சனி, 30 மே, 2020

நெடில் வல்லிசைத் துங்கிசை வண்ணம் .



ஊருயர் நிலைத்துக் காக்க விரைவாயே!
.
தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த தனதானா ! (அரையடிக்கு)
.
நாடிய கருத்தைக் காக்க
   மாமலை யிடத்தைக் காட்டி
   நாரத பழத்தைக் கேட்ட பெருமானே!
நாடகம் முடித்துச் சீற்ற
   மாறிய இறுக்கைப் போக்க
   நாடக விளக்கைச் சேர்த்த பழம்நீயே!

கூடிய சினத்தைப் போக்கி
   ஆதவ முகத்தைக் கூட்ட
   கோவண உடுப்பைத் தீட்டி யணிந்தோனே !
கூடிய கரத்தைச் சேர்க்க
   ஆயுளை எடுத்துச் சாய்த்த
   கூடிய விதத்தொற் றோட்ட வருவாயே !

ஓடிய கனத்தைப் போக்கி
   வேலினை எடுத்துத் தாக்கி
   ஊறினை யொழித்துக் காக்குஞ் செயலோனே!
ஊடிய நெருப்பைத் தீய்த்து
   வாடிய மனத்தைத் தேற்றி
   ஊருயர் நிலைத்துக் காக்க விரைவாயே!

பாடிய கருத்தைக் கேட்ட
   நோயிடர் மனத்தைக் காத்த
   பாலனை உயர்த்துப் போற்றி மகிழ்ந்தாடும்!
பாளிதங் குழைத்துத் சேர்த்து
   நீரினை நிறைத்திட் டேற்ற
   பாரகம் நினைத்துப் போற்றி மகிழ்ந்தாடும்!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2020

பாளிதம் - சந்தனம்
பாரகம்உலகம்

செவ்வாய், 26 மே, 2020

குறில் வல்லிசைத் தூங்கிசை வண்ணம்.



வித்தகத் தொளிருங் கற்கபத் தழகே!
.
தத்தனத் தனனந் தத்தனத் தனன
தத்தனத் தனனந் தனதானா!
.
வித்தகத் தொளிருங் கற்பகத் தழகு
   வெற்றியைத் தழுவும் பெருமானே!
   வெட்டியக் கிளையும் சட்டெனத் துளிர
   வித்தையைத் தெளியுஞ் செயலோனே!
.
சொத்தெனச் சுடரும் வெப்பெனக் கொடிது
   சுட்டிடத் தழியுங் கதிர்போலே
   சுற்றிடத் தொடரும் பற்றிடப் பெருக
   சுக்கெனச் சுருலும் நிலையானோம்!
.
எத்திறத் தவருங் கற்றவர்க் கிடையி
   லெட்டிடத் துவளும் நிலைபோலே
   எத்துணைச் செயலுந் தொற்றிடத் தொடரு
   மெட்டியத் துயரங் களைவாயே!
.
முத்தமிழ்க் கவியில் வித்தகப் பொருளை
   முத்தெனப் பொளிருங் கருபோலே
   முற்றியப் பிணியுள் முற்படத் தொழிய
   முக்கியப் பணியில் மகிழ்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
26.05.2020

திங்கள், 25 மே, 2020

இடையொழுகற்றூங்கிசை வண்ணம்



நெஞ்சுள் குறைவேது?
.
தய்யன தனன தந்த
தய்யன தனன தந்த தனதான!
.
துள்ளிடும் பருவங் கண்டு
   தொல்லையில் விலகி நின்ற மனமேது?
கள்ளெனும் மொழியை நெஞ்சம்
   கவ்விடும் நிலைம றந்த இனமேது?
கிள்ளையின் குரலின் மென்மை
   எவ்விணை உலகி லென்ற நிறைவேது?
வள்ளியு ளுறையுங் கந்தன்
   வல்லமை யறிந்த நெஞ்சுள் குறையேது?
.
பாவலர் அருணா செல்வம்
25.05.2020

ஞாயிறு, 24 மே, 2020

அத்தைமக இரத்தினமே! - இலாவணி.





.
அத்தைமக இரத்தினமே சித்தமதில் அமர்ந்துகொண்டே
ஆசையினைக் கூட்டுவதும் ஏனோ ஏனோ?
அத்தனையும் உன்செயலால் பித்தனென ஆக்கிவிட்டே
அந்நியமாய் பார்க்கிறது மீனோ மீனோ!
.
அன்புமொழி பேசிடவும் இன்பமுடன் பாடிடவும்
என்னவளே உனைநாடி வந்தேன் வந்தேன்!
பொன்மொழிகள் ஏதுமின்றிப் புன்சிரிப்பும் ஏந்தலின்றிப்
பொய்முகத்தால் ஊடியதால் நின்றேன்  நின்றேன்!
.
ஏட்டினிலே பாட்டெழுதி தீட்டுகிற உணர்வுடனே
ஊட்டிவிட இங்குவந்தேன் தேடித் தேடி!
பாட்டுலகம் எமதென்றே பாட்டெதற்கு உனக்கென்றே
பண்ணரங்கைக் கண்மறைத்தாய் மூடி மூடி!
.
ஆற்றலினைக் கண்டுகொண்டே ஏற்றமிட்ட இவ்வுலகம்
ஆதரவாய்த் தந்ததொரு விருது விருது!
ஏற்றிடவே சென்றுவந்தேன்! ஏதுமொரு தவறுமின்றி
ஏகலைவி யாகிவிட்டேன் கருது கருது!
.
அமிழ்தென்ற பண்ணிருக்கும் தமிழ்கொண்டு கவிபடைக்கும்
அன்னவளை மனம்வைத்தேன் அன்றே அன்றே!
உமிழ்கின்ற எச்சிலென இமிகூட நினைவின்றி
ஒதுக்கிடவே முன்வந்தாய் இன்றே இன்றே!
.
சொட்டுகிற மொழியினிலே சுட்டுவிடும் ஓர்வார்த்தை
சொந்தமதை அழித்திடுமா சொல்லு சொல்லு!
கொட்டகிற கவியினியே சட்டமுடன் எழுதியதைக்
காட்டிவிட்டுத் தள்ளிநின்று கொல்லு கொல்லு!
.
தவறற்ற நினைவலைகள் சுவரிருக்கும் ஓவியமாய்
தவறின்றி நெஞ்சிருக்கு மின்னி மின்னி!
எவரிடத்தில் சொல்வதிதைக் கவரிமுடிப் போல்காத்தே
எனக்குள்ளே மகிழ்கின்றேன் எண்ணி எண்ணி!
.
பொன்னிருக்கும் பொருளிருக்கும் முன்னவரின் தமிழெடுத்துப்
புண்பட்ட நெஞ்சமதை ஆற்று ஆற்று!
புன்னகையும் பொலிந்துவரும் துன்பமெதும் ஓடிவிடும்
பொய்யற்ற தேனையதில் ஊற்று ஊற்று!
.
முத்துக்கள் ஆயிரமும் மொத்தமதைக் கோர்த்தெடுத்து
முத்தழிழால் கொடுத்திடுவாய் பெண்ணே! பெண்ணே!
சொத்தெல்லாம் நீயென்றே பித்தமுடன் வாழ்கின்றேன்
சொல்லியதை வரைந்திடுவாய் கண்ணே! கண்ணே!
.
தீயென்றால் வடுவிருக்கும் நோயென்றால் உடலிளைக்கும்
சீயென்றால் என்செய்வேன் உன்னை உன்னை!
சேயென்றே அழுகின்றேன்! பேயென்று விலக்காமல்
தாயென்றே அணைத்திடுவாய் என்னை என்னை!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2020

சனி, 23 மே, 2020

மெலி ஒழுகல் துங்கிசை வண்ணம்



மஞ்ஞையில் விரைந்த டைந்த பெருமானே!
.
தந்தனந் தனந்த தந்த
தந்தனந் தனந்த தந்த
தந்தனந் தனந்த தந்த தனதானா (அரையடிக்கு)
.
மங்கலம் நிறைந்து சிந்த
   நன்மைகள் புரிந்து மின்ன
   மஞ்ஞையில் விரைந்த டைந்த பெருமானே!
மந்திரஞ் சுமந்த நெஞ்சு
   கண்டிடுஞ் சிறந்த உண்மை
   மண்மனந் ததும்ப வெண்ணு மருளோனே!
.
திங்களிஞ் சுடர்ந்தி ணைந்த
   சந்தனங் கலந்தொ ளிர்ந்த
   தென்னையின் குணங்கு ழைந்த குமரேசா!
தெம்புடன் வணங்கி யுன்னை
   முந்திடுங் கரம்ப ணிந்த
   திண்மனஞ் சிதைந்த தன்மை யறிவாயா!
.
எங்கிலுஞ் சுழன்று வந்து
   நஞ்சிடம் நனைந்து வந்து
   மின்னுடல் நுழைந்த லைந்த கொடுநோயால்
இன்பெனும் மொழிந்த சொந்தம்
   சென்றிடும் மயம்நி றைந்த
   இன்மையின் விழைந்த வெம்மை யறியாயோ!
.
சங்கினம் கடல்ந னைந்து
   வங்கயின் மடல்வி ரிந்து
   சங்கமம் சினம்த ணிந்த மணிவேலா!
சந்தனங் குழைந்து டன்நின்
   வந்தனம் புகழ்ந்து நின்று
   சங்கடங் கடந்தொ ளிர்ந்து நிறைவாயே!
.
பாவலர் அருணா செல்வம்
23.05.2020