.
ஆசையினை விதைவிதைத்தே
அன்பாலே நீரிறைத்தே
ஓசையின்றி வளர்ந்துவந்த
மானே! - என்னுள்
ஒளியாக நிறைந்திருக்கும்
தேனே!
.
எத்தனையோ வேளையினுள்
எந்நாளும் இருந்தாலும்
பித்தனுன்னை மறக்காத
தேனோ? - இந்தப்
பிடிவாத குணமுனங்குந்
தானோ?
.
விட்டுவிட்டுப்
போனவனை விரும்பாமல் மறந்தவனைத்
திட்டித்தினந் தீர்த்துநிற்கும்
உள்ளம் - அவனைத்
தேடுகிற கண்களுள்ளே
கள்ளம்!
.
ஆத்ததாண்டிப் போகவேணும்
அன்னவனைக் காணவேண்டும்
ஏத்தமிட்ட நெஞ்சிலுள்ள
பாரம் - காண
இன்பமழை கொட்டும்விழி
யோரம்!
.
பார்த்தவுடன் தெரியாமல்
பதுங்கியுடன் ஒளிந்தாலும்
பூத்தவுடன் தெரிந்துவிடும்
வாசம்! - கண்கள்
பொதிந்தவுடன் புரிந்துவிடும்
நேசம்!
.
ஊடலுடன் இருந்தாலும்
உயிர்கலந்து விட்டதினால்
கூடலினை எண்ணிமன
மேங்கும்! - கண்ணால்
கொஞ்சிவிட நெஞ்சமன்று
தூங்கும்!
.
அன்றுமில்லை இன்றுமில்லை
என்றுமில்லை எந்நாளும்
முன்னவர்கள் சொன்னதுதான்
உண்மை! - வாழ்வில்
முத்தொளிரும் அனுபவமே
திண்மை!
.
கொடுத்துவிடப் பொருள்குறையும்
குளிரன்பை விழிவழியில்
தொடுத்துவிட வளர்ந்துவரும்
என்றும்! - எங்கும்
தொலையாமல் திரும்பிவரும்
இன்றும்!
.
கண்ணென்னும் வண்டிரண்டும்
கவியென்னும் மலர்மொய்க்க
உண்ணென்று கொடுப்பதுவே
புலமை! - பண்ணை
உலகாள வைப்பதுவும்
வளமை!
.
சிந்தனையில் தேன்கலந்து
செந்தமிழில் சீர்கலந்து
வந்துதித்த தெம்மாங்குப்
பாட்டு! - உள்ள
வருத்தம்போக வேண்டுமிதைக்
கேட்டு!
.
பாவலர் அருணா செல்வம்
21.04.2021