இளைஞன் ஒருவனுக்கு ஆன்மீக ஆர்வம்
வந்ததால் அவன் ஒரு முனிவரிடம் சீடனாகிப் படிப்படியாக ஞானி ஆனான்.
முனிவனின் மனைவி
கருவுற்றிருந்தாள். அந்தச் சமயத்தில் முனிவர் தன் பொறுப்புகளைத் தன் சீடரிடம்
ஒப்படைத்து விட்டு முனிவர் இமயம் சென்று விட்டார். (ஏன் என்றெல்லாம் கேட்காதீர்கள்....)))
முனிவரின் மனைவி பிரசவ வலியால்
துடித்த போது, அந்த அறைக்குள் ஒருவர் நுழைந்தது சீடனின் ஞானக் கண்ணுக்குத் தெரிந்து
விட்டது. உடனே....
“யார் அது? நில்லும்“ என்றார்.
வந்தவர் தன்னை இவன் கண்டுகொண்டானே
என்று விழித்து, சற்றுக் கழித்து “ஏன்?“ என்று கேட்டார்.
“பெண் பிரசவிக்கும் இடம் அது.
அங்கே நீர் போகக்கூடாது“ என்றார் சீடர்.
“நான் பிரம்மன். பிறக்கும்
பிள்ளைகளுக்குத் தலையெழுத்து எழுதப் போகிறேன். என்னைத் தடுக்காதே“ என்றார்
வந்தவர்.
சீடன்... “பிரம்மாவா? வணக்கம். சரி.
குழந்தைக்கு என்ன தலையெழுத்து எழுதப்போகிறீர்கள்?“
“அதை இப்போது என்னால் சொல்ல
முடியாது. நேரமாகிறது. வழியை விடு“ என்றார் பிரம்மா.
“வரும் போதாவது சொல்வீர்களா....?“
வழியை விடாமல் கேட்டான் சீடன்.
“சரி. முதலில் என்னை உள்ளே விடு“
என்று சொல்ல அவன் வழிவிட உள்ளே சென்றார்.
பிரசவம் நடந்தது. இரட்டைக் குழந்தை.
ஆண் ஒன்று. பெண் ஒன்று. தலையெழுத்தை எழுதிவிட்டு பிரம்மா வெளியில் வந்தார்.
வந்ததும், “என்ன எழுதீனீர்?“ என்று
கேட்டான் சீடன்.
“சொல்ல மாட்டேன்“
“சொல்லாமல் செல்ல உம்மை
விடமாட்டேன்“ என்றான் பிடிவாதமாக சீடன்.
“அது மோசமான விதி. ஆண் குழந்தை மாடு
மேய்த்துப் பிழைக்க வேண்டும். பெண் வேசியாகப் பிழைத்து வாழ வேண்டும்“ என்றார்
பிரம்மா.
“அப்படியா....?“ என்று கவலைப்பட்ட
சீடன், “இவர்கள் இருவருக்கும் உள்ள செல்வ நிலை என்ன?“ என்று கேட்டான்.
“அதிகம் இல்லை. ஆணுக்கு ஒரே ஒரு
மாடுதான் விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு ஒரே ஒரு ஆழாக்கு முத்து தான்
விதிக்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு தான் புத்தியுடன் அவர்கள் பிழைப்பு நடத்த
வேண்டும்“ என்றார் பிரம்மா.
“அந்த ஒரு மாடும் ஆழாக்கு முத்தும்
அவர்களுக்கு நிச்சயம் கிடைக்குமா?“ என்று கவலையுடன் கேட்டான் சீடன்.
“நிச்சயம் கிடைக்கும்“ என்று சொன்ன
பிரம்மா மறைந்து விட்டார்.
சில நாட்கள் கழித்து வந்த முனிவரிடம்
நடந்த உண்மையைச் சொல்லி விட்டு சீடன் தனியாக தவம் செய்ய போய்விட்டான்.
இந்த உண்மையை அறிந்த முனிவரும் அவர்
மனைவியும் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்கள்.
ஆண்டுகள் பல கழிந்த பிறகு சீடன் ஞானம்
பெற்ற ரிஷியாக திரும்பி அவ்வூருக்கு வந்தான். அங்கிருந்த மாடு மேய்ப்பவனைக் கண்டதும்
தன் ஞானத்தால் யார் இவன் என்பதைக் கண்டு கொண்டான்.
ரிஷி அவனைப்பற்றி சொன்னதும் அவன்
மகிழ்ந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது.
மற்றபடி எதுவும் இல்லை. அவனின் வறுமையைப் பார்த்த ரிஷி “இந்த மாட்டை விற்று
வீட்டிற்கும் உன் மனைவி குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கு“ என்றார்.
“ஐயோ என்னிடம் இருப்பது இந்த ஒரே
ஒரு மாடு தான். அதனால் நாங்கள் கால் வயிறு கஞ்சியாவது குடிக்கிறோம். இதுவும் இல்லை
என்றால்...“
“நான் சொல்வதைச் செய்.“ என்றார்
ரிஷி.
அவன் மறுநாளே சென்று மாட்டை
விற்றுவிட்டு வீட்டிற்கு வேண்டியதை வாங்கினான். அவன் மனைவிக்குச் சந்தோஷம். ஆனால்
மாடு போச்சே என்று இரவெல்லாம் தூங்காமல் கவலைப்பட்டான் அவன்.
காலை விடிந்ததும் பார்த்தால் அவன்
முற்றத்தில் ஒரு மாடு நிற்கிறது.
அதைக்கண்ட ரிஷி, “இதையும் விற்று
விடு.“ என்றார். அதன்படி அவன் செய்ய மறுநாளும் ஒரு மாடு.... இப்படியாக அனைத்து
மாடுகளையும் விற்று பொருள் சேர்த்து வளமாக வாழ்ந்தான்.
ஒரு நாள் “உன் சகோதரி எங்கே?“ என்று
கேட்டார் ரிஷி. “அவள் பக்கத்து ஊரில் விபச்சாரம் பண்ணுகிறாள்“ என்றான் கவலையாக.
உடனே அவர் அங்கே சென்று நடந்ததைக்
கூறி, “உன்னிடம் எவ்வளவு முத்து இருக்கிறது?“ என்று கேட்டார். அதற்கு அவள் “ஒரு ஆழாக்கு
முத்து இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக விற்று தான் பிழைக்கிறேன்“ என்றாள் கவலையாக.
“அந்த ஆழாக்கு முத்தையும் விற்று
விடு. இனி ஆழாக்கு முத்து கொண்டு வராதவர் யாரும் இங்கே வரக்கூடாது என்று
சொல்லிவிடு“ என்றார்.
அவளும் அதன்படி செய்தாள். அன்றிரவு
வந்தவன் ஆழாக்கு முத்துடன் வந்தான். மறுநாளும் அப்படியே என்று... அவள் ஒவ்வொரு
நாளும் ஆழாக்கு முத்தை விற்று சந்தோஷமாக வாழ்ந்தாள்.
ரிஷி அவர்களை விட்டு விலகி
நிஷ்டையில் ஆழ்ந்தார். பிரம்மா அவன் முன் தோன்றி, “என்னை இந்த மாதிரி
சிரமப்படுத்தி விட்டீரே!“ என்றார்.
“ஏன்? என்ன செய்தேன்?“ என்று கேட்டார்
ரிஷி.
“தினசரி அவனுக்கு ஒரு மாடும், அவளுக்கு
ஆழாக்கு முத்தும் கொடுக்க ஆளைத் தேடி சிரமப்படுகிறேனே“ என்றார் பிரம்மா.
“இது உம் விதி. அவர்களுடைய விதியை
அவ்வாறு ஆக்கியதற்கு தண்டனையாக உமக்கு விதித்த விதி இது“ என்றார் சிரித்தவாறு
ரிஷி.
கதை சொல்லும் நீதி என்னவென்றால் “விதியையும் மதியால் வெல்லலாம்“ என்பதே.
நன்றி.
அருணா செல்வம்
(எப்போதோ கேட்ட கதை)
