அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 நவம்பர், 2014

ரோஷம்!!



     “என்னங்க..... நம்ம மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்குப் பைக் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்களா....?“
   வேலைவிட்டு வந்த முருகனிடம் காபியை நீட்டியபடியே கேட்டாள் பங்கஜம்.
    “ஆமா. இப்ப அதுக்கென்ன?“ சற்று சளிப்புடன் சொன்னான் முருகன்.
   “காலையில ரேவதி போன் பண்ணினாள். இன்னைக்குச் சாய்ந்தரம் பக்கத்தல இருக்கிற கோவிலுக்கு அவளும் அவ மாமியாரும் வர்றாங்களாம். அப்படியே இங்க வந்திட்டு போறேன்னு சொன்னாள். அது மட்டுமில்லாம நீங்க பைக் வாங்கித் தர்றேன்னு சொன்னதை நியாபகப் படுத்தச் சொன்னாள்“ என்றாள் பங்கஜம்.
   “ம்... வாங்கனும் அதுவும் நம்ம கடமை தானே....“
    “எதுக்குங்க நீங்க இதுக்கு ஒத்துக்கினீங்க? கல்யாணத்துக்கே நிறைய செலவு. இப்போ இது வேறயா...?“ பங்கஜம் கொஞ்சம் கோபமாகக் கேட்டாள்.
    “இத பாரு பங்கஜம். நாம பைக் வாங்கித் தரலைன்னா அந்த வக்கத்தவன் நம்ம ரேவதிய ஆட்டோவுல இல்லாடி நடந்து தான் கூட்டிக்கிட்டு போவான். வெளிய பாக்குறவங்க என்னைத் தான் குறையா பேசுவாங்க. செலவோட செலவா இதையும் செஞ்சிதான் ஆகனும்.“
    முருகன் சொல்லி முடிக்கவும் ரேவதியும் அவள் மாமியாரும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அந்தச் சந்தர்ப்பம், நான்கு பேருக்குமே அதிர்ச்சி! என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
   சம்பரதாய பேச்சு வார்த்தைகள் உபசரனைகள் முடிந்து கிளம்பிய மகளின் கலங்கிய விழிகள் பங்கஜத்தின் மனத்தைப் பிழிந்தது.

    நாளுக்கு மூன்று முறை அம்மாவுடன் தொலைபேசியில் பேசும் ரேவதி, இப்போதெல்லாம் மூன்று நாளைக்கு ஒருமுறை அதுவும் இரண்டொரு வார்த்தை என்று பேச்சைக் குறைத்திருந்தாள். இதைக்கவனித்த மாமயார் ரேவதியிடம்.... “ரேவதி.... நீ ஏன் முதல்மாதிரி உன் அம்மாகிட்டே பேசுறதில்லை?“ என்று கேட்டாள்.
   “நான், அவங்க எனக்குச் செய்த சீதனம் எல்லாம் என் மேல இருக்கிற அன்பால தான் செய்தாங்கன்னு நெனச்சிட்டேன். ஆனா இப்போ தான் புரியுது. இவரால இதெல்லாம் வாங்க முடியாது என்ற காரணத்தால தான் எனக்கு எல்லாமே வாங்கித் தந்தாங்கன்னு நினைக்கும் போது கவலையாக இருக்கிறது மாமி“ என்றாள் லேசான அழுகையுடன்.
    “இதுல என்னம்மா கவலை? இப்படியெல்லாம் கொடுக்கனும். இப்படியெல்லாம் வாங்கனும். இது தான் கௌரவம்ன்னு இன்றைய கால கட்டத்தில் எழுத்தாத சட்டம் இருக்கே. இதுக்கெல்லாம் அம்மா அப்பாகிட்ட கோவிச்சிக்கினா பிறகு உனக்கு தான் கஷ்டம். எப்போதும் போல நீ உன் அப்பா அம்மாகிட்ட பேசும்மா“ என்றாள் கனிவாக மாமியார்.
   “இல்லை மாமி. உங்க பிள்ளையை என் அப்பா வக்கத்தவன்னு சொன்னது எனக்குக் கோபம் தான் மாமி. அதை மறக்க முடியலை மாமி“ என்றாள் சற்று கோபமாக.
   “ரேவதி... இதுக்கெல்லாம் ரோசப்பட்டா நம்முடைய சந்தோஷங்கள் தான் வீணா போகும். எனக்குக் கல்யாணம் ஆகி என் அம்மா வீட்டிற்கு மறுவீடு போனோம். அப்போ, கல்யாணம் ஆன புதியதில் உன் மாமா ரொம்ப ஒல்லியா இருப்பார். அந்த நேரத்துல அங்க வந்த என் அப்பாவின் நண்பர் “என்னப்பா... மாப்பிள்ளை ரொம்ப ஒல்லியா இருக்கிறார்“ என்று சொன்னார். உடனே என் அப்பா “அதனாலென்ன நம்ம வீட்டுல கறி எலும்புன்னு ஆக்கிப் போட்டா போவுது“ என்று சிரித்துக் கொண்டு தான் சொன்னார். ஆனால் அதைக்கேட்ட என் கணவர், அன்னைக்குக் கோவத்துடன் வெளியே வந்தவர் தான். தான் சாகிற வரைக்கும் என் அப்பா வீட்டில் கை நனைக்கவே இல்லை. என் தங்கச்சிங்க எல்லாம் நல்ல நாளு கிழமையில அம்மா வீட்டுல தங்கி சந்தோஷமா இருக்க நான் மட்டும் போய் பார்த்திட்டு உடனே இவருடன் திரும்பிடுவேன். அவரோட ரோஷத்தல நானும் அப்பா வீட்டில் சாப்பிடவே முடியலை. அந்தக் கவலை எனக்கு இன்னைக்கும் இருக்குதும்மா. அதனால தான் சொல்றேன். நாம அம்மா அப்பா மேல ரோஷப்பட்டா நமக்குத் தான் நஷ்டம். பேசாம இதை மறந்திட்டு எப்போதும் போல சகஜமா பேசு“ என்றார் மாமியார்.
   ரேவதி சற்று தெளிந்து “சரி மாமி“ என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். எதிரில் அவள் கணவன்...
   “ரேவதி... உன் அப்பாகிட்ட பைக் வேணான்னு சொல்லிடு. வேலையில லோன் கேட்டிருக்கேன். அதுல கார் வாங்க போறேன்னு சொல்லிடு“ என்று சொல்லிவிட்டு விர்ரென்று போனான்.
   ரேவதியும் மாமியாரும் ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டார்கள்.

அருணா செல்வம்

12.11.2014

வியாழன், 6 நவம்பர், 2014

“அம்மா“ என்றே சொல்லிப்பார்!!



தாயின் மொழிக்கோர் பாட்டெழுதத்
        தானே அமர்ந்தேன் தாளெடுத்து!
வாயில் வார்த்தை வதைந்தாலும்
        வடிவாய்ச் சேர்த்தேன் கோலெடுத்து!
தீயின் தன்மைச் சேர்க்காமல்
        சிறந்த சீரால் சொல்லெடுத்துச்    
சேயின் குரலால் செப்புகிறேன்
        செம்மைத் தமிழில் கவிதொடுத்து!

இம்மாம் பெரிய உலகத்தில்
       இனிய மொழிகள் பலவுண்டாம்!
தம்மா தோண்டு சொன்னாலும்
       தமிழின் சொல்லில் இனிப்புண்டாம்!
அம்மா என்றே சொல்லிப்பார்!
       அமிர்தம் ஊறும் உன்வாயில்!
சும்மா நானோ சொல்லவில்லை
       சொல்லும் போதே சுவையறிவாய்!

எங்கள் இதயம் ஏற்றமொழி
    எழுதும் ஏட்டில் மின்னிடுமே!
எங்கள் பிள்ளைச் செல்வங்கள்
       ஏனோ தமிழைத் தள்ளுகிறார்!
சங்கம் அமைத்த சான்றோர்கள்
       சரியாய் இதனைக் கவனித்தால்
தங்கம் போன்ற மொழிகற்றுத்
       தாயாம் தமிழை அறிந்திடுவார்!
  
அன்னை மொழிக்கோர் அழகுண்டாம்!
       ஆழ்ந்து கற்றால் பயனுண்டாம்!
பொன்னை விடவும் மதிப்புண்டாம்!
       புதிய பொருளின் பொலிவுண்டாம்!
முன்னை இருந்த மொழிக்கெல்லாம்
       முன்னில் பிறந்து வந்ததெனத்
தொன்மை நூல்கள் சொல்வதைநாம்
       தொழுது படித்தால் உயர்வுண்டாம்!

 அருணா செல்வம்

 06.11.2014

வியாழன், 28 நவம்பர், 2013

பெரிய சொத்து!!


   “என்னங்க... நீங்க பேசாம வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க“ கண்களில் தளும்பி நின்ற கண்ணீரை மறைத்தபடி சொன்னாள் அபர்ணா.
   “என்ன அபர்ணா.... என்னாச்சி உனக்கு?“ சற்றுக் குழப்பத்துடன் கேட்டான் சேகர்.
   “ஆமாங்க. நமக்குக் கல்யாணம் ஆகி பதினைந்து வருஷம் ஆயிடுச்சி. இனிமேலும் எனக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைப் போயிடுச்சி“ என்றாள் குரல் தழுதழுக்க.
   “அபர்ணா.... உனக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து உனக்குக் குழந்தையே உண்டாகி இருக்கவில்லை என்றால் இப்படி யோசிக்கலாம். ஆனால்... கல்யாணம் ஆன உடனே தரிச்சதை, வீட்டுல ரெண்டு தங்கைகள் கல்யாணத்திற்கு நிற்கிறார்கள் என்று அம்மா சொன்னதால கலைச்சே. இரண்டாவது என் தங்கையும் அதே நேரத்துல கர்ப்பமா இருந்ததால, இந்த நேரத்துல வேண்டாம்ன்னு என் அம்மா சொல்லுக்கே கலைச்சே. அந்த பாவமோ என்னவோ அதன் பிறகு உனக்குக் கருவே கூடலை. ப்ச்சி“ கவலையுடன் சொன்னான்.
   “அது என்னோட தப்பு தாங்க. மற்றவர்களுக்காக என் குழந்தையைக் கலைச்சேன். நான் அப்பவே அதற்கு ஒத்துக்காமல் இருந்திருந்தா... இப்படி பேசி இருக்கமாட்டேன்.“ வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.
   “கவலை படாதே அபர்ணா. இதுக்குக் காரணம் நீ மட்டும் இல்லை. நானும் அம்மாவும் தான் காரணம். அன்னைக்கு இருந்த சூழல் அப்படி. நானும் தான் வாய்பேசாமல் சம்மதித்தேன். அப்போது வேற வழி நமக்குத் தெரியலை. அதுக்காக இப்போ பழியை உன்மேல மட்டும் சுமத்த முடியாது. பொறு. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்“ என்றான் ஆறுதலாக.
   “இன்னும் கொஞ்ச நாள் கழித்து இந்த முடிவை எடுக்கிறதைவிட இப்பொழுதே இதற்கு ஒரு முடிவு எடுக்கலாமே.“ என்று அவள் சொல்ல,
   “நான் எற்கனவே ஒரு முடிவு எடுத்திட்டேன் அபர்ணா“ என்றான்.
   “என்ன அது?“
   “ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்ன்னு தான்“
   “அது முடியாதுங்க“
   “ஏன்...?“
   “இந்த முடிவுக்கு உங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க. அவங்களுக்கு நீங்க ஒரே ஆண்பிள்ளை. தன் பிள்ளையோட வாரிசு தான் அவங்களுக்குத் திருப்தியைத் தரும். அது மட்டுமில்லாம உங்களுக்குத் தான் எந்த குறையும் இல்லையே“ என்றாள் பெருமூச்சுடன்.
   “அதுக்காக... நா..“ அவன் ஏதோ சொல்ல வருவதற்குள், “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து பேசி இந்த முடிவை எடுத்து என்னிடம் சொன்னால் எனக்கு அது தாங்க முடியாத கவலையைத் தரும். அதைவிட நானே ஒதுங்கிக் கொள்வது தான் நல்லது. இந்த முடிவை நானே உங்க அம்மாவிடம் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்புகிறேன்“ என்று எழுந்து போனாள்.
   அவன்,“சரி“ என்று சத்தமாகச் சொன்ன வார்த்தை ஈயத்தைக் காய்ச்சி காதில் விட்டது போல் வலித்தது.

   அபர்ணா மனங்கனக்க வீடு திரும்பியதும், சேகர் ஒரு காகிதத்தை நீட்டி கையெழுத்துக் கேட்டான். அபர்ணா புரியாமல் பார்த்தாள். “அபர்ணா... இது விவாகரத்து பேப்பர். நமக்கு விவாகரத்து ஆனால் தான் நான் வேற கல்யாணம் பண்ணிக்க முடியுமாம். கையெழுத்துப் போடு“ தாளை நீட்டினான்.
   அபர்ணா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
   “ம்... கையெழுத்துப் போடு. நீ தானே எப்போ பார்த்தாலும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அழுத வடியிற. உன் திருப்திக்காகத்தான் இந்த ஏற்பாடு. அம்மா... ஏற்கனவே நல்ல இடத்துல பார்த்து ஏற்பாடு செஞ்சி வச்சிட்டாங்களாம். இப்போ நீ தான் சம்மதிக்கணும்.“ திரும்பவும் தாளை அவன் முன் நீட்டினான்.
   அபர்ணா... பதில் பேச முடியாது வேர்த்துப் போய் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
   “சேகர்... நீ சும்மா இரு. நான் அவளிடம் பேசிக்கிறேன்.“ அவனின் அம்மா அவன் கையிலிருந்தத் தாளை வாங்கிக் கொண்டு அவள் அருகில் வந்து அமர்ந்தாள். அபர்ணா மிரட்சியுடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
   “என்ன அபர்ணா பயந்துட்டியா...? கவலைப்படாதே. உனக்குக் குழந்தைப் பிறக்காததுக்கு நானும் ஒரு காரணம் தான். கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க வீட்டுல இருக்கும் பொழுது உன்னைத் திடிர்ன்னு கல்யாணம் பண்ணி அழைச்சிக்கினு வந்துட்டான். அந்த கோபம் எனக்கு அப்பொழுது அதிகமா இருந்தது. என்னோட கோபத்தை மாற்ற நான் சொன்னதுக் கெல்லாம் நீ சரின்னு சம்மதிச்சே. என் பெண்களைப் பற்றி நான் யோசிச்சேனே தவிர உன்னை பத்தி கவலைப்படலை. அதுவும் என்னோட தவறு தான். அதுக்கு பிரயசித்தம் தான் இது. இந்தா இந்தத் தாளுல கையெழுத்து போடு.“ தாளை நீட்டினாள்.
   அபர்ணா ஏதும் புரியாதவளாக அவளைப் பார்த்தாள். நெற்றியில் புத்த வியர்வை காதோரத்தில் வழிந்தது. அவளின் பயந்த முகத்தைக் கண்டவள், “அபர்ணா... இது சேகர் சொன்னது போல விவகாரத்து பத்திரம் கிடையாது. ஒரு குழந்தையைச் சட்டப்படி தத்து எடுக்கிறதுக்கான பத்திரம். பயப்படாமல் கையெழுத்து போடு“ என்றாள்.
   அதைக் கேட்டதும் நம்பாதவளாக அபர்ணா சட்டென்று அந்தத் தாளை வாங்கிப் படித்துப் பார்த்தாள். “மாமீ... இதுக்கு எப்படி நீங்க ஒத்துக்கினிங்க?“ அதிர்ச்சியுடன் கேட்டாள்.
   “ஏன்?“
   “தன் பிள்ளையோட வாரிசா இருக்கனும்ன்னு தானே எந்த அம்மாவும் விரும்புவாங்க.... நீங்க எப்படி...“
   “எல்லா அம்மாவும் அதைத் தான் விரும்புவாங்க. அவங்களுக்கெல்லாம் சொத்து பத்துன்னு வசதி இருக்கும். நாளைக்கு அதை ஆள ரத்த சொந்த வாரிசுக்கு ஆசைப்படுவாங்க. நமக்கு அந்த பிரட்சனையே இல்லையே. இப்போ இந்த குழந்தையை வளர்ப்போம். நாளைக்கு உன் வயத்துல ஒரு குழந்தை பொறந்தா அதை வளக்கலாம். நமக்கு அந்த மனசே பெரிய சொத்து அபர்ணா“ என்று சொல்லியபடி தாளை வாங்கி மகனிடம் கொடுத்தாள்.
   அதை வாங்கிக் கொண்டவன், “அபர்ணா... வா... நாம மூனு பேரும் போய் குழந்தையைப் பார்த்துவிட்டு வரலாம்“ என்று அழைக்க முழுமகிழ்ச்சியுடன் கிளம்பினாள் அபர்ணா.
    
அருணா செல்வம்
29.11.2013