காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 நவம்பர், 2022

பெண்ணின் உள்மனப் பேறு !

 


(கலிவிருத்தம்)

.
அன்பாய் பேசிய அன்றைய நினைவெல்லாம்
இன்றும் நெஞ்சினுள் இருந்தே இனித்திருக்கும்!
துன்பப் பொழுது தோழியர்ச் சூழ்ந்துவர
நின்று போயிடும் நெகிழ்ந்த கனவலைகள்!
.
சொல்லச் சொக்கிடும் சுவையாய்க் கவிகளையும்
மெல்லப் பேசிடும் மென்மொழி இனிமையையும்
நல்ல நேரமும் நிறைந்து கிடைத்தாலும்
மல்லுக் கட்டிடும் மனத்தைக் குழப்பிவிடும்!
.
கற்றோர் காட்டிய காலமெ னும்நிகழ்வோ
உற்றுக் கடக்கும் ஊழ்வினை என்றரிந்து
பற்று வைத்தலே படைப்பின் நிறைவென்றே
முற்றும் அன்பினால் முயன்று நெகிழ்ந்துவிடும்!
.
பெண்ணின் உள்மனப் பேற்றினைக் கண்டவளின்
கண்கள் நோக்கிடக் கவிகள் பிறந்துவிடும்!
வண்ணங் கூட்டிடும் வடிவில் கலந்துவிட்டால்
எண்ணந் தீட்டிடும் இதயம் இனிதுறுமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2022

புதன், 29 டிசம்பர், 2021

வந்துவிடு வாழ்வோம் ! 9

 



மார்கழியில் ஆண்டாள் மறைவாக வேண்டினாள்!
நேர்வழியில் வேண்டுகிறேன் நேரிழையே!  - கார்வண்ணன்
ஆழ்வார் கனவில் அழைத்திட்டான்! வந்துவிடு
வாழ்வோம் நினைவில் மகிழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

நோய் பயந்தோடும் ! 8

 


மார்கழியில் ஆற்றோரம் மாங்குயிலின் இன்னிசையில்
நீர்ச்சொட்டும் ஈரமுடன் நிற்கின்றாய்!  - கார்காலம்
காய்ச்சலுடல் தீண்டிடும்! கட்டிக்கொள் என்னுடலை
நோய்பயந் தோடிடும் நொந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

திங்கள், 27 டிசம்பர், 2021

பெண்ணே நவில்!

 



மார்கழியில் நோம்பிருக்கும் மங்கையே! என்னிடத்தில்
ஓர்வார்த்தை பேசா(து) உருகுகிறாய்!  - ஊர்சொன்ன
சொற்களால் உண்டான சூடு தணிந்திடவே
நற்றவத்து பெண்ணே நவில்!
.
பாவலர் அருணா செல்வம்
28.12.2021

வியாழன், 16 டிசம்பர், 2021

உன்னிணை நான்!

 

.
மார்கழி வெண்பனியில் மாலை வணங்கிடத்
தேர்போல் நடந்துசெல்லும் செந்தேனே! - நேர்விழியால்
என்னைப்பார்! வேண்டிட ஏதுமில்லை என்றறிவாய்!
உன்னிணை நான்என்(று) உணர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.12.2021

செவ்வாய், 17 நவம்பர், 2015

பள்ளியறைப் பாடல் !


படிப்போமா…  பள்ளியறை
பாடத்தைச் சேர்ந்து
படிப்போம் வா.

பருவத்தில் படித்த படிப்பெல்லாம் – அந்தப்
பள்ளியறை கற்றுத் தந்த பாடங்கள் !
இருவரும் சேர்ந்து படிப்பதெல்லாம் – இந்தப்
பள்ளியறை கற்றுத் தரும் பாடங்கள் !         

ஒன்றும் ஒன்றும் இரண்டென்று – அங்கே
ஓதிய பாடம் சொல்லித் தரும் !
ஒன்றும் ஒன்றும் ஒன்றென்றே – இங்கே
உணர்ந்த நெஞ்சம் துள்ளி வரும் !          (படிப்போமா… )        

ஆக்கம் அழிவு எனவுணர்த்தும் – நல்
ஆற்றல் கொண்டது விஞ்ஞானம் !
ஏக்கம் போக்கி ஆக்கங்களை – உடன்
இயற்கை யாக்கும் மெய்ஞானம் !            

யாரோ வாழ்ந்த வரலாற்றை - நாம்
ஏட்டில் என்றோ படித்துவிட்டோம் !
ஊரே போற்ற வாழ்ந்திடுவோம் ! – அதை
உலகம் படிக்க வைத்திடுவோம் !            (படிப்போமா… )           

தொட்டால் சுடுமெனக் கற்றாலும் – தீ
சுட்டபின் உண்மை வலியறிவோம் !
எட்டி இருந்தே விட்டாலும் – வலி
இதயத்துள் இருப்பதை உடனறிவோம் !       

ஏட்டில் படித்த அறிவெல்லாம் – நம்
இளமைப் பருவ அறவழிகள் !
கூட்டில் படிக்கும் படிப்பினையால் – இன்பம்
கூடும் வாழ்வின் பிறவாழிகள் !              (படிப்போமா… )        


அருணா செல்வம். 
18.11.2015

புதன், 25 பிப்ரவரி, 2015

கோபமா என்னுடன்?



காலை உறக்கம் கலைந்ததுமே
    கண்முன் வந்து நிற்கின்றாய்!
வேலை கிளம்பும் அவசரத்தில்
    விழுங்கு வதுபோல் பார்க்கின்றாய்!
சோலை வழியே செல்லுகையில்
    சூழும் மணத்தில் மயக்குகிறாய்!
நூலை எடுத்துப் புரட்டுகையில்
    நுவலும் பொருளில் தெரிகின்றாய்!

என்னில் உள்ளே இருந்தாலும்
    எதிரில் காண ஓடிவந்தால்
என்னை ஏனோ மறந்துவிட்டாய்!“
    என்றே கோபம் கொள்கின்றாய்!
உன்போல் எல்லாக் காதலரும்
    ஊடல் கொள்வார்! படித்ததுண்டு!
என்மேல் கோபம் கொள்கின்ற
    என்தன் உயிரே என்செய்வேன்?!

எந்த நிலையில் உனைமறந்தேன்
    என்று தேடிப் பார்க்கிறேன்!
அந்த நிலையை நான்அறிந்தால்
    அந்தக் கனத்தைப் பொய்யென்பேன்!
சொந்தம் கொண்ட சொல்லமுதே
    சொர்க்கம் எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
    இருக்கும் நேரம் அதுவென்பேன்!

மறத்தல் தானே மனிதருக்கு
    மகேசன் கொடுத்த வரமென்பார்!
சிறந்த வாழ்வு செழிப்பதற்கு
    சீராய் வந்த உன்னுருவை
மறந்து விடும்நாள் வந்ததென்றால்
    மாறும் இந்த உலகத்தில்
இறந்து போதல் உயர்வென்பேன்!
    இனிமை அதுவே தருமென்பேன்!
     
அருணா செல்வம்.

26.02.2015

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

இன்று காதலர் தினமாம்...!



ஒற்றை ரோசா மலர்கொண்டே
   உன்னை எண்ணிக் காத்திருந்தேன்!
பற்றை விட்ட முனிபோலப்
   பட்டும் படாமல் பேசுகின்றாய்!
வற்றாக் காதல் வளத்துடனே
   வாங்கி வந்த மலரை...நீ
கற்றைக் குழலில் சூடிட்டால்
   காற்றாய் மனமும் பறக்காதோ

சிவப்பு ரோசா இதழினிலே
   சிந்தும் தேனின் சுவைபோல
உவப்புக் கொண்ட கன்னத்தில்
   ஒத்தி ஒன்று கொடுத்திட்டால்
தவத்தின் பயனை அடைந்திட்ட
   தன்மை தெரியும் இன்றெனக்கு!
தவறே என்று நினைக்காமல்
   தாவி வந்து கொடுத்துவிடு!

என்ன சொல்வேன் என்னவளே!
   எழுதும் எழுத்தில் எதைக்கோர்ப்பேன்?
உன்னை மனத்தில் சுமந்ததாலே
   உறக்கம் இன்றித் தவிக்கின்றேன்!
பொன்னில் புரண்ட மனத்தவளே!
   பொய்யைச் சொல்ல விருப்பமில்லை!
என்னில் இருக்கும் உன்னைநான்
   என்றும் மனத்தால் அணைக்கின்றேன்!

இன்று காதல் திருநாளாம்!
   இருந்தால் என்ன என்னவளே!
என்றும் நமக்குத் திருநாளே!
   இனிய காதல் வளர்நாளே!
அன்று வாழ்ந்த காதலர்கள்
   அன்பைக் காட்ட நாள்வகுத்தார்!
அன்றும் இன்றும் என்றென்றும்
   அழியாக் காதல் நமதன்றோ?!!



அருணா செல்வம்.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

எங்கே சென்றாய்?



கண்ணிருந்தும் குருடாக்கி!
    காதிருந்தும் செவிடாக்கி!
மண்ணிருந்தும் தரிசாக்கி!
    மலரிருந்தும் வீணாக்கி!
பண்ணிருந்தும் வாய்மூட
    பா..இருந்தும் கைமூட
என்னிருந்த உணர்வுகளை
    எடுத்தெங்கே சென்றுவிட்டாய்?

நிலவில்லா வானமாக
    நீரில்லாப் பயிராக!
மலரில்லாச் சோலையாக!
    மதுவில்லா விருந்தாக!
விலங்கில்லாக் காடாக!
    விளைச்சலில்லா நிலமாக
கலங்குகிறேன்! வாடுகிறேன்!
    காதலில்லா உன்நினைவால்!

அருணா செல்வம்.

வியாழன், 18 டிசம்பர், 2014

காத்திருங்கள்.... காதலிக்கிறேன்!!!



    மாலை வேலை முடித்துவிட்டு ஐந்தரை மணியளவில் பேருந்துக்காகக் காத்திருந்த சங்கீதாவிற்கு வெய்யிலின் அனலால் ஏற்பட்ட கசகசப்பு எரிச்சலைத் தந்தது.
    அன்று முழுவதும் நெருப்பை அள்ளி வீசிய சூரியன் ஓரளவிற்கு இறங்கிவிட்டாலும் அனலை வாரிவிட்டே சென்றிருந்தது. கழுத்தில் ஏற்பட்ட கசகசப்பைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தவளை நோக்கி அந்த சிறுமி நான்காக மடித்த ஒரு காகிதத்தை நீட்டினாள்.
    “என்னம்மா இது...?“ சிறுமியிடம் கேட்டாள்.
     “தெரியாதுக்கா.... அந்த அண்ணன் தான் இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்“ என்றாள்.
    அவள் கைநீட்டிய திசையில் பார்த்தாள். இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க வாலிபன். சற்று மிடுக்கான தோற்றம். அவனுடைய குளிர் கண்ணாடியும், அவன் அமர்ந்திருந்த பைக்கும் அவனின் அழகை அதிகப்படுத்திக் காட்டின.
    “இந்தாங்கக்கா...“
     சிறுமிக்கு என்ன அவசரமோ....!!
     பக்கத்தில் பேருந்துக்காக அவளுடன் காத்திருந்த சிலர் அவளை ஒரு மாதிரியாகப் பார்ப்பது தெரிந்தது. சட்டென்று சிறுமியிடம் குனிந்து,
    “இந்தாம்மா... இதை அவரே வந்து என்னிடம் கொடுக்கச் சொல்லு“ என்றாள்.
    சிறுமி அங்கிருந்து நகர்ந்ததும் அவள் போக வேண்டிய பேருந்து வந்துவிட அங்கிருந்த அனைவரும் ஏறினார்கள் சங்கீதாவைத் தவிர.
     பேருந்து கிளம்பும் போது அங்கிருந்து கடைசியாக ஏறிய மூதாட்டியின் சொற்கள் காதில் விழுந்தது.
    பாத்தா நல்ல பொண்ணு மாதிரி தெரியுது. மனசைக் கட்டுப்படுத்தினா நல்லா இருக்கும்
    பேருந்து போய் விட்டது.
   
    எதிரில் இருந்த அவன், தன் வண்டியை நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து அவள் இருக்கும் இடத்தை நோக்கி வருவது தெரிந்தது. நடையில் ஒருவித உற்சாகம். அவளை மயக்கிவிட்டோம் என்ற நினைப்பா? அல்லது அவள் திட்டினாலும், ஓர் அறை கொடுத்து காரித் துப்பினாலும் பார்ப்பதற்கு அங்கே யாரும் இல்லை என்ற தைரியமா? அவளுக்குத் தெரியவில்லை.
     அருகில் வந்தவன் சிநேகிதமாகப் புன்னகைத்தான். அவள் சிரிக்கவில்லை. மாறாக முகத்தைக் கடுகடுப்பாக மாற்றிக் கொண்டு கேட்டாள்.
    “என்ன அது லட்டர்?“
    “நீங்களே படிச்சிப் பாருங்களேன்“ கடிதத்தை நீட்டினான்.
    “அது தான் எழுதின நீங்களே இருக்கிறீங்களே. என்ன எழுதி இருக்கிறீங்கன்னு சொல்லுங்க.“ என்றாள்.
    “அது வந்து....“ சொல்லத் தயங்கினான்.
    “லவ் லட்டரா...?“ அவளே கேட்டாள்.
     அவன் சற்று நேரம் கழித்து ஆமாம்என்பதற்கு அறிகுறியாகத் தலையாட்டினான். அவன் முகத்தில் தெரிந்த சாயல் தான் அசடு வழிதல் என்பதா...!!!
     “நீங்கள் என்னைக் காதலிக்கிறீங்களா?“ கேட்டாள்.
     இதற்கும் தலை அசைப்பு தான்.
     “சரி. காதலிச்சிக்கோங்க! அதுக்கு ஏன் லட்டர்?“
     இந்தப் பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை போலும். இனிமேல் பேசாமல் இருந்தால் நல்லதில்லை என்று நினைத்தானோ என்னவோ...
     “என்ன இப்படி சொல்லிட்டிங்க? காதல் என்றால் இரண்டு பேரும் மனம்விட்டு பேச வேண்டாமா?“
     “எதைப்பற்றி பேசனும்...?“
     “எல்லாத்தையும் பத்தி தான். நம் எதிர்காலத்தைப் பற்றிப் பேச எவ்வளவோ இருக்குது“
     “எதிர்காலத்தைப் பற்றித் தானே..... எனக்கு இப்பவே உங்களைக் காதலித்தால் எதிர்காலத்தில் ஏற்படும் முடிவு தெரிகிறதே...“ என்றாள் அலட்சியமாக.
     “என்ன தெரிஞ்சிக்கினீங்க?“
     “ஒரு கடிதத்தைக் கொடுக்கவே தயங்கி இன்னொருவருடைய உதவியை நாடுகிற நீங்கள் கடைசி வரைக்கும் எப்படி உறுதியாய் இருப்பீங்க? அது மட்டுமல்லை. காதல்ன்னு சொல்லிவிட்டு என்னை பார்க், பீச், சினிமான்னு கூப்பிடுவீங்க. நானும் உங்களுக்காக வருவேன். ஒரு நாளைக்கு அப்பா அம்மாவுக்குத் தெரியும். உங்கள் வீட்டுல வசதி குறைவான என்னைப் பெண்கேட்க சம்மதிக்க மாட்டாங்க. அப்படியே சம்மதிச்சாலும் ஒரு நாள் வந்து பார்த்துட்டு என் அப்பா போடுற பத்து பவுன் நகை பத்தாதுன்னு சொல்லிட்டு போவாங்க. நான் ஒருவனை காதலிச்சேன் என்பதற்காக வேற யாரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன் வர மாட்டாங்க. என்னால என் ரெண்டு தங்கையோட வாழ்க்கையும் பாழாகும். இதெல்லாம் எனக்கு அவசியம் தானா?“
     அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளை அமைதியாகப் பார்த்தான். அவள் சொன்னதில் உண்மை இருந்தது. வசதியான வீட்டில் பிறந்து கைநிறைய சம்பாதிக்கும் அவனுக்கு வசதியான வரன்கள் வரிசையில் இருந்தது உண்மை தான். ஆனால் அவனுக்குப் பிடித்ததென்னவோ அழகும் அடக்கமும் நிறைந்த இந்த சங்கீதாவைத் தான். இந்த சங்கீதா அவனுடைய இதயக் கோவிலில் தெய்வமாக அமர்ந்துவிட்டாள். அவளை விட மனமில்லாமல் கேட்டான்.
    “அப்படின்னா என்னை நீ காதலிக்க மாட்டியா? உன்னை நான் நிச்சயமா கைவிட மாட்டேன். இது சத்தியம்“ குரலில் கெஞ்சளின் சாயலும் அதே சமயம் சற்று உறுதியும் இருந்தது.
    அவனுடைய உறுதியைப் பார்த்துவிட்டு சொன்னாள்.
    “சரி காதலிக்கிறேன். ஆனால் இப்போ இல்லை. உங்க அம்மா அப்பா சம்மதத்தோட என்னைப் பெண் கேட்டு, என் அப்பா போடுற பத்துப் பவுனை ஏத்துக்கினு எனக்குத் தாலி காட்டுறீங்க பாருங்க... அந்த நொடியிலிருந்து உங்களை நான் காதலிப்பேன். அது வரையி நீங்கள் யாரோ. நான் யாரோ தான். உங்களை மட்டுமில்லை. வேற யாரையுமே காதலிக்க மாட்டேன்.“
    அவள் சொல்லி முடிக்கவும் அவள் செல்லும் பேருந்து வரவும் சரியாக இருக்க அவள் அதில் ஏறி கிளம்பி விட்டாள். அவளைச் சுமர்ந்து சென்ற வண்டி கண்ணிலிருந்து மறைந்தாலும் அவள் சொன்ன சொற்கள் அவனின் காதினுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
    அவனின் காதலை அவள் மறுக்கவில்லை. அதே சமயம் அவள் ஏற்கவும் இல்லை. காத்திருக்கச் சொல்லியிருக்கிறாள். அடுத்தவருக்குத் தெரியாமல் பயந்து பயந்து காதலிக்க வேண்டாம். சுதந்திரமாகவும் உரிமையுடனும் காதலிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.
    அவனுக்கு அவள் மேலிருந்த அன்பு காதல் மேலும் அதிகமாகியது.
    காத்திருப்பேன்.... இவளது காதல் கிடைக்கும் வரையில் விடாமல் காத்திருப்பேன்... என்ற உறுதியை மனத்தில் எடுத்ததும் மனநிறைவுடன் வீடு நோக்கிச் சென்றான்.

அருணா செல்வம்
01.04.1998


(இந்தக் கதை எந்த இதழில் வெளிவந்தது என்ற ஞாபகம் இல்லை)

புதன், 19 நவம்பர், 2014

அவன் காதல்தான் என்ன?



கணைதொடுத்த பார்வையாலே கண்ணை நோக்க
    கதிகலங்கி போய்நின்றேன்! காந்தக் கண்ணால்
எனைஎடுத்துச் சென்றதாலே என்னை நானே
    எங்கென்று தேடுகின்றேன்! அவனைத் தேடி
மனையடுத்து நின்றதாலே தந்தை திட்ட
    மனசின்றி வீடுசென்றேன்! ஆசை நெஞ்சம்
அணையொடுங்கும் நீரைப்போல் அடங்கி விட்டால்
    அவன்காதல் என்னவென்று அறிந்து கொள்வேன்!

அருணா செல்வம்
19.11.2014

    

வெள்ளி, 18 ஜூலை, 2014

இதயத்தைப் பிச்சை இடு!



உறக்கம் கலைய
உணர்வு வந்தது.
உடம்பு உள்ளது
உயிரும் உள்ளது.

மூச்சி என்பது
எங்கே தொலைந்தது?
இதயம் என்பதும்
எங்கே போனது?

ஓ... அதை நீ
என்றோ ஒருநாள்
எடுத்துச் சென்றாயே...
இன்றும் என்னிடம்
தர வில்லையே...!!

தெரிந்தே அதனைக்
கொண்டு சென்றாயோ...
உனக்கே தெரியாமல்
உடன்கொண்டு சென்றாயோ...?

பத்திரம் போல்
பத்திரமாக வைத்தாயா?
பார்சல் பேப்பெரென்று
தூக்கி எறிந்தாயா?

பார்க்க நினைத்துப்
பார்த்து மகிழ்வாயா?
பார்க்காதிருந்து
தவிக்க வைப்பாயா?

நினைத்த போது
நெகிழ்ந்து மகிழ்வாயா?
நினைக்காதிருந்து
அதனை மறந்தாயா?

எனக்குத் தெரியாமல்
என் இதயத்தைத்
திருடி விட்டு
என்னையே முடம்
என்பது சரியா?

இதயம் இழந்த
முடம் தான் நான்.
என் இதயத்தை
உன்னிடத்தில்
பிச்சைக் கேட்கிறேன்.

கொடுத்தால் தான்
உயிர் வாழ்வேன்.
கொடுத்து விடு
உன் இதயத்தை!!



அருணா செல்வம்.

வியாழன், 17 ஜூலை, 2014

வாட்டுதே உன் நினைப்பு!!


 கொல்லைப் புறத்து மரங்களிலே
      கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க,
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
      முத்துப் பல்லை ஒத்திருக்க,
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
      காற்றில் இராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
      சொக்கிப் போனேன் இவைகண்டு!!

காற்றில் வந்த நறுமணத்தில்
      காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
      சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
      இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டீ என்மேலே
      சின்னக் கிளியே செங்கனியே!!

வீட்டில் பாயில் படுத்தாலும்
      விடியக் கண்கள் மூடவில்லை!
காட்டிக் கொடுக்கும் கண்ணிரண்டும்
      காதல் தவிப்பைத் தாயிடத்தில்!
கூட்டிக் கேட்டால் என்சொல்வேன்
      கொடுத்த ஏக்கத் தவிப்பைநான்!
வாட்டி வதைக்கும் வடிவழகே
      வாடி எந்தன் பக்கத்தில்!!

அருணா செல்வம்

ஞாயிறு, 13 ஜூலை, 2014

இது தான் காதலோ!!


பெண்ணைப் புரியாப் புதிரென்று
    பெரியோர் சொல்லைப் படித்திருந்தும்
மண்ணில் இருக்கும் தேவதையாய்
    மங்கை உன்னைக் கண்டவுடன்
உண்மை கருத்தை உடன்மறந்தேன்!
    உயிரில் உன்னைக் கலந்துவிட்டேன்!
கண்ணில் மறைந்து நீயிருந்தும்
    கருத்தாய்க் கவியில் பார்த்திடுவேன்!

கண்ணன் நிறத்தில் மையூற்றி
    காதல் கவியாய் வடித்திடுவேன்!
வண்ணம் அற்ற காகிதத்தில்
    வார்த்தை கோர்த்துத் துடித்திடுவேன்!
எண்ணம் எழுந்து பறந்திடவே
    எழுதில் சிறகை விரித்திடுவேன்!
விண்ணில் கலக்கும் நாள்வரையில்
    விரும்பி மனத்துள் சுமந்திடுவேன்!

என்னில் உன்னை வைத்திருந்தே
    எழுதும் ஒவ்வோர் வார்த்தைகளும்
பொன்னில் நனைத்த பூக்களைப்போல்
    பொலிர்ந்தே அழகாய்ச் சொலிக்கிறதே!
உன்னில் நானோ இல்லையென்ற
    உண்மை நன்றாய்த் தெரிந்திருந்தும்
மின்னும் வானில் விண்மீனாய்
    என்னுள் இருந்து மின்னுவதேன்?


அருணா செல்வம்
13.07.2014

    

வெள்ளி, 13 ஜூன், 2014

பேதையால் “பேக்கு“ ஆனேன்!!



பேதைப்பெண் என்றுன்னை நான்அ ழைத்தால்
    பேக்கென்று எனைச்சொல்வார்! என்னில் வாழும்
மேதைப்பெண் நீயடி!தேன் விழியால் பேசிப்
    போதைக்கண் தள்ளுகிறாய்! சூடித் தந்த
கோதைப்பெண் கொஞ்சுதமிழ் தீட்டி, மாய
    கோகுலனைக் குடிகொண்டாள்! மிதிலைச் செல்வி
சீதைப்பெண் பார்வையாலே இராமன் சிக்கி
    வாதைக்கண் பட்டதுபோல் வாடு கின்றேன்!


அருணா செல்வம்

ஞாயிறு, 25 மே, 2014

கண்மூடிக் கனவு கண்டேன்!!

   
கண்மூடிக் கனவு கண்டேன் அதில்
காதலன் உன்வரவு கண்டேன்!

விண்ணாடும் நினைவுகளை அதில்
விளைகின்ற நிறைவு கொண்டேன்!

தன்னந் தனிமையில் நானிருந்தேன்
தவித்திடும் ஏக்கமாய்ப் பார்த்திருந்தான்!
கன்னம் சிவந்திட நான்குனிந்தேன்
களித்திடும் ஆசையில் நெருங்கிவந்தான்!  (கண்மூடி)

மாலையில் விரிந்திட்ட ரோஜாப்பூ
மயக்கத்தைத் தந்ததே தேன்கலந்து!
சோலையில் சிரித்திட்ட ஊதாப்பூ
சுயத்தினை மறந்ததே எனைப்பார்த்து!    (கண்மூடி)

தழுவிடும் தென்றலின் தொடுசுகங்கள்
தயக்கமாய் நகருமா குலம்பார்த்து!
நழுவிடும் போதினில் படும்கரங்கள்
நயத்தினைப் பகரவா நிலம்பார்த்து!      (கண்மூடி)
  
அருணா செல்வம்

26.05.2014