எடுப்பு
உள்ளுக்குள் மறைத்தேனடி – தோழி
உணர்ந்திட அதுதேனடி!
தொடுப்பு
சொல்லுக்குள்
மறைத்தேனடி – அதைச்
சொல்லிடச் சுவைத்தேனடி!
முடிப்பு
கரும்புக்குள்
இருந்திடும்
கற்கண்டு
கண்களில் தெரியுமோ சொல்இன்று!
உருவத்தில் இருந்திடும் உயிர்கண்டு
ஒலித்திட முடியுமோ சொல்நின்று! (உள்ளுக்குள்)
மலருக்குள் வீசிடும் வாசமதை
மதியுடன் பிடித்துடன் காட்டிவிடு!
கலந்திட்ட நதிகளின் நன்னீரைக்
கடலினில் பிரித்துடன் காட்டிவிடு! (உள்ளுக்குள்)
வண்ணத்தில் ஆடிடும் ஆசைகளை
வார்த்தையில் வடித்திட ஏதெல்லை!
எண்ணத்தில் இருந்திடும் அவன்செயலை
எழுதிட நினைப்பதோ வீண்வேலை! (உள்ளுக்குள்)
அருணா செல்வம்
21.05.2014
