ஒரு முறை நான் இந்தியா சென்றிருந்த
போது என் உறவினரின் பையன் ஒருவன், அவனுக்கு அப்பொழுது எட்டு அல்லது ஒன்பது வயது
தான் இருக்கும். அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.
என்னவென்றால்...
“நம் ஊரில் சுவற்றில் எறும்புகள்
வரிசையாகப் போவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?“ என்று கேட்டான்
இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில்
பிறந்துவிட்டு இதைப் பார்க்காமல் இருந்திருப்போமா...? “ம். பார்த்திருக்கிறேன்“
என்றேன்.
“அப்படி எறும்புகள் வரிசையாகப்
போகும் போது அதன் இடையில் நம் கை விரலால் கோடு போட்டால்.... அப்பொழுது எறும்புகள்
தடுமாறுகிறதே... ஏன்?“ என்று கேட்டான்.
நான், “அடடா... இந்தப் பிள்ளை
இவ்வளவு புத்திசாலித் தனமாகச் சிந்திக்கிறதே என்று வியந்து இப்படி விளக்கம்
சொன்னேன்.
“அதாவதுப்பா.... எறும்புகளுக்குக்
கண் தெரியாது. ஆனால் மோப்ப சக்தி அதிகம் உண்டு. அந்த மோப்ப சக்தியைக் கொண்டு
அவைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லுகின்றன. அப்படி செல்லும் போது நம் கை விரலால்
அதனின் இடையில் கோடு போட்டால் நம் கையில் உள்ள வாசனை அங்கே படிந்துவிடும்.
எறும்புகள் இந்த புதுவித வாசனையால் வழி தெரியாமல் தடுமாறுகிறது“ என்று சொன்னேன்.
அவனும் சற்று உன்னிப்பாக இதைக்
கேட்டான். எனக்கு அவனுக்கு ஒரு விளக்கத்தைச் சொல்லிக்கொடுத்த பெருமை மனதில்
ஒட்டியது. ஆனால் இது சற்று நேரம் தான்.
அவன் சொன்னான்..... “ஆன்டி... நான்
சொன்னதை நீங்கள் புரிஞ்சிக்கவே இல்லை. எங்கேயாவது இத்துணுன்டு எறும்போட இடையில
நம்ம கைவிரலால கோடு போட முடியுமா....? எறும்பு செத்தடும்மே....“ என்றான் பாவமாக
முகத்தை வைத்துக்கொண்டு.
அப்போதுதான் எனக்கு அவனின் வார்த்தை
ஜாலம் புரிந்தது. பயபுள்ள எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்க.
அருணா செல்வம்.
12.06.2014
