திங்கள், 30 மே, 2022

ஈங்கை மலர் !

 



.
இயற்கை எழிலாக ஈங்கை மலரும்!
வயல்வெளியில் பூக்கும் வளமாய்! - பயனெதும்
இல்லையிதில்! முட்செடி ஈங்கையின் பூமழை
நல்லின்பம் என்பார் நவின்று!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2022

மாரோடம்! (செங்கருங்காலி மரம்)

 



முதிர்ந்தமரக் கட்டையில் கைப்பிடிகள் செய்வர்!
கதிர்வீச்சு நம்முடலைக் காக்கும்! - அதிக
மருத்துவ தன்மையுள்ள மாரோடம் நீரை
அருந்த உடலுறுதி யாம்!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2022

வேரல் மலர்! (சிறுமூங்கில்)

 


வேரல் பொதுவாக வேலிக் குதவிடும்!நீர்ச்
சாரலுள்ள பக்கம் தழைத்திடும்! - வேரலில்
கூடை,முறம் செய்வுதவும்! கொத்தாய்ப் புதர்களில்
கோடையில் வளருங் கொழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2022

செவ்வாய், 24 மே, 2022

போங்கம் மலர்! (ஆனைக்குன்றி மணி)

 


போங்கம் உடல்வலி போக உதவுகிறது!
தேங்கும் கொழுப்புநோய் தீர்த்திடும்! - வீங்கிய
மூட்டெலும்பைச் சீராக்கும்! முற்றிய ஈரல்நோய்
வாட்டத்தைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2022

(போங்கம் திலகம் என்ற இரண்டையும் “மஞ்சாடி மரம்“ என்றே சொல்கிறார்கள்.)

பூளைப்பூ! (சிறுபீளைப்பூ)

 


சிறுநீர்ப்பை கல்லைச் சிறப்பாய்க் கரைக்கும்!
சிறுபீளை நோயெதிர்ப்பைச் சேர்க்கும்! - சிறுநீர்
உறுப்புகளைக் காத்திடும்! ஒவ்வாமை நீக்கி
உறுதிசெய்யும் பூளை உயர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2022

குரலி மலர்! (சிறுசெங்குரலி)

 


குளத்தில் வளரும் குரலிக் கொடியே
வளம்கருந் தாமரை வண்ணம்! - அளவில்
சிறுமலர் கொண்ட சிறுசெங் குரலி
பெறும்பயன் வித்திலுள்ள பேறு!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2022

புதன், 18 மே, 2022

மாம்பூ! (மாமரம்)

 


முக்கனியில் ஒன்றாகி முந்திவரும் மாங்கனி!
எக்கனிக்கு ஈடாம் இதன்சுவை? - பக்குவமாய்
மாம்பருப்பை உண்ண வயிற்றோட்டம் சீராகும்!
மாம்பூ கொழுந்தும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
18.05.2022

செவ்வாய், 17 மே, 2022

குருந்தம் மலர்! (காட்டு எலுமிச்சை)

 


குருந்தம்வேர் வீட்டின் குறைகளைப் போக்கும்!
குருகுலக் கல்விக் குதவும்! - மருந்தாக
வாசமலர் நீரருந்த வாயுநீங்கும்! வேரினால்
தோசம் விலகுமாம் தோய்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.05.2022

திங்கள், 16 மே, 2022

எருவை மலர் ! (பெருநாணல்)

 


எருவைப்புல் ஆற்றோரம் எங்கும் வளரும்
பெருநாணல் ஆகும் ! பெரிதும் - எருமை
விரும்பியுண்ணும்! மூத்தோர் விரைந்து நடக்கத்
தரும்ஊன்று கோலாகும் தண்டு!
.
பாவலர் அருணா செல்வம்
16.05.2022

புதன், 11 மே, 2022

குறுநறுங் கண்ணி ! (குன்றிமணி மரம்)

 


குறுநறுங் கண்ணியெனும் குன்றிமணி அன்று
சிறுபொன் எடைபார்க்க செய்வர்! - உறும்விசம்
கொண்ட விதைஉயிரைக் கொல்லும்! குன்றிமணி
கண்கொண்ட பிள்ளையார் காண்!
.
பாவலர் அருணா செல்வம்
11.05.2022

செவ்வாய், 10 மே, 2022

நெய்தல் மலர்! (நீலாம்பல்)

 


நீண்டதாய்க் காம்பிருக்கும் நெய்தல் மலர்களைக்
வேண்டும் கடவுளுக்கு வைத்திடுவார்! - காண்பதற்கு
பெண்விழி யொக்கும்! பெருமளவு தூய்மையுள்ள
தண்ணீரில் பூக்கும் தழைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
10.05.2022

திங்கள், 9 மே, 2022

73. வழை மலர் ! (சுரபுன்னை)

 

 


வழைமரப் பூக்கள் வயிற்றுப்புண் போக்கும்!
தழையின்நீர் வெப்பந் தணிக்கும்! - மழைநீரைச்
சேர்த்துவைக்கும் ! எண்ணை, சிரங்குபடை, குட்டரோகம்
தீர்த்திடும் பத்தியமாய்ச் சேர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.05.2022