14 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
14 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஜனவரி, 2022

தாமரை மலர்!

 


மங்கலத் தாமரையின் மையம் தளமிருக்கும்
திங்களொளி காணாத் திருமலர்! - மங்கிடும்
புத்தியைக் கூர்மையாக்கும்! பூசைக் குதவிடும்!
சித்தமருந் தாகும் சிறந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.01.2022

(தாமரை மலரின் நடுவில் “பொகுட்டு“ என்ற தளம் இருக்கும், இது தான் மற்ற நீர்மலருக்கும் தாமரை மலருக்கும் உள்ள வித்தியாசம்)

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

பழகிப்பார்!

 


மார்கழியில் பூக்கும் மலரெல்லாம் வாசமில்லை!
நார்தொடுத்த மாலையோ நல்லழகே! - பார்க்க
அழகில்லை! பாசமுடன் ஆளுமென் நெஞ்சைப்
பழகிப்பார்! கண்டயர்வாய் பண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
04.01.2022

செவ்வாய், 8 ஜனவரி, 2019

விபரீத உவமை! - 14




பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பிஃதவம மாகும்             (தொல்பொருள்உவம – 9)

     பாடல்களில் பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் உவமைகளைப் பொருளாகவும், பொருட்களை உவமையாகவும் மாற்றி உரைப்பதுவிபரீத உவமைஆகும்.

உ. ம்
கருங்கூந்தல் போலிருக்கும் கார்மேகம்! சின்னக்
கருவிழி போல்வண்டு காணும்! – புருவம்போல்
வண்ண வளைவுடன் வானவில்! ஈடில்லா
மண்ணில் இயற்கையின் மாண்பு!

பொருள்கருமையான கூந்தலைப் போலிருக்கும் கார்மேகம் கலைந்தோடும். சிறிய கருமையான விழிபோன்று வண்டு காணப்படும். புருவம் போல் வளைந்த வண்ண வானவில் இருக்கும். இப்படி இருப்பது ஈடில்லா இவ்வுலகத்தில் இயற்கை கொடுத்த அழகு.
    தொன்றுதொட்டு (மேற்றொட்டு) பெண்களின் கூந்தலுக்குக் கார்மேகத்தையும், கருவிழிக்கு கருவண்டையும், புருவத்திற்கு வானவில்லையும் உவமையாகக் கூறி வருதல் வழக்கம்.
    இப்பாடலில் அந்த இயல்புகளை மாற்றி, கார்மேகத்திற்கு உவமையாக கூந்தலையும், வண்டுக்கு உவமையாக கண்களையும், வானவில்லுக்கு உவமையாக புருவத்தையும் கூறியுள்ளதால் இது விபரீத உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.01.2019