வாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 செப்டம்பர், 2014

கவிஞர் வாலியின் நகைச்சுவை!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கவிஞர் வாலி அவர்களின் இந்த நகைச்சுவையை நீங்கள் ஏற்கனவே கேட்டு ரசித்திருக்கலாம். ஆனால் நான் நேற்று தான் கேட்டேன். இதை ஏற்கனவே கேட்காதவர்கள் அவரின் சாமார்த்திய பேச்சின் நகைச்சுவையைப் படித்து மகிழுங்கள்.

   ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தில் பாடல் எழுதுவதற்காக கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
   அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுத்து இருக்கிறார்.
   உடனே ரஜினி அவர்கள் கவிஞர் வாலியிடம் “இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்“ என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார். அங்கே கவியரசர் வைரமுத்து அவர்கள் ரஜினியைப் பார்க்க வந்து வாசலில் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
   ரஜினிக்குக் கொஞ்சம் சங்கடம். வைரமுத்து அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். என்ன செய்வது என்று தெரியாமல் “நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்“ என்று ரஜினி வைரமுத்துவிடம் சொல்லி விட்டு திரும்பவும் வாலி இருந்த அறைக்குள் வந்தார்.
   வந்தவர் கவிஞர் வாலியிடம் “ஐயா.... இன்று சிங்கமும் புலியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள போகிறார்கள்“ என்று சொன்னார்.
   அதைக்கேட்ட வாலி உடனே, “யாரு.... வைரமுத்து வந்திருக்கிறாரா?“ என்று கேட்டார்.
  ரஜினியும் “ஆமாம் ஐயா“ என்று பதில் சொன்னார்.
   உடனே கவிஞர் வாலி கேட்டார்...., “ஆமாம்.... எங்களில் யார் சிங்கம்? யார் புலி?“ என்று.
   ரஜினிக்கு மிகவும் தர்மச்சங்கடமாகி விட்டது. “ஐயா... அது வந்துங்க... நீங்க ரெண்டு பேருமே.....“ என்று இழுத்து இருக்கிறார் ரஜினி.
   அவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கவிஞர் வாலி, “இதில் என்ன தயக்கம்? இங்கே நான் தான் சிங்கம்.“ என்று மிகச்சாதாரணமாக சொன்னார்.
   ரஜினி, அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அசடாகச் சிரித்தார். அவரைப் பார்த்த கவிஞர் வாலி, “என்ன ரஜினி...  என்னை நானே சிங்கம்ன்னு சொன்னது ஏன் என்று தெரியவில்லையா?“ என்று கேட்டார்.
   ரஜினி “இல்லை“ என்று தலையாட்டி இருக்கிறார்.
   உடனே கவிஞர் வாலி, “இங்கே எனக்குத் தானய்யா தாடி இருக்கிறது“ என்றார் தன் தாடியைத் தடவி விட்டுக்கொண்டே...
   அவர் சொன்னதின் பொருளைப் புரிந்து கொண்ட ரஜினி வியந்து ரசித்துச் சிரித்தார். அங்கு வந்த வைரமுத்து அவர்களிடமும் இதைச் சொல்ல அவரும் சேர்ந்து சிரித்தார்.

கேட்டதில் ரசித்தது.
அருணா செல்வம்.

22.09.2014

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கவிஞர் வாலியின் எதிராளியின் பலம்! (நகைச்சுவை)




    தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலியை ஒரு நண்பர் சந்தித்தார்.
    “ஏன் இந்தப் பெயரை வைத்துக் கொண்டீர்கள்?“ என்று கேட்டார்.
    அதற்கு வாலி, ராமாயணத்தில் வரும் வாலி தன் எதிராளியின் பலத்தில் பாதியைப் பெற்றுள்ளது போல நான் சந்திக்கும் அறிஞர்களின் திறமையில் பாதி எனக்கு வரட்டுமே என்று நினைத்து இந்த புனை பெயரை சூட்டிக் கொண்டேன்“ என்றார்.
    “அப்படி ஒன்றும் உங்களுக்கு அறிவு வந்துவிட்டதாகத் தெரியவில்லையே...!“ என்று நக்கலாக சொன்னார் நண்பர்.
    அதற்கு வாலி, “என்ன செய்வது! நான் இன்னும் ஒரு அறிஞனையும் சந்திக்கவில்லையே!“ என்றார் வாலி சிரித்தபடி.
    நண்பரும் வாலியின் நகைச்சுவையை ரசித்தார்!!

-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.