சமூகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஜனவரி, 2014

இது யாருடையது?



   
  டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் ஒரு சமயம் பாட்னாவிலிருந்து தனது ஊருக்குச் செல்வதற்காக விசைப் படகில் ஏறி கங்கை நதியில் பயணம் செய்தார்.
   படகோட்டி படகைச் செலுத்திக் கொண்டிருந்தார்.
   இராஜேந்திரப் பிரசாத்திற்கு எதிரே அமர்ந்திருந்த ஓர் இளைஞன் ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான்.
   அவன் வெளியிட்ட புகையின் நெடி இராஜேந்திரப் பிரசாத்தை மிகவும் வருத்தியது.
   அதைப் பொறுக்க முடியாத அவர் அந்த இளைஞனைப் பார்த்து, “தம்பி... அந்த சிகரெட் உன்னுடையது தானே...?“ என்று கேட்டார்.
   “ஆமாம்“ என்றான் அந்த இளைஞன்.
   “அப்படியென்றால் இந்த புகை யாருடையது...?“
   இளைஞன் சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.
   “சிகரெட் உன்னுடையது என்றால் இந்தப் புகையும் உன்னுடையதாகத் தானே இருக்க வேண்டும். அதை ஏன் வெளியே ஊதி என் போன்றவர்களைக் கஷ்டப்படுத்துகிறாய்?“ என்று அமைதியாக கேட்டார் இராஜேந்திர பிரசாத்.
   அவரது பேச்சிலிருந்த நியாயத்தை உணர்ந்த அந்த இளைஞன், “ஐயா... என்னை மன்னித்து விடுங்கள்“ என்று கூறிவிட்டு தன்னிடமிருந்த சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் நதிக்குள் வீசி எறிந்தான்.
   இராஜேந்திர பிரசாத் மகிழ்ச்சியுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

சனி, 21 டிசம்பர், 2013

கண்ணே கண்ணுறங்கு!!



 

கண்ணே! மணியே! கற்கண்டே!
  கறுத்த கூந்தல் நிறத்தழகே!
பொன்னே! பொருளே! பூஞ்சரமே!
   பொக்கை வாயால் சிரிப்பவளே!
முன்னே பின்னே பார்க்கின்ற
   முத்துப் போன்ற கண்ணழகே!
பெண்ணாய் உலகில் பிறந்தவளே
   பேசும் கிளியே கண்ணுறங்கு!

இன்றோ உனக்கு வேலையில்லை!
   இதுபோல் வாழ்நாள் கிடைப்பதில்லை!
தின்றால் உணவு தீருதல்போல்
   திரும்ப வராத நாளிதுவே!
அன்றோ எனக்கே அன்னைசொன்னாள்
   அதைநான் உனக்குப் பாடுகிறேன்!
என்றோ வருமா ஏங்காமல்
   இன்றே சேர்த்தே கண்ணுறங்கு!

காலை பூக்கள் மலர்ந்துவிடும்!
   காலம் விரைவில் கடந்துவிடும்!
வேலை போகும் வேளைவரும்!
   விருப்பம் பலவும் சேர்ந்துவரும்!
மாலைச் சூடும் மனம்வந்தால்
   மடியில் மழலை தவழ்ந்துவரும்!
நாளை என்போல் பாடவரும்
   நலமாய் இன்றே கண்ணுறங்கு!

அருணா செல்வம்
11.12.13

வெள்ளி, 18 அக்டோபர், 2013

பார்வை!! (நிமிடக்கதை)



     
   சிவநேசன் அருகில் அமர்ந்திருந்த மனைவியைச் சற்றும் சிந்திக்காமல், எதிரில் சென்று கொண்டிருந்த பைக்கின், பின்னால் அமர்ந்திருந்த பெண்ணையே பார்த்தபடி கரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
    அந்தப் பெண் வடநாட்டு பெண்ணைப் போல் இருந்தாள். வெள்ளையான உடம்பில் மெல்லிய கறுப்புநிற சேலை அவள் அழகை மேலும் தூக்கிக்காட்டியது.
    அதிலும் அவள் முந்தானையை ஒற்றையாக விட்டுப் புடைவையைக் கட்டியிருந்ததால் அவளின் வயிறு, இடுப்புப்பாகங்கள் நிலவின் மேல் மெல்லிய கருமேகம் மூடுவதைப்போல மிகவும் அழகாக தெரிந்தது.
    காற்றின் அசைவில் சரியத்துடிக்கும் முந்தானையைக் கூட அவள் கவனிக்காதவளாய் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.
    தோள்பட்டையின் நுனி வரையில் வந்து  இறங்கிவிட்ட  முந்தானை இன்னும் முழுவதுமாக தோள்பட்டையை விட்டு இறங்காதா என்று சிவநேசனின் கண்கள் ஏங்கியது.
   ஆனால் அதற்குள் அவர்கள் போக வேண்டிய வழி வரவே அதையும் மனைவி நினைவு படுத்த, பெருமூச்சியுடன் வண்டியைத் திருப்பினான்.
   “ஏங்க... எதிரில் போன பெண்ணைப் பார்த்தீங்களா...?“ மனைவி கேட்டாள்.
    நாம் பார்த்ததை இவள் பார்த்திருப்பாளோ... நிச்சயம் பார்த்திருப்பாள். மனத்திற்குள் எண்ணியவனாய் “ம்“ என்ற ஒற்றை எழுத்தில் ஒத்துக்கொண்டான்.
    “ஏங்க பார்த்தீங்க இல்லை...? அந்தப் பெண்ணுடைய முந்தானை இன்னும் கொஞ்சம் விட்டா வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்ளும். நீங்கள் கொஞ்சம் முன்னால போய் அந்தப் பெண்ணின் முந்தானையைச் சரி செய்யச் சொல்லி இருக்கலாம். நீங்கள் சொல்லுவீங்கன்னு நான் நெனச்சேன். பாவம் அவள். ஏதோ யோசனையில் செல்கிறாள். இந்த உதவியைக் கூட நம்மால செய்ய முடியாமல் போயிடுச்சி. ம்ம்ம்“.... என்றபடி பெருமூச்சு விட்டாள்.
   சிவநேசனுக்கு அப்பொழுது தான் மனத்தில் சுறுக்கென்றது. நம் சுய இன்பத்திற்காக மற்றவர்களின் அவசியத்தைக் கூட உணராமல் இருந்துவிட்டோமே.... தன் மனைவியின் பார்வைக்கும் தன் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வருந்தினான்.
  
அருணா செல்வம்.
18.10.2013

உங்களின் பார்வைக்கு!!



இந்தப்படம் உங்கள் கண்களுக்கு எப்படி தெரிகிறது?