வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி வாழ்த்து !





வண்ண வண்ணப் புத்தாடை !
    வாசல் மின்னும் கோலங்கள் !
கண்ணைப் பறிக்கும் மத்தாப்பு !
    கருத்தைக் கவரும் புஸ்வானம் !
விண்ணில் வெடிக்கும் பட்டாசு !
    விஞ்சி சேர்ந்த பலகாரம் !
எண்ணம் மகிழும் இந்நாளில்
    இனிதாய் வாழ வாழ்த்துகிறேன் !

பாவலர் அருணா செல்வம்
29.10.2016

செவ்வாய், 25 அக்டோபர், 2016

அவளழகு !!





மெல்லிடை இல்லையென்னும் ! மெல்லிதழ் ஆமென்னும் !
சொல்லிடை வைப்பாள் சுவையுள்ளம் ! – நல்லதையே
நாளும் நினைத்திடும் நங்கை ! அவள்சிரிப்பால்
நீளும்என் ஆயுள் நிறைந்து !
  
செல்லச் சிரிப்பும், சிணுங்கும் மொழியழகும்
வெல்லச் சுவையையும் விஞ்சுமந்தப் – பொல்லாத
பார்வைக் கணையென்னைப் பாடாய்ப் படுத்திடினும்
சோர்வை அகற்றும் சுடர்ந்து !
  
தண்ணீர்க் குடமெடுத்துத் தாமரை வந்துநின்றால்
விண்ணில் இருந்துவந்த வெண்ணிலா – மண்ணில்
இறங்கியதோ என்றே இமைக்காது பார்ப்பார் !
உறங்காது கண்கள் உணர்ந்து !

மைவரைந்த கண்கள் மதுவூட்டும் ! மங்கையவள்
கைவரையும் ! என்நினைவால் கால்வரையும் ! – தைவரும்நாள்
பார்த்துத் தவமிருக்கும் ! பாவைமனம் எண்ணத்தைக்
கோர்த்திடும் நெஞ்சில் குவித்து !

மாங்கொழுந்து மேனி ! மனமயக்கும் செந்நிறம் !
வாங்கிவந்த வாழ்வின் வரமழகு ! – தேங்கி
ஒளிந்திருக்கும் சங்கின் ஒளிப்போல மேனி
பளிங்கையும் விஞ்சும் பழித்து !

பால்போன்ற பற்கள் ! பளிங்கை உடைத்திடுத்து
நூல்பிடித்த நல்வரிசை ! நோயற்ற – ஆல்விழுதோ !
சிப்பி கொடுக்காத செம்மையான முத்துதானோ !
ஒப்பேதும் இல்லா ஒழுங்கு !

செவ்வரளிப் பூவிதழோ? செங்கமலம் வண்ணமோ?
கொவ்வை கனிநிறமோ? கோதையவள் – செவ்விதழை
எவ்வண்ணம் கொண்டு எழுதுவேன்? நானெழுதும்
இவ்வண்ணம் கூட இகழ்வு!

சாந்தம்தான் உள்ளதோ  சார்ந்திடா ஞானிபோல்!
காந்தம்தான் உள்ளதோ கண்களில்? – நீந்தியோடும்
மீன்வடிவோ ! மாவிலையோ ! மென்னழகு மான்விழியே!
தேன்குடிக்கும் வண்டுதான் தேர்வு !

சிற்பி செதுக்கிதான் செய்தானா மூக்கழகை !
கற்சிலையும் நாணிக் கவிழ்ந்துவிடும் ! – பொற்பதமே
பச்சைக் கிளியுமுனைப் பார்த்து மயங்கிடும்
இச்சைமனம் ஏங்கிடுதே இங்கு !
  
பாலாடைக் கன்னங்கள் ! பஞ்சின் மிருதெனத்
தாலாட்டும் நெஞ்சில் தவழ்ந்தது ! – சேலாட்டம்
காட்டிடும் கண்ணருகில் காமன் வரைந்தநல்
தோட்டமென ஈர்க்கும் தொடர்ந்து !

பாவலர் அருணா செல்வம்

25.10.2016

புதன், 19 அக்டோபர், 2016

விட்டு விலகுமா கண்ணா ?





கொட்டிக் கிடக்குது கனிகள் – அதை
எட்டிப் பார்க்குது விழிகள் – உயிர்
தட்டிப் பிடிக்குது எளிதாய் – என்னைக்
கட்டிப் போடுது முடிவாய் ! – உன்

சுட்டுவிழி எனைத் தாக்க – என்
பட்டுவுடல் மெல்ல வேர்க்க – தேன்
சிட்டென மனம் பறக்க – நான்
தட்டுத்தடு மாறு கின்றேன் ! – அந்த

நட்டுநடு மென்னிரவில் – மின்னும்
வட்டநில வினைப்போல – கை
தொட்டு வரைந்து விட்ட – நெற்றிப்
பொட்டு இழுக்குது கண்ணே ! – இடும்

மெட்டுதனைக் கேட்டே – விழி
மொட்டென ஆனது தானாய் – நீ
கட்டினப் பாட்டைக் கேட்ட - மனம்
விட்டு விலகுமா கண்ணா ?

பாவலர் அருணா செல்வம் 
19.10.2016

வெள்ளி, 7 அக்டோபர், 2016

இராவணன் பேசுகிறான்!!





அவை வணக்கம் !

தங்கத் தமிழை அளித்திட்ட
    தமிழின் தலைவா முதல்வணக்கம் !
எங்கும் மணந்து கமழ்கின்ற
    எழிலே தமிழே என்வணக்கம் !
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
    சான்றோர் தமக்கும் தலைவருக்கும்
அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும்
    அவைக்கும் என்றன் நல்வணக்கம் !

குரு வணக்கம் !

ஆசும் மதுரமும் ஆனந்த சித்திரமும்
பேசும் பெரும்வித் தாரமும் – வீசுபுகழ்ப்
பாட்டரசே ! நான்குகவி பாணரே ! என்குருவே !
சூட்டுகிறேன் பாக்கள் சுடர்ந்து !

கம்பனைக் கண்டு கதைக்கின்றான்!


இராவணன் !!

கம்பன் கதையைக் கணித்திட்டான் !
    கதையைக் கேட்டோர் களித்திட்டார் !
இம்மண் இருக்கும் வரைபேசும்
    இன்பத் தமிழின் புகழ்வீசும் !
எம்மான் என்றார் இராமனையே !
    இறைவி என்றார் சீதையையே !
செம்பொன் அருளைப் பெற்றிடவே
    செய்த நுாலைப் போற்றுகவே !

கற்றோர் மனத்தின் மகிழ்நிலையைக்
    கவியில் கூறல் எளிதன்று!
நற்றேன் தமிழின் அழகினையும்
    நவின்ற விருத்த எழிலினையும்
சொற்கள் அமைத்த முறையினையும்
    சுவையாய்ச் சேர்த்த உவமையையும்
பெற்றோர் வியந்தார் ! தமிழுக்குப்
    பெருமை யென்றே தினம்புகழ்ந்தார்!

இன்பம் பொங்க அமர்ந்திருந்தார்
    எங்கள் கம்ப கவியாழ்வார்!
நன்மை எதுவோ அதைமுதலாய்
    நலங்கள் சேர நல்கியவர்!
துன்பம் கூடச் சிலவிடத்தில்
    சுகத்தைத் தரவே கவிசெய்தார்!
என்றும் இன்பம் நீடிக்கும்
   என்றே நினைத்தே இருக்கையிலே!

கண்முன் ஒருவன் வந்துநின்றான்!
    கண்கள் கசக்கிப் பார்க்கையிலே
உண்மை வீரம் பொங்குகின்ற
    ஒளிரும் உடலைப் பெற்றவனும்
பெண்மேல் ஆசை உற்றவனும்
    பேதை போன்று மாண்டவனும்
விண்ணோர் பணிந்த வேங்கையெனும்
    இலங்கை வேந்தன் எதிர்நின்றான்!

அவனைக் கண்ட கவிகம்பர்
    அதிர்ந்து எழுந்து நின்றிட்டார்!
தவங்கள் செய்த முனிவரிடம்
    தலையைத் தாழ்த்தி வணங்குதல்போல்
புவனம் வென்ற இராவணனை
    போற்றி வணங்கி கவிசொன்னார்!
அவனும் கீழாய்த் தாள்பணிந்தான்!
    அருமைக் கம்பர் மனம்நெகிழ்ந்தார்!

பேச அமர்வாய் இராவணனே!
   பெருமை இலங்கை காவலனே!
வாசம் போன மலர்நோக்கி
    வண்டு வருதல் கிடையாது!
வேசம் களைத்து விட்டபின்பு
    வீர வசனம் கூடாது!
நேசம் கொண்டு வந்துள்ளாய்
    நெஞ்சின் வருத்தம் சொல்என்றார்!

விருத்தப் பாவால் விருந்துவைத்தோன்
    வெந்த சோற்றின் பதம்பார்த்தான்!
பருத்த உடலைக் கொண்டோனோ
    ”படித்தோர் போற்றும் பாவலனே!
திருவின் புகழை எனக்களித்தாய்!
    திறமை அனைத்தும் சீர்சேர்த்தாய்!
அருமை பெருமை அனைத்தையுமே
    அள்ளி கொட்டிப் புகழ்சேர்த்தாய்!

சிவனும் திருமால் பிரம்மனையும்
    சிறந்த உலகம் மூன்றினையும்
நவகோல், ஐந்து சக்தியையும்
    நலிவாய் என்முன் பணியவைத்தாய்!
தவத்தால் பெற்ற வரத்தினையும்
    தருக்குச் சேரக் கொடுத்துவிட்டாய்!
எவரும் இணையாய் இலையென்றே
    எழுத்தில் கூட்டிக் கதைவடித்தாய்!

என்னை வெல்ல எவருமில்லை
    என்றே இருந்தேன் இருமாப்பாய்!
பொன்மான் சீதை அவளிடத்தில்
    பிணைந்த காதல் உண்மையன்றோ!
நன்மை தீமை அறியாமல்
    நயந்து வருதல் காதலன்றோ!
இன்பம் பொங்கும் உலகத்தில்
    இதனைப் பிழையாய்க் கொள்வீரோ?

விண்ணின் தேவர் வணங்குமென்னை
    வீழ்த்தி நின்றான் ஓர்மனிதன்!
பெண்மேல் கொண்ட காதலினால்
    பெருமை போமோ சொல்புலவா?“
கண்கள் சிவக்க இராவணனோ
    கம்ப னிடத்தில் கேட்டுநின்றான்!
பண்பா டென்னும் நன்னெறியைப்
    பண்பாய்ச் சொன்னார் திருக்கம்பர்!

”இருவர் நெஞ்சம் கலப்பதையே
    இன்பம் பொங்கும் காதலென்பர் !
ஒருவர் மட்டும் நினைத்திருந்தால்
    ஒன்றும் அதிலே பழியில்லை!
அருமைக் கணவன் நெஞ்சிருக்க
    அவளை வருத்தல் நெறியில்லை!
கருமை நெஞ்சாய் நீயிருந்தாய்
    கற்பின் கனலில் அழிவுற்றாய்!

எந்தப் புகழைக் கொண்டாலும்
    எளிதாய் அழிக்கும் காமப்பேய்!
இந்த உண்மை சொல்வதற்கே
    இராமக் காதை வந்ததுவாம்!
சிந்தை கலங்கா இராவணனே
    அந்தக் கதையில் மாண்டாலும்
அந்தம் இருக்கும் நாள்வரையில்
    அழியா திருக்கும் உன்பெயரே!

என்றே வாழ்த்தி விடைதந்தார்
    இன்பத் தமிழின் பெரும்புவலர்!
“அன்றே இதனை அறிந்திருந்தால்
    ஆசை தீயை அணைத்திருப்பேன்!
இன்றே அறிந்தேன் உண்மையினை!
    என்றன் இறப்பும் உலகிற்கு
நன்றே“ என்று மனமகிழ்ந்தான்
    நம்மின் இலங்கை வேந்தனவன்!

பாவலர் அருணா செல்வம்
17.09.2016

பிரான்ஸ் கம்பன் விழா (25.09.2016) கவியரங்க கவிதை.