செவ்வாய், 14 ஜூன், 2022

தோழ தோழியருக்கு வணக்கம் !

      கடந்த சில நாட்களாக கி.பி மூன்றாம் நுற்றாண்டில் பத்துப்பாட்டுத் தொகுப்பில் அடங்கிய கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டு என்ற நுலில் இருந்த 99 மலர்களின், அவர் அக்காலத்தில் குறிப்பிட்ட பெயரையும். அதையே நாம் இக்காலத்தில் அறிந்திருக்கும் பெயருடன், அம்மலரின் அல்லது அம்மரத்தின் பயனையும் நேரிசை வெண்பாவாக எழுதிப் பதித்திருந்தேன். இதில் “வாரம்“ என்ற மலரைப்பற்றி இணையத்தில் தேடியும் தெரிந்தவர்களிடம் கேட்டும் என்னால் அறியமுடியவில்லை. அதனால் அம்மலரை மட்டும் நான் எழுதவில்லை.
    மற்ற 98 மலர்களை அனேகமாகச் சரியாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறு இருப்பின் மன்னித்துச் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
     தவிர, என் பாடல்களைப் படித்து அதற்கு விருப்பக் குறியிட்டும் கருத்துக்கள் எழுதியும் என்னை ஊக்குவித்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.
நன்றியுடன்
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

99. தாழை! (தென்னந்தாழை)

 


.
தென்னை மரம்முழுதும் சீராய் பயன்தரும்!
தென்னம்பூ பாளை தேடியதைத் - தின்னக்
குடலிறக்கம் பேதி குணமாகும்! சூட்டின்
உடலெரிச்சல் போக்கும் உணவு!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022
 

(கைதை என்பது தாழம்பூ
தாழை என்பது தென்னந்தாழை)

நெய்தல் மலர்! (வெள்ளாம்பல்)

 


நெய்தல் மலர்உவர் நீரில் மலர்ந்திடும்!
தெய்வத்தின் மேல்சாற்றார்! தேனெடுக்க _ மொய்த்திடும்
வண்டு மதிமயங்கும்! வைகறையில் பூக்குமிதன்
தண்டுமிகக் குட்டையான தாம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

 
(குறிஞ்சிப்பாட்டில் இரண்டு நெய்தல் மலர்கள் உள்ளன.
நீள்நறு நெய்தல் என்பது நீலாம்பல்
மணிக்குலைக் கள்கமழ் நெய்தல் என்பது வெள்ளாம்பல்)
 
(நெய்தல் நிலப் பூக்களாக அடும்பு, புன்னை, ஞாழல், கோங்கு, தாழை, தும்பை, நெய்தல் ஆகும்)
 
(ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்ற பெயர்களைக் கொண்ட நீர் மலர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையாகும்)

வியாழன், 9 ஜூன், 2022

வடவனம்! (கருந்துளசி)

 


வாய்நாற்றம் போக்கும் வடவனம்! கண்புரை
நோய்,சளி தொல்லை நொடிந்தோடும்! - மாய்ந்த
கருவை வெளியேற்றும்! காய்,தண்டு, பூவும்
தரும்பயன் என்றும் தழைப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

 

(துழாய் என்பது செந்துளசி

வடவனம் என்பது கருந்துளசி.

சிலர் ஆலமரம் என்றும். ஒருசிலர் திருநீற்றுப் பச்சிலை என்றும்

சொல்கிறார்கள்)

வேங்கை மலர்! (வேங்க மரம்)

 விலையுயர்ந்த கட்டையில் வேங்கையும் ஒன்று!
மலையோரம் நன்றாய் வளரும்! - இலை,ஐந்து
கூட்டிலைக் காணும்! குளிர்ச்சியைத் தந்திடும்!
ஓட்டும் பலநோய் ஒழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

பிண்டி மலர்! (அசோக மரம்)

 


குட்டைமரப் பிண்டியில் கொத்தாய் மலர்மலரும்!
கட்டுக் குழலிலும் காதிலும் - கட்டிவைப்பார்!
அன்றைய மக்கள் அசோகமரம் என்றார்கள்!
இன்றும் அதுவே இருப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

செவ்வாய், 7 ஜூன், 2022

93. குளவி மலர்! (மலை மல்லிகை)

 


குளவிமலர் பூக்கும் குறிஞ்சி நிலமோ
அளவிலா வாசத்தில் ஆழ்த்தும்! - வளரும்
மலையின் பெயரை மல்லியாகப் பெறும்
தலையிலும் வைக்கத் தகைப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

 
(மௌவல் என்பது மரமல்லி
குளவி என்பது மலைமல்லிகை)

தோன்றி மலர்! (இருநிறக் காந்தள்)


 


.
சீர்ச்சுடர்போல் தோன்றிச் சிறப்புறும் தோன்றிமலர்
கார்காலம் வந்திடக் காத்திருக்கும்  வேர்மண்ணில்!
செவ்விதழ்கள் மேல்நோக்கச் சேவலின் கொண்டைபோல்
கவ்விடும் நெஞ்சைக் கவர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

 

(காந்தள் என்பது செங்காந்தள்

கோடல் என்பது வெண்காந்தள்

தோன்றி என்பது இருநிறமும் கொண்ட காந்தள்)

மராஅம் மரம் ! (வெண் கடம்பு)

 


திருமால் முருகனுக்குத் தேவையான பூவாய்
அருமைமராம் பூக்கள் அமையும்! - பெருமரம்
கட்டிடச் சாரமிடக், காகிதம், தீக்குச்சி,
பெட்டியெனச் செய்வதும் பேறு!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

வெள்ளி, 3 ஜூன், 2022

வள்ளிப்பூ! (வள்ளிக்கிழங்கு கொடி)

 


வள்ளிக் கிழங்கானது வாதநோயைச் சீராக்கும்!
உள்ளுறுப்பின் புத்துணர்வை ஊட்டிடும்! - வள்ளல்போல்
நன்மை கொடுத்திடும் நார்ச்சத்து மிக்கது!
இன்சுலின்சீர் செய்யும் இனிது!
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2022

மருதம் ! (மருத மரம்)

 


பெரும்பாட்டைச் சீராக்கிப் பெண்களைக் காக்க
மருதமரப் பட்டை  மருந்து! - கருப்பைநோய்,
தூக்கவின்மை, காதுவலி, சுக்கிலசு ரப்பியின்
வீக்கமும் போக்கும் விரைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2022

பாங்கர்! (உகாய் மரம்)

 


பாங்கரின் குச்சிகளில் பற்கள் துலக்கலாம்!
பூங்கொத்துகள் காய்க்கும் பொலிவுடன்! - தீங்கின்றி
வீழ்ந்திடும் கார விதையை பறவையுண்ணும்!
ஆழ்நிற வண்ணம் அழகு!
.
பாவலர் அருணா செல்வம்
03.04.2022

புதன், 1 ஜூன், 2022

ஞாழல் மலர் ! (புலிநகக் கொன்றை )

 .
தங்கம்போல் மின்னித் தனியழகு கொண்டதால்
நங்கையரை ஈர்த்திடும் ஞாழலாம் ! - பொங்கிடும்
மஞ்சளும் செந்நிறமும் மாற்றமிட்டும், காற்றினில்
மிஞ்சிடும் வாசமே மேல்!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022

முல்லை மலர்!

 கல்லிவர் முல்லைமலர் கண்பார்வை கூட்டிடும்!
சொல்லில்லா ஆசையைத் தூண்டிடும்! - மெல்ல
மனம்மயக்கும் வாசமுல்லை மாலையில் பூக்கும்!
மனநோயைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022

வஞ்சி மலர் ! (இலுப்பை மரம்)

 தழை,விதை,பூ, பட்டை, தகுந்த மருந்தாம் !
மழையை வரவழிக்கும் வஞ்சி ! - பழையோர்
இனிப்புக்குப் பூவும் இருளோட எண்ணை
கனிமதுவும் உண்டார் களித்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022

திங்கள், 30 மே, 2022

ஈங்கை மலர் !

 .
இயற்கை எழிலாக ஈங்கை மலரும்!
வயல்வெளியில் பூக்கும் வளமாய்! - பயனெதும்
இல்லையிதில்! முட்செடி ஈங்கையின் பூமழை
நல்லின்பம் என்பார் நவின்று!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2022

மாரோடம்! (செங்கருங்காலி மரம்)

 முதிர்ந்தமரக் கட்டையில் கைப்பிடிகள் செய்வர்!
கதிர்வீச்சு நம்முடலைக் காக்கும்! - அதிக
மருத்துவ தன்மையுள்ள மாரோடம் நீரை
அருந்த உடலுறுதி யாம்!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2022

வேரல் மலர்! (சிறுமூங்கில்)

 


வேரல் பொதுவாக வேலிக் குதவிடும்!நீர்ச்
சாரலுள்ள பக்கம் தழைத்திடும்! - வேரலில்
கூடை,முறம் செய்வுதவும்! கொத்தாய்ப் புதர்களில்
கோடையில் வளருங் கொழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2022

செவ்வாய், 24 மே, 2022

போங்கம் மலர்! (ஆனைக்குன்றி மணி)

 


போங்கம் உடல்வலி போக உதவுகிறது!
தேங்கும் கொழுப்புநோய் தீர்த்திடும்! - வீங்கிய
மூட்டெலும்பைச் சீராக்கும்! முற்றிய ஈரல்நோய்
வாட்டத்தைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2022

(போங்கம் திலகம் என்ற இரண்டையும் “மஞ்சாடி மரம்“ என்றே சொல்கிறார்கள்.)

பூளைப்பூ! (சிறுபீளைப்பூ)

 


சிறுநீர்ப்பை கல்லைச் சிறப்பாய்க் கரைக்கும்!
சிறுபீளை நோயெதிர்ப்பைச் சேர்க்கும்! - சிறுநீர்
உறுப்புகளைக் காத்திடும்! ஒவ்வாமை நீக்கி
உறுதிசெய்யும் பூளை உயர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2022

குரலி மலர்! (சிறுசெங்குரலி)

 


குளத்தில் வளரும் குரலிக் கொடியே
வளம்கருந் தாமரை வண்ணம்! - அளவில்
சிறுமலர் கொண்ட சிறுசெங் குரலி
பெறும்பயன் வித்திலுள்ள பேறு!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2022

புதன், 18 மே, 2022

மாம்பூ! (மாமரம்)

 


முக்கனியில் ஒன்றாகி முந்திவரும் மாங்கனி!
எக்கனிக்கு ஈடாம் இதன்சுவை? - பக்குவமாய்
மாம்பருப்பை உண்ண வயிற்றோட்டம் சீராகும்!
மாம்பூ கொழுந்தும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
18.05.2022

செவ்வாய், 17 மே, 2022

குருந்தம் மலர்! (காட்டு எலுமிச்சை)

 


குருந்தம்வேர் வீட்டின் குறைகளைப் போக்கும்!
குருகுலக் கல்விக் குதவும்! - மருந்தாக
வாசமலர் நீரருந்த வாயுநீங்கும்! வேரினால்
தோசம் விலகுமாம் தோய்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.05.2022

திங்கள், 16 மே, 2022

எருவை மலர் ! (பெருநாணல்)

 


எருவைப்புல் ஆற்றோரம் எங்கும் வளரும்
பெருநாணல் ஆகும் ! பெரிதும் - எருமை
விரும்பியுண்ணும்! மூத்தோர் விரைந்து நடக்கத்
தரும்ஊன்று கோலாகும் தண்டு!
.
பாவலர் அருணா செல்வம்
16.05.2022

புதன், 11 மே, 2022

குறுநறுங் கண்ணி ! (குன்றிமணி மரம்)

 


குறுநறுங் கண்ணியெனும் குன்றிமணி அன்று
சிறுபொன் எடைபார்க்க செய்வர்! - உறும்விசம்
கொண்ட விதைஉயிரைக் கொல்லும்! குன்றிமணி
கண்கொண்ட பிள்ளையார் காண்!
.
பாவலர் அருணா செல்வம்
11.05.2022

செவ்வாய், 10 மே, 2022

நெய்தல் மலர்! (நீலாம்பல்)

 


நீண்டதாய்க் காம்பிருக்கும் நெய்தல் மலர்களைக்
வேண்டும் கடவுளுக்கு வைத்திடுவார்! - காண்பதற்கு
பெண்விழி யொக்கும்! பெருமளவு தூய்மையுள்ள
தண்ணீரில் பூக்கும் தழைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
10.05.2022

திங்கள், 9 மே, 2022

73. வழை மலர் ! (சுரபுன்னை)

 

 


வழைமரப் பூக்கள் வயிற்றுப்புண் போக்கும்!
தழையின்நீர் வெப்பந் தணிக்கும்! - மழைநீரைச்
சேர்த்துவைக்கும் ! எண்ணை, சிரங்குபடை, குட்டரோகம்
தீர்த்திடும் பத்தியமாய்ச் சேர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.05.2022

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

பயினி மலர்! (அரக்கு மரம்)

 


பயினிமரம் ஒட்டும் பசையைக் கொடுக்கும்!
வயிரத்தைத் தீட்டஇதை வார்ப்பர்! - தெயிவத்தைப்
பீடத்தில் நிற்கவைக்க பேருதவி செய்திடும்
ஓடத் துளையடைக்கும் ஒட்டு!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2022

வியாழன், 28 ஏப்ரல், 2022

கூவிரம் மலர்! (மாவிலங்கம்)

 


கூவிரம் என்பதை மாவிலங்கம் என்பார்கள்!
மூவிலைக் கூட்டாய் முளைத்திருக்கும்! - பூவினும்
பட்டை,இலை, வேரும் பயன்தரும் ! நாள்பட்ட
கட்டியையும் போக்கும் கரைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
28.04.2022

புதன், 27 ஏப்ரல், 2022

வெட்சி மலர் ! (இட்டிலிப்பூ)

 


வெட்சி மலர்மாலை வேலவனுக் கானதாம்!
இட்டிலிப்பூ என்கிறார் இந்நாளில்! - கட்டுதற்கு
பாங்காக நீண்டும் பலநிறத்தில் பூக்கிறது !
நீங்கா வழகில் நிலைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
27.04.2022

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

பசும்பிடி ! (பச்சிலைப்பூ)

 


பச்சிலைப்பூ என்னும் பசும்பிடியின் கட்டைகள்
தச்சத் தொழிலுக்குத் தக்கதாம்! - பச்சை
இளமுகிழை மெல்ல இனியமணம் வீசும்!
இளங்கொழுந்தின் வாசம் இனிது!
.

பாவலர் அருணா செல்வம்
26.04.2022

திங்கள், 25 ஏப்ரல், 2022

கோடல் மலர்! (வெண்காந்தள்)

 


ஆறுதலை கொண்டே அருள்பவனுக் கேற்புடை
ஆறுதலை போன்ற அறுவிதழ்கள் ! - சீறுகிற
பாம்புமேல் நோக்கும் படம்போல் அழகாகும்!
ஓம்படுத்த கோடல் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
15.04.2022

ஓம்படுத்தல் - போற்றல், பாதுகாத்தல், வளர்த்தல்,

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

ஆத்திப்பூ!

 


அக்கால சோழர்கள் ஆத்திமாலை சூடினர்!
இக்காலம் பீடிசுற்ற ஏற்றதாம்! - கக்குவான்
போக்கிடும்! ஆறாத புண்களை ஆற்றிடும்!
பூக்கள்இலை பட்டையும் பொன்!
.
பாவலர் அருணா செல்வம்
15.04.2022

வியாழன், 14 ஏப்ரல், 2022

சிந்து மலர்! (கருநொச்சி)

 


காரம் மிகுந்த கருநொச்சி சிந்தாகும்!
சீரண உள்ளுருப்பைச் சீராக்கும்! - ஈரல்நோய்
கால்கை விரல்குடைச்சல், கட்டிக்குத் தைலத்தை
மேல்தடவ மேன்மையுறும் மெய்!
.
பாவலர் அருணா செல்வம்
14.04.2022

புதன், 13 ஏப்ரல், 2022

குரவம் மலர்! (பாவை மரம்)

 


குறுங்காம்பு கொண்ட குரவம் மலர்கள்
நறுமணம் கொண்டிருக்கும் நன்கு! - சிறுமொட்டுகள்
பாம்பினது கூரிய பற்களை ஒத்திடும்!
பூம்பொடி மிக்கிருக்கும் பூ!
.
பாவலர் அருணா செல்வம்
14.04.2022

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

பாலை மலர்! (வெட்பாலை)

 


பாலை மரமெங்கும் பால்வடியும்! மீன்செதிலாய்த்
தோலை அரிக்கும்நோய் தோற்றோடும்! - பாலைமட்டும்
சூரணம் செய்துண்ணச் சூட்டுநோய் போக்கியுடன்
சீரணத்தைச் சீராக்கும் சேர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.04.2022
 

(இலங்கையில் வளரும் பால மரம் என்பது வேறு)

திங்கள், 11 ஏப்ரல், 2022

நந்தி மலர்! (நந்தியா வட்டை)

 


நல்ல குளிர்சியுள்ள நந்திமலர் கண்எரிச்சல்
பல்சொத்தை, போக்கப்  பயன்படும்! - கல்லீரல்
மண்ணீரல் நோயை மரவேர்த்தோல் சீராக்கும்!
பெண்கருப்பை காக்கும் பெரிது!
.
பாவலர் அருணா செல்வம்
11.04.2022

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

தில்லை மலர்!

 .
தில்லை நடராச தெய்வவூர்! இக்கால
தில்லைமர மில்லாச் சிதம்பரம்! - நல்ல
மணம்வீசும் பூக்கள் மனத்தை மயக்கும் 
குணமுள்ளார் நெஞ்சாய்க் குளிர்ந்து!

.
பாவலர் அருணா செல்வம்
09.04.2022

வியாழன், 7 ஏப்ரல், 2022

நெடில் மெல்லிசை ஏந்திசை வண்ணம்!
சீதாவின் யோக வளம்மேவும்!
.
ஊரோரம் ஓடும் நீரோடை மீதில்
     ஓடாமல் நாறும் மணமோடு
  ஓயாமல் வீசி உல்லாச மாக
     ஊடூட மீறும் இளம்வாடை!
 
நீரோடும் போதில் பூவாடை மேனி
     நில்லாமல் வீழும் சிறுகாலம்
  நீயாக நீந்தி தீயாக ஏங்கி
     நீரோடு சேர்ந்த குறும்பார்வை!
 
தேரோடும் வீதில் கூவாமல் பேசும்
     தீராத மோக விழியேங்க
  தேனான தேகந் தீண்டாத போதும்
     தீயாகும் பேதை உளமாகும்!
 
சீரோடு சேர்ந்த பாவோடு தாளஞ்
     சேராமல் போகும் நிலையேது?
  சீராமன் மீது பூமாலை யாகும்
     சீதாவின் யோக வளம்மேவும்!
.
பாவலர் அருணா செல்வம்
07.04.2022

செங்கோடு மலர்! (செங்கொடுவேரி)

 


செந்நிறத்தில் பூத்திடும் செங்கோடு யாழ்அழிக்கும்
அந்தெனும் பூச்சை அழித்திடும்! - செந்தேனும்
வாசமும் கொண்ட மலர்க்கொத்தை மங்கைமனம்
நேசமுடன் சூடும் நிறைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
07.04.2022

புதன், 6 ஏப்ரல், 2022

வாழைப்பூ!

 


வாதம், வயிற்றுநோய், வாய்நாற்றம், மூலநோய்,
சீதபேதி, சோகையைச் சீராக்கும்! - மாத
விலக்கு,கண் நோயை விரைவினில்  போக்கி
நலங்காக்கும் வாழைப்பூ நன்று!
.
பாவலர் அருணா செல்வம்
06.04.2022

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

துழாய்! (துளசி)

 


வீட்டில் வளரும் வெறும்இலையே நோய்நொடியை
ஓட்டிவிட நன்றாய் உதவிடும் - தீட்டுதற்கு
ஒப்பில்லா நன்மைதனில் ஓங்கும் துழாவிளுள்ள
எப்பயனைச் சொல்வேன் எடுத்து?
.
பாவலர் அருணா செல்வம்
06.04.2022

திங்கள், 4 ஏப்ரல், 2022

58. குருகிலை (அத்தி மரம்)

 


மொட்டு மலராமல் மூடியே காய்காய்த்துக்
கொட்டுமிடி நோக்கும் குருகிலை! - பட்டை,இலை
காய்,கனி,வேர் நம்முடல் காத்திடும்! காஞ்சியிலே
காய்ந்தமரத் தெய்வத்தைக் காண்!
.
பாவலர் அருணா செல்வம்
04.04.2022

வியாழன், 31 மார்ச், 2022

அவரைப்பூ!

 


அதிக எடையை அவரைக் கரைக்கும்!
புதிய குருதியுறும்! பொன்னாய் - எதிர்ச்சக்திக்
கூட்டும்! கொழுப்பைக் குறைக்கும்! இருதயநோ
யோட்டும் உணவில் உயர்ந்து!
.

பாவலர் அருணா செல்வம்
31.03.2022

புதன், 30 மார்ச், 2022

கொகுடி மலர்! (அடுக்கு மல்லி)

 


.
வாசமுள்ள மல்லி வகையில் கொகுடியொன்று!
நேசநெஞ்சைத் தன்பால் நெருங்கவைத்துப் பேசவைக்கும்!
பூந்தெனும் வெண்ணிறமும் பூவையரை ஈர்த்திடக்
கூந்தலில் சூடுவார்க் கொய்து!
.
பாவலர் அருணா செல்வம்
30.03.2022


செவ்வாய், 29 மார்ச், 2022

நரந்தம் மலர்! (நார்த்தங்காய் மரம்)

 


நறுமணம் மிக்க நரந்தம் மலர்கள்
எறும்புகளைத் தன்வசம் ஈர்க்கும்! - உறுதியான
காயை ஊறுகாயாய்க் காரமுடன் உண்டுவந்தால்
தீயையொக்கும் நோயோடுந் தீர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.03.2022

(நரந்தை என்பது ஒருவகை புல்லாகும்)

திங்கள், 28 மார்ச், 2022

செருவிளை! (வெள்ளைச் சங்குப்பூ)

 


செழிப்பான மண்ணில் செருவிளை பூக்கும்!
வழிபாட்டுக் கேற்றமலர்! வாட்டிப் பிழிந்தநீர்
காதுவலி போக்கிடும்! காய்,இலை,பூ, என்றனைத்தும்
தீதுதரும் நோயோட்டுஞ் சேர்ப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
28.03.2022

ஞாயிறு, 27 மார்ச், 2022

வானி மலர்!

 


வண்ணம் மிகுந்திருக்கும் வானி மலர்களில்
எண்ணும் உயர்வென ஏதுமில்லை! - கண்கவர
மேற்கு தொடர்ச்சிமலை மேலும் விளைந்து,சில
ஆற்றோரம் பூக்க அழகு!
.
பாவலர் அருணா செல்வம்
27.03.2022.

வெள்ளி, 25 மார்ச், 2022

முல்லை மலர்!

 


முல்லை மலரை முகர்ந்தால் மனந்தெளியும்!
பல்வேறு நோய்போக்கும்! பற்றிடத் தொல்லையெனும்
பாதப்புண், தோலரிப்பு, பால்கட்டு நீங்கிடும்!
மாதவிடாய்ச் சீராக்கும் மாண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2022

வியாழன், 24 மார்ச், 2022

காஞ்சி மலர்! (செம்மருது)

 


கட்டை மிருதான காஞ்சியில் தீக்குச்சி,
பெட்டிகள் செய்வார் பெருமளவு! - பட்டைநல்ல
உள்மருந்தாம்! ஆற்றோரம் உள்வந்த ழித்திடும்
வெள்ளம் தடுக்கும் விரைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.03.2022

புதன், 23 மார்ச், 2022

தணக்கம் மலர்! (நுணா மரம்)

 


தணக்கம் மலரில் தகவில்லை! மஞ்சள்
மணக்கும் மரக்கட்டை, மக்கள் - வணங்கிடும்
தெய்வசிலை, கட்டில்கால் செய்ய உதவிடும்!
உய்யும் உடலுக் குகந்து!
.
பாவலர் அருணா செல்வம்
23.03.2022