பொங்கல் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஜனவரி, 2024

காணும் பொங்கல் வாழ்த்து ! 2024

 


நல்லவரைக் காண வேண்டும் அவர்
        நல்லாசி பெறவும் வேண்டும் !
வல்லவரைக் காண வேண்டும் நல்ல
     வாழ்த்தினையும் பெறவே வேண்டும் !
இல்லத்தில் சேர்ந்தி ருந்தே அந்த
     இறையாசி இணைய வேண்டும் !
வெல்லவுள்ளம் கொண்ட பெற்றோர் கண்டு
     வீழ்ந்தாசி பெற்றல் நன்றே !
.
பாவலர் அருணா செல்வம்
17.01.2024

திங்கள், 15 ஜனவரி, 2024

மாட்டுப் பொங்கல் வாழ்த்து ! 2024

 


விவசாயி வளர்த்த மாடோ இன்றும்
    விளைச்சளுக்கு முன்னே நிற்கும் !
கவர்கின்ற உணவில் கூட இந்தக்
    காளைகளின் உழைப்பும் உண்டு !
தவஞ்செய்யும் ஞானி யர்க்கும் வாழத்
   தவறாமல் உணவு வேண்டும் !
கவனமுடன் உலகைக் காக்கும் உழவு
   காளையினை வாழ்த்து வோமே !
.
பாவலர் அருணா செல்வம்
16.01.2024


ஞாயிறு, 14 ஜனவரி, 2024

தைப்பொங்கல் வாழ்த்து ! 2024

 


தைப்பிறந்து வந்து விட்டாள் - இனி
    தழைப்பாகும் உலக மெல்லாம் !
கைப்பிடித்த துணைவ ருடனே - உயர்
    காதலுடன் இணைந்தி ருப்பார் !
மெய்ப்பிடித்த நோய்க ளெல்லாம் - உடன்
    மிரட்சியுடன் விலகி யோடும் !
மைப்பிடித்த வார்த்தை யெல்லாம் - நல்ல
    மங்கலமாய் வாழ்த்திப் பாடும் !
.
உண்ணுகின்ற பொருள்க ளெல்லாம் - ஓர்
    உழவனவன் உழைப்பே ஆகும் !
மண்ணோடு மனத்தை ஊன்றி - உயர்
    மனிதவுயிர் வாழ வேண்டி
கண்ணினிமைப் போன்றே காத்து - வயிறு
    காயாமல் காக்கும் தெய்வம் !
பெண்ணென்னும் அன்னை போன்று - நிற்கும்
    பெருமையுள்ள உழவர் வாழ்க !
..
ஓரிடத்தில் நின்று கொண்டே - இந்த
    உலகத்தை ஒளிர வைக்கும் !
காரிடரும் காலை யாகும் - கனல்
    கதிரென்ற பொழிலைச் சேர்க்கும் !
மாரியுடன் மண்ணின் ஊடே - சேர்ந்து
    மகத்தான மகசூல் தாரும் !
சூரியனின் தன்மை கண்டு - போற்றித்
    தொழுதிடுவோம் நாளும் நன்றாய் !
.
நன்றாக வாழ வேண்டும் - மனம்
   நலமாக உயர வேண்டும் !
ஒன்றாகச் சேர வேண்டும் - பெயர்
    உயர்கின்ற நோக்கம் வேண்டும் !
பொன்னாக மின்ன வேண்டும் - நிறை
    பொதுவுடமை எண்ணம் வேண்டும் !
அன்பாக இருக்க வேண்டும் - அதில்
    ஆண்டவனே அடங்க வேண்டும் !
.
பச்சரிசி வெல்லம் சேர்த்துச் - நல்ல
    பசுநெய்யில் பொங்கல் செய்து
இச்சையுடன் கரும்பு மஞ்சள் - துண்டு
    இஞ்சியுடன் கோல மிட்டும்
கச்சிதமாய் படைத்தெ டுத்தே - உயர்
    கதிரோனை வணங்கி என்றும்
அச்சமின்றி வாழ்க வென்று - நானும்
    அன்புடனே வாழ்த்து கின்றேன் !
 
தோழ தோழியருக்குத் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2024

வியாழன், 13 ஜனவரி, 2022

பொங்கல் வாழ்த்து 2022 !

 


மழையைப்போல் கடும்வெயில்போல் குளிரைப் போல
            மாறாமல் வருகிறதே ஒவ்வொ ராண்டும்!
பிழையென்று சொல்வதற்கு யாரு மில்லை!
           பிடிக்கிறதோ கசக்கிறதோ மாற்ற மில்லை!
உழைக்கின்ற உயிர்களுக்கும் ஓய்வு வேண்டும்!
          ஒருநாளைத் திருநாளாய்க் காண வேண்டும்!
அழைக்காமல் வருகின்றாய் பொங்கல் என்றே!
         அன்புடனே வரவேற்போம் இல்லந் தோறும்!
.
நங்கையர்கள் மனம்மகிழ இல்லம் தன்னில்
         நாதனுடன் பிள்ளைகளும் சேர்ந்து நன்றாய்
 செங்கதிரோன் உதிக்கின்ற நல்ல நேரம்,
         செம்மையாக அடுப்பேற்றி பானை வைத்துச்
செங்கரும்புச் சாற்றினிலே செய்த வெல்லம்
         செந்நெல்லின் உமிபோக்கி அரிசி போட்டுப்
பொங்கலிட்டே இயற்கைக்கு நன்றி கூறிப்
         போற்றிடுவோம் தமிழருக்கென் றொருநாள் என்றே!
.
பாவலர் அருணா செல்வம்
14.01.2022

செவ்வாய், 14 ஜனவரி, 2020

தமிழர் புத்தாண்டு வாழ்த்து!



.
புத்தாடைக் கட்டிக் கொண்டு
   பூச்சூடிப் பின்னிக் கொண்டு
சத்தான அரிசி கொண்டு
   சருக்கரையில் பொங்கல் செய்து
கொத்தான மஞ்சள் கட்டிக்
   கோலமிட்ட இடத்தில் வைத்துக்
கத்தைசெங் கரும்பைச் சேர்த்துக்
   காலமதை வணங்கு வோமே!

மொத்தத்தில் தமிழர்க் கென்றும்
   முழுதான சொந்தம் என்றும்
சித்தத்தில் விளக்காய் ஏற்றிச்
   சிறப்பாக ஒளிரச் செய்வோம்!
புத்தாண்டு திருநாள் என்றும்
   புதிதாகப் பிறக்கும் தையே !
முத்தான இந்த நாளை
   முடிவாக்கிப் பொங்கு வோமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2020

திங்கள், 14 ஜனவரி, 2019

பொங்கல் வாழ்த்து!




இன்பம் பொங்கிடும்
   இனிமை சேர்த்திடும்
      இயற்கைத் திருநாளாம்!
நன்மை செய்திடும்
   நலங்கள் விளைத்திடும்
      நம்மோர் மகிழ்நாளாம்!
துன்பம் விலகிடும்
   துயரம் போக்கிடும்
      துணிவாய்த் திகழ்நாளாம்!
பொன்னாய்ப் பொங்கிடும்
   புதுமை புரிந்திடும்
      பொங்கல் திருநாளே!   

புதிய ஆண்டினுள்
   பழமைக் கழிவினைப்
      போக்கி வளம்பெறவே
முதிரா விடியலில்
   மூண்ட தீயினுள்
      முந்தி அதைப்போட்டோம்!
பொதியாய் நிறைந்தநம்
   புண்மைச் செயலையும்
      புரிந்தே எரித்திட்டால்
மதியின் ஒளியென
   மனமும் நிறைந்திடும்
      மகிழ்வைக் கண்டிடலாம் ! 

துள்ளி எழுப்பிடும்
   தூவும் பனிமழை
      தொடங்கும் சிறுகாலை!
புள்ளி வைத்துடன்
   பொலியும் நிறமுடன்
      புணையும் பூக்கோலம்!
கொள்ளை அழகதில்
   குலவும் உயிர்க்கெனக்
      கொஞ்சம் அதனுடனே
வெள்ளை அரிசிமா
   விரும்பிக் கலந்திட
      வேண்டும் வாழ்வதற்கே

விண்ணின் அமுதமாய்
   விளைந்த அரிசியை
      விரும்பிப் பொங்கலிட்டு
மண்ணில் விளைந்தநல்
   மஞ்சள் வாழையும்
      மலரும், செங்கரும்பும்
கண்ணாம் உழவனின்
   கனத்த உழைப்பினைக்
      கண்டு நன்றியுடன்
பெண்ணும் ஆணுமாய்ப்
   பெருமை பொங்கிடப்
      பிணைந்தே அதைஉண்போம்!  

தொழிலை விரும்பிநல்
   தொண்டாய்த் தொடர்கிற
      தூய உழவரையும்
மொழியும் தமிழினை
   முறையாய் உரைத்திடும்
      முதுமைக் கவிகளையும்
வழியில் நன்மையை
   வகுத்தே கொடுத்திடும்
      வாய்மை அறிஞரையும்
விழிபோல் எண்ணியே
   விந்தை உலகினில்
      விரைந்தே வணங்கிடுவோம்!  

வானில் நலங்களை
   வழங்கும் ஒளியையும்
      வளஞ்செய் மழையினையும்
மேனி உருப்பெறும்
   மேன்மைப் பலம்தரும்
      மேகம் காற்றினையும்
தீனித் தினம்தரும்
   தேர்ந்த நிலத்தையும்
      தெளிந்த நீரினையும்
தேனின் இனிமையாய்த்
   தெய்வப் பதமெனச்
      சேர்ந்து வாழ்த்திடுவோம்!  


உழைப்பின் உயர்வென
   உணர்த்தும் சொல்லினை
      உடையது மாடுஅன்றோ!
தழைக்கும் வயலினைத்
   தாங்கும் ஏருடன்
      தகவாய் உழுவுமன்றோ!
குழந்தை பசியினைக்
   கொடுக்கும் பாலினால்
      கோவே போக்குமன்றோ?
அழைத்தே இவைகளை
   அன்பாய் வணங்குதல்
      ஆன்றோர் வழியன்றோ!  

பொன்னும் புதுஉடை
   பூவும் அணிந்திடப்
      பூத்த மனத்துடனே
அன்பில் மூழ்கிடும்
   அறிஞர் முதியவர்
      அவரைத் தேடிநின்று
இன்பம் பொங்கிட
   இனிமை விளைந்திட
      இன்சொல் பேசிவந்தால்
என்றும் மகிழ்வுடன்
   எண்ணம் மிளிர்ந்திட
      ஏற்றம் பொங்கிடுமே!  

காணும் பொங்கலோ
   காளை அடக்குதல்
      கலைகள் உயர்வதற்கும்,
நாணும் பெண்களை
   நலமாய் மணஞ்செய
      நல்லோர் நடத்திவைத்தார்!
ஆணும் பெண்ணுமாய்
   அமைந்த வாழ்விலே
      ஆன்றோர் வகுத்துவைத்த
பேணும் நன்மையைப்
   பேசும் உலகெலாம்
      பெருமை தரும்செயலே!   


எங்கும் இன்பமே
   இளமை நிறைத்திடும்
      இனிமை தரும்நாளாம்!
பொங்கும் புன்னகை
   புதுமை விளைந்திடப்
      பொலியும் இந்நாளில்
திங்கள் ஒளியெனத்
   திகழும் மதியுடன்
      திண்மை பெற்றிடவும்
அங்கம் அழகுடன்
   ஆயுள் நீண்டிட
      அருணா வாழ்த்துகின்றேன்
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2019

சனி, 13 ஜனவரி, 2018

பொங்கல் வாழ்த்து!



தைமகளே வா வா !
-
தமிழின் பெருமைப் பாடிநின்றோம்!
   தலையை நிமிர்த்தி உயந்திருந்தோம்!
அமிழ்தே என்றே அறிந்திருந்தும்
   அதனை வளர்க்கும் நிலைமறந்தோம்!
உமியை உண்டு மனமகிழ்ந்தே
   உரிய அரிசி பயன்மறந்து
தமிழன் என்றே மார்த்தட்டும்
   தாழ்வைக் காண்பாய்த் தைமகளே!

குப்பைத் தொட்டி அரசியலில்
   குவிந்தே இருக்கும் நாற்றங்கள்!
தப்பைக் கூடச் சரியென்றே
   தலையை ஆட்டும் கூட்டங்கள்!
சப்பை மாட்டு முதுகினிலே
   சபையைக் கூட்டும் முண்டங்கள்!
உப்புக் குதவா ஆட்சியதன்
   ஒலியைக் கேட்பாய்த் தைமகளே!

உழவன் என்னும் உயர்வுள்ளம்
   உழைப்பைக் கொடுத்தே உடலிளைத்துக்
கழனி காடு நலஞ்சேர்த்துக்
   களையை எடுத்துப் பயிர்செய்து
சுழலும் வாழ்வில் சுகம்சேர்த்தார்!
   சூழ்ச்சி கொண்ட தரகரினால்
இழந்த வளத்தில் கண்கலங்கும்
   இழிவைப் பார்ப்பாய்த் தைமகளே!

உன்னை வாழ்த்தித் தமிழ்மரபால்
   உயர்த்தி அன்று வரவேற்றேன்!
பொன்னாம் பண்ணைச் சூடியநான்
   புகழும் தமிழால் சொல்கின்றேன்!
நன்மை என்று எந்நாட்டில்
   நவில ஒருசொல் இன்றில்லை!
இன்பம் இனிமேல் வருமென்றால்
   இனிதாய் இன்று வந்துவிடு!

துன்பம் கண்ட நிலைபோக்கித்
   துணிவை நீயே தந்துவிடு!
மென்மை நெஞ்சம் வளமேந்தி
   மேலும் சிறக்க வைத்துவிடு!
அன்பில் நாளும் ஆடுகின்ற
   அகத்தை நாளும் கொடுத்துவிடு!
பொன்னாம் தமிழன் தைமகளே
   புதுமைப் பெண்ணாய்ப் பொலிந்துவிடு!
-
அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
-
அன்புடன்
பாவலர் அருணா செல்வம்

14.01.2018