புதன், 28 மார்ச், 2012

அவள் அழகு... (கவிதை)




மீன்விழிப் பார்வை என்னை
    மின்னலாய் வெட்டித் தாக்க
தேன்மொழி வார்த்தை என்னைத்
    தென்றலாய் வருடிச் செல்ல
மான்நடை நடந்த மேனி
    மனத்தினைக் குடைந்து தள்ள
வான்வழி நான்ப றந்தேன்
    வஞ்சியைக் கண்ட போதே!

தேடிடும்  மலரை வண்டு
   தேவியின் கண்ணைக் கண்டு
நாடிடும் தேனை உண்ண
   நயமுடன் அருகில் வந்து
மூடும் இமையைக் கண்டு
   முன்னிலும் மோகம் கொண்டு
ஆடிடும் அழகாய்! நீதான்
   அழகிய மலரே என்று!!

முத்தினைக் கோர்த்த வண்ணம்
   முறையுடன் பற்கள் மின்னும்!
சத்தமாய்ச் சிரித்த போதும்
    சங்கீதம் இனிமை நல்கும்!
எத்தனை முறைதான் கேட்டும்
    ஏங்குதே என்தன் உள்ளம்!
பொத்தியே வைக்க வேண்டும்
    பொல்லாத உலகம் அன்றோ!

பாதனில் உள்ள தெல்லாம்
    பைங்கிளி உன்னி டத்தில்
பேதமின் றிருக்கக் கண்டேன்!
    பெண்ணே!உன் கண்ணின் காந்த
காதலில் கலந்த நானோ
    கவிதையை எழுதிப் பார்க்க
காதலும் கவிதை யும்தாம்
    கலந்திட இன்பம் என்பேன்!!

செவ்வாய், 27 மார்ச், 2012

அவள் பார்வை! (கவிதை)




தாமரை முகத்தாள்
தாம் அரைக் கண்ணால்
நோக்கியதும்
என்நெஞ்சைத் தாக்கியதே!


பெண்ணின் கண்களை
வண்டென்பார்! வண்ண
மலரென்பார்! பாயும்
அம்பென்பார்! விண்
மீனென்பார்! துள்ளும்
கயலென்பார் கவிஞர்கள்!

கண்ணே.. உன்
கண்களைக் கண்ட நானோ
குருடாகி  மதிமயங்கி
உளருகிறேன்.

உன் கண்கள்
வண்ணம் தீட்டாத
வரைபடம்!
உன் புருவம்
வண்ணமில்லாத
வானவில் தான்!
இமையென்ன மழைக்கால
மயில்தோகையோ..

அந்தக் கருவிழி பார்வையில்
காந்தம் தான் உள்ளதோ?
என் இரும்பு மனமும்
சட்டென்று அப்பார்வையில்
ஒட்டிக்கொண்டதே!

அது கண்களா?
கலைக்கூடமா?
கண்டதும் கவிப்பாட
துர்ண்டுகிறதே!

கண்ணே.. அந்தக்
கனநேரப் பார்வையில்
கனம் நிறைந்து போனேன்.
மனம் நிறைந்து வாழ்வதற்கு
திரும்பவும் நீ ஒரேயொரு
கனநேரம் பார்த்து விடேன்!

திங்கள், 19 மார்ச், 2012

பறவை பாடும் பாட்டு! (புதுக்கவிதை)




ஊருக்குள்ளேத் திருவிழா
உள்ளுரில் எனக்கு
உட்கார ஓரிடமில்லை.
வேரூர்க் காரர்கள்
வேடிக்கைக் காட்டுகின்றார்!

என்னுர்த் திருவிழாவில்
தடியெடுத்தவன்
தண்டல்காரன்!

அகிம்சை வழி தெய்வத்திற்கு
ஆராதனைக் காட்ட
நல்ல உயிர் கிடைத்ததென
நரபலி கொடுக்கின்றான்!

வான வேடிக்கை!
வந்து விழும்
குண்டுமழை தான்
இங்கே வாடிக்கை!

பட்டாசு சத்தம்
பறந்துவந்து அடக்கியது!
வெடிச்சத்தம்! உயிர்பிழைக்க
விரட்டியது அகதியாய்!

வேரருந்த மரக்கிளையில்
வீடேது பறவைக்கு?
வேரூர்ப் போனதெல்லாம்
உள்ளுரின் ஞாபகமா?!

வந்து நின்ற நாட்டினிலே
வளமான வாழ்க்கைத்தான்!
வருமானம் போதுமெனத்
தன்மானம் இழக்கிறதோ!
 
மானும் மயிலும்
ஆடுவதைப் போல்
படக்காட்சி ஓடியது.
எல்லோரும் பார்க்கின்றார்
நானும் தான் பார்க்கின்றேன்!