செவ்வாய், 7 மார்ச், 2023

சந்த விருத்தம் - 4

 


சந்த விருத்தம் - 4
(6 + 6 + 6 + 4)
.
ஒளியேவிழி அருளேபொழி ! உறவேதொட ராகும் !
கிளியேயென அமுதேபொழி கிலியேவெளி யோடும் !
அளியேகவி அகமேயென அதுவேதமி ழாகும் !
உளியோடிய சிலையோயென உலகேயதி லாடும் !
.
சந்தக் கலிவிருத்தம் - 5
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மலையென வளர்வது மனமெனு மிடமே!
அலையென மறைவது(ம்) அழிகிற வகையே!
விலையென உயர்வது விதியெனு மரசே!
கலையென நிறைவது கடவுளி னுருவே!
.
சந்த விருத்தம் - 6
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மெல்லிய பூவில் மெல்லிசை பாடும் !
சொல்லிய சீரில் சொக்கிட ஆடும் !
துல்லிய தேனின் தொன்மையி லாழும் !
வல்லமை யேகும் வண்டின மாகும் !
.
(துல்லியம் – சுத்தம்)
.
சந்தக் கலிவிருத்தம் - 7
(4+4+4+4)
.
அன்புடை நெஞ்சினு ளாறிய நோயோ
வன்வடு கொண்டது வானென நீண்டே!
இன்பென எண்ணிய ஏறிய நாளோ
முன்மன மொன்றிய மூவிசை வேரே!
.
சந்தக் கலிவிருத்தம் - 8
(4+6+4+6)
.
பொருளினை விளங்காது புணைகிற அடியாலே
கருவினை யறியாமல் கனமழை இருளாகும்!
திருமக னருளாலே தினமொரு கவியெழுதித்
தருகிற தெளிவாலே தணிகிற மனமாகும்!
.
பாவலர் அருணா செல்வம்
07.03.2023