செவ்வாய், 15 ஜனவரி, 2019

தொகை உருவகம் - 1

    பாடலில் “ஆகிய“ என்னும் மாட்டேற்றுச் சொல் தொகுத்து வருவது “தொகை உருவகம்“ ஆகும். மாட்டேற்றுச் சொல் என்பது பொருளில் உவமையை ஏற்றும் சொல் ஆகும்.
கண்வண்டு – இது கண்ணாகிய வண்டு என விரியாமல் ஆகிய என்ற சொல் மறைந்து வந்துள்ளது. இதில் கண் என்பது பொருள். வண்டு என்பது உவமை. பொருளில் உவமையாகிய வண்டை ஏற்றிச் சொல்லும் போது கண்ணாகிய வண்டு என்று விரிந்து வரும். அப்படி விரிந்து வராமல் தொகுத்து வருவது “தொகை உருவகம்“ ஆகும்.

உ. ம்
கண்கயல், கூந்தல் கருமேகம், கால்வாழைத்
தண்டு, கரம்செண்டு தாங்கிடும் – பெண்ணவளின்
மேனிச் சிலையென மேம்படுமென் வாழ்நெஞ்சம்
தேனின் சுவைத்தளும்பும் தேர்ந்து!

பொருள் – கண்ணாகிய கயலும், கூந்தலாகிய கருமேகமும், காலாகிய வாழைத்தண்டும், கரமாகிய பூச்செண்டும். தாங்கிக் கொண்டிருக்கும் பெண்ணவளின் உடல் செதுக்கி வைத்த சிலையென, உயர்வுகளை உடையவளுடன் வாழும் என் நெஞ்சம் தேர்ந்த தேனின் சுவையால் தளும்பிக் கொண்டிருக்கும்.

   பாடலில் கண்கயல், கூந்தல் கருமேகம், கால் வாழைத்தண்டு, கரம் செண்டு, மேனிச்சிலை… என்ற இடங்களில் “ஆகிய“ என்ற சொல் மறைந்து வந்துள்ளதால் இது “தொகை உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக