இழிவென்று சொல்லிவிட்டு
இளகாரம் பேசலாமா?!
கழிவென்ற நம்கழிவைக்
கழிக்காமல் அடக்குவோமா?
தொழிலென்று செய்கின்றார்
தொடர்ந்தேதான் செய்கின்றார்!
பழியொன்றும் இதிலில்லை!
படைத்தவனின் செயலுமில்லை!
ஏனிந்தத் தொழிலென்றும்,
எப்படித்தான் செய்கின்றார்?
கூன்மனத்தை நேராக்கி
கொஞ்சமெனும் யோசித்தால்
மேன்மக்கள் என்போரே
மேலிருந்து மிதித்திருக்க,
தானிருந்த நிலையினையே
தலைநிமிரா வாழ்கின்றார்!
இல்லாமை என்றாலும்
ஈனமெனச் சொன்னதில்லை!
கல்லாமை ஒன்றைத்தான்
கற்றோர்கள் சாடிநிற்பர்!
நல்வாழ்வை வாழ்வதற்கு
நல்லோர்கள் சொன்னவழி
“கல்வியெனும் ஒன்றேதான்
கடவுளென வழிகாட்டும்!“
அருணா செல்வம்
14.10.2013
