ஏக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 நவம்பர், 2014

நாடோடிப் பாடல்!



கூடிருந்த மரமெல்லாம் குருவி இன்றிக்
   குளமிருந்த கோவிலெல்லாம் தண்ணீர் வற்றி
வீடிருந்த இடமெல்லாம் உயிரும் இன்றி
   விருந்தென்ற சொல்லுக்குப் பொருளும் இன்றி
நாடிருந்த நினைவெல்லாம் நினைவில் சுற்ற
   நானிருக்கும் நிலையினிலே பாடு கின்றேன்!
ஏடிருக்கே! எழுத்தாணி துணையாய் நிற்க
   ஏக்கத்தை அதிலெழுதிப் போக்கு கின்றேன்!

அருணா செல்வம்
26.11.2014

புதன், 19 நவம்பர், 2014

அவன் காதல்தான் என்ன?



கணைதொடுத்த பார்வையாலே கண்ணை நோக்க
    கதிகலங்கி போய்நின்றேன்! காந்தக் கண்ணால்
எனைஎடுத்துச் சென்றதாலே என்னை நானே
    எங்கென்று தேடுகின்றேன்! அவனைத் தேடி
மனையடுத்து நின்றதாலே தந்தை திட்ட
    மனசின்றி வீடுசென்றேன்! ஆசை நெஞ்சம்
அணையொடுங்கும் நீரைப்போல் அடங்கி விட்டால்
    அவன்காதல் என்னவென்று அறிந்து கொள்வேன்!

அருணா செல்வம்
19.11.2014

    

சனி, 23 ஆகஸ்ட், 2014

சட்டென்றே ஒருமுத்தம் !!



ஒத்தையடிப் பாதையிலே
ஒத்தையிலே நடக்கையிலே
அத்தைமகன் முன்வந்தான்
ஆசையிலே வழிமறித்தே

முத்தமொன்று கொடுத்துவிட்டு
முன்னேறிப் போவென்றான்!
கத்திஊரைக் கூப்பிடுவேன்
கணப்பொழுதில் சொன்னாலும்

ஏக்கத்தில் அவன்பார்வை
ஏதெதுவோ செய்ததனால்
தாக்கத்தில் வழிவிட்டும்,
தயங்கியேதான் நின்றுவிட்டாள்!

நோக்கத்தைப் புரிந்துகொண்டும்
நூதனமாய்த் தனைப்பார்க்க
ஏக்கமொன்றும் எனக்கில்லை
என்றுசொல்லித் தள்ளிவந்தாள்!

அஞ்சியஞ்சி நில்லாமல்
அலட்சியமாய் வந்தாலும்
மஞ்சத்தில் அனல்பறக்க
மங்கையவள் உறங்காமல்

கொஞ்சுமொழி கண்பேச
குறும்பாகச் சிரித்தவனை
நெஞ்சுனுளே சுமந்துகொண்டு
நெடுநேரம் விழித்திருந்தாள்!

தொட்டணைக்க உரிமையுள்ள
தோதான அத்தைமகன்!
சட்டென்றே ஒருமுத்தம்
தந்துவிட்டு வந்திருந்தால்

கட்டான காளையவன்
கனவினிலே வந்திருப்பான்!
பட்டென்றே ஏன்வந்தோம்?
பண்பின்றி ஏக்கமுற்றாள்!

நட்புறவுகளுக்கு வணக்கம்.

    இந்த “சட்டென்று ஒரு முத்தம்“ என்ற கவிதை, “தயக்கம் ஏனோ அதைச் சொல்ல“ என்ற எனது அடுத்த புத்தகத்தில் வர இருக்கிறது.
    இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் இந்தக் குறிப்பிட்டக் கவிதையைப் பற்றி பாராட்டி எழுதி இருக்கிறார்கள். இந்தக் கவிதையில் அப்படி என்ன விசேசம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
   படிக்கும் உங்களுக்கு ஏதாவது சிறப்பாக உணருகிறீர்களா என்பதை அறிவதற்காகவே இந்தக் கவிதையை மறுபதிப்பாக வெளியிடுகிறேன்.
   தாங்கள் அறிந்த கருத்தை அவசியம் பின்னோட்டத்தில் தெரிவித்தால்..... நானும் தெரிந்துக் கொள்வேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

23.08.2014

வியாழன், 17 ஜூலை, 2014

வாட்டுதே உன் நினைப்பு!!


 கொல்லைப் புறத்து மரங்களிலே
      கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க,
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
      முத்துப் பல்லை ஒத்திருக்க,
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
      காற்றில் இராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
      சொக்கிப் போனேன் இவைகண்டு!!

காற்றில் வந்த நறுமணத்தில்
      காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
      சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
      இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டீ என்மேலே
      சின்னக் கிளியே செங்கனியே!!

வீட்டில் பாயில் படுத்தாலும்
      விடியக் கண்கள் மூடவில்லை!
காட்டிக் கொடுக்கும் கண்ணிரண்டும்
      காதல் தவிப்பைத் தாயிடத்தில்!
கூட்டிக் கேட்டால் என்சொல்வேன்
      கொடுத்த ஏக்கத் தவிப்பைநான்!
வாட்டி வதைக்கும் வடிவழகே
      வாடி எந்தன் பக்கத்தில்!!

அருணா செல்வம்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

சோலையின் ஏக்கம்!!





மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
   மென்நடையைக் கண்டுநாணி அன்னம் ஓடும்!
தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்,
   தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!
வானோடு வகைமாறும் மேக வண்ணம்
   வடிவழகில் மாற்றமிடும், அவளைக் கண்டால்
மானோடு மயிலாடும் சோலை ஏங்கும்
   மலர்ப்பாதம் தன்மீது படுமா என்றே!!

அருணா செல்வம்
11.10.2013