.2023

வெள்ளி, 13 ஜனவரி, 2023

போகி பண்டிகை வாழ்த்து ! (2023)

 


எத்தனையோ துரோகங்கள்
       எடுத்தெறியா(து) உள்ளிருக்கும்!
எத்தனையோ கோபங்கள்
      எந்நாளும் உழன்றிருக்கும்!
அத்தனையும் போகியன்றே
      அழுக்கென்றே எரித்திடுங்கள்!
புத்தாண்டு நாளன்று
     புதிதாகப் பிறந்திடுங்கள்!
.
தோழ தோழியர் அனைவருக்கும்
இனிய போகி திருநாள் வாழ்த்துகள்!
.
அன்புடன்
அருணா செல்வம்
14.01.2023

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தங்கமொழி! (சந்தக் கலிவிருத்தம்)

 


.
தந்ததன தந்ததன தந்ததன தந்தா
.
விந்தையென எண்ணுகிற விண்ணுலகு மேலாய்
வந்தொளிர நின்றொளிர வந்ததெது கூறு!
சந்தமிகு தன்மையொடு சன்னமிசை யான
சிந்தையொடு வண்ணமிகு செந்தமிழை நாடு!
 
அன்னையொடு வந்தவழி அன்புமிக மேவும்!
புன்னகையில் இன்பமொளிர் பொங்குவது பாடும்!
தன்னிறைவு கொண்டநிலை தன்னிசையி லாடும்!
அன்னமென உண்டுணர ஐயநிலை யோடும்!
 
பஞ்சநிலை என்பதிலை பண்ணொலியு மஞ்ச
விஞ்சிவரும் இன்பநிலை வெண்டளையி லொன்ற
கொஞ்சுகிற இன்பமது கொண்டமொழி யென்று
தஞ்சமிட நம்புகிற தங்கமொழி யன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
04.01.2023