(சைவம் மட்டும் உண்பவர்கள் தயவுசெய்து படத்தைப் பார்க்காமல் பதிவை மட்டும் சுவையுங்கள். நன்றி)
நட்புறவுகளுக்கு வணக்கம்.
என்
ஆசிரியர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் ஒருநாள் எண்சீர் விருத்தத்தின் இலக்கணத்தைத்
தொலைபேசியில் சொல்லிக் கொடுத்துவிட்டு, “இந்த இலக்கணப்படி நாளை ஒரு பாடலை எழுதி (கணிணியில்)
அனுப்பிவிடு“ என்றார்.
ஆனால் நான்
எழுத மறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அவரே என்னைத் தொலைபேசியில்
அழைத்துப் “பாட்டை எழுதிவிட்டாயா...?“ என்று கேட்டார்.
நான், “ஐயோ... மறந்துவிட்டேன்.
இன்றிரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்“ என்று சொல்லிவிட்டு
சமைக்கச் சென்றேன்.
அன்று, என்ன கருத்தில் கவிதை எழுதுவது? என்று சிந்தித்தபடி கோழி வறுவல்
சமைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் இந்த ஞாபகம்.
இந்த கோழி
வறுவலையே ஒரு பாடலாக எழுதினால் என்ன என்று தோன்றியது.
சமைத்து
முடித்துவிட்டு இந்தப்பாடலைக் கடகடவென்று கணிணியில் அடித்து அனுப்பிவிட்டேன்.
பிறகு தான்
யோசித்தேன். “நாம்
செய்தது தவறோ“ என்று.
உடனே “கவிஞர் அவர்களுக்கு... நீங்கள்
கேட்டதும் அவசரத்தில் இப்படி ஒரு பாடலை எழுதிவிட்டேன். தவறு என்றால் மன்னிக்கவும்.
இதைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தாலும் பரவாயில்லை. ஆனால் தயவு செய்து இதை
யாரிடமும் சொல்லி விடாதீர்கள்“ என்று இன்னொரு மின்அஞ்சலை உடனே அனுப்பினேன்.
காத்திருந்தேன். அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. மறுநாள் என்
படைப்பைப் பாராட்டி பதில் அனுப்பினார். ஆனால் இதை என்னைத் தெரிந்த அனைவரிடமும்
சொல்லிவிட்டார். எனக்கு அப்பொழுது மிகவும் வெட்கமாக இருந்தது.
பிறகு
அவர், “அருணா... பழைய சமையல் குறிப்புகள் அனைத்தும் கவிதைகளில் தான் எழுதப்பட்டு
உள்ளது. தற்பொழுது அப்படி யாரும் எழுதுவதில்லை. நீயே யாரும் சொல்லாமல் எழுதி
இருக்கிறாய். உண்மையில் உண்னை பாராட்டுகிறேன்“ என்று சொன்ன பிறகு தான் என் மனம்
ஆறுதல் அடைந்தது.
நான் எழுதிய முதல் எண்சீர் விருத்தம் இதுதான்.
கோழி வறுவல்!
தொட்டவுடன் சுடுமளவில் எண்ணெய் வைத்துத்
தோலெடுத்த
கோழியினை வதக்கி விட்டுப்
பட்டையையும் கிராம்பையும் பதமாய்த் தட்டிப்
பட்டுப்போல் அரைத்துவைத்த இஞ்சி பூண்டும்
வெட்டிவைத்த வெங்காயம் மிளகாய் போட்டு
வேண்டுகின்ற மசாலாத்தூள் உப்பும் சேர்த்துச்
சொட்டுத்தண்ணீர் இல்லாமல் வறுத்து வைத்தால்
சோறுவேண்டாம் என்றவனும் திரும்பிப் பார்ப்பான்!
(காய் – காய் – மா – தேமா - காய் – காய் – மா – தேமா’
என்ற இலக்கணத்தில் எழுதினேன்.)
அருணா செல்வம்.

.jpg)