கும்மி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கும்மி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பாரதியைப் போற்றுவோம்!





பூட்டில்லா வீட்டில் நுழைவதுபோல்வந்து
புண்ணிய பூமியில் வாழ்ந்தவரை - வாலை
ஆட்டியே நம்மை அடிமைசெய்துவேற்று
நாட்டவர் எம்மை ஆளுவதோ?

காட்டுக்கே அரசன் சிங்கமன்றோஅதைக்
காப்பதே அதனின் திறனன்றோ - சின்னக்
கூட்டுப் புழுவாக இருந்தாலும்தம்மின்
கூண்டினில் வாழ்வதே நன்றாகும்!

வாட்டிய கொடுமை வஞ்சனைங்கள்கண்டு
வாடி வதங்கிய பாரதியேதீமை
ஓட்டிட வேண்டும் என்றெண்ணியேநாளும்
ஓதிய தெல்லாம் உயர்வாகும்!

நாட்டுக்கு நன்மையைச் செய்திடவேநல்ல
பாட்டினில் கருவைச் சேர்த்துவைத்தான் ! – கவி
தீட்டிய தெல்லாமே உயர்வாகும்வீரம்
ஊட்டிய சுவை உணர்வாகும்!

மூட்டிய வீரச் சொற்களாலேநெஞ்சை
மூடி நடுக்கிய பயமெல்லாம்தீயில்
காட்டிய பஞ்சாய் மறைந்ததுவேஉடன்
கடமை சூட்டை ஏற்றியதே!

ஏட்டினில் உள்ள இலக்கணத்தையாரும்
ஏற்றிடும் வண்ணம் எளிமையாக்கிப்புதுப்
பாட்டென்ற எண்ணம் ஏற்றிவைத்தஉயர்
பாரதியை நாம் போற்றிடுவோம்!
.
(கும்மி)
பாவலர் அருணா செல்வம்
11.12.2019

வியாழன், 17 அக்டோபர், 2019

தரணி யாளும் தமிழ்!



(கும்மி)

பண்டைய மாந்தர்கள் பேசிய தேஉயர்
    பண்பினில் மின்னிடும் செந்தமி ழே!
விண்ணவர் எழுதி விட்டுச்சென் றனரோ
    வியக்க வைத்திடும் செம்மொழி யே!

இன்பத்தின் சாற்றினில் ஊறிய தால்பேச
    இனிப்பை உண்கின்ற சுவையன் றோ! 
பின்னிடும் பாக்களின் பொருளைக் கேட்டிட
    பெருமை பெற்றிடும் செவியன் றோ!

செம்மையாய் மொழியின் இலக்க ணத்தைமுன்
    செய்துவைத் தவர்தொல் காப்பிய ரே!
மும்மொழி வாழ்வதன் விளக்க மதைத்தன்
    முப்பாலில் செய்தவர் வள்ளுவ ரே!

பற்பல வளமை பெற்றதி னால்நலம்
    பயக்கின் றநூல்கள் பலபெற் றோம்!
கற்சிலை அழகாய்ச் செதுக்கி யதால்முற்
    காலமும் வாழும்நல் வரம்பெற் றோம்!

எண்ணத்தில் தோன்றிடும் கருத்தை எல்லாம்நல்
    இசையின் வண்ணத்தில் பாடிடு வோம்!
பெண்னெனும் சக்திகள் வட்டமிட் டேஅதைப்
    பெற்றதோர் பேறென்றே ஆடிடு வோம்!

ஆதியில் தோன்றிய அந்தமிழ் மொழியை
    அனைவ ரும்கற்றால் பலனுண் டே!
ஓதிடும் ஆசானின் புகழிவ் உலகில்
    உயர்ந்தி டும்வண்ணம் நலனுண் டே!

தேனுக்கு மட்டும்இ னிப்பில்லை நமது
   தெள்ளுத மிழ்ச்சுவை இனிப்பா கும்!
வானுக்கு மட்டும்ம ழையினைப் போல்சுய
   வளமே தமிழில் தனியா கும்!

நாட்டினில் செல்வங்கள் பலவுண் டேஅதில்
    நற்றமிழ்ப் போலொரு செல்வமுண் டோ!
ஊட்டிடும் தாய்போல்உ றவென்றே மொழியை
    உலகில் எங்கேனும் சொல்வதுண் டோ!
.
பாவலர் அருணா செல்வம்
17.10.2019