செவ்வாய், 31 டிசம்பர், 2019

புத்தாண்டு வாழ்த்து!.
இன்பம் ஒன்றே இருந்திடவும்,
    இனிய நலங்கள் கொடுத்திடவும்,
பொன்னும் பொருளும் கிடைத்திடவும்,
   பொலிவும் புகழும் அடைந்திடவும்,
மின்னும் கலையில் மிளிர்ந்திடவும்,
   மேன்மைத் தொழிலைத் தொடர்ந்திடவும்,
நன்றே பிறக்கும் புத்தாண்டில்
   நாளும் கிடைக்க வாழ்த்துகின்றேன்!
.
அன்புடன்
பாவலர் அருணா செல்வம் B.Lit, M.A, Litt (USA) 
1.1.2020

திங்கள், 30 டிசம்பர், 2019

புத்தாண்டே வருக!
ஓடி யோடி வருகின்றாய்!
  ஒருநாள் கூட நிற்பதில்லை!
ஆடி யாடி அலைந்தாலும்
    அந்த நாட்கள் திரும்பவில்லை!
நாடி நாடி வந்தாலும்
    நாளும் நகர்ந்தே செல்கின்றாய்!
கோடிக் கோடிப் போனாலும்
    குறையே இன்றி வளர்கின்றாய்!

அன்று நடந்த சுவடெல்லாம்
    அழியா தென்றும் இருப்பதற்கும் 
சென்ற துன்ப வடுக்கூட
    செழிக்கும் உயர்வில் மறைவதற்கும் 
இன்றும் நாளை வருவதெல்லாம்
    இனிமை ஒன்றே நிலைப்பதற்கும்
தொன்மைத் தொடரும் புத்தாண்டே
    துடிப்பாய் வந்து பிறந்திடுவாய்!

ஊக்கம் கொண்டே உழைப்பவர்க்கே
    ஒளிரும் ஆண்டாய் வந்திடுவாய்!
நோக்கம் உயர்வைக் கொண்டோர்க்கு
    நொடியில் அருளைத் தந்திடுவாய்!
தேக்கம் எதிலும் இல்லாமல்
    தெளிந்த வழியைக் காட்டிடுவாய்!
ஆக்கும் செயல்கள் புகழடைய
    அகிலம் போற்ற வருவாயே!
.
பாவலர் அருணா செல்வம்
30.12.2019

செவ்வாய், 24 டிசம்பர், 2019

வையம் மகிழ வா…வா ஏசுவே!


மண்ணில் வாழும் மானிடரின்
    மனங்கள் செய்த பாவங்களை
எண்ணி எண்ணிக் கலங்கியதன்
   இன்னல் போக்க வேண்டுமென்று
விண்ணில் இருந்து இறங்கிவந்தார்
   வியக்கும் குழந்தை ஏசுவென!
வண்ணம் கொண்ட அவரருளை
   வணங்கி நெஞ்சம் குளிர்கின்றேன்!

காட்டில் வாழும் உயிரெல்லாம்
    கருத்தாய் ஒன்றி வாழ்கிறது!
நாட்டுக் குள்ளே பலதலைகள்
    நன்மை என்றே பிரிக்கிறது!
வாட்டும் செய்தி வன்புணர்வு
    வளர்க்கும் படிப்பில் முறைக்கேடு!
தீட்டும் கவியில் எழுதுகின்றேன்
    திருநாள் தன்னை மறந்துவிட்டு!

சின்னக் குடிலில் பிறந்தவரே
    சீர்மை செய்ய வந்தவரே!
முன்னே இருந்தோர் உயர்ந்தவரா?
    பின்னே வந்தோர் தாழ்ந்தவரா?
என்னே மாற்றம் நடுநடுவே
    என்றே கேள்வி இருந்தாலும்
இன்னல் தணிந்தே இவ்வுலகம்
    இன்பம் கொள்ள செய்திடுவீர்!

சொந்தம் நட்பும் எல்லோரும்
    சுகமாய் வாழ அருள்தரவே
எந்தை நாடும் மனவீடும்
    இனிய நலங்கள் நிறைந்திடவே
முந்தும் வித்தை உயர்வுபெற
     முயலும் செயல்கள் வளம்பெறவே
வந்து பிறப்பாய் சிறுகுடிலில்
     வையம் மகிழ்ந்து வாழ்வதற்கே!
.
பாவலர் அருணா செல்வம்
24.12.2019

அரசின் கனவு!.
எத்தனை சாதிகள் இருந்தாலும்
    …..எத்தனை பேதமும் இருந்தாலும்
பித்தென அவைகளைப் பிடித்தாலும்
    …..பிழையென அவைகளை விட்டாலும்,
இத்தரை மீதினில் பிறந்ததினால்
    …..இணையென ஒன்றிய உறவுகளை
முத்திரை ஆணைகள் விட்டதனை
    …..முடித்திட முயல்வது வெறுங்கனவே!
.
பாவலர் அருணா செல்வம்
24.12.2019

வியாழன், 19 டிசம்பர், 2019

தன்மேம்பாட்டுரை அணி!


ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதுதன்மேம்பாட்டுரை அணிஎனப்படும்.

.ம்
என்னிகர் ஆடுவோர் இங்குண்டோ? என்நடனம்
மின்னல்போல் கண்ணுள் விரைந்திடும்! – என்விரல்
காட்டிடும் ஆடல் கலைநயம் வேறெந்த
நாட்டிலும் இல்லையென்பேன் நான்!

பொருள்எனக்கு நிகராக நாட்டியம் ஆடுபவர் இங்கு இருக்கின்றனரா ? நான் ஆடும் நடனம் வானத்தில் தோன்றிடும் மின்னலைப் பார்ப்பது போல் விரைவாக நடந்து கண்ணுக்குள் கமழும். என் விரல் காட்டும் கலைநயம் மிக்க நாட்டிய பாவனைகள் வேறெந்த நாட்டிலும் காட்டுவதற்கு எவரும் இல்லை என்பேன் நான்.
     பாடலில் தனக்கு நிகர் நாட்டியம் ஆடிட வேறு எவரும் இல்லை என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுவதால் இதுதன்மேம்பாட்டுரை அணிஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019

கரகாட்டம்!.
தலையிலே சுமைசுமந்து
தளராமல் ஆடிடுவார்!
கலையிலே பண்பாடாய்
காட்டிவிட்ட ஆட்டமிது!

ஒலிக்கின்ற ஓசைக்கே
உணர்வளித்து ஆடிடுவார்!
கலிகால நடப்புகளைக்
ஆட்டத்தில் காட்டிடுவார்!

கிராமத்துக் கலையுணர்வு
கவிஞனையும் பாடவைக்கும்!
இராக்கால வேளையிலும்
இயல்பாக பார்க்கவைக்கும்!

எத்தனையோ இன்னல்கள்
எல்லோருக்கும் உண்டன்றோ!
அத்தனையும் தலைசுமந்து
இத்தரையில் வாழ்கின்றார்!

என்றான உணர்வுகளை
எடுத்தோதும் ஆட்டமிது!
நன்றான கலையாகும்
நம்நாட்டின் அடையாளமே!
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019

இகழ்ச்சி விலக்கணி! (அணி இலக்கணம்)

    பாடலில் ஒரு செயலை விலக்குவதற்கான காரணத்தை இகழ்ந்து கூறி விலக்குவது இகழ்ச்சி விலக்குஎனப்படும்.

. ம்
தொடர்ந்துவந்து வாழ்வில் துயரமிடும்! நாளைக்
கடத்தும் தொலைக்காட்சித் தொல்லை! – நடத்திடும்
நாடகங்கள் உண்டாக்கும் நன்மையெனும் தீமையாம்
ஊடகம் வேண்டாம் ஒழி!

பொருள் தொலைக்காட்சியில் நடக்கும் நாடகங்களால் வாழ்வு துயரம் தரும். நாட்களைக் காரணமின்றிக் கடத்திவிடும். அதில் கிடைக்கும் இன்பங்கள் நன்மை போன்று தீமை பயக்கும். அதனால் ஊடகம் என்னும் தொலைக்காட்சிப் பெட்டியை வேண்டாம் என்று ஒழிப்போம்.
    பாடலில் விலக்குவதற்கான தொலைக்காட்சிப் பெட்டியை இகழ்ந்து கூறி விலக்குவதால் இது இகழ்ச்சி விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019

வெள்ளி, 13 டிசம்பர், 2019

உதாத்தவணி – 22
வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்.   ----- 73

பொருள்ஓர் இடத்தில் உள்ள செல்வத்தின் உயர்ச்சியையும், உயர்ந்த உள்ளத்தில் ஏற்கப்பட்ட உயர்ந்த உணர்ச்சியையும் மிகுத்து அழகு பொருந்தக் கூறுவதுஉதாத்தவணிஎனப்படும்.

1, செல்வ மிகுதி

    பாடலில் ஓர் இடத்தில் அல்லது ஒருவரிடத்தில் உள்ள செல்வத்தின் மிகுதியை அல்லது அதன் பெருமையை அழகு பொருந்தப் பாடுவது செல்வ மிகுதி உதாத்தம் எனப்படும்.

. ம்
மண்வளமும் இன்ப மழைவளமும் உள்ளுயர்
பெண்வளமும் வீரப் புகழ்வளமும்தண்டமிழ்
ஊட்டிடும் சொல்வளமும் ஒன்றாக எங்களின்
நாட்டிலுண்டே செல்வ நயம்!

பொருள்செல்வங்கள் எனச்சொல்லும் மண்ணின் வளமும், இன்பத்தை நல்கும் மழைவளமும், உயர்ந்த உள்ளத்தைக் கொண்டிருக்கும் பெண்களும், வீரம் கொண்ட ஆண்களால் புகழ்வளமும், தாய்த்தமிழால் எங்களிடம் உள்ள மொழிவளமும் ஒன்றாக எங்களின் நாட்டினில் நிறைய உண்டு.
    ஓர் இடத்தில் இருக்கும் செல்வ மிகுதியைப் பாடி இருப்பதால் இதுசெல்வ மிகுதி உதாத்த அணிஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
13.12.2019