19 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
19 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

பகன்றை மலர் !

 


அகன்ற இலையுடன் ஆழ்ந்தவெண்மை வண்ணப்
பகன்றை மலரும் பனியில்! - முகர்ந்திடக்
கள்மணம் கொண்டது! காடுகளில் பூத்திடும்
உள்ளநிறை வண்ணமட்டும் உண்டு!
.
பாவலர் அருணா செல்வம்
04.02.2022

புதன், 9 ஜனவரி, 2019

அபூத உவமை! (இல்பொருள் உவமை) - 19





    பாடலில் முன்பு இல்லாதவைகளை அல்லது எல்லாம் சேர்ந்த ஒன்றைப்  பொருளுக்கு உவமையாக உரைப்பதுஅபூத உவமைஎனப்படும்.
(விகார உவமையில் ஒரு பொருளில் இருந்து ஒன்றை மட்டும் எடுத்து உவமிப்பது. இது ஒரு பொருள் அன்றி அதுபோலப் பல பொருள்களையும் சேர்த்து உவமிப்பது)

உ. ம்
நீ…..காட்டும் அன்பு, நிறையுலக நல்லோரின்
நாகாட்டும் இன்பத்தை நல்குதடி! – வாகாட்டு!
தேன்மொழி உன்னைப்போல் தென்னாட்டில் யாருண்டு?
ஈன்றவள்போல் சொல்வாய் இருந்து!

பொருள்நீ என்னிடம் காட்டுகின்ற அன்பானது நிறைவான உலகத்தில் உள்ள நல்லவர்களின் நாவால் சொல்லும் நன்மையைப் போல் இன்பத்தை நல்கிறதடி. தேனைப்போன்ற மொழியை உடைய உன்னைப் போன்றவர் தென்னகத்தில் யார் இருக்கிறார்கள் ? நீயே வந்து எனக்குக் காட்டிவிடு. என்னை ஈன்ற என் அன்னையைப் போல் இருந்து பதிலைச் சொல். உன்னைப்போல உலகில் அன்பு செய்ய யாரும் இல்லை என்பதாம்.
    உலகத்தில் உள்ள ஒருத்தரை மட்டும் அவளின் அன்புக்கு ஈடாக சொல்லாமல் உலகத்தில் உள்ள நல்ல மாந்தர்கள் அனைவரின் வாய் சொல்லையும் சேர்த்துச் சொல்வதால் இது அபுத உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019