வாழ்க்கையை மிகவும் சீரியஸாக
நினைத்துச் செயல் பட்ட இளைஞன் ஒருவன், தொடர்ந்து தோல்வியையே சந்தித்து மிகவும்
நொந்து போன நிலையில் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவைச் சென்று சந்தித்தான்.
“பெருந்தகையே.... வாழ்க்கையில்
தொடர்ந்து நான் தோல்வியையே சந்தித்து வருகிறேன். எவ்வளவு தன்னம்பிக்கையுடன்
முயன்றும் வெற்றியை என்னால் காணமுடியவில்லை. மிகவும் மனமொடிந்த நிலையில் தங்களைச்
சந்திக்க வந்துள்ளேன். தாங்கள் உலகப் புகழ் பெற்றிருக்கிறீர்கள். இந்தப்
புகழுக்கும் வெற்றிக்கும் தாங்கள் எப்படி எவ்வளவு உழைத்தீர்கள் என்பதை நான்
தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.“ என்றான்.
“தெரிந்து என்ன செய்யப் போகிறாய்,“
என்று கேட்டார் பெர்னார்ட் ஷா.
“அதையே என் வாழ்க்கையிலும்
கடைப்பிடித்து வெற்றி பெறலாம் என நினைக்கிறேன்.“ என்றான் இளைஞன்.
“நல்ல முயற்சி. செய்துப்பார்....
நீ ஏன் தொடர்ந்து தோல்வியடைகிறாய்?“
“தெரியவில்லை.“
“தெரிந்து கொள்ளவாவது முயற்றி
செய்தாயா?“
“ஆமாம். ஆனால் எதுவும்
பிடிபடவில்லை. அடுத்தடுத்து முயற்சிப்பேன். தொடர்ந்து தோல்வியே வரும். அதனால்
மனமொடிந்து போய்விடுகிறேன். அடுத்து வேறு விஷயங்களை நினைக்கிறேன். செயல்படுகிறேன்.
அவற்றிலும் தோல்வி தான் வந்தது.“ என்றான் கவலையாக.
“இளைஞனே.... நானும் உன்னைப் போல
இளைஞனாக இருந்தபோது பத்துக் காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது காரியங்களில்
தோல்வியைத் தான் தழுவினேன். ஆனால் அதற்காக அந்தத் தோல்வியை நான் அப்படியே விட்டு
விடவில்லை. அந்த ஒன்பது காரியங்களிலும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்று
யோசித்தேன். அப்போது தான் ஒரு உண்மை பளிச்சிட்டது. தொண்ணூறு முறை முயன்றால் அந்த ஒன்பது
முறை வெற்றி கிடைக்கும் என்ற உண்மை தான் அது.
அதாவது முயற்சிகளின் எண்ணிக்கையை
அதிகப்படுத்திக் கொண்டேன். வெற்றி மேல் வெற்றி கிடைத்தது.“ என்று விளக்கமளித்தார்
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
வெற்றியின் ரகசியத்தை அறிந்த
இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றான்.
படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

