99 flowers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
99 flowers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

ஆத்திப்பூ!

 


அக்கால சோழர்கள் ஆத்திமாலை சூடினர்!
இக்காலம் பீடிசுற்ற ஏற்றதாம்! - கக்குவான்
போக்கிடும்! ஆறாத புண்களை ஆற்றிடும்!
பூக்கள்இலை பட்டையும் பொன்!
.
பாவலர் அருணா செல்வம்
15.04.2022

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

தில்லை மலர்!

 



.
தில்லை நடராச தெய்வவூர்! இக்கால
தில்லைமர மில்லாச் சிதம்பரம்! - நல்ல
மணம்வீசும் பூக்கள் மனத்தை மயக்கும் 
குணமுள்ளார் நெஞ்சாய்க் குளிர்ந்து!

.
பாவலர் அருணா செல்வம்
09.04.2022

வியாழன், 31 மார்ச், 2022

அவரைப்பூ!

 


அதிக எடையை அவரைக் கரைக்கும்!
புதிய குருதியுறும்! பொன்னாய் - எதிர்ச்சக்திக்
கூட்டும்! கொழுப்பைக் குறைக்கும்! இருதயநோ
யோட்டும் உணவில் உயர்ந்து!
.

பாவலர் அருணா செல்வம்
31.03.2022

ஞாயிறு, 27 மார்ச், 2022

வானி மலர்!

 


வண்ணம் மிகுந்திருக்கும் வானி மலர்களில்
எண்ணும் உயர்வென ஏதுமில்லை! - கண்கவர
மேற்கு தொடர்ச்சிமலை மேலும் விளைந்து,சில
ஆற்றோரம் பூக்க அழகு!
.
பாவலர் அருணா செல்வம்
27.03.2022.

வெள்ளி, 25 மார்ச், 2022

முல்லை மலர்!

 


முல்லை மலரை முகர்ந்தால் மனந்தெளியும்!
பல்வேறு நோய்போக்கும்! பற்றிடத் தொல்லையெனும்
பாதப்புண், தோலரிப்பு, பால்கட்டு நீங்கிடும்!
மாதவிடாய்ச் சீராக்கும் மாண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2022

செவ்வாய், 8 மார்ச், 2022

எறுழம் மலர்!

 


எறுழம் உடைந்த எலும்பினைச் சேர்க்கும்!
இறுகும் தசையை இளக்கும்! - சிறுநீர்ப்பை
கல்லைக் கரைத்திடும்! காமாலை, மூலநோய்த்
தொல்லைகளைப் போக்கும் துணிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.03.2022

ஞாயிறு, 6 மார்ச், 2022

புன்னை மலர்! (புன்னாகம்)

 


மொட்டோ குருவியின் முட்டையைப் போலிருக்கும்!
வெட்டை,சொறி, தோல்நோய் விலகிடும்! - குட்டரோகப்
புண்ணைக் குணமாக்கும் புன்னைமலர்! ஈரமற்ற
மண்ணில் வளரும் மரம்!
.
பாவலர் அருணா செல்வம்
04.03.2022

சனி, 19 பிப்ரவரி, 2022

பீரம் மலர்! (பீர்க்கம்பூ)

 


நார்ச்சத்து மிக்க நலந்தரும் பீர்க்கங்காய்
பார்வையை மேலும் பலப்படுத்தும்! - நீர்த்தன்மை
மிஞ்சும் உடலை மெலியவைக்கும் வாசமற்ற
மஞ்சள் நிறப்பூ மலர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.02.2022

வியாழன், 17 பிப்ரவரி, 2022

சூரல் மலர் !

 


காட்டுப் புதர்ச்செடி காவலுக்கு வேலியாம் !
நீட்டிருக்கும் முட்கள் நிறைந்திருக்கும் ! - பாட்டிற்கோ
உன்னதமாய்த் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை
சின்னமலர் சூரல் சிறப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
17.02.2022

திங்கள், 14 பிப்ரவரி, 2022

பிடவம்பூ! (குட்டிப்பிடவம்)

 


புதர்செடியாய் முட்களுடன் பூக்கும் பிடவம்!
இதனின் மணம்இனிமை என்பார்! - முதல்மழையில்
மொட்டனைத்தும் பூத்து முடிந்திடும் வாழ்வாகும்!
குட்டிப் பிடவமெனல் கூற்று!
.
பாவலர் அருணா செல்வம்
12.02.2022

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

கோங்கம் மலர்! (கோங்கு)

 


கோங்கம் மலரைக் குயில்கள் விரும்பியுண்ணும்!
தேங்கும் மணமோ திளைக்கவைக்கும்! - வாங்கினர்
பொன்னிறப் பூக்களின் பூந்தாதை மட்டுமே
பொன்னின் நிகராய்ப் புகழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
11.02.2022

கூவிளம் பூ! (வில்வம்)

 


வில்வம் எனுங்கூ விளமரத்தின் பூ…தவிர
எல்லாம் பயனாகும் என்பார்கள்! - வல்ல
இறைவனின் பூகைக்(கு) இலையைப் படைப்பர்!
மறைபொருள் கண்டால் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
10.02.2022

வியாழன், 10 பிப்ரவரி, 2022

குல்லை மலர்!

 


நாய்துளசி போலிருக்கும் நல்லகஞ் சங்குல்லை
நோய்பல போக்கிடும் நுட்பமாய்! - ஆய்வாளர்
கேட்டை விளைத்திடும் கீழ்ப்பயிர் என்றனர்!
வாட்டும் முறையகன்றால் வாழ்வு!
.
பாவலர் அருணா செல்வம்
10.02.2022

.
(மேலே உள்ள படம் நாய்துளசி செடியின் படம். கஞ்சங்குல்லைச் செடியின் படம் வெளியிடத் தடையுள்ளது)

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

பித்திகம் (பிச்சிப்பூ)

 


இரவில் மலரும் இனியமலர்! பூக்கப்
பரப்பும் மனம்நம்மைப் பற்றும்! - சரஞ்சரமாய்க்
கட்டிய பித்திகத்தைக் கன்னியருஞ் சூடுவர்!
ஒட்டிடும் ஊடல் ஒழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.02.2022

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

பகன்றை மலர் !

 


அகன்ற இலையுடன் ஆழ்ந்தவெண்மை வண்ணப்
பகன்றை மலரும் பனியில்! - முகர்ந்திடக்
கள்மணம் கொண்டது! காடுகளில் பூத்திடும்
உள்ளநிறை வண்ணமட்டும் உண்டு!
.
பாவலர் அருணா செல்வம்
04.02.2022

வியாழன், 3 பிப்ரவரி, 2022

வாகை மலர்!

 


பெரும்பஞ்ச மூலத்தில் பேரிடம் கொண்டு
மருந்துக் குதவுவது வாகை! - அருந்தமிழர்
வெற்றிக்கு மாலையாக வேந்தனுக்குச் சூடினார்!
கற்றறிந்து கொண்டால் களிப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
03.02.2022

புதன், 2 பிப்ரவரி, 2022

குறிஞ்சிப்பூ! (நீலக்குறிஞ்சி)

 


உயர்ந்த மலைதனில் உன்னதமாய்ப் பூக்கும்!
நயந்தருந் தேனினை நல்கும்! - வியப்பாகப்
பன்னிரெண்டு ஆண்டுகள் பார்க்க முடியாது!
சின்னக் குறிஞ்சி சிறப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2022

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

காந்தள் மலர்! (கார்த்திகைப் பூ)

 


சுடர்மலர் காந்தளெனச் சொல்லுமிதன் வேரில்
அடர்துயர் புற்றை அழிக்குந் தொடர்புண்டு!
செம்மையுற வைத்தியத்தில் சேர்த்தாலே நன்மைதரும்!
நம்நாட்டின் மாநிலப்பூ நன்று!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2022

திங்கள், 31 ஜனவரி, 2022

கொன்றை மலர்! (சரக்கொன்றை)

 


மலமிளக்கும்! வாயு வயிற்றுநோய் போக்கி 
நலந்தருங் கொன்றை நமக்கே! - உலர்ந்த
இலையுடன் பூவும் இளைத்த உடல்தேற்றும்!
மலையளவு உள்ளதிதில் மாண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
31.01.2022

வெள்ளி, 28 ஜனவரி, 2022

தாமரை மலர்!

 


மங்கலத் தாமரையின் மையம் தளமிருக்கும்
திங்களொளி காணாத் திருமலர்! - மங்கிடும்
புத்தியைக் கூர்மையாக்கும்! பூசைக் குதவிடும்!
சித்தமருந் தாகும் சிறந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.01.2022

(தாமரை மலரின் நடுவில் “பொகுட்டு“ என்ற தளம் இருக்கும், இது தான் மற்ற நீர்மலருக்கும் தாமரை மலருக்கும் உள்ள வித்தியாசம்)