கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஜனவரி, 2016

பண்பு இல்லாதவனைப் பாராட்டினால்…..



    நல்ல பண்புகள் கொண்டவனை யாரும் எவ்வளவு உயர்வாகப் பேசியும் பாராட்டலாம். அவன் பாராட்டியவருக்கு எதுவும் தரவில்லை என்றாலும் பாராட்டி பேசியவருக்கு மனமகிழ்ச்சியாவது கிடைக்கும்.
    ஆனால் நல்ல பண்புகள் இல்லாத, அமையப்பெறாத ஒருவனை ஒருபோதும் உயர்வாகப் பாராட்டக்கூடாது. அப்படி உயர்வாக அவனைப் பாராட்டினாலும் அந்த பாராட்டுக்கு உரியவன் தான் இல்லை என்பது அவனுக்குத் தெரிந்து தான் இருக்கும்.
     அப்படித்தான் ஔவையார் ஒருநாள் செல்வந்தன் ஒருவனிடம் சென்று பரிசு பெறுவதற்காக அவனை உயர்த்திப் பாடிவிட்டு காத்திருந்தார். அந்தச் செல்வந்தனோ ஔவைக்குப் பரிசு எதுவும் தராமலேயே அனுப்பி விட்டான்.
    நொந்து போய் வந்த ஔவ்வையாரை மற்றொரு புலவர் பார்க்க நேர்ந்தது. ‘போயும் போயும் அவனிடமா பரிசு பெற போனீர்கள் ? போகட்டும்…. அவன் உங்களுக்குப் பரிசு ஏதும் தந்தானா… ?‘ என்று விசாரித்தார் அந்தப் புலவர்.
    ஔவையார் அதற்கு பதிலாகத் தந்த பாடல் தான் இது.

கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்.
    காடேறித் திரிந்தவனை நாடா என்றேன்.
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்.
    போர்முகத்துக் கோழையைப் புலியே என்றேன்.
மல்லாரும் புயமென்றேன் தேம்பற் றோளை.
    வழங்காத கையனையான் வள்ளல் என்றேன்.
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்.
    யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே !

என்று தன் நிலையை விளக்கிச் சொன்னார் ஔவையார்.
    ‘அந்த செல்வந்தனிடம் இல்லாதவைகளை நான் இருப்பனவாகச் சொன்னேன். இல்லாததை எல்லாம் நான் சொன்னதால், அவனும் எனக்கு எதுவும் இல்லை என்றான் போலும். ஆகவே தான் என் குற்றத்தை உணர்ந்த நானும் எதுவும் பேறாமல் போகிறேன்‘ என்றார் ஔவையார்.

பாடலின் பொருள் -  கல்வி கற்றாதவனைக் கல்விமான் என்றேன். காட்டில் வாழ்பவனை நாட்டு மனிதன் என்றேன். பொல்லாதவனை நான் நல்லவன் என்றேன். போரைக் கண்டு அஞ்சும் கொழையைப் புலி என்றேன். மெலிந்த தோள்களை மற்போர் செய்யும் வலிமையானத் தோள் என்றேன். அடுத்தவருக்குக் கொடுத்து உதவாதவனை வள்ளல் என்றேன். இல்லாததைச் சொன்ன எனக்கு, அவனும் இல்லை என்றான். தகாதவனைப் பாராட்டிய குற்றத்திற்காக நானும் எதையும் பெறாமல் போகிறேன்.

அதனால்

    பாராட்டத் தகுதி அற்றவனைப் பாராட்டுவதும் குற்றம்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

பள்ளியறையிலே ஓர் பளிங்குச்சிலை!



    டிசம்பர் மாதத்துக் குளிர். நான்கடி தூரத்தில் ஆள் இருந்தால் கூட கலங்கலான உருவத்தைக் காட்டி பயமுறுத்தும் அளவு மேக மூட்டம் இறங்கி பூமியை ஆக்கிரமித்து இருந்தது. இவ்வளவு நேரமாகப் பெய்த பனிமழையால் ஊரே வெண்மையாகி இலை இல்லாத நிர்வாண மரங்களுக்குத் தற்காலிக உடை அளித்திருந்தது.
    நரேன் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டல் மாடி அறையில் இருந்துக்கொண்டு மூடிய கண்ணாடி சன்னலின் வழியாக பூமழையாகப் பொழிந்து கொண்டிருந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தான். நரேன் பிரான்சுக்கு வந்த இந்தப் பத்தாண்டுகளில் இன்றுதான் முதன்முதலாக இயற்கையைக் கண்டு ரசிக்கிறான்.
    இதே வேறு ஒரு நாளாக இருந்தால்.... “சே என்ன ஊர் இது? எப்பப்பார் மழை பனி குளிர்ன்னு.... ஊரா இது?“ என்று வாய் விட்டுத் திட்டுவான்.
   ஆனால் இன்று....?
   அவனுக்கு இதைப் பார்க்கும் பொழுது ஏதோ தேவலோகத்தில் இருப்பது போன்ற உணர்வு!
   இருக்காதா...?
   இன்று அவனுக்கு முதலிரவாயிற்றே....
   மனத்தில் மகிழ்ச்சி நிறைந்தால் எதுவும் அழகாகத் தான் தோன்றும்.
    ஆனால்... இன்னும் தேவ கன்னி.... அதுதான் அவன் காலையில் தாலி கட்டிய மனைவி மிலானி தான் இன்னும் வரவில்லை.
    முதலிரவு அறையில் தனித்திருப்பது எவ்வளவு அவஸ்த்தை என்பதை அனுபவித்தவரால் கூட விவரித்துச் சொல்ல முடியாது.
    எப்போது வருவாள்....? கைகடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து பத்து. இன்னும் ஏன் வரவில்லை? வருவாள். வரும் போது வரட்டும். இனி அவள் எனக்குத்தான் சொந்தம். கிணற்று நீரைக் காட்டு வெள்ளமா அடித்துக்கொண்டு போக முடியாது.
   இன்னுமொரு சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தான். அது தன்னைக் குடிப்பவரையும் சாம்பலாக்குவது போல அதுவும் கொஞ்ச நேரத்தில் நெருப்புக்கு இறையாகி சாம்பலானது.
   அதற்குள்ளேவா....? மற்றொரு சிகரட்டை வாயில் வைத்து பற்ற வைக்கமல் செல்போனை எடுத்தான்.
    அவள் வீட்டுக்குப் போன் செய்து ”ஏன் இவ்வளவு நேரம்....?” என்று கேட்கலாமா...?
    வேண்டாம். முதலிரவு அதுவுமா “இன்னுமா பெண் வரவில்லை” என்று கேட்டால்... மாப்பிள்ளைக்கு ரொம்பதான் அவசரம்” என்று கேலி பேசுவார்கள். வேண்டவே வேண்டாம்.
    என்ன பண்ணலாம்.... எழுந்து அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அறையில் அழகுக்காக வைக்கப்பட்ட ரோமன் நாட்டு கையில்லாத பெண் பளிங்குச் சிலை அவன் கண்ணில் பட்டது. அழகான வடிவம். அதைப் பார்த்ததும் அவனுக்கு மிலானி ஞாபகம் உடனே வந்தது.
    அவள் நினைவு வந்ததும் அவன் உடலெல்லாம் சிலிர்த்து விட்டது. இந்தப் பொம்மையைப் போல தான் அவளும்! அழகோ அழகு. ஆனால் கையிருந்தும் எதுவும் செய்ய முடியாத ஊனம். இல்லை. இல்லை. ஊனமாக்கப் பட்டவள். இப்படி அவளை ஊனமாக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது...
   அந்த அழகு தேவதையின் உடல் இன்னும் சிலமணி நேரத்தில்... இல்லை. இல்லை... அதற்குள் வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக.... இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அனுபவித்து அவளே கேட்கும் வரையில் காத்திருந்து... அவளே லேசாக கெஞ்சியப் பிறகு தான் அவளை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும்.
   அவ்வளவு சீக்கிரம் எதையும் முடித்துவிட்டால் எந்த வித சுவாரசியமும் இருக்காது. அப்போது தான் அவளை அடைய நான் போட் பிளேனுக்கான பலன் கிடைக்கும்.
   இருக்காதா பின்னே....? அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொள்ள எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது.
   ஒரு வருடம் இருக்குமா....?
    இருக்கும். அதற்கு மேலேயும் இருக்கும்.
  நரேனுக்குக் கடந்த காலம் அவன் மனத்திரையில் மறு ஒளிபதிப்பானது.

   அந்த மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு நரேன் தான் கடந்த ஐந்து வருடமாக மானேஜர். ஓட்டல் முதலாளி ஜெர்மனி நாட்டுக்காரர் என்றாலும் இந்தியனான நரேனை அனைவருக்கும் பிடிக்கும். காரியத்தில் கண்ணாயிருப்பான் என்பதால்.
   அதனால் தனக்கு ஓர் உதவியாளர் தேவை என்றதும் ”உன் விருப்பம் போல் செய்துக்கொள்” என்று முழுஉரிமை அளித்திருந்தார். அதன்படி விளம்பர படுத்தியத்தில் பல பேருக்கு நடுவில் மிலானியும் வந்திருந்தாள்.
   அவளை முதன்முறையாகப் பார்த்ததில் இருந்து நரேனுக்கு தன் நினைவு தன்னிடம் இல்லை என்றாகி விட்டது.
   கோதுமை நிறம் என்று சொல்லலாமா? இல்லை அதைவிட சற்று வெளுப்பு. உயரம் அவனுக்குத் தகுந்த அளவு தான் என்றாலும் அவள் போட்டிருந்த ஹை ஷீல்ஸ் மேலும் மூன்று அங்குலத்தைக் கூட்டிக் காட்டியது.
   முகம்..... கை தேர்ந்த சிற்பியால் செதுக்கிய சிலை. உடல்....? உடம்பை இறுக்கமாகப் பிடித்திருந்த ஜீன்சும் வெளிர் நீலநிற பனியனில் ”த்துர்ஸ் ம்முவா” (என்னைத் தொடு) என்று அழுத்தமான நிறத்தில் எழுதிய வாக்கியம்... ”என்னைத் தொ...வா” என்று அழைப்பது போன்ற உடல்கட்டு!
   கழுத்து வரையில் வெட்டிய செம்பழுப்பு நிற முடியை ஒரு பக்கமாகத் தூக்கி வாரி இருந்தது மேலும் அழகைக் கூட்டியது.
   அவள் குறுக்காக மாட்டியிருந்த ஷான்ட் பேக் மார்பகங்களுக்கு நடுவில் புதைந்து பார்ப்பவர் விழியை அகலவிடாமல் தடுத்தது.
   இப்படிப்பட்ட அழகிதான் தனக்குத் தேவை. முதலில் வேலைக்கு. பிறகு தனக்காக மட்டும்.
   அவனுடைய கணிணி மூளை உடனே அவளுக்கு வேலை கொடுக்க கட்டளை இட்டது.

   துவக்கத்தில் ஒரு சில வார்த்தைகளோடு கழிந்த நாட்கள் ஒரு வாரத்தில் சூடு பிடித்தது. அவளாக இவனிடம் பேசவில்லை என்றாலும் இவனே அவளிடம் வலியபோய் பேசி அவளைத் தெரிந்து கொண்டான்.
   பல வருடங்களுக்கு முன்னால் வட இந்தியாவிலிருந்து குடியேறிய இந்தியத் தம்பதியருக்குப் பிறந்த ஒரே மகள் மிலானி. நிறைய செல்லம். நிறைந்த செல்வம். அப்பா அம்மாவிற்கு அரசு வேலை. கை நிறைய சம்பளம்.
   எவ்வளவு பரம்பரை சொத்து இருந்தாலும் தானே சம்பாதிப்பது தான் பெருமை என்றெண்ணும் பிரான்ஸ் நாட்டவரின் உள்ளம் அங்கேயே பிறந்து வளர்ந்த மிலானிக்கும் இருந்ததால் வேலைக்கு வருகிறாள்.
   இது போதும் அவனுக்கு. இங்கே பத்து வருடமாக உழைத்து வயிற்றுப் பசிக்கும் உடல்பசிக்கும் பணம் கொடுத்து தீனி போட்டது போக இப்போது மனப்பசிக்கும் உணவு தேவைப்பட்டது. அதற்கு இவள் தான் நல்ல விருந்து.
   மனத்தில் கணக்கு போட்டுப் பார்த்து அதை அவளுக்குத் தெரிவிக்க அவளை ஒரு நாள் இரவு ரெஸ்டெரான்டுக்கு அழைத்தான். அவளும் வருவதாக ஒப்புக்கொண்டாள்.
   வந்தாள். தனியாக இல்லை. தன் காதலன் டேவிட் என்ற வெள்ளைக்காரனுடன்.
   நரேனின் இதயம் அப்போதே சுக்கு நூறாக வெடித்துவிட்டது.

    அந்த நிகழ்வை மறக்க அவனுக்கு சில நாட்கள் பிடித்தது. அதன் பிறகு தெளிந்தான் என்பதை விட அந்த டேவிட்டை அவளிடமிருந்து எப்படி பிரிப்பது என்று தெளிவான முடிவை எடுத்திருந்தான் என்பதே உண்மை.

(தொடரும்)

(நட்புறவுகளே..... கதை மிகவும் நீண்டு விட்டதால் முடிவை அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்.
அதுவரையில் நரேன் எப்படி அவர்களின் காதலைப்பிரித்து மிலானியை மணந்தான் என்பதை...... யோசித்து வையுங்கள்)

நன்றியுடன்

அருணா செல்வம்.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

அவளும் அப்படித் தான்!!



    “என்ன? நீங்க சொல்லறது உண்மை தானா...? என்னால நம்பவே முடியலைங்க.... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க“ மாணிக்கம் வந்தவர் சொன்னதை நம்ப முடியாமல் கேட்டான்.
    “என்னப்பா.... என்னத்தை விளக்கமா சொல்லுறது? உனக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு தான் நெனச்சேன். உன் தங்கச்சிய அவ புருஷன் போட்டு அடிக்கிறதை எத்தனை முறை நான்மாடியிலே இருந்து பார்த்திருக்கேன் தெரியுமா? அந்தப் பொண்ணு எல்லாத்தையும் மறைச்சிட்டு எங்க கிட்ட சிரிச்சி பேசும். என் மனைவி கேட்டா கூட அதெல்லாம் ஒன்னுமில்லையேன்னு மழுப்பிடும். ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டைன்னு விட்டுட்டாக் கூட அந்த மனுஷனுக்கு வேலை போனதிலிருந்து ரொம்ப தான் அவளைப் போட்டு வதைக்கிறான்.
   எனக்கே மனசு தாங்கலை. அதுதான் உன்கிட்ட சொல்லுறேன். நான் அந்நியன். அந்த வீட்டு மாடியில குடியிருக்கிறவன். நான் கேட்டா அது தப்பாயிடும். நாளைக்கு ஏதாவது ஒன்னுன்னா நீங்க சொல்லவே இல்லையேன்னு என்மேல வருத்தப்படக் கூடாதுன்னு தான் உன் காதிலே போட்டேன். இனி உன் பாடு. உன் தங்கச்சி பாடு. நான் கிளம்புறேன்...“
    வந்தவர் கிளம்பிவிட்டார்.
    அவர் பாரம் குறைந்து விட்டது. ஆனால் மாணிக்கத்தால் இந்த பாரத்தைச் சுமக்க முடியவில்லை. ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. கன்னமும் மீசையும் துடித்தது. அவனைப் பார்க்கும் போது அவன் மனைவி சுந்தரிக்குப் பயமாக இருந்தது.
   “என்ன திமிர் இருந்தால் என் தங்கச்சிய அடிப்பான் அவன்... கேட்க ஆளில்லைன்னு நெனச்சிட்டானா? அவ்வளவு திமிர் அவனுக்கு எப்படி வந்தது. கேட்க மாட்டேன்னு நெனச்சிட்டானா....  வர்றேன். காலையிலேயே கிளம்பி வர்றேன். அவன் சட்டையைப் பிடிச்சி இழுத்து நடு ரோட்டுல போட்டு உதைக்கிறேன். அவனைச் சும்மா விட போறதில்லை நான்....
    ஏய்.... என்ன திரு திருன்னு முழிக்கிறே. நாளைக்கிக் காலையிலேயே ஊருக்குப் போகனும். என் டிரெசை அயர்ன் பண்ணி வை...“
   தன் மனைவியைப் பார்த்து அதட்டினான். அவள் அங்கிருந்து நகரவே இல்லை.
   “என்ன? சொல்றேனில்ல.... காதுல விழலையா? போய் செய்...“ என்றான்.
   “ஏங்க.... நீங்க போவறது அவசியம் தானா...?“ மெதுவாகக் கேட்டாள்.
    “என்ன...? என்ன....? அவசியமில்லைன்னு சொல்லுறியா? என் கண்ணுக்குக் கண்ணா வளர்த்த தங்கச்சிய அவன் அடிப்பான்.... என்னைக் கேட்டுக்கினு சும்மா இருக்க சொல்லுறியா...?“
    நான் கேட்க “வேணான்னு சொல்லலைங்க. அவளே வந்து சொன்னாள்ன்னா நாம கேட்கலாம். சாதாரண புருஷன் பொண்டாட்டி சண்டையில நாம தலையிடுறது நல்லதில்லைங்க....“
   “எது சாதாரண சண்டை? அடுத்தவன் பார்த்துட்டு வந்து சொல்ற அளவுக்கு இருக்குது. நான் போய் கேக்கலைன்னா என்ன நினைப்பாங்க...?“
   “அவங்க எதையாவது நெனச்சிட்டுப் போவட்டும். ஆனால் நீங்க இப்போ போவறது நல்லதா படலைங்க...“
    “ஏய்.... இதுக்கு மேல உன் அட்வைசைக் கேக்க நான் தயராயில்லை. என்னுடைய தங்கச்சிய பத்தி எனக்குத் தான் தெரியும். இதுக்கு மேல நீ வாயைத் திறந்தால் உன் வாயில ஒரு பல்லும் இருக்காது.... ஆமா....“
   கோபமாக எழுந்து போய்விட்டான் மாணிக்கம். இதற்கு மேல் அவனிடம் எதையும் பேச முடியாது. பெருமூச்சுடன் தன் வேலையைக் கவனித்தாள்.

   மறுநாள் காலையில் தங்கையின் வீட்டில் கால் எடுத்து வைத்தவுடன் முகம்மலர வரவேற்றது தங்கையின் கணவன் தான். ஏதோ வேலையாக வெளியே கிளம்ப ஆயுத்தமாக இருந்தான்.
   “வாங்க மாமா.... என்ன திடிர்ன்னு வந்திருக்கிறீங்க? ஆச்சர்யமா இருக்குது! ஏதாவது முக்கிய விசயமா?“
    ஆவலுடன் கேட்ட மாப்பிள்ளையிடம் ”ஏன்டா என் தங்கையை அடித்தாய்”  என்று கேட்க மனம் வரவில்லை மாணிக்கத்திற்கு.
    “சும்மா தான். உங்களை எல்லாம் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்“ முழப்பிவிட்டான்.
    “அப்படியா மாமா. என்னை ஒரு வேலைக்கிக் கூப்பிட்டு இருக்காங்க. நான் போயிட்டு வந்திடுறேன். வந்த பிறகு சாவகாசமா பேசலாம் மாமா..... சரசு.... உன் அண்ணனை நல்லா கவனி. நான் போற வழியில அவருக்குப் பிடிச்ச புரி மசாலாவை வாங்கி யாருகிட்டேயாவது கொடுத்து அனுப்புறேன். என்ன... வரட்டுமா...?“
    பதிலுக்குக் காத்திருக்காமல் கிளம்பி விட்டான்.
    சரஸ்வதி மாணிக்கத்திற்குக் காபி கலந்து கொடுத்து விட்டு அண்ணி, குழந்தைகளின் நலன் விசாரித்தாள். ஊர் விசயங்களைக் கலகலப்பாக பேசினாள்.
    அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவள் மனத்தில் இல்லையே என்று வருத்தமாக இருந்தது மாணிக்கத்திற்கு. பேசிக்கொண்டு இருந்த போதே புரி மசாலா வர அண்ணனுக்குப் பரிமாறிவிட்டு அருகில் அமர்ந்த தங்கையிடம் கேட்டான்.
   “என்ன சரசு... நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா...?“
   “என்ன கேள்வி பட்டிங்க...?“
   “உன்புருஷன் உன்னை எப்போ பார்த்தாலும் அடிக்கிறானாமே....“
   “இல்லையே... யார் சொன்னது உனக்கு...?“
   “யார் சொன்னால் என்ன.... மறைக்காமல் சொல்லு. அவனைக் கேட்க ஆளில்லைன்னு நெனச்சிட்டானா...?“ சற்றுக் கோபமாகக் கேட்டான்.
    “அப்படியெல்லாம் இல்லைண்ணா. எப்பவாவது கோபம் அதிகமானால் அதைக் கட்டுபடுத்த முடியாமல் அடிச்சிடுறார். அதுவும் எப்போவாவது தான்....“ சற்று தயங்கியே சொன்னாள்.
   “என்னம்மா இப்படி சொல்லுற? அவனுக்கு எதுக்காவது கோபம் வந்தா அதுக்காக உன்னை போட்டு அடிப்பானா...?“
   “அப்படியில்லையண்ணா. அவருக்கு தன் மேலேயே கோபம். தான் குறைவா சம்பாதிக்கிறோமே என்ற ஆத்திரம். வீட்டுச் செலவுக்கு அது பத்தவில்லையே என்ற ஆத்திரம். தன் தங்கையை கல்யாணம் செஞ்சி கொடுக்கனுமே என்ற ஆத்திரம். அவர் மேல இருக்கிற இந்த ஆத்திரத்தால அவரையே அவரால அடிச்சிக்க முடியலை. நான் ஏதாவது கேட்கப் போய் அந்த ஆத்திரத்தை என் மேல திருப்பி விடுறார். அவ்வளவு தான்....“
   “அதுக்காக நீ தான் கிடைச்சியா? அவன் அம்மாவை அடிக்க வேண்டியது தானே? அவன் தங்கச்சிய உதைக்கிறது தானே.. அவனால கட்டிக்கொடுக்க முடியலைன்னா ஒரு கூலி வேலை செய்யிறவனுக்குக் கட்டிக்கொடுக்கிறது தானே... இவன் இருக்கிற லட்சணத்தில் தங்கைக்கு பணக்கார இடமா பார்த்தால் முடியுமா...?“
   “என்னண்ணா சொல்லுற? நீ மட்டும் உன் தங்கச்சிக்கு நல்ல இடமா... சம்பாதிப்பவனா பார்த்து தானே கட்டிக்கொடுத்த. உன் வருமானத்துல எனக்கு ஒரு கூலிவேலை மாப்பிள்ளையை ஏன்ணா பார்க்கலை. என் மேல நீ வச்ச பாசத்தால தானே வரவுக்கு மீறி கடன் வாங்கி கல்யாணம் செய்து வச்சே. அப்போ உனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்தது. எத்தனை முறை என் கண்ணெதிரிலேயே அண்ணியை அடிச்சிருப்ப. அவங்க நிலையையில தான் இப்போ நான் இருக்கிறேன். விடுங்கண்ணா“ என்றாள்
   மாணிக்கம் யோசித்தபடி பேசாமல் இருந்தான். சரஸ்வதி சொல்லவது முற்றிலும் உண்மை. ஆனால் அதற்காக...
   “இல்லை சரசு... என் மனசு கேட்கலை. நான் அவன் வந்ததும் இதைக் கேட்கத் தான் போறேன்...“ என்றான்.
    “வேண்டாம்ண்ணா. நீ இதை கேட்டால் உங்களுக்குள்ள இருக்கிற மதிப்பு போயிடும். நீ எப்படி அண்ணி வீட்டுக்காரர்களை மதிக்கலையோ.... அதே மாதிரி இவரும் நடந்துக்குவார். எனக்கும் உன் வீட்டுக்கு வர போற உறவும் போயிடும். எனக்கு அண்ணியோட வாழ்க்கையே பாடமாயிடுச்சி. அதனால் நீ இதை கண்டும் காணாமல் இருந்திடு. அது தான் நமக்கு நல்லது...“ என்றாள் சரஸ்வதி.

   மாணிக்கம் தன் தங்கையைக் கண்கலங்க பார்த்தபடி கிளம்பினான்.
   “அண்ணா...“ போகும் போது கூப்பிட்டாள்.
   “என்னம்மா....?“
   “நீ... அண்ணிய அடிச்சிட்டு ரெண்டு நாள் கழிச்சி பு வாங்கிக்கினு வந்து சமாதானப் படுத்துவியே.... அது மாதிரி இல்லையண்ணா இவர். அன்னைக்கி ராத்திரியே சமாதானப்படுத்திடுவார்.....“ சொல்லிவிட்டு வெட்கத்துடன் சிரித்தாள்.
   “குறும்பக்கார பொண்ணு....“ சொல்லியபடியே கிளம்பினான்.
  
   நாம் நடந்து வந்த பாதையைத் தான் நம் சந்ததியனரும் தொடருவார்கள். நாம் நேரான பாதையில் நடந்துச் செல்ல முயலுவோம்.

அருணா செல்வம்.
28.05.1998

   

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

சமத்துவம்!



    ரஞ்சனாவிற்கு உணவு உள்ளே இறங்க மறுத்தது. மனதிலே இறுக்கம் இருந்தால் தொண்டையிலுமா இப்படி ஓர் அடைப்பு வந்து அழுத்தும். சாப்பிடப் பிடிக்காதவளாக சோற்றைப் பிசைந்துக் கொண்டிருந்தாள்.
    தெருவில் நாய் குறைக்கும் சத்தம்.
    எழுந்து போய் சாப்பாட்டை நாயிக்குக் கொட்டினாள். நாய் வாலாட்டிக் கொண்டே சாப்பிட்டது. இரண்டு நிமிடம் இருக்காது... எதிர் வீட்டு மல்லிகா இரண்டு எச்சில் இலையைக் குப்பையில் எறிந்தாள். உடனே இந்த நாய் அந்த இலையை நோக்கி ஓடியது.
    அதிலிருந்த ஒன்றிரண்டு பருக்களை வாலை ஆட்டிக் கொண்டே நக்கியது. இதற்கும் ரஞ்சனா போட்ட இலையில் கறியும் எலும்பும் அதிகமாகவே இருந்தது.
    ரஞ்சனா பெருமூச்சுடன் அந்த நாயையே பார்த்துக் கொண்டிருந்தாள். நாய் குணம் என்பது சரிதான். எவ்வளவு அன்பாகவும் ருசியாகவும் கொடுத்தாலும் அடுத்த வீட்டு எச்சில் இலை தான் அதற்குப் பிடிக்கிறது. மனிதர்களும் ஒரு வயதுக்கு மேல் அப்படித் தானே மாறி விடுகிறார்கள்.....
    தன் கணவனை நினைத்துக் கொண்டாள். வயது நாற்பத்து நான்கு. பதினெட்டு வருட தாம்பத்திய வாழ்க்கை. வயதுக்கு வந்த இரண்டு பெண்பிள்ளைகள்.
    இது வரையில் வசந்தம் மட்டுமே வீசிய குடும்பத்தில் புதியதாக ஆபிசில் சேர்ந்த மிதுனாவால் லேசான புயல் வீசத் துவங்கியுள்ளது.
    மிதுனா அப்படி ஒன்றும் அழகியல்ல. ரஞ்சனாவுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான். இருந்தாலும் இந்த ஆண்களுக்கு எதனால் இப்படி ஓர் ஈர்ப்பு.... இலை நிறைய சாதம் இருந்தும் எச்சில் இலைக்குப் பறக்கும் நாயைப்போல...
    கண்களில் இருந்து உருண்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
    “என்ன ரஞ்சனா... என்ன யோசனை? அந்த நாயையே பார்த்துக்கினு நிக்கிற...?“
    அவளின் தாய் மாமன் சுந்தரம் கிராமத்தில் இருப்பவன். டவுனுக்கு வரும் போது ரஞ்சனாவைப் பார்க்காமல் போக மாட்டான்.
    அவன் குரலைக் கேட்டதும்... “பாரு மாமா. நான் போட்ட சோற்றைத் தின்னாமல் இந்த நாய் அடுத்த வீட்டு எச்சிலை விரும்பி சாப்பிடுது...“ என்றாள்.
    குரலில் ஏக்கம். கொஞ்சம் நேரத்தில் அது அழுகையாகக் கூட மாறலாம் என்ற அளவில் இருந்தது.
    “விடுமா. அது தெரு நாய். அப்படித் தான் இருக்கும். உள்ளே வாம்மா....“
   நாயை முறைத்து விட்டு வீட்டின் உள்ளே சென்றாள்.

இரவு நேரம் கழித்து வந்த கணவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தாள்.
    “நான் மிதுனா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டேன்...“ சொல்லியபடி மேசையில் இருந்த அழைப்பிதழை எடுத்துப் பார்த்தான்.
    “மத்தியானம் மாமா வந்தார். உங்களுக்காக சாய்ந்தரம் வரையில் காத்துக்கினு இருந்தார்“ சொல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் சொன்னாள்.
    “ம். நான் தான் மிதுனா வீட்டுக்குப் போறேன்னு உனக்குத் தெரியுமே. காத்திருக்க வேணம்ன்னு சொல்லறது தானே....“
    “எப்படி சொல்ல முடியும்?“
    “ஏன்.... சொன்னால் என்ன?“
    “நீங்க அவ வீட்டுக்குப் போயிருக்கிறீங்கன்னு சொன்னா அது உங்களுக்குத் தானே அசிங்கம்....“
    அவன் அவளை உற்றுப் பார்த்தான். கண்களில் சிகப்பேறியது.
    ரஞ்சனாவிற்குத் தொண்டையில் அடைத்திருந்த உருண்டை வெளியே வந்துவிட்டது போன்ற உணர்வு!
    “அப்போ.... உன் மாமா வருவான்னு தெரிஞ்சித் தானே நான் உன்னை மிதுனா வீட்டுக்குக் கூப்பிட்டும் நீ வரலை...“
     “அதுக்காக இல்லை. நான் எப்படி அவ வீட்டுக்கு வருவேன்? அவள் தான் கேவலம் என்றால் நானுமா.... சே....“ என்றாள் கோபமாக.
    “என் கூட எனக்குத் தெரிஞ்சவங்க வீட்டுக்கு வருவது கேவலம். ஆனால் உன் மாமா கூட இருப்பது கௌரவமா?“
    அவன் கேட்டதும் நெருப்பை வாரி முகத்தில் கொட்டியது போல் இருந்தது ரஞ்சனாவிற்கு.
    “என்ன சொன்னீங்க...? நீங்க செய்ற தப்பை மறைக்க என் மீது பழி சுமத்துறீங்களா...?“
    “அதையே திருப்பி நான் சொன்னால்....“ சவாலாகக் கேட்டான்.
    “அப்படீன்னா... நீங்க என்னை சந்தேகப் படுறீங்களா...? அதுவும் இத்தனை வருஷத்துக்குப் பிறகு...“
   “ஏன்... நீ என்னை சந்தேகப்படலை...?“
   “நான் நான் உங்க மனைவி. என்னைப் போய்.... அதுவும் என் தாய் மாமாவுடனா....“
    “ஏன்... உன் தாய்மாமாவும் ஆண்பிள்ளை தானே. ஏற்கனவே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இருந்தவர் தானே... வீட்டுல ஆம்பளை இல்லை. பெண்கள் காலேஜிக்குப் போயிட்டாங்கன்னு தெரிஞ்சும் வீட்டிலேயே தானே இருந்தான். ஏன் நான் சந்தேகப்படக் கூடாது.....?“
    அவன் இப்படி கேட்க அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றாள் ரஞ்சனா.
    “ரஞ்சனா... மிதுனா என் தங்கச்சியோட ஃபிரெண்ட். பெரிய குடும்பம். ஆனால் வசதி இல்லாதவங்க. அவளுக்கு உதவுறதும் என் கடமை. அவளும் எனக்குத் தங்கை மாதிரி தான். இது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்கிறது....“
    பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்த மனைவியைப் பார்த்தான். அவளின் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தான்.
    “ரஞ்சனா.... உன்னை இப்படி சொன்னதும் உனக்கு இப்படி கோபம் வருதே... அதே கோபம் கவலை எனக்கு வராதா...? நான் உன்னை புண்படுத்தனும்ன்னு இப்படி பேசலை. என்னை நீ புரிஞ்சிக்கனும். அதுக்காகத் தான் அப்படி பேசினேன். சாரி ரஞ்சனா...“ என்றான்.
   அவள் கலங்கி விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
   “மிதுனா என் ஆபிசுக்கு வந்ததிலிருந்து அவளுக்கு நான் உதவப் போனதிலிருந்து நீ என் கிட்டே தானாகவே விலகி போன உணர்வு எனக்கும் தெரியாமலில்லை. உன் மனசுல இருக்கிற இந்த சந்தேகம் போகனும்ன்னு தான் இப்படி பேசிட்டேன். நீ என் மேல வச்ச அன்பு வற்றாத வரைக்கும் என் மனசுல நீ மட்டும் தான் இருப்பே. என்னைப் புரிஞ்சிக்கோ ரஞ்சனா...“ என்றவனின் மார்பில் சாய்ந்து விம்மினாள்.
   அவன் அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டான். அந்த கண்ணீருடன் அவளின் சந்தேகமும் கவலையும் காய்ந்து போனது.

அருணா செல்வம்.

08.04.2000

வெள்ளி, 26 டிசம்பர், 2014

நமக்காக!!



    “என்னங்க...“
    மாதவி கெஞ்சளானக் குரலில் கணவனை அழைத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த மனோகரன் நிமிர்ந்து “என்ன“ என்பது போல் பார்த்தான்.
    “ஒன்னுமில்லை.... நம்ம பிள்ளைகளுக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிடுச்சி. இந்த லீவுல ஊட்டி கொடைக்கானல்ன்னு எங்கேயாவது அழைச்சிக்கினு போங்கன்னு ஆசையா கேக்குதுங்க...“
   அவன் அவள் சொன்னதைக் காதில் வாங்காதது போல் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
   “ஏங்க... நான் சொன்னது காதுல விழுந்துச்சா?“
   “ம்“
   “அப்போ நான் பசங்ககிட்ட அப்பா போக சம்மதிச்சிட்டாருன்னு சொல்லிடட்டுமா...?“ ஆவலுடன் கேட்டாள்.
    “அதெல்லாம் எதையும் சொல்ல வேணாம். நாம் எங்கேயும் போக முடியாது.“
   “ஏங்க...“ என்றாள் ஏமாற்றமாக.
   “என்ன மாதவி, புரிஞ்சிக்காமல் பேசுறே. இப்போ தான் ராதா கல்யாணக் கடனே முடிஞ்சது. இன்னும் ஒரு வருஷத்துல மஞ்சு பெரியவளாயிடுவா. அவளுக்குச் சடங்கு செய்ய நாலு காசு வேண்டாமா? இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தால் தானே அந்த நேரத்துல உதவும். அதை விட்டுட்டு ஊட்டி சுற்றுலான்னு செலவு செய்ய சொல்லுறியே....“ என்றான் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு.
    “பிள்ளைங்க ஆசைப்படுதுங்க.... எனக்கும் ஆசையா இருக்குதுங்க.... போயிட்டு வர.....
    அவள் சொல்லி முடிப்பதற்குள் சாப்பாட்டை முடிக்காமலேயே எழுந்து, ”சே. மனுசன் நிம்மதியா சாப்பிட கூட முடியலை...” என்று முணுமுணுத்தபடியே கையலம்ப போய்விட்டான்.

    மாதவி மற்ற வேலைகளைச் செய்துக் கொண்டிருந்த போது மஞ்சு வந்து கேட்டாள். “அம்மா... அப்பா என்னம்மா சொன்னாரு....?“
    அவள் பதிலெதுவும் சொல்லாமலேயே இருந்ததைப் பார்த்து, அப்பா வேண்டாம் என்று சொல்லியிருப்பார் என்பதைப் புரிந்துகொண்டு அங்கிருந்து கவலையாகப் படுக்கச் சென்றாள்.
    மஞ்சு போனதைப் பார்த்த போது அவளும் சிறு வயதில் அம்மாவிடம் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது. அன்றும் இப்படி தான்.
    மாதவி பள்ளிக்குப் போய்விட்டு வந்து அவள் அம்மாவிடம் கேட்டாள். “அம்மா என் ஃபிரென்ஸ் எல்லாம் இந்த லீவுல நிறைய ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாங்களாம். என்னையும் எங்கேயாவது அழைச்சிக்கினு போங்கம்மா....“
    அவள் அம்மாவும் மகளின் ஆசையை தன் கணவனிடம் தெரிவித்தாள். அவரும் “இன்னும் வீடு கட்டிய கடனே அடையலை. ரெண்டு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணணும். பெரியவனைப் படிக்க வைக்கனும். இதையெல்லாம் நினைக்காம ஊர் சுத்தலாம்ன்னு சொல்லுறீயே....“ என்றார்.
    “பிள்ளைங்க ஆசைப்படுதுங்க. அதுங்க ஆசையை நாம தானே நிறைவேத்தனும்...“
    அம்மா பிடிவாதமாகச் சொல்லிப் பார்த்தாள். ஆனால் அப்பாவின் முடிவு தான் முடிவானது. “நாம நல்லபடியா பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்போம். அது தான் நம்முடைய கடமை. கல்யாணம் ஆன பிறகு புருஷனோட சந்தோஷமா போயிட்டு வர போவுதுங்க....“ என்று முடித்து விட்டார்.

    அப்பா சொன்னது போல நல்லபடியாகத் தான் கல்யாணம் முடிந்தது. ஆனால் ஊட்டிக்குப் போகனும் என்ற ஆசை தான் இது வரையில் மாதவிக்கு நிறைவேறவே இல்லை.
    கல்யாணம் ஆன புதியதில் கணவரிடம் தன் ஆசையைச் சொன்னாள் தான். ஆனால் உறவினர்கள் வைத்த கல்யாண விருந்து முடிவதற்குள்ளேயே கர்ப்பமாகி விட்டாள். குழந்தையைச் சுமர்ந்து கொண்டு ஊர் சுற்றக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
    குழந்தை பிறந்தவுடன் பச்சை உடம்பு. கைப்பிள்ளைகாரி என்ற காரணங்கள். குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் நாத்தனார் கல்யாண கடன். கடனை அடைப்பதற்குள் இரண்டாவது குழந்தை. இதோ பத்து வருடம் ஓடிவிட்டது.
   இப்போதாவது அவளது ஆசை நிறைவேறும் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லை.
   மாதவிக்கு கோபமாக வந்தது. எழுந்து போய் கட்டிலில் குப்புற படுத்தாள். ஆத்திரம் அழுகையாக வந்தது. இல்லை. அவளுடைய இயலாமை தான் அழுகையாக மாறியது.

    எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியாது! கணவனின் கை மேலே பட்டு அவளைத் தன் பக்கமாக இழுக்கும் போது தான் தூக்கம் களைந்தது. சற்று நேரம் அழுத்தில் கோபம் அடங்கி இருந்தது. மனதும் யோசித்திருந்தது.
    ஆசையாக அணைத்த கணவனின் அருகில் நெருக்கமாகப் படுத்தாள்.
   “என்னங்க... நான் ஒன்னு கேட்பேன். பதில் சொல்லுறீங்களா...?“
   “என்ன திரும்பவும் ஊட்டிக்குப் போவதைப் பத்தியா..?“
   “இல்லை. நம்மை பற்றி நாமே பேசிக்கனும்.“
   “என்ன பேசிக்கனும்...?“
   “கல்யாணமாச்சி. குழந்தை பெத்தோம். ராதாவுக்கு கல்யாணமாச்சி. கடன் வாங்கினோம். அதை அடைச்சோம். அடுத்து மஞ்சுவுக்குச் சடங்கு செய்யனும். அப்புறம் கல்யாணம் பண்ணி வைக்கனும். சின்னவனைப் படிக்க வைக்கனும். இதுக்கெல்லாம் பணம் வேணும். அதுக்காகச் சம்பாதிக்கனும். இதெல்லாம் நம்ம கடமை. இதை நாம செஞ்சித்தான் ஆகனும். ஆனால் நமக்குன்னு ஒரு சந்தோஷம் கூட தேவையில்லையா? வெறும் கடமைக்காக வாழுற வாழ்க்கை சந்தோஷம் தானா... அப்படின்னா நாம வாழுற வாழ்க்கை ஒரு சன்னியாசி வாழ்க்கையா? ஒரு நல்ல துணி வாங்கி கட்டிப்பார்க்க முடியலை. நகை வாங்கி போட்டுப் பார்க்க முடியலை. ஆசையா சந்தோஷமா ஒரு ஊர் சுற்றிப் பார்க்க முடியலை..
    வெறும் கடமைக்காக வாழுறதுல எனக்கு சந்தோஷமா தெரியலைங்க. ஓரளவிற்காவது சந்தோஷங்களை அனுபவிக்கனும். வயசானப்பிறகு கடமையெல்லாம் முடிஞ்சபிறகு அனுபவிக்கிறது சுகம்ன்னு நினைக்கிறீங்களா...? அது சுகமில்லைங்க. ஏதோ பழைய ஆசையை நிறைவேத்திக் கொண்டோம் என்ற திருப்தி மட்டும் தான் இருக்கும். அப்படிப் பார்த்தால் அதுவும் ஒரு கடமை தாங்க.
   அதனால நாமும் நமக்காக வாழ்ந்து பார்ப்போம்ங்க. இதுல நமக்கு ஓரளவுக்கு பணம் நஷ்டமானாலும் மனம் சந்தோசத்தை அனுபவிக்கும் இல்லையா... என்ன நான் சொல்லறது...?“
   கணவனை அந்த மெல்லிய வெளிச்சத்தில் பார்த்தாள். அவன் யோசித்ததில் ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.
   “நீ சொல்லுறதும் உண்மை தான். நமக்காக நாம வாழனும் தான். இந்த லீவுல போய் வரலாம்“ என்றான்.
   மாதவி மன நிறைவுடன் கணவனைப் பார்த்தாள்.
   “ஆனால் மாதவி....“ அவன் சொல்ல... அதற்குள்  என்னவாயிற்று என்பது போல் அவனை ஏறிட்டாள்.
   “இந்த சந்தோஷம் நம் எல்லோருக்காகவும். ஆனால் இப்போ என் சந்தோஷத்திற்காக மட்டும் நீ வாழணும்....“ என்று சொல்லியபடி அவளை இழுத்து அணைத்தான்.
    சந்தோஷம் என்பது நம்மால் கொடுக்க முடிந்ததைப் பொறுத்து வருவது. வாங்குவதைப் பொறுத்தது அல்ல என்பதைப் புரிந்து அவளும் அவனை இறுக்கி அணைத்தாள்.

அருணா செல்வம்.

27.05.1998

வியாழன், 18 டிசம்பர், 2014

காத்திருங்கள்.... காதலிக்கிறேன்!!!



    மாலை வேலை முடித்துவிட்டு ஐந்தரை மணியளவில் பேருந்துக்காகக் காத்திருந்த சங்கீதாவிற்கு வெய்யிலின் அனலால் ஏற்பட்ட கசகசப்பு எரிச்சலைத் தந்தது.
    அன்று முழுவதும் நெருப்பை அள்ளி வீசிய சூரியன் ஓரளவிற்கு இறங்கிவிட்டாலும் அனலை வாரிவிட்டே சென்றிருந்தது. கழுத்தில் ஏற்பட்ட கசகசப்பைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தவளை நோக்கி அந்த சிறுமி நான்காக மடித்த ஒரு காகிதத்தை நீட்டினாள்.
    “என்னம்மா இது...?“ சிறுமியிடம் கேட்டாள்.
     “தெரியாதுக்கா.... அந்த அண்ணன் தான் இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்“ என்றாள்.
    அவள் கைநீட்டிய திசையில் பார்த்தாள். இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க வாலிபன். சற்று மிடுக்கான தோற்றம். அவனுடைய குளிர் கண்ணாடியும், அவன் அமர்ந்திருந்த பைக்கும் அவனின் அழகை அதிகப்படுத்திக் காட்டின.
    “இந்தாங்கக்கா...“
     சிறுமிக்கு என்ன அவசரமோ....!!
     பக்கத்தில் பேருந்துக்காக அவளுடன் காத்திருந்த சிலர் அவளை ஒரு மாதிரியாகப் பார்ப்பது தெரிந்தது. சட்டென்று சிறுமியிடம் குனிந்து,
    “இந்தாம்மா... இதை அவரே வந்து என்னிடம் கொடுக்கச் சொல்லு“ என்றாள்.
    சிறுமி அங்கிருந்து நகர்ந்ததும் அவள் போக வேண்டிய பேருந்து வந்துவிட அங்கிருந்த அனைவரும் ஏறினார்கள் சங்கீதாவைத் தவிர.
     பேருந்து கிளம்பும் போது அங்கிருந்து கடைசியாக ஏறிய மூதாட்டியின் சொற்கள் காதில் விழுந்தது.
    ”பாத்தா நல்ல பொண்ணு மாதிரி தெரியுது. மனசைக் கட்டுப்படுத்தினா நல்லா இருக்கும்”
    பேருந்து போய் விட்டது.
   
    எதிரில் இருந்த அவன், தன் வண்டியை நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து அவள் இருக்கும் இடத்தை நோக்கி வருவது தெரிந்தது. நடையில் ஒருவித உற்சாகம். அவளை மயக்கிவிட்டோம் என்ற நினைப்பா? அல்லது அவள் திட்டினாலும், ஓர் அறை கொடுத்து காரித் துப்பினாலும் பார்ப்பதற்கு அங்கே யாரும் இல்லை என்ற தைரியமா? அவளுக்குத் தெரியவில்லை.
     அருகில் வந்தவன் சிநேகிதமாகப் புன்னகைத்தான். அவள் சிரிக்கவில்லை. மாறாக முகத்தைக் கடுகடுப்பாக மாற்றிக் கொண்டு கேட்டாள்.
    “என்ன அது லட்டர்?“
    “நீங்களே படிச்சிப் பாருங்களேன்“ கடிதத்தை நீட்டினான்.
    “அது தான் எழுதின நீங்களே இருக்கிறீங்களே. என்ன எழுதி இருக்கிறீங்கன்னு சொல்லுங்க.“ என்றாள்.
    “அது வந்து....“ சொல்லத் தயங்கினான்.
    “லவ் லட்டரா...?“ அவளே கேட்டாள்.
     அவன் சற்று நேரம் கழித்து ”ஆமாம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையாட்டினான். அவன் முகத்தில் தெரிந்த சாயல் தான் அசடு வழிதல் என்பதா...!!!
     “நீங்கள் என்னைக் காதலிக்கிறீங்களா?“ கேட்டாள்.
     இதற்கும் தலை அசைப்பு தான்.
     “சரி. காதலிச்சிக்கோங்க! அதுக்கு ஏன் லட்டர்?“
     இந்தப் பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை போலும். இனிமேல் பேசாமல் இருந்தால் நல்லதில்லை என்று நினைத்தானோ என்னவோ...
     “என்ன இப்படி சொல்லிட்டிங்க? காதல் என்றால் இரண்டு பேரும் மனம்விட்டு பேச வேண்டாமா?“
     “எதைப்பற்றி பேசனும்...?“
     “எல்லாத்தையும் பத்தி தான். நம் எதிர்காலத்தைப் பற்றிப் பேச எவ்வளவோ இருக்குது“
     “எதிர்காலத்தைப் பற்றித் தானே..... எனக்கு இப்பவே உங்களைக் காதலித்தால் எதிர்காலத்தில் ஏற்படும் முடிவு தெரிகிறதே...“ என்றாள் அலட்சியமாக.
     “என்ன தெரிஞ்சிக்கினீங்க?“
     “ஒரு கடிதத்தைக் கொடுக்கவே தயங்கி இன்னொருவருடைய உதவியை நாடுகிற நீங்கள் கடைசி வரைக்கும் எப்படி உறுதியாய் இருப்பீங்க? அது மட்டுமல்லை. காதல்ன்னு சொல்லிவிட்டு என்னை பார்க், பீச், சினிமான்னு கூப்பிடுவீங்க. நானும் உங்களுக்காக வருவேன். ஒரு நாளைக்கு அப்பா அம்மாவுக்குத் தெரியும். உங்கள் வீட்டுல வசதி குறைவான என்னைப் பெண்கேட்க சம்மதிக்க மாட்டாங்க. அப்படியே சம்மதிச்சாலும் ஒரு நாள் வந்து பார்த்துட்டு என் அப்பா போடுற பத்து பவுன் நகை பத்தாதுன்னு சொல்லிட்டு போவாங்க. நான் ஒருவனை காதலிச்சேன் என்பதற்காக வேற யாரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன் வர மாட்டாங்க. என்னால என் ரெண்டு தங்கையோட வாழ்க்கையும் பாழாகும். இதெல்லாம் எனக்கு அவசியம் தானா?“
     அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளை அமைதியாகப் பார்த்தான். அவள் சொன்னதில் உண்மை இருந்தது. வசதியான வீட்டில் பிறந்து கைநிறைய சம்பாதிக்கும் அவனுக்கு வசதியான வரன்கள் வரிசையில் இருந்தது உண்மை தான். ஆனால் அவனுக்குப் பிடித்ததென்னவோ அழகும் அடக்கமும் நிறைந்த இந்த சங்கீதாவைத் தான். இந்த சங்கீதா அவனுடைய இதயக் கோவிலில் தெய்வமாக அமர்ந்துவிட்டாள். அவளை விட மனமில்லாமல் கேட்டான்.
    “அப்படின்னா என்னை நீ காதலிக்க மாட்டியா? உன்னை நான் நிச்சயமா கைவிட மாட்டேன். இது சத்தியம்“ குரலில் கெஞ்சளின் சாயலும் அதே சமயம் சற்று உறுதியும் இருந்தது.
    அவனுடைய உறுதியைப் பார்த்துவிட்டு சொன்னாள்.
    “சரி காதலிக்கிறேன். ஆனால் இப்போ இல்லை. உங்க அம்மா அப்பா சம்மதத்தோட என்னைப் பெண் கேட்டு, என் அப்பா போடுற பத்துப் பவுனை ஏத்துக்கினு எனக்குத் தாலி காட்டுறீங்க பாருங்க... அந்த நொடியிலிருந்து உங்களை நான் காதலிப்பேன். அது வரையி நீங்கள் யாரோ. நான் யாரோ தான். உங்களை மட்டுமில்லை. வேற யாரையுமே காதலிக்க மாட்டேன்.“
    அவள் சொல்லி முடிக்கவும் அவள் செல்லும் பேருந்து வரவும் சரியாக இருக்க அவள் அதில் ஏறி கிளம்பி விட்டாள். அவளைச் சுமர்ந்து சென்ற வண்டி கண்ணிலிருந்து மறைந்தாலும் அவள் சொன்ன சொற்கள் அவனின் காதினுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
    அவனின் காதலை அவள் மறுக்கவில்லை. அதே சமயம் அவள் ஏற்கவும் இல்லை. காத்திருக்கச் சொல்லியிருக்கிறாள். அடுத்தவருக்குத் தெரியாமல் பயந்து பயந்து காதலிக்க வேண்டாம். சுதந்திரமாகவும் உரிமையுடனும் காதலிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.
    அவனுக்கு அவள் மேலிருந்த அன்பு காதல் மேலும் அதிகமாகியது.
    காத்திருப்பேன்.... இவளது காதல் கிடைக்கும் வரையில் விடாமல் காத்திருப்பேன்... என்ற உறுதியை மனத்தில் எடுத்ததும் மனநிறைவுடன் வீடு நோக்கிச் சென்றான்.

அருணா செல்வம்
01.04.1998


(இந்தக் கதை எந்த இதழில் வெளிவந்தது என்ற ஞாபகம் இல்லை)

புதன், 3 டிசம்பர், 2014

பிரட்சனை!!


    வேலையை முடித்துவிட்டு களைப்புடன் வெளிவந்தவளிடம், “நர்மதா.... உங்கிட்ட கடைசியா கொஞ்சம் பேசனும்“ என்று வழிமறைத்துச் சொன்ன சுரேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையே “என்ன?“ என்று கேட்பது போல் இருந்தது.
    “என் ஆசையை சொல்லி இத்தனை நாளா உங்கிட்ட கெஞ்சி பார்த்திட்டேன். நீ என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து என்னிடம் இதுவரையில் ஒரு வார்த்தை கூட பேசியதே இல்லை. இவ்வளவு நாளா நீ பேசாதது கூட பரவாயில்லை. ஆனால் இன்னைக்கி நீ பதில் சொல்லியே ஆகணும்.“
    அவன் சொல்ல அவள் அப்போதும் பேசாமலேயே இருந்தாள். அவனே தொடர்ந்தான்..... “வீட்டுல பெண் பார்க்க போகிறார்கள். முடிவு எது வேண்டுமானாலும் இருக்கும். நீ என்ன சொல்கிறாய்....?“ கேட்டான்.
    “உங்களுக்கு விருப்பம் என்றால் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்“ பட்டும் படாததுமாக பதிலளித்தாள்.
    “என் விருப்பம் உன்னுடன் வாழறது தான்“
    “எனக்கு அந்த ஆசை இல்லை. எனக்குன்னு அமுதவன் இருக்கிறான். அவன் மட்டும் எனக்கு போதும். வழியை விடுங்கள். அவன் காத்திருப்பான்“ சுரேந்திரனைச் சற்று நகர்த்திவிட்டு நடந்தாள்.

    கவலையுடன் நின்றிருந்த சுரேந்திரனிடம் “என்னடா சொன்னா நர்மதா?“ அவன் நண்பன் சரண் ஆதங்கத்துடன் கேட்டான். “அவளுக்கு அமுதவன் மட்டும் போதுமாம். நான் வேண்டாமாம்“ என்றான் கவலையுடன் சுரேந்தர்.
    “விடுடா. நீயும் வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து எவ்வளவோ நாளாய் கெஞ்சி பார்த்திட்ட. அவ பிடி கொடுத்து பேசலை. அது மட்டுமில்லாம அமுதவன் மட்டும் போதும்ன்னு உங்கிட்டேயே சொல்லுறா. அவளுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது...... உனக்கென்னடா. வெளிநாட்டுல கைநிறைய சம்பாதிக்கிறே. அப்பா அம்மா பார்க்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கினு சந்தோஷமா இருப்பியா..... அதை விட்டுட்டு....“ சரண் கோபமாகச் சொல்ல....
      “சரண்.... எனக்கும் அமுதவன் வேணுமடா“ என்றான்  சுரேந்திரன்.
    “என்னடா சொல்லுற...? அவன் உனக்கெதுக்குடா....?“ சற்று கேவலமான முக பாவனையில் கேட்டான் சரண்.
    “டேய் சரண்.... அமுதவன் கூட இருக்கிற தைரியத்துல தான் இவ இப்படி திமிரா நடக்கிறா. நாளைக்கே அவனைத் தூக்கிடலாம்.....“ முடிவுடன் சொன்ன சுரேந்தரனைப் பார்த்து நடுங்கிக் கொண்டே “ சரி“ என்று தலையாட்டினான் சரண்.

    கோபத்துடன் வீட்டில் நுழைந்த நர்மதாவை, “வாம்மா..... இப்போ தான் இந்த வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா உனக்கு....?“ என்று கேட்டவளை அலட்சியப் படுத்திவிட்டு, “எங்கே அமுதவன்....?“ என்றாள் கோபமாக.
    “அவன் மாடியில் சுரேந்தரனிடம் இருக்கிறான்...“ என்று சொல்லவும் மாடிக்கு ஓடினாள். அவளைக் கண்டதும்...
     “டேய்..... கோவம் தெளிஞ்சி உன் அம்மா நம்ம வீட்டுக்கு வந்திட்டா பாருடா......“ என்று கையிலிருந்த அமுதவனிடம் கொஞ்சிய படி சொன்னான் சுரேந்திரன்.
    “என் குழந்தையைக் கொடுங்க. நான் போகனும்“ என்ற படி குழந்தையை இழுத்தாள். அவன் விடவில்லை. “இவன் எனக்கும் குழந்தை. அவன் இனி இங்கே தான் இருப்பான். அவன் வேண்டுமானால் நீயும் இங்கேயே இரு.“ என்றான்.
    “ஓ..... இவன் உங்க குழந்தைன்னு இப்போதுதான் தெரிஞ்சிதா....? குழந்தை பிறந்து முதன் முதலில் படம் அனுப்பியதும் நம்ம ரெண்டு பேர் குடும்பத்து ஜாடை கூட குழந்தை முகத்தில் தெரியலையேன்னு சொன்னீங்க..... இப்போ மட்டும் ஜாடை தெரியுதோ.....“ என்றாள் கோபமாக.
    “ஐயோ நர்மதா..... இது தான் உன் கோபமா? நான் குழந்தையை நேரில் பார்க்க முடியவில்லையே.... என்ற ஆதங்கத்தில் வெறும் படத்தைப் பார்த்து எனக்கு எந்த ஜாடையும் தெரியலையே என்று கவலையுடன் சொல்லி இருப்பேன். அதற்காகவா இப்படி ஒரு வருஷமா பேசாமல் இருக்கிறது? நீ பேசாமல் இருந்ததாலேயே எனக்கு என்ன பிரட்சனை என்ற விசயம் புரியாமல் குழம்பி போய் விட்டேன். நல்லவேலை இப்போதாவது பேசினியே....“ என்றான் சுரேந்திரன்.
     “நம்பிக்கை இல்லாதவரிடம் என்ன பேசுவது?“ என்றவளின் அருகில் வந்தான் சுரேந்திரன். “நம்பிக்கை இல்லை என்றால் நான் வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து உன்னையே சுற்றி சுற்றி வந்திருப்பேனா.....?“
     அவன் மூச்சுக்காற்று கழுத்தில் பட, “ஏதோ பொண்ணுபார்க்க போறேன்னு சொன்னீங்க...?“ என்றாள் சற்று தள்ளி.
    “அது தான் பார்த்துக்கொண்டே இருக்கிறேனே....“ என்று அணைத்தவனை விலக்க நினைத்தாள்... நினைத்தாள்.... நினைக்க மட்டுமே முடிந்தது.

அருணா செல்வம்

04.12.2014

திங்கள், 1 டிசம்பர், 2014

அறிவாளி என்பவன் யார்?



    சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸிடம் (கி.மு 511 – 479) அவரது சீடன் ஒருவன், “அறிவாளி என்பவன் யார்?“ என்று கேட்டான்.
    “கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை நிறைந்தவன் அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்.
    “வேறு யாரெல்லாம் அறிவாளி?“ என்று மீண்டும் கேட்டான் சீடன்.
    “அடக்கம், பணிவு, நற்குணம் ஆகியவற்றை உடையவனும் அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்
    “அறிவாளிகள் அவ்வளவு தானா?“ என்று மீண்டும் கேட்டான் சீடன்.
    “இருக்கிறார்கள். பேச்சிலும் நடத்தையிலும் கவனம் செலுத்துகிறவர்களும் அறிவாளிகள் தாம்“ என்றார் கன்ஃபூசியஸ்.
    “சரி ஐயா. அரசாங்க அதிகாரிகளைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?“ என்று கேட்டான் சீடன்.
    “அவர்களா? அவர்கள் வெறும் அரிசி மூட்டைகள்“ என்றார் கன்ஃபூசியஸ்.

அப்போதிலிருந்தே அப்படித்தான் போல.....

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.