திங்கள், 31 மார்ச், 2014

வேலி இல்லாப் பயிர்!!

   தான் ஊரில் இல்லாத இந்த மூன்று வருடத்தில் ஊரில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் அம்மா சொல்ல கௌதம் கேட்டபடியே சாப்பிட்டான்.
   அவன் துபாய் போய் இந்த மூன்று வருடத்தில் எதுவும் பெரியதாக மாறிடவில்லை. என்றாலும், மூன்றாவது தெருவில் பசு கன்று போட்டதிலிருந்து இன்று காலையில் பால்காரனுக்குப் பணம் கொடுத்தது வரையில் அம்மா சொன்னதைக் கேட்க சுவையாகத் தான் இருந்தது.
   இவ்வளவும் சொன்ன அம்மா, விபத்திற்குள்ளாகி இறந்து போன லாரி டிரைவர் நீலவண்ணனைப் பற்றி எதுவும் சொல்லாதது அதிசயமாக இருந்தது.
   அவனே கேட்டான். “அம்மா நம்ம லாரிக்கார அண்ணன் செத்துட்டாரே... இப்ப அந்த அக்கா புள்ளைங்க எல்லாம் எப்படிம்மா இருக்கிறாங்க...?“
   “ம்ம்ம்... இருக்கிறாங்க. அவன் செத்து தோ மூனு வருஷமாச்சி. இன்னும் கட்டுக்குலையாத மேனியாத்தான் திரியிறா.“ சொல்லும் போதே ஓர் எகத்தாளம்.
   “ஏம்மா.. என்னாச்சி...?“ அவன் கேட்க... அவனை முறைத்துவிட்டு, “அதெல்லாம் ஒனக்கெதுக்கு...? நீ அந்த பக்கமெல்லாம் போவாத.“ மறுபேச்சி பேசவிடாமல் நகர்ந்து விட்டாள் அம்மா.
   கௌதம் நண்பர்களுடன் இருந்த பொழுது ஒரு நாள் அந்த அக்காளைப் பற்றிக் கேட்டான். “ஆமாண்ட... ஊருல அவங்களைப் பத்தி ஒரு மாதிரியாத் தான் பேசுறாங்க. ராத்திரியில யாரோ ஒரு ஆம்பளயோட செருப்பு வாசல்ல இருக்குதாம். நைட்டுல யாரோ ஆம்பள வந்துட்டு போறானாம்....“ என்றான் ஒரு நண்பன்.
   கௌதமனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. லாரிக்கார அண்ணன் இருக்கும் பொழுது அந்த வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். துறுதுறுவென்று இரண்டு பிள்ளைகள். அந்த அக்கா நல்ல அழகி. கலகலப்பான பேர்வழி. அவங்களா இப்படி....? மனம் கனத்தது.

   ஒரு மாலைப்பொழுது. நண்பர்களிடம் பேசிவிட்டு வரும் பொழுது நேர் எதிரில் அந்த அக்கா. அதே கட்டழகு குறையாத உடல். அதே புன்சிரிப்பான முகம். பார்த்தான். பார்த்த்தும் பார்க்காதது போல் தலையைக் குனிந்துக்கொண்டான். “என்னப்பா கௌதம்... எப்படி இருக்கிற?“ அவளாகவே கேட்டாள். இதற்கு மேல் பதில் சொல்லாமல் நகர முடியாது.
   “நல்லா இருக்கிறேன்க்கா.... நானே ஊருலேர்ந்து வந்ததும் உங்களை வந்து பாக்கனும்ன்னு நெனச்சேன். ஆனால் முடியலை.“ என்றான் பொய்யாக.
   “பரவாயில்லப்பா. உன்னை மாதிரி ஆம்பளைப் புள்ளைங்க என் வீட்டுக்கு வராமல் இருக்கிறது தான் எனக்கும் நல்லது.“ சோகமாக ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு... “ஆமா... அம்மா எப்படி இருக்கிறாங்க?“ கேட்டாள்.
   “ம்... நல்லா இருக்கிறாங்கக்கா.“
   “நல்லதுப்பா. நீயும் வெளி நாடு போய் சம்பாதிக்கிறே. அம்மாவ நல்லா பாத்துக்கோ. பாவம் அவங்களும் சின்ன வயசுலே தாலி இழந்தவங்க. இந்த வயசுல கணவனை இழந்திட்டா சமுதாயத்துல எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கனும் தெரியுமா? அதனால கிடைக்கிற வலி... இப்போ தான் எனக்குத் தெரியுது. அவங்களும் இந்த கஷ்டத்தை எல்லாம் தாண்டிதான் வந்திருப்பாங்க. நல்லா பாத்துக்கோப்பா.“ புன்சிரிப்புடன் நகர்ந்தாள்.
   இவ்வளவு தெளிவாகப் பேசுகிறார்கள். இவர்கள் போய் அப்படியா....? கௌதம் யோசனையுடன் நடந்தான்.
   விறுவிறுவென்று நடந்தவள் என்ன நினைத்தாளோ... திரும்பி அவன் அருகில் வந்து நின்று, “கௌதம்... ஊருல எல்லாரும் நினைக்கிற படி நீயும் என்னை தப்பா நினைச்சிடாதே. ஊருல எல்லாருமே அவர் இருந்தப்போ நல்லாதான் பழகினாங்க. ஆனால் இப்போ காவலில்லாத பயிர்தானே என்ற எண்ணத்துடன் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதனால அவரோட செருப்ப நான் ராத்திரியில வாசல்ல வச்சிட்டு படுக்கிறேன். எனக்கு அவரோட செருப்பும் பாது காவலாக இருக்கிறது. இதுவும் கொஞ்ச நாளைக்கு வெளியில விசயம் தெரியிற வரைக்கும் தான். அப்புறம்.... வேற வழி இல்லாமா போயிடும். கௌதம்... நீயா இந்த விசயத்தை யார்கிட்டேயும் சொல்லிடாதே. நீ என் சொந்த தம்பி மாதிரி என்றதாலத்தான் சொன்னேன். வர்ரேன்ப்பா....“ அவள் போய்விட்டாள்.
   அவள் வார்த்தைகள்... தன்னையும் அவளைத் தப்பாகப் பேசிய எல்லோரையும் அதே செருப்பால் அடித்தது போல் உணர்ந்தான் கௌதம்.

அருணா செல்வம்.
31.03.2014

புதன், 26 மார்ச், 2014

தூது சொல்ல யாரை அனுப்புவது?  
   “என்னம்மா வாணி... கையைப் பிசைந்து கொண்டு யாரைத் தேடுற..?“ மாமா கேட்டபடியே வந்தார்.
   “என் தோழியைத் தான் மாமா“
   “என்ன இந்த நேரத்துல....? அப்படி என்ன அவசரம்?“
   “வந்து மாமா....“
   “சொல்லும்மா.... எங்கிட்ட உனக்கென்ன தயக்கம்?“
   “வந்து மாமா.... அம்மா கல்யாணத்திற்கு வரன் பார்க்கிறார்கள். இந்த விசயத்தை நான் உடனே அவரிடம் தெரிவிக்கனும். அதுக்காகத் தான் அவளைத் தேடுறேன்.“ தயக்கத்துடன் சொன்னாள் வாணி.
   “அது சரிபடாது வாணி“ யோசனையுடன் சொன்னார்.
   “ஏன் மாமா...?“
   “தாதி தூது தீது“ என்று காலமேகப் புலவர் ஒரு பாட்டாகவே சொல்லி இருக்கிறார். அதனால நீயே உன் காதலனின் பெயரைச் சொல்லிவிடு“ என்றார்.
    சற்று யோசித்த வாணி.... “அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் காளமேகப் புலவர்?“ கேட்டாள்.
   “இந்த நேரத்திலும் அதைக் கேட்க உனக்கு ஆசை வருதா...?“
   “எந்த நேரமாக இருந்தால் என்ன மாமா? நமக்கு வழி காட்டத்தானே நம் முன்னோர்கள் பாடி சென்று இருக்கிறார்கள். சொல்லுங்கள் மாமா. நான் கேட்கிறேன்.“ என்றாள் ஆவலாய்.
   மாமா சொல்லத் துவங்கினார்.
   “இது ஒரு தகர வருக்க வெண்பாவாகும்.“
   “தகர வர்க்கமா...? அப்படி என்றால்...?“
   “தகர வர்க்கம்“ என்றால் வெறும் த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ“ என்ற எழுத்துக்கள் மட்டும் தான்.“
   இந்தப் பாடல் தூது போகச் சொல்லி யாரை அனுப்புவது என்ற கேள்விக்கு பதிலாக அமைத்த காளமேகத்தின் பாடல்.

பாடலைக் கேள்.

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூத்தே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி.

   “இது தான் பாட்டு. உனக்குப் புரிஞ்சுதா...?“
   “இல்லை மாமா. எனக்குக் கொஞ்சம் கூட புரியலை. நிறைய தூது என்ற வார்த்தைகள் தான் காதுல ஒலித்தது. நீங்களே பொருள் சொல்லி விடுங்கள்“ என்றாள் வாணி.
   “இந்தப் பாடல் “வானம்பாடி“ என்ற திரைப்படத்தில் வரும். பொருளைச் சொல்கிறேன் கேள்“

சொல்லத் துவங்கினார்.

தாதி தூதோ தீது – அடிமைப் பெண்கள் சென்று சொல்லும் தூதோ பயன்படாது. (தாதி என்றால் அடிமைப்பெண்)

தத்தை தூது ஓதாது – கிளியோ சரியாகப் போய் தூது உரைக்காது. (தத்தை என்றால் கிளி)

தூதி தூது ஒத்தித்த தூததே – தோழியின் தூதானது நாளைக் கடத்திக் கொண்டே போகும் தூதாய் இருக்கும்.

தாதொத்த துத்தி தத்தாதே – பூந்தாதினைப் போன்ற தேமல்கள் என்மேல் படர்ந்து மிகாது இருக்க.. (தாது – பூக்களின் உள் இருக்கும் மகரந்தம்)

துதித்துத்தே தொத்தீது – தெய்வத்தைத் துதித்துத் தொடர்ந்தாலும் பயனற்றதாகும். –அதனால்...

தித்தித்த தோதித் திதி – எனக்கு இனிமையான என் காதலனின் பெயரை நானே ஓதுவேன்.

   அதாவது.... அடிமைப்பெண்களின் தூது பயன்படாது. கிளியை அனுப்பினால் அது சரியாக உரைக்காது. தோழியை அனுப்பினால் அவள் பிறருக்கு பயந்து நாளைக் கடத்தவாள். தெய்வத்தைத் துதித்து  வழிபட்டாலும் இந்த நேரத்தில் பயனற்றதாகும். அதனால் உன் கவலைக்கு வழி நீயே உன் காதலனின் பெயரை உரைப்பதாகும். இது தான் வாணி இதன் பொருள்.“ என்றார் மாமா.
   தன் மாமாவை நன்றியுடன் பார்த்த வாணி, “புரிஞ்சுது மாமா. நானே அவரின் பெயரைச் சொல்லிவிடுகிறேன்“ என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.


அருணா செல்வம்.
26.03.2014

செவ்வாய், 25 மார்ச், 2014

மழைக்கு நீ ஒதுங்காதே!!

மழைக்குப் பயந்து நீ
ஒதுங்காதே!
பாய்ந்து வரும்
கார்மேகக் கூட்டம்
உனைக் காணாது
பறந்தோடும்!

உன் மீது
பட்டு உடைந்த
மழைத்துளிகள்
நினைத்து விடும்...
மறுபடியும்
மழையாகவே
பிறக்க வேண்மென்று!


மழைக்காக
நீ ஒதுங்கிச்
சென்ற இடத்தின் ஈரம்
காய்ந்து விடும்!
காட்சி
என்றென்றும்
காயாமல்
இனித்திருக்கும்
என் நெஞ்சின் ஓரம்!

அருணா செல்வம்.

திங்கள், 24 மார்ச், 2014

இசைப்பாட்டு! (பாடிப் பாருங்கள்)
சிந்து பாடுவேனோ?


            (எடுப்பு)

சிந்து பாடு வேனோ உடல்
சிலிர்க்கப் பாடு வேனோ                      (சிந்து)

            (தொடுப்பு)

சந்தம் நிறைகிற சதிராடும் தமிழால்
சாதனை புரிகிற செழித்திடும் மொழியால்      (சிந்து)

            (முடிப்பு)

அமைதியாய் அமர்ந்திடும் பாவலர் நெஞ்சில்
அரவரம் புரிந்திடும் காதலர் நெஞ்சில்
குரல்வளம் கொடுத்திடும் பாடகர் நெஞ்சில்
கொஞ்சிடக் குளிர்ந்திடும் என்னவர் நெஞ்சில்   (சிந்து)


அருணா செல்வம்
24.03.2014