வெள்ளி, 31 அக்டோபர், 2014

இம்சை தத்துவங்கள்!! – 21.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.

2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....

3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...

4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.

5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?

6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.

7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....

8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....

9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....

10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....

11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...

12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.

13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.

14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.

15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.....


இந்தப் பதிவு ஒரு ஜாலிக்காக.....

கடைசியா எனக்கு ஒரு சந்தேகம்ங்க..... பதில் சொல்லுங்க....ப்ளீஸ் 

    அதாவது ரொம்ப நாளா கண்ணி வெடி கண்ணி வெடின்னு சொல்லுறாங்களே.... இன்னுமா அதுக்குக் கல்யாணம் ஆகலை.......???!!!

புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துக்கள்!!பொன்னை ஒக்கும் மத்தாப்பு
    புதிதாய் அணிந்த சிற்றாடை
அன்னை செய்த பலகாரம்
    அன்பைக் காட்டும் பரிமாற்றம்
முன்னை கால நினைவலைகள்
    முந்தி வந்து இனித்தாலும்
இன்றும் அதுபோல் மகிழ்வுடனே
    இனிதாய் வாழ வாழ்த்துகிறேன்!!

நட்புறவுகள் அனைவருக்கும் 
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.

22.10.2014

செவ்வாய், 14 அக்டோபர், 2014

நானே உன்னை அழித்திடுவேன்!!
நானே வேண்டாம் என்றாலும்
    நயமாய் என்னுள் புகுந்துவிட்டாய்!
வீணே வந்த உன்வரவால்
    வேலை செய்யத் தோன்றாமல்
தேனாய் இருந்த வாய்கசக்க
    தேகம் சூட்டில் கொதித்திருக்க
கூனாய்ச் சுருள மனம்விரும்பி
    கொடுத்த வாக்கை செயத்தடுத்தாய்!

நோயே என்னுள் ஏன்வந்தாய்?
   நொந்து போவேன் எனநினைத்தா?
பாயே படுக்க அழைத்தாலும்
   பணியைச் செய்யத் தடுத்தாலும்
தீயே! உன்னை மதிக்கமாட்டேன்!
   திரும்பி உடனே போய்விடு!
நீயாய்ப் போகா விட்டாலும்
   நானே உன்னை அழித்திடுவேன்!

 அருணா செல்வம்
14.10.2014

வெள்ளி, 10 அக்டோபர், 2014

வண்ண மீன்கள்!!கண்ணைக் கவரும் தொட்டிக்குள்
   கருத்தைக் கவரும் வண்ணமீன்கள்!
பொன்னை நிகர்த்த பளபளப்பு
   பூவில் இருக்கும் நிறக்கலப்பு!
மண்ணை மறந்து நான்பார்த்தேன்
   மருண்ட மீனோ எனைப்பார்க்க
என்னை எழுத தூண்டியதே
   என்னில் இருந்த எண்ணமீன்கள்!

காலம் சுற்றும் வலைதன்னில்
   கவலை கயிறு மனமிறுக்க
ஓலம் இடவோ முடியாமல்
   ஓய்ந்தோ அமரக் கூடாமல்
மூலம் ஏதென்(று) அறியாமல்
   மௌனம் மட்டும் மொழியென்றே
ஞாலம் தன்னில் வாழ்கின்ற
   நங்கை நிலையில் அதைக்கண்டேன்!

அன்பு மொழியில் தேனுற்றி
   ஆசை வார்த்தை பலபேசி
கன்னம் சிவக்கும் பெண்ணிடத்தில்
   காதல் விதையை விதைத்திடுவார்!
இன்பம் எதுவோ அதுமுடிய
   இவளோ இனியேன்? சென்றுவிட
மின்னும் கண்ணீர் தண்ணீரில்
   மீறி தெரியா நிலைக்கண்டேன்!

கள்ளம் கொண்ட காளையரோ
   கவலை யின்றிப் பிறபெண்ணைத்
தெள்ளத் தெளிந்த மொழிபேசித்
    தின்று முடிக்க காத்திருப்பான்!
உள்ளம் திறந்து கேட்டாலோ
    உனக்கேன் பொறாமை எனக்கேட்பான்!
பள்ளம் தன்னில் விழுந்ததினால்
   பாவம் மீன்போல் பெண்வாழ்வாள்!

கண்கள் போன்ற மீன்களெல்லாம்
   கவிதை களாகத் தெரிகிறது!
பெண்ணின் உள்ளே பலகவிதை
   பின்னப் படாமல் இருக்கிறது!
விண்ணின் அளவு கற்பனைகள்
    வெளியில் கொட்டத் துடிக்கிறது!
வண்ண மீன்கள் சிறையிருக்க
   எண்ண மீன்கள் முடிக்கிறது!!


அருணா செல்வம்.


புதன், 8 அக்டோபர், 2014

நாவுக்கரசியே!!
நற்றமிழ் நாயகியே! நாவுக்[கு] அரசியே!உன்
பொற்பாதம் பற்றிப் புகழ்கின்றேன்! கற்றவரும்
உற்றவரும் மற்றவரும் போற்றுகின்ற சொற்களைநான்
குற்றமின்றிப் பேசக் கொடு!
  

அருணா செல்வம்.

02.10.2014

திங்கள், 6 அக்டோபர், 2014

ஆளுக்கொரு நீதி!!


முதல் இரவு!!!
    நித்தியாவிற்குப் புதுப் பெண்ணிற்கான பயமோ தயக்கமோ அல்லது மகிழ்ச்சியோ எதுவும் இல்லை. காரணம் அவளுக்கும் இது முதலிரவு கிடையாது!
    ஐந்து ஆண்டுகள் காதலித்து மணந்தவனை அவசரமாக வந்த லாரிக்குப் பலிகொடுத்து விட்டு இரண்டு வருடம் விதவைக் கோலம் பூண்டு.. அம்மா அப்பாவின் அடுத்தவளுக்கு வழிவிடாத சனியனே..’ என்ற திட்டுகளை வாங்கி வாங்கி… அவர்களுக்குப் பாரமாகக் கூடாது என்று வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக் கொடுத்தால் இவர்களின் பாரம் குறையுமே என்று எண்ணிய பொழுது… இந்த வரன் வந்தது.
    ‘தோ பாரும்மா நித்தியா.. அந்தப் பாண்டியன் தம்பிக்கு நல்ல வேலை. கைநிறைய சம்பளம். வீட்டுலேயும் அவரோட அம்மாவும் அந்த கொழந்தையும் தான். போன வருசம் அவன் பொண்டாட்டி ஒரு விபத்துல செத்துட்டாளாம். கொழந்தைய வளக்குறதுக்காகத் தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க பெண் கேக்குறார். எந்தப் பிக்கல் பிடுங்களும் கெடையாது.
    நான் நம்ம தேவகிய வேணும்ன்னா கட்டித்தர்றேன்னு சொன்னேன். ஆனா அவரு வேணாம்ன்னுட்டார். வாழ்க்கையை இழந்து நிக்கிற உன்னமாதிரி விதவையாலத் தான் தன் மனநிலைய புரிஞ்சி நடக்க முடியும்ன்னு சொல்றார்.
    அதுமட்டுமில்ல.. உன்னையும் நா எவ்வளவு நாளைக்குத்தான் காப்பாத்தி பாதுகாக்க முடியும்நல்ல வாழ்க்கை உனக்குத் தானா வருது. வேணான்னு சொல்லாத. உனக்குப் பின்னாடி ரெண்டு பேரை நான் கரையேத்தியாகணும்.. எங்க எடத்துலேர்ந்து கொஞ்சம் யோசிச்சிபாரு. உன்னைக் காலமெல்லாம் வச்சி எங்களால காப்பாத முடியாது.
    நான் போயி நீ கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டதா மாப்பிள்ளை வீட்டுல சொல்லிடுறேன்.
    அவளின் சம்மந்தம் கேட்காமலேயே சம்மந்தம் முடிந்தது.

    விதியே என்று அறைக்குள் நுழைந்தாள்! ஆனால் பாண்டியன் சற்றுக் குதுகலமாகத்தான் இருந்தான். அவள் நுழைந்ததும் அவள் கையிலிருந்த பால் செம்பை வாங்கி வைத்துவிட்டு அருகில் அமரச் சொன்னான்.
    தலையணைக்குக் கீழ் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து நீட்டினான். வாங்கிப் பார்த்தாள்;. அது அவனின் திருமணப்படம்! அவன் முதல் மனைவி மிகவும் அழகாக இருந்தாள்;.
    ‘நித்தியா.. இவதான் உமாதேவி! என்னுடைய நல்ல வாழ்க்கைக்கு அச்சாரமாய் இருந்தாள்;. யார் கண் பட்டதோ.. இவ்வளவு சீக்கிரம் பிரிஞ்சி போயிட்டா.. ஆனாலும் அவ இன்னமும் என் மனசுல வாழ்ந்துக்கினு தான் இருக்கிறா.. எனக்கு எப்பவுமே துணையா இருக்கிறான்னு தான் நெனைக்கிறேன்;. நீயும் அப்படியே நெனச்சிக்கோ…”
    எதுவும் பேசாமல் இருந்த நித்தியாவைப் பார்த்தான். நித்தியா அவ நமக்குத் தெய்வம் மாதிரி. அவளை நீயும் மனசார கும்பிட்டுக்கோ. அவளுடைய ஆசிர்வாதத்தோட நம் வாழ்க்கையைத் தொடங்கலாம்…”
    அவள் கையிலிருந்த படத்தை வாங்கி அதில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்துவிட்டுத் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு விளக்கை அணைத்தான்.

   ‘கார்த்திக்அம்மா படத்தைக் கும்பிட்ட பிறகுதான் பள்ளிக்குப் போவணும்ன்னு எத்தனை முறை சொல்லுறதுஏய் நித்தியா… உமா படத்துல பூ வாடிப் போய் இருக்குது. இன்னைக்கு என்னோட உமா பிறந்தநாள். படத்தைத் தொடச்சிப் பூ போட்டுவை. நா ஆபிசு முடிஞ்சி வந்ததும் கோவிலுக்குப் போகலாம்…”
       வார்த்தையில் தெரிந்த அழுத்தமே அது உத்தரவு என்றது.
   அவன் போய்விட்டான்!
   நித்தியா படத்தைத் துடைக்கும் பொழுது பார்த்தாள். உமாதேவி பிறந்ததேதி… நித்தியாவின் முதல் திருமணநாள்.
   மனம் விரும்பிய காதலனையே கைபிடித்து வாழ்ந்த ஒருவருட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சொர்க்கமாய் இனித்த இன்பங்கள்..
   ‘நித்தியா கௌம்பு... கடைக்குப் போலாம்…”
   ‘கடைக்கா.. இன்னைக்கு எதுக்குக் கடைக்கு..?”
   ‘இன்னைக்கு ஐயாவோட சம்பளநாள்.. நேரா கடைக்குப் போறோம். ஒனக்குப் புடிச்ச பொடவ வாங்குறோம். அப்படியே ஓட்டல்ல சாப்பிட்டு வீட்டுக்கு வரலாம்…”
   ‘எதுக்குங்க அனாவசிய செலவு..அந்தச் காச சேர்த்து வைச்சா நாளைக்கு ஒதவுமில்ல..?’
   ‘நாளைக்குத் தேவப்படும் போது சம்பாதிச்சிக்கலாம். ஆனால் இன்னைய நாள் நாளைக்கு வராது.. இருக்கிற நாளெல்லாம் சந்தோசமா இருப்போமே.. போமா.. போய்க் கிளம்பி வா.
   அவள் அவனுடன் இருந்த நாளெல்லாம் சந்தோசமாகவே இருந்தாள்.
   மனத்திற்கு மட்டும் எத்தனை சிறகுகள்... நினைத்த போதெல்லாம் இழந்த இன்பங்களைத் தூக்கிக் கொண்டு அதனால் பறக்க முடிகின்றதே...!
   “நித்தியா குட்டி.. எனக்கு உன்னமாதிரியே ஒரு சின்ன நித்தியா குட்டி வேணும். அந்தச் சின்ன நித்தியாவுக்காக நாம காலமெல்லாம் வாழணும்..
   அவள் வயிற்றைத் தடவியபடி சொன்ன வார்த்தைகள்
   “உன்னைப் பெத்ததுக்காக உனக்கு வேணா சோறு போடலாம். செத்துப் போனவன் குழந்தை இனியெதற்கு?” என்று இரக்கமின்றி மூன்று மாதத்தில் கட்டாயப் படுத்தி கலைத்த போதே மீதியிருந்த நித்தியாவின் காதல் கனவுகளும் கதையும் கலைந்துபோனது.
    இன்று ஏதோ வாழ்க்கை வாழ்கிறோம் என்று வாழ்ந்தாலும் இதயம் இழந்ததை மறக்கவில்லையே..!!
   கைப்பையில் மறைத்து வைத்திருந்த இனியனின் பாஸ்போட் சைஸ் படத்தை எடுத்துப் பார்த்தாள். அழுகை அடக்க முடியாமல் பீரிட்டு வந்தது. வாய்விட்டு அழமுடியாமல் மனதிற்குள் அழுதாள்.
   என்ன வாழ்க்கையிது..இறந்தவனுக்காக வாய்விட்டுக்கூட அழமுடிவதில்லை.. மனம் விம்மியது.
   மாமியார் அழைக்க.. படத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வேலையைக் கவனித்தாள்.

   ‘நித்தியா.. காலையில ஏதோ படத்தைப் பார்த்து அழுதியாம்.. அம்மா சொன்னாங்க. உண்மையா..
   தலையை வருடியபடி பாண்டியன் கேட்டான். அவள் பேசாமல் இருந்தாள். அவனே தொடர்ந்தான்.
   ‘நித்தியா.. நாம புது வாழ்வைத் தொடங்கி வாழ்கிறோம்.. நீ பழையதையே நெனச்சிக்கினு இருந்தா.. ஒங்கூட நான் எப்படி சகசமாய் இருக்க முடியும்… பழசயெல்லாம் மறந்துடு. போய் அந்தப் படத்தைக் கொண்டு வா.
   அவள் தயக்கத்துடன் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி சிகரெட் லைட்டரால் கொளுத்தித் தூக்கி எறிந்தான்.
   ‘என்னைத் தப்பாய் நெனைக்காத நித்தியா.. இந்தப் படமே நம்மைப் பிரிச்சிடும்ன்னு தான் அதை நான் கொளுத்தினேன். இனி உனக்கு நான் எனக்கு நீன்னு வாழலாம்.. என்ன நான் சொல்றது புரியுதா..?”
   சொல்லிக்கொண்டே தன் மார்பில் சாய்த்தான்.

   மறுநாள்..
   ‘நித்தியா.. இங்கிருந்த உமாதேவி படம் எங்கே..?”
   ‘நான்தாங்க பழைய சாமான் போட்டு வைக்கிற அறையில கொண்டு போயி வச்சேன்.
   ‘ஏன்..?’
   ‘நீங்க தானே சொன்னீங்க.. பழசயெல்லாம் மறந்து வாழலாம்ன்னு.. நாம இதையெல்லாம் மறந்து புது வாழ்க்கை வாழலாம்ன்னு தான் படத்தை அந்த அறையில வைச்சேன்.
   ‘அறிவிருக்குதா…? மூதேவி. அவ எனக்குத் தெய்வம்டீ.. ஏற்கனவே ஒன்ன முழுங்கிட்டுத் தான் இங்க வந்திருக்கிற. உம்மொகத்துல முழிச்சிட்டுப் போனா போரக் காரியம் உருப்படுமா..அவ மொகத்துல முழிச்சிட்டுப் போனத்தான் எந்தக் காரியமும் உருப்படும். போ.. போயி அந்தப் படத்தை ஒடனே கொண்டாந்து மாட்டு…’
   அவள் அதிர்ச்சியில் பேசாமலிருக்க அவனே சென்று அந்தப் படத்தைக் கொண்டு வந்து மாட்டினான்.
       ‘அப்போ நானும் இந்திரன் படத்தை இங்க மாட்டலாமா..?” அவள் சொல்லி முடிக்கவில்லை... கன்னம் எறிந்தது அவன் விட்ட அறையில்!
    ‘இதோ பார்.. இந்த மாதிரி ஏட்டிக்குப் போட்டியெல்லாம் இங்க நடக்காது. நான் உனக்கு வேணும்ன்னா... நான் சொல்றபடி கேட்டு நடந்துக்கோ. செத்தவனையே மனசுல நெனச்சிக்கினு தான் இருப்பேன்னா... நீ தாராளமா உன் அம்மா வீட்டுக்குப் போயிடு..
   ஒரு விரலைக் காட்டி எச்சரித்து விட்டுச் சென்றான்.
   உமாதேவி பூவோடும் பொட்டோடும் படத்தில் சிரித்தாள்.
   அவளுக்கு புரிந்தது. ஆணுக்கும் பெண்ணிற்கும் மனம் ஒரே மாதிரி அமைந்திருந்தாலும் ஆளுக்கொரு நீதிதான்.
   நித்தியா பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் தாய்விட்டை நோக்கி நடந்தாள். அவளுக்குத் தெரியும் பின் வரும் பிரச்சனைகள் என்னவென்று! இருந்தாலும் தனக்கென்று இருக்கும் நீதியைத் தேடி நடந்தாள்.

அருணா செல்வம்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கணவன் மனைவி ஜோக்ஸ்!!1.
கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“

2.
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“
கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“

3.
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“

4.
கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே....!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“

5.
கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“
மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“

6.
மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“
கணவன் – “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“

7.
மனைவி – “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“
கணவன் – “நிஜமாவா சொல்லற?“
மனைவி – “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“

8.
கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“
மனைவி – “சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“

9.
கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“
கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.....

10.
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“
கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“

11.
கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“

12.
ஒரு குட்டிக்கதை

புறாவின் வாய் ஜாலம்!

    சாலமன் மிகப்பெரிய அறிவாளி.
    அவருக்குப் பறவைகள் மற்றும் மிருகங்கள் பேசும் மொழியும் புரியும்.
    ஒருமுறை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தார்.
    இரு புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண் புறா, பெண் புறாவிடம் கோபமாக, “என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின் அரண்மனையையே இடித்து நிர்மூலமாக்கி விடுவேன்“ என்று கூறியது.
    இதனைக் கேட்ட சாலமன் மன்னர், அந்த ஆண் புறாவைத் தன் அருகில் அழைத்தார். அருகில் வந்த புறாவிடம்,
   “என்ன புறாவே.... இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன் என்றாயே.... எப்படி உன்னால் முடியும்?“ என்று கேட்டார்.
    அதற்கு அந்த ஆண்புறா, “மன்னரே.... என்னால் எப்படி முடியும்? ஏதோ என் மனைவியைத் திருப்தி செய்ய கூறினேன். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்“ என்று கூறிவிட்டு தன் மனைவியிடம் சென்றது.
   “மன்னர் கூப்பிட்டாரே.... எதற்குக் கூப்பிட்டார்?“ என்று பெண்புறா கேட்டது.
   “நான் அரண்மனையைத் தகர்த்து விடுவேன் என்று உன்னிடம் சொன்னதை மன்னர் கேட்டு பயந்து விட்டார். எனவே தான் என்னைக் கூப்பிட்டு அப்படியெல்லாம் செய்தவிடாதே... என்று என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்“ என்றதாம் ஆண்புறா.

புறாவுக்குக் கூட மனைவி என்றால் என்ன்ன்னா இளக்காரம்.... ம்ம்ம்.


03.10.2014

புதன், 1 அக்டோபர், 2014

நின்னில் நானே மயங்குகிறேன்!கண்ணே! கலையே! கற்பகமே!
    கண்ணால் பேசும் கவியமுதே!
பொன்னே! மணியே! பூஞ்சிட்டே!
    பொலியும் வண்ண ஓவியமே!
பெண்ணே! பேறே! பேரழகே!
    பேசும் அழகு மொழிகிளியே!
மின்னும் நிலவே! விண்மீனே!
    மெல்லப் பார்க்கும் பொன்மானே!

என்னே என்று பாடிடுவேன்!
    எழுத்தில் எதைநான் கோர்த்திடுவேன்!
சொன்ன தெல்லம் உலகினிலே
    சொக்க வைக்கும் உயர்வாகும்!
இன்னும் எதிலும் நீயெனக்கே
    இன்பம் அளிக்கும் உணர்வாகும்!
முன்னே உலவும் என்னுயிரே
    முனைந்த கவியைக் கேள்பெண்ணே!

பத்து மாத வலிஉன்னைப்
    பார்த்த வுடனே ஓடிவிட
சித்தம் குளிர உனைத்தூக்கிச்
    சிந்தை குளிர மார்பணைத்து
முத்தம் கொடுத்தேன்! வாழ்வினிலே
    மொத்த மாக நான்சோ்த்த
சொத்துச் சுகங்கள் அத்தனையும்
    சுடரும் உன்முன் தூசென்பேன்!

மெல்ல நடக்கும் வேளையிலும்
    மேனி குளிக்கும் போதினிலும்
சொல்லச் சிரிக்கும் நாழியிலும்
    சொக்க வைக்கும் பேச்சினிலும்
தொல்லை என்னும் குறும்பினிலும்
    தொடுத்த வார்த்தை கோர்வினிலும்
வல்ல நல்ல உயர்வுகளை
    வலமாய்க் கண்டேன் உன்னிடத்தில்!

அன்னை தந்தை மனம்மகிழ
    அறிவாய் அழகாய் வளர்தவளே!
தன்னை மட்டும் பார்க்காமல்
    தனிவாய் பணிவாய் நடப்பவளே!
உன்னை மற்றோர் புகழ்கின்ற
    உயர்ந்த அருளைத் பெற்றவளே!
நின்னை நானோ பெற்றிருந்தும்
    நினைவில் தாயாய் நிற்பவளே!

மனையும் இணையும் உயர்வான
    மகிழ்வே வாழ்வாய் அமையட்டும்!
வினைகள் உன்னை நெருங்காமல்
    விண்ணோர் உன்னைக் காக்கட்டும்!
உனைநான் பெற்றேன் என்பதிலும்
    உன்ன் தாயாய் உயர்வானேன்!
நினைக்க இனிக்கும் செந்தமிழே
    நின்னில் நானே மயங்குகிறேன்!

அருணா செல்வம்
01.10.2014